Wednesday, April 26, 2006

மயிலாடுதுறை to இலண்டன் (செய்தி)

பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பலர் அறிந்ததே. சுடப்பட்ட குண்டுகள் திரு. மஹாஜனின் கல்லீரலையும் கணையத்தையும் கடுமையாகச் சேதப் படுத்தியுள்ளதால் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

இவருக்கு சிறப்புச் சிகிச்சையளிக்க இலண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைத்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முஹம்மது ரிலா முன்வந்துள்ளார்.

இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் திரு மஹாஜனின் கல்லீரல் கடும் சேதமடைந்துள்ளதால் அவருக்கு செயற்கைக் கல்லீரல் கணையம் மூலம் அவரது உடலியல் இயக்கங்கள் நடக்க உதவி வருகின்றனர்.

திரு மஹாஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையளிக்க உதவுமாறு இந்துஜா மருத்துவமனை மருத்துவர் குழு அழைப்பின் பேரில் டாக்டர் ரிலா மும்பை வருகிறார். டாக்டர் ரிலா 800க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். ஐந்து வயதே நிரம்பிய அயர்லாந்து குழந்தை ஒன்றுக்கு செய்த கல்லீரல் அறுவை சிகிச்சையால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் பிரசுரிக்கப் பட்டது.

டாக்டர். ரிலா தமிழகத்தைச் சேர்ந்தவராவர். இவர் மயிலாடுதுறை நகரில் பிறந்தவர். தனது மருத்துவப் பட்ட மற்றும் மேற்பட்டப் படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தபின் ஐக்கிய இராச்சியம் சென்று உயர்பட்டப் படிப்பையும் FRCS அங்கீகாரத்தையும் 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.

டாக்டர் ரிலா ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்து தர முன்வந்துள்ளார்.

இவர் 'பிளவு கல்லீரல்' எனப்படும் ஒரு ஆரோக்கியமான கல்லீரலை இரு நோயாளிகளுக்குப் பிரித்து அளிக்கும் முறையை அறிமுகப் படுத்தி அதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லீரல் மாற்று அறுவைத் துரையில் 100க்கும் பேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள டாக்டர் ரிலா, உலகம் முழுவதும் இத்துறையில் பல்வேறு மருத்துவர்களுக்குப் பயிற்சியும் அளித்து மாபெரும் சேவை ஆற்றி வருகிறார்.

நன்றி: rediff.com

Wednesday, April 12, 2006

முஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்

- முஜீப் ரகுமான்
நன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006)

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். வகுப்புவாதத்தை ஊட்டி வளர்த்த ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்றும் வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே.

பூலே தொடங்கி அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவான், போன்றவர்கள் தலித் சமூக விழிப்புணர்வை ஊட்டியதன் விளைவாக அரசியல் ரீதியாக ஓரளவுக்கேனும் சுதந்திரமாக தலித்துகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி உருவான தலித் உத்வேகம் புதிய நகர்தலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் இன்று அன்னியமாய் தீண்டத்தகாதவர்களாக இருக்கிறார்கள். கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் குறித்து கட்டமைக்கப் படும் வெகுஜன உளவியலும், பொதுப்புத்தி உருவாக்கமும் முஸ்லிம்களை சமூக, பொருளாதார அரசியல் ரீதிகளில் தீண்டத்தகாதவர்களாக மாற்றியுள்ளது. உலக அரங்கிலும், நமது சூழல்களிலும் முஸ்லிம்கள் குறித்த ஒருவித மனஉருவாக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடைநிலை சாதியத்தை எதிர்கொள்ளும் தலித்தியம் கூட பிற ஆக்கப்பூர்வமான நிலைகளில் (அணுகும்) பார்வைகளை கொண்டிருக்கிறது. அதே சமயம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்திய சமூக அமைப்பும் பல்வேறு காரணிகளும் தலித்தியம் உட்பட எதிர்நிலை மனகருத்தியலை கொண்டிருக்கிறது.

வகுப்புவாத துவேஷங்களும், மதக் கலவரங்களும், திட்டமிட்டு பரப்பப் படும் அவதூறுகளும் 'நவீன தீண்டாமையை' முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விட்டிருக்கின்றன.. அனைத்து துறைகளிலும் அனைத்து வடிவங்களிலும், அனைத்து நிலைகளிலும் 'தீண்டாமை' கொடிகட்டிப் பறக்கிறது. இன்று தீண்டாமையின் அர்த்தம் குறியீடுகளாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்திய முஸ்லிம்கள் தீண்டாமையின் நெருக்கடிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இந்திய மைய நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப் படுத்தப்பட ஏதுவாக அமைந்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியலின் அனைத்து கட்டுமானங்களிலும், உள் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு விரோதமான தீண்டாமை வியாபித்து இருக்கிறது. உண்மையான தலித் அனுபவிக்கும் பிரச்சினை இன்று முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதாக போய்விட்டது. அனைத்து முறைகளிலும் ஒடுக்கப்படும் தலித் கூட முஸ்லிம்களை தீண்டத் தகாதவர்களாக நோக்கும் நுண் அரசியல் வலைப்பின்னல்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. அனைத்துக்கும் சிகரமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மறுஉற்பத்திகளின் நுகர்விய உளவியலிலும் கூட நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்திய சமூக மனங்களின் கூட்டு பிரக்ஞையிலும், நனவிலிநிலையிலும் 'தீண்டாமை' படிவுகளாக மாறிவிட்டது.

இசுலாமிய தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமூகம் எண்ணிலடங்கா நெருக்கடிகளைசந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூக அமைப்புகளும், கட்சி அமைப்புகளும், நிறுவனங்களும், அமைப்பு சாரா அமைப்புகளும் முஸ்லிம்களை ஒரு படித்தான நிலையிலேயே அணுகுகின்றனர். பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் நலிவுற்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்திய முஸ்லிம் சமூகம். உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் எண்ணிறந்த வாய்ப்புகளை இந்திய சமூகங்களுக்கு வாரி வழங்கிய போதும் முஸ்லிம்களை பொறுத்தவரையில் எவ்வித பயனும் இல்லாமலேயே இருக்கிறது. இந்து தீவிர அமைப்புகள் நினைத்ததை சாதித்துவிட்டன. கட்சி அமைப்புகள் ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்திபடுத்திவிட்டு வாக்குறுதிகளை காற்றில் விடுவதை நிதர்சனமாகவே கடந்த காலம் நமக்கு காட்டியுள்ளது.

