Saturday, January 28, 2006

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் (Debate)

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக்
நன்றி: மக்கள் உரிமை வார இதழ்

பெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் "Art of Living" என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் இந்த விவாத அரங்கம் நடந்தது. "மக்கள் உரிமை" வார இதழுக்காக நமது சிறப்பு செய்தியாளர் ஜன்னா மைந்தன் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார்.

- ஆசிரியர் (மக்கள் உரிமை வார இதழ்)

டாக்டர் ஜாகிர் நாயக் 1965ல் பம்பாயில் பிறந்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். பிறகு முழுநேர இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார். Islamic Research Foundation என்ற அழைப்புப் பணி நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சவூதி அரேபியா, தென்ஆப்பிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவற்றில் உரையாற்றி உள்ளார். சமீபத்தில் 'Peace TV' என்ற பெயரில் 24 மணிநேரமும் இஸ்லாத்தை இயம்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தமிழகத்தில் உள்ள பாபநாசத்தில் 1956ல் பிறந்தவர். இவர் 1982ல் Art of Living (வாழும் கலை) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு 144 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. யோகாசனத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நலப்பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. 25,300 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிறுவியுள்ள அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பெங்களூர் பிரபல பேலஸ் மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, கண்காட்சிகளை தன்னகத்தே அமைத்துக் கொண்ட சிறப்பு, பேலஸ் மைதானத்துக்கு உண்டு. ஆனால், அந்த சனிக்கிழமை மாலை ஒரு புதிய வரலாற்றை அந்த மைதானம் அரங்கேற்றி கொண்டிருந்தது. ஒளிவிளக்குகள் அந்த மாலைப் பொழுதை வெளிச்சமாக்கியிருந்தன. அமர்வதற்கு இடமின்றி வி.ஐ.பி. பாஸ்கள் பெற்றவர்கள் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான கிரேன்களில் வீடியோ கேமிராக்கள் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே படம்பிடித்து உலகம் முழுவதும் காட்சிகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆம் இஸ்லாமிய அழைப்புப் பணி வரலாற்றில் முதன் முறையாக இந்தக் விவாத அரங்கம் நேரடியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள Peace தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.

நமது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த உமர் ஷரீப் தலைமையில் பெங்களூரில் இயங்கும் 'டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்' நிறுவனம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

முதன்முறையாக இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும், உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடையே பிரபலமாக இருக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் இந்த விவாதத்தில் எப்படி வாதங்களை எடுத்துரைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்த வேளையில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த டாக்டர் முஹம்மது நாயக், முதலில் விவாத நடைமுறைகளை எடுத்துரைத்தார். டாக்டர் ஜாகிர் நாயக் விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் 50 நிமிடங்கள் உரையாற்றுவார் என்றும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்கள் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார் என்றும் அவர் அறிவித்தார். இதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுவார் என்றும் முஹம்மது நாயக் தெவித்தார். இதன்பிறகு இரண்டு அறிஞர்களும் திரண்டிருக்கும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை ஆரம்பித்தார்.

ஹிந்து வேதங்களும் திருக்குர்ஆனும் சொல்லும் கடவுள் கொள்கை ஒன்றே!
- டாக்டர் ஜாகிர் நாயக்

திருக்குர்ஆனின் 3வது அத்தியாயமான ஆலஇம்ரானின் 64வது வசனத்தை பீடிகையாகப் போட்டு தனது கருத்துக்களை தொடங்கினார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: "(நபியே! அவர்களிடம்) "வேதத்தை உடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறி விடுங்கள்."

"திருக்குர்ஆன் பொதுவான விஷயத்தின் பக்கம் மக்கள் ஒன்றுசேர வேண்டும்" என்று கூறுகிறது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மற்றும் ஹிந்து மதத்தை கடவுள் பற்றி கூறப்பட்டுள்ள விஷயங்களில் பொதுவானதைப் பற்றி அறிய முற்படுவோம் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜாகிர் நாயக், "முதலில் ஹிந்து என்றால் யார்? முஸ்லிம் என்றால் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்" என்று தனது உரையைத் தொடங்கினார்.

ஹிந்து என்ற பதம் பூகோளம் தொடர்பானது; சிந்து நதிக்கு அப்பால் உள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஹிந்து என்ற பெயர் உண்டு. இதேபோல் சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்களுக்கும் இந்தப் பெயர் உண்டு. மிக அதிக எண்ணிக்கையிலான வரலாற்று ஆய்வாளர்கள், அரபுகள்தான் முதன் முதலில் ஹிந்து என்ற பதத்தைப் பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள். இந்தியாவிற்கு முஸ்லிம்கள் வருவதற்கு முன்பாக ஹிந்து என்ற பதம் அறியப்படாத ஒன்றாக இருந்தது என்று மதங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Religions) 6-ம் பாகம் கூறுகிறது. ஜவஹர்லால் நேருவும் இந்தப் பதம் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டதுதான் என்று கூறுகிறார். 19-ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக ஆங்கிலேயர்கள் இந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள். இந்தியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர் அல்லாத பல இன மக்களை அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்கள். ஹிந்து மதம் என்று குறிப்பிடுவதை விட 'சனாதான தர்மம்' என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். சுவாமி விவேகானந்தர் கூட ஹிந்துக்களை 'வேதாந்திகள்' என்று அழைப்பதே சரியானது என்று குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் கோடிட்டுக் காட்டினார்.

'இஸ்லாம்' என்றால் சாந்தி, அமைதி என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிவதின் மூலம் கிடைக்கும் அமைதிக்குத்தான் 'இஸ்லாம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சாந்தியைத் தேடிக் கொள்ளக் கூடியவர்களுக்கு 'முஸ்லிம்கள்' என்று பெயர் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெளிவுபடுத்தினார்.

