Tuesday, April 05, 2005

மேல்மாடி மின்னல்கள்

கங்காவின் "தினம் ஒரு ஸென் கதை" விஷயங்கள் மேல்மாடி Capacity பிரச்சினையால் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் "ஆமைகளின் சுற்றுலா" என்ற தலைப்பு ஈர்த்ததால் சொடுக்கி பார்த்தபோது மேல்மாடியில் பல மின்னல்கள் எழுந்தன.
கங்கா தனது பதிவில் இட்ட அக்கதை இதுதான்:ஆமைகளின் சுற்றுலா

ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக சுறுசுறுப்பின்றி செயல்பட்டதால், எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடித்தமான சுற்றுலா இடத்தினைக் கண்டு பிடிக்க அடுத்த இரண்டு வருடங்கள் ஆனது. சுற்றுலாவுக்காக கண்டு பிடித்த இடத்தினை சுத்த படுத்த அடுத்த ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டன. அடுத்த இரண்டு மாதங்களில் தாங்கள் கொண்டு வந்த கூடையிலிருந்து எல்லா சாமன்களையும் எடுத்து வைத்து, சிற்றுலாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தன.

எல்லாவற்றையும் முடித்த போது, தாங்கள் வரும் போது உப்பினை கொண்டு வராததைக் கண்டு பிடித்தன. உப்பு இல்லாத பிக்னிக், நிறைவானதாக இருக்காது என்று எண்ணி அவர்களில் ஒருவரை அனுப்பி உப்பு கொண்டு வருவது என தீர்மானித்தன. இருந்த ஆமைகளிலிலேயே மிகவும் வேகமாக செல்லக் கூடிய ஒரு குட்டி ஆமையை உப்பு கொண்டு வருவதற்க்காக தேர்ந்தெடுத்தன. ஆனால் சின்ன ஆமையோ போவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் பட்டுக் கொண்டு அழுதது. தன்னுடைய தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு செல்ல மாட்டேன் என்று அங்கிருந்து நகராமல் அடம் பிடித்தது.

கடைசியாக மற்ற எல்லா ஆமைகளின் வற்புறுத்தலுக்காக அங்கிருந்து செல்வதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் தான் திரும்பி வரும் வரை யாரும் சாப்பிடக் கூடாது அப்பொழுதுதான் தான் செல்வேன் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகன்றது. குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய உறுதி மொழியின் படி சாப்பிடாமல் அங்கேயே சின்ன ஆமைக்காக காத்திருக்க ஆரம்பித்தன. ஐந்து வருடங்கள்.. ஆறு வருடங்கள்.. கடைசியாக ஏழு வருடமும் முடிந்தது. ஆனால் அந்தக் குட்டி ஆமை திரும்பி வரவே இல்லை.

பசி பொறுக்காத ஒரு பெரிய ஆமை கடைசியாக கொண்டு வந்திருந்த பொட்டலத்தினை பிரிக்க ஆரம்பித்தது. பின்பு மற்ற ஆமைகளையும் சாப்பிடுவதற்காக சத்தமாக அழைத்தது. அந்த சமயத்தில் பக்கத்திலிருந்த மரத்தின் பின்புறத்திலிருந்து தலையை தூக்கி வெளியே வந்த குட்டி ஆமை "ஆ, எனக்குத் தெரியும், நான் வரும்வரை உங்களால் காத்திருக்க முடியாது என்று, அதனால் நான் உப்பு எடுப்பதற்காக போக மாட்டேன்" என்று சத்தமாக கத்திக் கொண்டே கூறியது.

http://zendaily.blogspot.com/2005/04/blog-post_04.html

(இந்தக் கதைகளை உங்கள் வலைப்பூக்களில் தேவையான இடங்களில் பொருத்தமாக உபயோகித்துப் பாருங்களேன் என்று கங்கா எழுதியதை அனுமதியாக நினைத்து இங்கு பதிந்துள்ளேன்).


இக்கதை சொல்லும் ஒருசில விஷயங்கள் நம்மூர் அரசியல்வாதிகளுக்கும் மற்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மிகப்பொறுத்தமாக இருக்கும்.

மின்னல்கள் இதோ:

மின்னல்-1) தற்போதைய சூழ்நிலையை சரிகட்டுவதற்காக தகுதியற்ற ஆளுக்கு பொறுப்பு கொடுத்து பிறகு குய்யோ முறையோ என புலம்புவது. என் கோபமெல்லாம் தகுதியற்ற ஆளிடம் கொடுக்க சிபாரிசு செய்து தன் தலைக்கு அவ்வேலை வராமல் பார்த்துக்கொண்ட ஆசாமிகளின் (ஆமைகளின்) மீதுதான்.

மின்னல்-2) தம் தலையில் பொறுப்பு சுமத்தியவர்களை பழிதீர்க்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றால் அதனை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது. இச்சந்தர்ப்பத்தில் தன் தலையை பாதுகாத்துக்கொள்ள பதில் சொல்ல முடியாத எதிர் கேள்வியை கேட்டு தப்பித்துக்கொள்வது.

மின்னல்-3) பொதுசேவை என வந்தபின்னரும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையின்மை. அடுத்தவரின் நேர்மையின்மையை நிரூபிக்க யார் பாதிப்படைந்தாலும் பரவாயில்லை என வெறித்தனமான ஈடுபடுவது.

மின்னல்-4) சில நேரத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய பாடங்களுக்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும். நமது புராஜக்ட் ஏற்பாட்டில் எல்லாம் கைகூடி ஒரு பொருள் குறைந்தால், அதனை சமாளிக்க முடியும் என்றால் சமாளித்துவிடுவது சிறந்தது. இல்லையென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை கதைதான்.

மின்னல்-5) ஆமையின் தகுதிக்கு சுற்றுலாவுக்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பரவாயில்லை. ஆமைக்கு வேண்டுமானால் சோம்பல் காரணமாக இருக்கலாம். பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு அப்படியல்ல. யோசனை கேட்கப்பட்டதால் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை யோசனை என்ற பேரில் சபையில் வைத்து நேரத்தை வீணாக்குவது.

1 comment:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

"மேல்மாடி மின்னல்கள்"
தலைப்பு அருமை. கதையைப் பற்றிய உங்கள் கருத்தும் இடியும் மழையுடன் கலந்த மின்னலே. :-) நன்றி