கீழவெண்மணிகளும், புளியங்குடிகளும் பெற்ற கவனத்தை 'குஜராத் கலவரம்' இன்னும் பெறவில்லை. அயோத்தியா இன்று மறக்கப்பட்டு விட்டது. இந்திய துணை கண்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளில் வாடும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒடுக்கி வரும் மனநிலை அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் வியாபித்து விட்டது. இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் இது குறித்த பிரக்ஞை இல்லாதது அதைவிட கொடுமையானது. தலித்துகள் முஸ்லிம்களை தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ளாததும் முஸ்லிம்களும் அதை விரும்பாததும் ஒரு புறம் இருக்கிறது. இன்றைய முஸ்லிம் அறிவு ஜீவிகள் யாவரும் காஷ்மீர் பிரச்சனை, அயோத்தியா பிரச்சனை, வக்பு வாரியம், முஸ்லிம் சட்டம் பற்றி பேசுவதோடு நின்று விடுகின்றனர். இதுகாலம் வரை கலை, இலக்கியங்கள் முஸ்லிம்களை நிராகரித்தே வந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கான பண்பாடு, வாழ்க்கை யாவும் 'அந்நியமான' இரட்டை மனதாக, இரட்டை மொழியாக, இரட்டைப் பண்பாடாக இரட்டை வாழ்க்கையாக அமைந்திருப்பதை முஸ்லிம்களிடமிருந்து கண்டுணரலாம். முஸ்லிம்களை பொறுத்த வரையில் சமூக நீதியோ, பொருளாதார நீதியோ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லி கொள்ள முடியாதென்றாலும் 'எங்களை மனிதர்களாக நினையுங்கள்' என்பது விருப்பமாக இருக்கிறது.

அந்நியப்படுத்தலில் இருந்தும், பிரதிநிதித்துவப் படுத்துதலில் இருந்தும் சக மனிதனாக பாவிக்கின்ற நிலையின்றும் பிரித்து இனம் காண வேண்டாம் என்பது தான் முக்கியமாக இருக்கிறது. சாதிய மனோநிலை கூட கடைநிலையாக்குகின்ற உபாயங்களையே செய்து வருகிறது. முஸ்லிம்கள் தீண்டாமை மனோநிலையில் வேறுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அன்மை காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்பு கார், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுகின்ற நகர்ப்புற முஸ்லிம்களின் நிலை மோசமாக ஆகியிருப்பது உதாரணம். நகர்ப்புறத்தில் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் சுயதொழில்களை அதிகம் செய்பவர்கள். இவர்களை அதிகம் தீண்டாமை கண்ணோட்டத்துடன் வெறுத்து ஒதுக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற மனோபாவம் மீண்டும் அவர்களை அந்நியப்படுத்துகின்ற விஷயத்துடன் தொடர்புடையதாகும். இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் ஜனாதிபதியாக முடியும். நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்காவது யாராவது பட்டாசு வெடித்தால் கூட எல்லோரும் ஒருமாதிரியாக பார்க்கும் பார்வையை மட்டும் மாற்றிவிட முடியாது என்பதே எதார்த்தமான முஸ்லிம்களின் உணர்வாக இருக்கிறது. இதற்கு பொறுப்பும் முஸ்லிம்களே ஏற்க வேண்டியிருக்கின்றது. சமூக நல கண்ணோட்டமின்றி வெறுமனே சமயம் குறித்து பேசியும், விவாதித்தும் சண்டையிட்டு கொண்டிருக்கின்ற சூழல்களே இந்தியாவில் அதிகம் இருக்கிறது. நடுத்தர சமூகம் உருவாகாத ஒரு சமூக அமைப்பாக இன்னுமும் இருந்து கொண்டு பத்து சத மேட்டிமை முஸ்லிம்களின் நலனுக்காக தொண்ணூறு சதவீத முஸ்லிம்கள் பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற அளவில் அதிக உரிமைகள் பெறுப்படுவதாக இந்து அமைப்புகள் கூறிக் கொண்டிருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இங்கே இல்லை. சிறுபான்மையினர் என்ற அளவில் ஏமாற்றப்ஷபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கண்கூடாகும். கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவையில் நாளுக்கு நாள் அருகிக் குறைந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இன்னும் அரசை சாராமல் பொது, தனியார் துறைகளைச் சாராமல் தனியே காலம் கடத்தி விட முடியாது. சுய தொழிலால் தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த போதும் அடிக்கடி நடக்கின்ற கலவரங்கள் முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை மையப்படுத்துகின்றன. கடைநிலை வியாபாரங்களை செய்கின்ற முஸ்லிம்கள் இன்றைய உலகமயமாதலில் சிக்கி தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறார்கள். வியாபரத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் இந்த சமூகம் இன்றைய நவ வியாபார உத்திகளை அறியாமலும், வியாபார நிலை மாற்றங்களிலும், அடுத்த கட்ட நுகர்வுகளை சந்திக்கும் ஆற்றல் இல்லாமையாலும் 'வியாபாரம்' நலிந்து போய் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் 'பிரதிநிதித்துவம்' மட்டுமே அதில் பயனளிக்க கூடியதாக இருக்கும். தனியார் துறைகளில், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முஸ்லிம்களது வாழ்வுரிமை பிரச்சனைகளை எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். வெறுமனே பொதுசிவில் சட்டஎதிர்ப்போ, பாபரி மஸ்ஜித் பிரச்சனையோ வாழ்க்கைக்கு தேவையானதை செய்துவிடாது என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

பண்பாட்டு ஆதிக்கத்தையும் மௌன பண்பாட்டையும் வரித்துக் கொண்டிருக்கிற பாசிசம் ஒரு புறம் உரையாடல்களை துடைத்தெறிந்து கொண்டு மறுபுறம் வன்முறையில் ஈடுபடுகிறது. வன்முறையாளர்கள் தேசியவாதிகளாக இருக்க கூடிய சித்திரமும் வன்முறையில் பலிகடா ஆகுபவர்கள் தேசவிரோதிகளாக (உருவாக்குகிறது - ஊடகத்தினாலும்) மனச்சித்திரங்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக இழிவுகளுக்கு சமமான அல்லது இதற்கு மேலான தீண்டாமை / முஸ்லிம் விரோத உணர்வை பிரச்சனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கான வாழ்வாதார உரிமைகளை - எதிர் மனோபாவங்களை பெற்றிடவும் மாற்றிடவும் ஆன போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அல்லது ஏனைய நிலையில் உள்ளவர்களுடனான ஒத்திசைவுகளும், கூட்டு செயல்களும் உண்மையில் முஸ்லிம்களை தீண்டாதவர்களாகவே மாற்றியிருக்கிறது. சமூகத்தின் அத்தனை இடைநிலை உழைப்பு செயல்களை செய்கின்ற முஸ்லிம்களை அன்னியர்களாக அணுகும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான குறைந்தபட்ச செயல்களை உருவாக்க வேண்டும். அரசும், அதிகாரமும் கற்பித மனோபாவமும் தான் முஸ்லிம்களின் உளவியல் நெருக்கடிகள் அதிகமாக காரணமாக இருக்கின்றன. ஒரு தலித் தனது சாதியின் பெயரால் அழைக்கப்படும் போது படும் மனநெருக்கடிகளுக்கு மேலாக முஸ்லிமை தீவிரவாதி என்றழைக்கப்படும் போது அனுபவிக்கிறான்.

வெகுகாலம் வரை பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் தான் மாபெரும் இஸ்லாமிய விரோதிகள் என்று கற்பிக்கப்பட்டதை தாண்டி பிரக்ஞை பூர்வமான இன்றைய எதார்த்த நிலையை உணர வேண்டியதன் தருணத்தை அலச வேண்டியிருக்கிறது திராவிட அமைப்பினரும் தலித் அமைப்பினரும் 'பதவி ஆசையில்' பார்ப்பனர்களுடன் இணைந்து செயல்பட்டதும் வன்முறை கலவரங்களில் தலித்துகளே முன்னணி படையினராக திகழ்ந்து படுகொலை நடத்தியதையும் அலச வேண்டியதிருக்கிறது. தேசம், தேசியம், அடையாள பண்பாடுகள், அறம், ஒழுக்கம் போன்ற ஆதிக்க கருத்தியல்களை மறுதலித்துக் கொண்டு வாழ்வதற்கான நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.

எங்களுக்கான பங்கு என்ன? பிரதிநிதித்துவம் என்ன என்பதை பற்றி தான் உரையாடல் நடத்த வேண்டிய சூழலில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வித ஒடுக்குதல்களையும் எதிர்கொள்ள பெருங் கதையாடல்களையும், புனைவுகளையும், கற்பிதங்களையும் கட்டுடைக்க வேண்டியதும் அடக்கு முறைகளுக்கு எதிரான பிரக்ஞைகளை வளர்த்தெடுப்பதுமே இப்போதைய தேவையாக இருக்கிறது.

ஜெயமோகனின் மனுதர்மம்

- மேலாண்மை பொன்னுச்சாமி
நன்றி: கீற்று

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடத்துகிறது. பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த கலாச்சாரத் திருவிழாக் கூட்டத்தில் அப்போதைய பொதுச் செயலாளர் அருணன் ஒரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார். அப்போது துணைப் பொதுச் செயலாளரான நான் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினேன்.

அந்த நூல் எது தெரியுமா? திசைகளின் நடுவே.

அந்த நூலாசிரியரும் மேடையில் உட்கார்ந்திருந்தார். யார் தெரியுமா? ஜெயமோகன்.

நானும் சரி, த.மு.எ.ச.வும் சரி.... தாராளமயச் சிந்தனை படைத்தவர்கள். நம்மவர்கள் என்று எல்லோரையும் சட்டென நம்பி விடுவோம். தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். அதுதான் த.மு.எ.ச.வின் பண்பு. அன்பு அசலானது. காரியார்த்தமில்லாத நிஜமான அன்பு.

அந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்து விட்டு, ஜெயமோகனை பாராட்டி நான் நீள் கடிதம் எழுதினேன். அவர் நன்றி சொல்லி எனக்கு ஏழு பக்கக் கடிதம் எழுதினார். அந்தத் தொகுப்பில்தான் பல்லக்கு என்ற சிறுகதையும் இருந்தது. அதை எழுத்தாளர் சுஜாதாவும், அசோகமித்திரனும் பாராட்டியிருந்தனர். அந்தச் சிறுகதையின் கட்டமைப்பு நேர்த்தியைத்தான் அவர்கள் பாராட்டுவதாக நாங்கள் நினைத்தோம். அதே தொகுப்பில் மடாதிபதிகளின் கயமை பற்றி அம்பலப்படுத்திப் பேசுகிற இரு கதைகளும் இருந்தன. அதையெல்லாம் முற்போக்கு என்று நிஜமாகவே நம்பினேன். பாராட்டினேன்.

ஜெயமோகனின் ரப்பர் குறுநாவல் வந்த போது, பணக்காரர்கள் சுயநலத்துடன் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிற அக்கிரமத்துக்கு எதிரான படைப்பு என்று நிஜமாகவே நம்பினேன். பாராட்டி எழுதினேன். பதிலுக்கு அவர் பல பக்கக் கடிதம் எழுதினார். அதற்கும் அப்புறம் அவருக்கு சில நெருக்கடிகள் வந்தபோது, எழுத்தாளர் சு.சமுத்திரத்துக்கும் எனக்கும் ஆதரவு கோருகிற கடிதங்கள் எழுதினார். நானும் பரிவுடன் ஆதரவு தெரிவித்து எழுதினேன்.

அப்போது எனக்கு இந்துத்துவா என்றால் என்ன என்பது தெரியாது. அப்போது அது ஒரு பிரச்சனையாகவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமஸ்தானத்தின் ஆட்சிக்குள் நாடார்கள் தலித்துகளை விடவும் கூடுதலாக ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டார்கள் என்ற வரலாறு எனக்கு அறிமுகமாகவில்லை. ஜெயமோகனுக்குள் இந்துத்துவா உயர்சாதி மனோபாவம் இயங்குகிறது என்ற சூட்சுமத்தை தொட்டுணரத்தக்க விழிப்புணர்வும் இல்லாமலிருந்தேன். இதை ஒப்புக் கொள்வதில் வெட்கமுமில்லை.

வித்தியாசமான எழுத்துக்காரர் என்று ஜெயமோகனை மதிப்பிட்டு, சிநேகமாக தழுவி அரவணைத்து, மேடைகளில் அவருக்கு வெளிச்சம் தந்தோம். பின் தான் தமிழ்நாட்டின் அரசியலில் இந்தத்துவா ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. பி.ஜே.பி.யின் ரதயாத்திரை எனும் ரத்தயாத்திரை நடந்தது. முஸ்லீம்களை இந்தியச் சகோதரர் என்ற நினைக்கிற தோழமையில் வெறுப்பு விரிசலை விதைத்தது, பி.ஜே.பி. தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக இந்துத்துவா முன்வந்த காலத்தில்தான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வெளிவருகிறது.

விஷ்ணு ஒன்றே கடவுள். அவர் புரள புரள யுகப் புரள்வும் நடக்கிறது. கரிய நாயாக மரணம் அலைய.... விஷ்ணு புரள்கிறார். பாலை மணல் காட்டில் சோனாநதி பிறக்கிறது. விஷ்ணு புரள்கிறார். அதே சோனா நதியின் வெள்ளப்பெருக்கில் பூமியே மணல் காடாகி.... மரணத்தில் குறியீடான கரிய நாய் அலைகிறது.

இந்த நாவல் கட்டமைத்த கருத்தியல் ஆபத்தானதாக இருந்தது. ஒற்றைக் கடவுளை முன்வைத்தது. பெருங்கடவுளை மட்டும் முன்னிறுத்துகிறது.

இந்த மண்ணின் மனிதர்களின் குல தெய்வங்கள், மண்ணின் மைந்தர்கள் வணங்கிய சிறு தெய்வங்கள், பெண் தெய்வங்கள், சிவபெருமான், தமிழ் முருகன் போன்ற சைவத் தெய்வங்கள், ஐம்பெரும் காப்பியங்களை தமிழுக்கு வாங்கிய சமண, பௌத்த மதங்கள் சகலத்தையும் பொய்யென ஸ்தாபித்து, விஷ்ணு ஒன்றே யுகக்கடவுள் என்று முன்வைத்த அந்த நாவல், இந்துத்துவா என்ற ராட்சஸனின் இலக்கியமுகமாக இருந்தது.

1985க்குப் பிறகு இந்தியாவில் - குறிப்பாக - தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் மதவெறிப் பிரச்சாரம் - ராமர் என்ற இதிகாச நாயகனை சரித்திர நாயகனாக புரட்டு செய்து, பாபர் மசூதி இடிப்புக்காக இஸ்லாமீய வெறுப்பு விஷத்தை உக்கிரமாக பரப்பப்பட்டது. இந்துத்துவாவின் அரசியல் பிரவேசம், தமிழக முற்போக்காளர்களிடம் முக முக்கியமான உள்மாற்றங்களைச் செய்தது. உலகப் பிரச்சனைக்குக் காரணம், வர்க்கமுரண்தான். வர்க்கமுரணை ஒழிப்பதற்கு வர்க்கப் புரட்சியும், வர்க்கங்களின் திரட்சியுமே தேவை என்று பயணப்பட்டுக் கொண்டிருந்த முற்போக்காளர்களிடம், இந்துத்துவா பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இந்தியத் திருநாட்டின் தனித்துவ நோயான சாதீயத்தை எதிர்த்த துணைப் பயணமும் தேவை என்ற வெளிச்சம் வந்தது.

சாதீயத்துக்கெதிரான தீண்டாமை எதிர்ப்பு இயக்கங்களை நடத்திய முற்போக்காளர்கள், சமூகநீதி குறித்த யாத்திரைகளை நடத்தினர். மொழிக்கான போராட்டம், சாதீய ஒழிப்புக்கான போராட்டம், பெண்ணுரிமைக்கான போராட்டம் எல்லாமே இந்துத்துவாவை எதிர்த்த பயணம் என்ற விழிப்புணர்வு வந்திருந்தது.

1950, 60களில் தஞ்சை நாகை மாவட்டங்களில் பி. சீனிவாசராவின் செங்கொடி இயக்கம், குமரி மாவட்டத்துச் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் மணி அவர்களின் செங்கொடி இயக்கம் கூலி உயர்வுப் போராட்டத்தையும், சாதீய ஆதிக்கத்துக்கெதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்திய பாரம்பரியம். திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தலித் மக்களுக்காக தோழர் ஏ.பால சுப்பிரமணியம், என் வரதராஜன் போன்றோர் கூலி உயர்வுப் போராட்டத்தையும், சாதீய ஆதிக்க ஒருங்கிணைந்த இயக்கம் நடத்திய முன்னனுபவம்.

மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகும் தகுதி செருப்பு தைக்கும் தலித்துக்கும் உண்டு என்று நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற தோழர். பி. ராமமூர்த்தி போன்ற செங்கொடித் தோழர்களின் சமூகநீதி இயக்கம். சட்டமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுத்த ஜீவா, சங்கரய்யா போன்ற செங்கொடித் தலைவர்களின் வரலாற்று ரீதியான மரபுகள்.

இவையெல்லாம் வரலாற்றுரமாக இருந்ததால்.... இந்துத்துவாவுக்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தையும், ஞானத்தையும் முற்போக்காளர்கள் முழுமையாக - சட்டென - சுவீகரித்து அந்தப் பாதையில் பயணத்தை தொடங்கியிருந்தனர்.

இதே வேளையில் வந்தது, ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். ஒற்றைக் கடவுள், ஒற்றை மதம், ஒற்றை (சமஸ்கிருத) மொழி என்ற பாசிசச் சிந்தனையுடன் வந்த இந்துத்துவாவுக்குரிய இலக்கிய முகமாக ஒற்றைக் கடவுளை முன்வைத்த விஷ்ணுபுரம் நாவல். வித்தியாசமான படைப்பாளி என்று தோற்றம் காட்டி எங்கள் தோழமையை பெற்று வந்து ஜெயமோகன், இந்த நாவலின் மூலமாக முழுமையாக அம்பலமாகிப் போய் விட்டார். விஷமத் தனமான படைப்பாளி என்ற அவரது சுயரூபம் அம்மணமாயிற்று. விஜயபாரதம் போன்ற மதச் சிந்தனைமிக்க இதழ்கள் விஷ்ணுபுரம் நாவல் விற்பனையில் அர்த்தப்பூர்வமாக முனைப்பு காட்டியது.

முகத்திரைகள் கிழிந்து, மழையில் நனைந்த சாயம் பூசிய நரியைப் போல வெளிச்சத்துக்கு வந்துவிட்ட ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு அதிர்ந்துபோனேன்.

அடடே.... இவரின் மாய்மாலத்தில் ஏமாந்துவிட்டோமே.... இவரது மாரீசமான் மின்னலில் மயங்கிவிட்டோமே என்று திகைத்தேன். எங்கள் அண்ணன் நாகர்கோயிலில் சி.ஐ.டி.யு என்ற செங்கொடித் தொழிற்சங்க ஊழியர் என்றும், நான் சி.பி.எம். முக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும், நான் தொலைபேசித் துறையில் இடதுசாரித் தொழிற் சங்கத்தில்தான் உறுப்பினர் என்றும் அவர் சொல்லிவந்த பசப்பு வார்த்தைகளில், வசீகரப்பட்டு மினுக்குகளில் ஒரு மோசக்காரரின் சாகசம் ஒளிந்திருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தேன்.

விஷ்ணுபுரம் நாவலின் குரூரத்தை தரிசித்த பின்பு ஏற்பட்ட விழிப்புணர்வோடு..... திசைகளின் நடுவே என்ற அவரது சிறுகதைத் தொகுப்பையும், ரப்பர் எனும் குறுநாவலையும் மறுவாசிப்புக்கும் மறுயோசிப்புக்கும் உட்படுத்தினேன்.

ரப்பர் குறுநாவலில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கெதிரான உயர்சாதியினரின் ஓலமும் குமைச்சலும் ஒலிப்பதை இப்போது உணரமுடிந்தது. ரப்பர் என்ற குறுநாவல், அவரது முந்தைய சிறுகதையின் விரிவாக்கம் தான். அந்தச் சிறுகதைதான், பல்லக்கு எழுத்தாளர் சுஜாதாவின் மிகப்பெரிய பாராட்டு பெற்ற சிறுகதை. அதுவும் தாழ்ந்த சாதியினரின் வஞ்சகத்தை உயர்சாதியினர் கோணத்திலிருந்து குமைச்சலும் வேதனையுமாக கோடிட்டுக் காட்டிய சிறுகதை.

திசைகளின் நடுவே தொகுப்பில் இரு மடாதிபதிகளுக்கு எதிரான சிறுகதைகள் இருந்தன. அவை கூட பார்ப்பனரல்லாத மடாதிபதிகளைப் பற்றித்தான் என்று இப்போது உணர முடிகிறது. உதாரணமாக, பார்ப்பனர் ஆதிக்கமில்லாத இந்துமடாதிபதி குன்றக்குடி ஆதினம். மண்டைக்காட்டில் மதக் கலவரம் நடந்து உயிர்ப்பலிகள் ஆகிக் கொண்டிருந்த தருணத்திலேயே நேரில் சென்று, களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்ட இரு மதத்து மக்களையும் சந்தித்து, சமாதானத்தையும், அமைதியையும் நிலை நாட்டியவர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

மதமாற்றச் தடைச்சட்டத்துக்கெதிரான காஞ்சிபுரத்தில் த.மு.எ.ச. மிகப்பெரிய பேரணியையும், மாநாட்டையும் நடத்துகிற அதே நாளில் திருச்சியில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், தினமலர் ஆசிரியர், காஞ்சி மடத்து ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் ஆகியோர் விழா நடத்தி பக்தகோடிகளுக்கு சூலாயுதம் வழங்கினர். சூலாயுதத்தின் மூன்று முனைகளுக்கும் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஒரு கூர்முனை இஸலாமியரை கொல்ல, மற்றோர் கூர்முனை கிறிஸ்துவரைக் கொல்ல, பிறிதோர் கூர்முனை கம்யூனிஸ்ட்களைக் கொல்ல என்று ஏற்கனவே விளகக்மாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. மதக்கலவரத்தை உருவாக்குகிற முனைப்பில் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.

இவரும் இந்துமத மடாதிபதிதான். ஆனால், பார்ப்பனர், பார்ப்பனீய ஆதிக்கத்திலுள்ள காஞ்சி மடாதிபதி ஆக.... பார்ப்பனீய ஆதிக்கத்துக்கும் ஆளுமைக்கும் உட்படாத இந்துமத மடாலயங்கள் தமிழகத்தில் உண்டு. அவை தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன. மத நல்லிணக்கத்துக்குப் பாடுபடுகின்றன. பார்ப்பனீய ஆளுமையிலுள்ள காஞ்சி மடாலயம், சூலாயுதத்தையும், மதவிரோதத்தையும் விநியோகிக்கிறது.

ஜெயமோகனின் சிறுகதைகள், பார்ப்பனீய ஆளுமையிலுள்ள மடாலயங்களையோ - மடாலயத் தலைவர்களையோ - மடாதிபதிகளையோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. விமர்சிக்கவில்லை. மாறாக-

பார்ப்பனீய ஆளுமைக்குட்படாத இந்து மடாதிபதிகளை மட்டுமே அவரது சிறுகதைகள் விமர்சித்திருந்தன. சூலாயுதமும், மதவிரோதமும் விநியோகிக்காத மடாதிபதிகளை மட்டுமே குறை கூறுகிறார், ஜெயமோகன் தம் சிறுகதைகளில்.

அப்படியெனில், ஜெயமோகனும் சூலாயுதம் வழங்குகிற குரூப்பைச் சேர்ந்தவராகிறார். சூலாயுதம் விநியோகிக்கிற மடாதிபதிகள் மனநிலையிலிருந்து, பார்ப்பனீயமல்லாத இந்து மடாதிபதிகளை குறை சொல்கின்றன ஜெயமோகனின் சிறுகதைகள்.

அப்படியெனில் - ஜெயமோகன் துல்லியமான இந்தத்துவா. தெட்டத் தெளிவான ஆர்.எஸ்.எஸ். இந்துராஷ்ட்ரீய சுயம் சேவக்கின் பிரச்சாரப் பீரங்கியாகவே இவரது சிறுகதை இலக்கிய யாத்திரை. இதிலொன்றும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், ஜெயமோகன், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில அலுவலகத்தில் அலுவலகச் செயலாளராக பணியாற்றிய முழுநேர ஊழியராக இருந்தவர்தாம் என்ற ரகசியமெல்லாம் பின்னாளில் தாம் அறிய முடிகிறது.

பல்லக்கு சிறுகதையில் ஜெயமோகனின் விஷமத்தனம் எது?

ஏகப்பட்ட நிலபுலன்களும், அரண்மனை மாதிரியான மிகப்பெரிய நாலுகட்டு வீடும் கொண்ட நாயர் குடும்பம். ஏகப்பட்ட குடும்ப உறுப்பினர்கள். உழைப்பில்லாத ஆடம்பரத் திளைப்பு, படாடோப வாழ்க்கை. ஒரு நிலப்பிரபுத்துவ உயர்சாதிக் குடும்பத்தின் காமக் கொண்டாட்டங்கள். களியாட்டங்கள். ராஜபோக ஆடம்பரப் படாடோபம்.

வரவு குறைய, செலவுகள் உயர.... வழக்குகளும், கோர்ட் செலவுகளுமான கௌரவப் போராட்டுங்கள்.

குடும்பம் நொடிக்கிறது. ஒவ்வொன்றாக விற்றுத் தின்கிற ஆடம்பரம். நிலபுலன் முழுவதும் விற்பனையாகி விட்டன. வீட்டிலள்ள பொருட்கள், விலை உயர்ந்த ஆடம்பர உபகரண்ங்கள், கலைவேலைப்பாடுள்ள கட்டில்கள் போன்றவைகளை விற்றுத் தின்கிற குடும்பம்.

எல்லா வேலைக்காரர்களும் வற்றிய குளத்துக் கொக்குகளாக சிறகடித்துவிட்டனர். ஒரு நாடான் மட்டும் போக மறுத்து அடம் பண்ணுகிறான். உங்க உப்பை தின்னு வளர்ந்த கட்டை, உங்ககிட்டேயே ஒழைச்சுச் செத்தாத்தான் நிம்மதி என்று தீரா விசுவாசத்தை காட்டி, காலைப் பிடித்து, தண்ணீர் விட்டு, சம்பளமில்லாத வேலைக்காரனாக அந்தக் கிழட்டுநாடான். (குமரி மாவட்டத்தில் புலையர்கள், ஈழவர்கள், தலித் மக்களின் கடையோரை விடவும் தாழ்ந்த நிலையில் நாடார்கள் இருந்த காலம், அது)

அந்த நாடான்தான், இந்த அரண்மனையின் உயர்ரகப் பொருட்களையெல்லாம் ரகசியமாக விற்று விற்று, பணம் வாங்கித் தருகிறான். குடும்பத்தின் பரம்பரைக் கௌரவச் சொத்தாக பல்லக்கு ஒன்று இருக்கிறது. அதையும் விற்க வேண்டிய நிலைமை. நொடித்துவிட்ட உயர்சாதி நாயர் குடும்பத்தின் கௌரவத்தை, அந்த நாடானின் ரகசிய விற்பனைதான் காப்பாற்றுகிறது. அதே ரகசிய முறையில் பல்லக்கும் விற்கப்படுகிறது.

நாயர் வீட்டின் காரணவர் (தலைவர்) தெருவில் வருகிறார். அவரது குடும்பப் பல்லக்கில் எவனோ ஒருவன் ஏறிச் செல்கிறான். இவருக்குள் வேதனையும், அவமானமுமாக இருக்கிறது. பல்லக்கில் போறது எவன் என்ற யாரிடமோ விசாரிக்கிறார். உங்க வீட்லே வேலை பாக்குற நாடானின் மகன் தான் வேதக்காரச் சாமியார் தயவுலே படித்து, வாத்தியார் உத்யோகம் பார்குறான். இப்ப ரொம்ப வசதி. தாழ்ந்த சாதிப்பயலெல்லாம் பல்லக்கில் போறான்.

உடைந்து போகிறார் காரணவர் விசுவாசத்துக்காக பசியோடு வேலை பார்ப்பதாக காலைப் படித்துக் கெஞ்சிய நாடான், விசுவாசக் காரணல்ல. வஞ்சகன். எஜமானர் வீட்டுப் பொருட்களையெல்லாம் கள்ள விலைக்கு தமது மகனுக்கே கடத்திய கள்ளன் என்பதை உணர்ந்ததால் வந்த மனஉடைவு. இதுதான் பல்லக்கின் சிறுகதை. இதைத்தான் எழுத்தாளர் சுஜாதா ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தார்.

கிறிஸ்துவ சாமியார் கருணையால் கல்வி கற்று, ஆசிரியராகி, ஓர் அந்தஸ்துக்கு ஒரு தாழ்ந்தசாதியான் உயர்ந்ததை சகித்துக் கொள்ளாமல் குமுறிக்குமைகிற உயர்சாதியினரின் ஆதிக்கக் குரலாகவே சிறுகதையின் குரல் படைப்பாளியின் குரலும் இது தான். அது மட்டுமல்ல.... அந்தத் தாழ்ந்த சாதியான், பண்பிலும், குணத்திலும் தாழ்ந்தவன் தான், ஈனத்தனமான கள்ளன்தான் என்ற சித்தரிப்பும் கதையின் இணைக்குரல்.

நிலப்பிரபுத்துவ உயர்சாதிக் குடும்பத்தின் சிதைவுக்காக வாசகனை கலங்கடிக்கிறார், ஜெயமோகன். கல்வி கற்று, ஆசிரியராகி ஓர் உயர்நிலைக்கு வந்து விட்ட தாழ்ந்த சாதியாரின் வஞ்சகக் குணத்திற்காக வாசகரை வெறுக்கச் செய்கிறார். இதுதான் இந்துத்துவாவின் கொள்கை. மனுதர்மம், சூத்திரச் சாதிக்கும் சண்டாளச் சாதிகளுக்கும் கல்வி மறுத்தது. பார்ப்பனீயம் அந்த வேதச் சட்டத்தை இம்மிபிசகாமல் கடைபிடித்து வந்தது. சண்டாளச் சாதிக்கும் சூத்திரர்களுக்கும் கல்வி எக்காலத்திலும் வழங்கப்பட்டதில்லை. கிறிஸ்துவம் இந்திய மண்ணுக்குள் நுழைந்த பிறகு தன், இழிசனராக கருதப்பட்ட சண்டாளச் சாதியினருக்கு கல்வி வாசனை எட்டிப் பார்த்தது. கிறிஸ்துவத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கப்பட்டதை வேத வைதீக இந்துமதம் பொறுத்துக் கொள்ளவில்லை. அவதூறுகளும், வசைகளுமாக துற்றியது. அதே வேலையைத்தான், ஜெயமோகன் சிறுகதையும் செய்கிறது.

ரப்பர் குறுநாவலும் இதே கதையின் கருத்தியல்தான். குமரி மாவட்டத்து உயர்சாதியினரான நாயர்கள் கையில் நஞ்சை நிலங்கள் யாவும் இருக்கின்றன. நெற்பயிலும், வாழை மரங்களுமாக அந்த நிலம், மாவட்டத்துக்கு உணவும், மகுடமும் தருகிறது. வாழை, காற்றை சுத்தமாக்குகிறது.

எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வருகிற கூட்டு வண்டியில் பொன்னுமணி என்ற நாடான் சிறுவன் வருகிறான்.

இடுப்புக்கு மேல் சட்டையணியக் கூட உரிமையில்லாதவர்கள் சாணார் சாதிப் பெண்கள். திறந்த மார்புகளோடு தான் திரிய வேண்டும். நாயர் எதிரில் வருகிறார் என்றால், தமது வியர்வை வாசம் அவர் நாசியை தீண்டாத தூரத்துக்கு தாமே ஒதுங்கி நின்று வழிவிட வேண்டும், சாணார் சாதி ஆண்கள். தீண்டாமையிலும் கொடியது வாசத் தீண்டாமை. அதிலும் சாணார் சாதிப் பெண்கள் என்றால், திறந்த நிலை மார்புகளோடு முன் பக்கமாக குனிந்து வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டும். இப்படியான சாதீய மேலாதிக்கத்தில் நாயர்களும், சாதீய அடுக்கு நிலையில் சாணார்களும் இருந்த காலத்தில் பொன்னுமணி வருகிறான்.

அவன் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். கூழைக்கும் பிடுகளும், காலைப் பிடித்து நக்குதலுமாக அவன் மிகுமரியாதை காட்டுகிறான். உயர்சாதியினரின் சாதி வளமுறை அறிந்தவன் என்ற நற்பெயரை பெறுகிறான். பண உதவிகளும் பெறுகிறான். அவனது வம்சமும், வணிகமும் பெருக.... பெருக.... மிகப் பெரிய செல்வந்தர்களாக நாடார்கள். ஆடம்பரக் கேளிக்கையான வாழ்க்கை முறையாலும், சோம்பேறித்தனத்தினாலும் நிலங்களை விற்கிற நிலைக்குத் தாழ்கிற நாயர்கள். வாழை மரங்களான நாயர்களின் நிலங்களை விலைக்கு வாங்குகிற நாடார்கள், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதற்காக.... காற்றை இதப்படுத்திய வாழைகளை வெட்டித் தள்ளிவிட்டு, காற்றை நச்சுப்படுத்துகிற ரப்பர் மரங்களை நடுகின்றனர். ரப்பர் வர்த்தகத்தில் அந்நிய முதலாளிகளுக்கே சோரம் போகின்றனர், நாடார்கள். இதுதான் ரப்பர் நாவல்.

நேசமணி, தோழர்மணி போன்ற நாடார்கள் காங்கிரஸ் தேசீயப் பேரியக்கத்திலும், கம்யூனிஸ்ட் பேரியக்கத்திலும் தேசபக்தியுடன் - தியாக சிந்தையுடன் சுதந்திரப் போர் நடததியிருக்கிற குமரி மண்ணில் நாடார்கள் தேசத்துரோகிகள் என்று நாவல் எழுதுவதற்கு சுரணையற்று பொய் சொல்லுகிற வெட்கமற்ற ஈனம் வேண்டும். அதில் ஜெயமோகன், ஜெயமோகனேதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். வாசத்தீண்டாமையும், தோள்ச்சீலை போட உரிமை இல்லாத அவலமும் உள்ள குமரி மாவட்டத்து சாணர்கள், உருண்டு புரண்டு, போராடி, கல்வியிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டு, மல்லுக்கட்டி, கட்டிப் புரண்டு மெல்ல மெல்ல மேல் நிலைக்கு வந்தார்கள் என்பது வரலாறு.

இது வாழ்த்தப்பட வேண்டிய வரலாறுதானே! அரிவாள் கம்பு எடுக்காமல் - ரத்தக் களறி செய்யாமல் – வன்முறைப் பிரயோகமில்லாமல் - கல்வியினாலும் வணிகத்தினாலும் ஒரு சாதி, மேல்நிலைக்கு உயர்ந்து வருவதை எந்த ஒரு மனிதநேயவாதியும் வரவேற்பான். வாழ்த்துவான். வர்ணாசிரமத்தை பாதுகாக்கிற மனுதர்மவாதிதான், சண்டாளச்சாதி முன்னேறுவதை சகித்துக் கொள்ளமாட்டான். பொருமிக் குமைவான். அந்த முன்னேற்றத்தை கயமை, ஈனம், ஏமாற்று, வஞ்சகம் என்று வசைபாடி அவதூறு செய்து காறித்துப்புவான். அதே பணியைத்தான் செய்கிறது. ஜெயமோகனின் ரப்பர் குறுநாவல்.

இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான - உயர்சாதி வெறி கொண்ட - மானுட வெறுப்பு கொண்ட - ஒருவர், எப்படி ஒரு கலைஞனாக முடியும்? கலைமனம் என்பது மெல்லியபூவின் வாசத்தைப் போல நுண்மையானது; மென்மையானது. ஒரு கலைஞனுக்காக எந்தப் பண்பும் ஜெயமோகனின் எழுத்தில் காணமுடியாது. மனசின் அடிமடியை பிசைய வைக்கிற - கண்கலங்க வைக்கிற எந்த ஒரு கலைப்படைப்பையும் இவர் தந்ததேயில்லை. இதயமில்லாத அறிவாளி, அவர்.

ஒரு பாசிச அறிவு ஜீவிதான், இவர். உலர்ந்த அறிவு ஜாஸ்தி. முசோலினியைப் போல - ஹிட்லரைப் போல - கொலம்பஸைப் போல இதயமில்லாத உயர் அறிவு ஜீவி. இதயமில்லாத அறிவாளிகள் இலக்கியத்துக்குள் நுழைந்தால், இந்துத்துவா பாசிசத்தைத்தான் நிறைவேற்றுவார்கள். அதைத்தான் ஜெயமோகன் செய்து கொண்டிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர் உயர்நிலைக்கு வருவதை - பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை சகித்துக் கொள்ளாத ஜெயமோகன்; பார்ப்பனீய ஆளுமைக்குட்படாத மடாதிபதிகளை மட்டும் குறை சொல்கிற ஜெயமோகன்; ஒற்றைக் கடவுளை மட்டும், ஒற்றை மதத்தை மட்டும் நிலைநாட்டுகிற ஜெயமோகன். அடுத்து என்ன செய்வார்?

இவ்வளவு தூரம் அம்பலத்துக்கு வந்துவிட்ட பிறகு, ஆயுதம் ஏந்தத்தானே செய்வார்?

பின் தொடரும் நிழலின் குரல் என்ற தலையணை பருமனில் ஒரு நாவல். முழுக்க கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாவல். வெளிப்படையான மூர்க்கமான தாக்குதல். கூச்சநாச்சமற்ற வெட்கமற்ற முரட்டுத் தாக்குதல்.

இத்தனை கொடூரமான முறையில் - குரூரமான விதத்தில் - கம்யூனிஸ்ட் எதிர்ப்பை கக்குகிற இவர்தான்,

எங்க அண்ணன் சி.ஐ.டி.யு. நான் சி.பி.எம். கட்சிக்கு ஓட்டு போட்டேன். தொலைபேசித் துறையில் இடதுசாரிச் சங்க உறுப்பினர் என்றெல்லாம் பேசிப் பேசிப் பசப்பினார்கள் என்றால்.... இவர் எத்தனை பெரிய மோசடிக்காரர்! எத்தனை மோசமான பொய்யர்!

காலம் காலமாக வைதீக இந்து மதம் விஷ்ணுவை மட்டும் ஒற்றைக் கடவுளாக முன் வைத்தது. சிறுதெய்வங்கள், கிராமப்புறத்து குலதெய்வங்கள், காட்டுப் பகுதிகளிலிருக்கிற காவல் தெய்வங்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குகிற ஏகப்பட்ட பெண் தெய்வங்கள் யாவற்றையும் கொலையுண்டு, ஆவிகளாக அலைகிற பேய்கள் என்றுதான் வைதீக இந்து மதம் சொல்லும். சமஸ்கிருதத்தை முறையாக கற்று, வைராக்யமாக ஆசார தர்மத்தை கடைபிடிக்கிற பார்ப்பன அர்ச்சகர்கள் யாரும் இந்த மாதிரிப்பட்ட தெய்வங்களுக்கும் - ஆலயங்களுக்கும் - அர்ச்சனை செய்ய வரவேமாட்டார்கள். வருகிற பார்ப்பன அர்ச்சகர்கள், பிழைப்பு நியாயத்துக்காக வருகிறவர்கள்தாம். எப்படியும் வயிற்றுப்பாடு கழியணுமே என்று வருகிறவர்கள்தாம்.

வைதீக இந்துமதம் பேய்களென அசூயையாக பார்க்கிற இந்த சிறு தெய்வங்கள், கிராமத்துக் குலதெய்வங்கள், காட்டுக்காவல் தெய்வங்கள், ஆயிரத்தெட்டு வகையான அம்மன் தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்கள் யாவற்றையும் ஆகம விதிகளுக்கு உட்படுததி, தமது ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டுமென ஆர்.எஸ்.எஸ். என்ற காவிக் கூட்டம் விரும்புகிறது.

காவியின் மதவெறி அரசியலுக்கு இந்த எளிய மக்களின் பண்பாட்டு வழிபாட்டுத்தளங்களை காவு வாங்க விரும்புகிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேட்கையின் இலக்கிய வெளிப்பாடுதான், ஜெயமோகனின் சமீபத்திய காவியம் கொற்றவை.

பிற்போக்கான இந்துத்துவவாதியான ஜெயமோகனை நவீன எழுத்தாளர் இந்தியத் தத்துவப் பெருமிதத்தை முன் வைக்கிற நவீனத்துவ சிந்தனையாளர் என்றெல்லாம் புகழ்கிறவர்கள் இப்போதும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த மாரீசமானை நிஜமான் என்று நான் நம்பவில்லையா ஒரு காலத்தில்? அப்புறம், விழிக்கவில்லையா?

அப்படித்தான் - இப்போது புகழ்கிறவர்களும் நாளை விழிப்பார்கள். நிச்சயமாக வரலாறு விழிக்க வைக்கும்.

ஹிட்லர் போன்றோரை மெச்சுவோரும் ராணுவ ஆட்சிதான் நாட்டுக்குத் தேவை என்ற கொக்கரித்தவர்களும் பாகிஸ்தான் ஆட்சியைப் பார்த்து விழித்துக் கொள்வதைப் போல........ ஜெயமோகனின் படைப்புகளை பார்த்தே அவரிடமிருந்து விழித்துக் கொள்வார்கள்.

மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு - 626127
இராஜபாளையம் - வழி
விருதுநகர் மாவட்டம்
04562 / 271233