அடுத்ததாக, புனித வேதங்கள் என்பதற்கான விளக்கங்களை அவர் அளித்தார். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, வேதங்களை இருவகையாக பிரிக்கலாம். முதல் வகை ஸ்ருதிகள், இரண்டாம் வகை ஸ்மிருதிகள். ஸ்ருதிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வேதங்கள், மற்றொன்று உபநிஷத்துகள். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்ம வேதம் ஆகியவை நான்கு வேதங்களாகும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர், "வேதங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை" என்று கூறுகிறார்கள். ஆனால், வேறு சிலர் அவை 4,000 ஆண்டுகள் பழமையானதுதான் என்று குறிப்பிடுகிறார்கள். வேதங்கள்தான் மிகப்புனிதமானது என்றும், வேதங்களுக்கும் மற்ற ஹிந்து புனித நூல்களுக்குமிடையே முரண் ஏற்படும்போது வேதங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

உபநிஷத்துகளுக்கு 'குருவின் அருகில் அமர்ந்து பெற்றவை' என்று பொருள். 700க்கும் மேற்பட்ட உபநிஷத்துகள் உள்ளன. ஆனால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 18 உபநிஷத்துகளைத் தொகுத்து 'உபநிஷக் கோட்பாடுகள்' என்ற நூலை தொகுத்தளித்தார்.

ஸ்மிருதி என்றால், 'கேட்பது, நினைவில் கொள்வது' என்று பொருள். ஸ்மிருதிகள், ஸ்ருதிகளை விட புனிதத்தன்மையில் தாழ்ந்தவையாகும். அவை இறைவனின் வார்த்தைகளும் அல்ல என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். ஸ்மிருதிகளுக்கு 'தர்ம சாஸ்திரங்கள்' என்றும் பொருள் உண்டு. புராணங்களும் இதிகாசங்களும் ஸ்மிருதிகளில் அடங்கும். பிரபலமான இதிகாசங்கள் இரண்டு உள்ளன. அவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும். பகவத் கீதை, மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளில் உள்ளவற்றில் வேதங்கள் தான் ஆதாரப்பூர்வமானதாகும் என்று டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து புனித நூல்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்.

அடுத்து, இஸ்லாமியப் புனித நூல்களைப் பற்றிய ஒரு பார்வையை டாக்டர். ஜாகிர் நாயக் தனது உரையில் எடுத்துரைத்தார்.

உலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்த வழிகாட்டுதல்களில் இறுதியாக வந்தது 'திருக்குர்ஆன்' ஆகும். திருக்குர்ஆன் மனிதகுலம் முழுவதற்கும் வந்த ஒரு வழிகாட்டியாகும். திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருளப்பட்டதாகும். ஆனால், திருக்குர்ஆனைப் பொருத்தவரை, அது அனைத்து மக்களுக்கும், எல்லா காலகட்டத்திற்கும் அளிக்கப்பட்ட ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர். ஜாகிர் நாயக் இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் 14:1, 14:52 மற்றும் 39:41 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டினார். திருக்குர்ஆனுக்கு அடுத்ததாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. நபிகள் நாயகத்தின் சொல், செயல், மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கி இருக்கும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கின்றன என்று கூறினார்.

தனது உரையின் அடுத்தக் கட்டத்தில், கடவுள் கொள்கையைப் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் எடுத்துரைக்க ஆரம்பித்தார். "இந்த பரிமாற்றத்தை நான் சொல்வதும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சொல்வதும் வேதங்களில் சொல்லப்பட்டவைக்கு இசைவாக அமைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

சாதாரண ஹிந்துக்களிடம், கடவுளர்கள் எத்தனை? என்று கேட்டால் 'ஆயிரக்கணக்கான கடவுளர்கள் உள்ளனர்' என்று கூறுவார்கள். 'உலகில் உள்ள அனைத்தும் கடவுள்' என்று சொல்வார்கள். சூரியன், சந்திரன், மரம், செடி, கொடி, பிராணிகள், விலங்குகள் முதலியவற்றையும் கூட கடவுள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கற்றறிந்த ஹிந்துக்களைக் கேட்டால், 'கடவுள் ஒன்றுதான்' என்று சொல்வார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை 'கடவுள் ஒன்றுதான்; உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது' என்று சொல்வார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடவுள் கொள்கையில் உள்ள முக்கிய வேறுபாடு, உலகில் உள்ள அனைத்தும் கடவுள் என்று ஹிந்துக்கள் சொல்கிறார்கள், ஆனால் முஸ்லிம்களோ, உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடுகிறார்கள். இதை மிக சுருக்கமாக டாக்டர் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தனக்கே உரிய பாணியில், இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு (') ஒரு மேற்கோள் புள்ளிதான் என்று விளக்கினார். அதாவது, முஸ்லிம்கள் (Everything is God's) என்று சொல்கிறார்கள், ஆனால் ஹிந்துக்கள் (Everything is God) என்று குறிப்பிடுகிறார்கள் என்றார். இந்த சிறிய வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சியை மேற்கொண்டால், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒருமைப்பாடு ஏற்பட வழிபிறக்கும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்தார். இதைக் களைவதற்கான வழி வேதங்களில் உள்ளது என்று சொன்ன அவர், பல்வேறு ஹிந்து வேதங்களை மேற்கோள் காட்டி, அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் தன்மைகளும், திருக்குர்ஆன் சொல்லும் கடவுளின் தன்மைகளும் ஒன்றுபோல் இருப்பதை சுட்டிக்காட்டி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் டாக்டர் ஜாகிர் நாயக்.

சந்தோக்கிய உபநிஷத், யஜுர் வேதம், ரிக் வேதம், பிரம்மசூத்ரா என்று பல ஹிந்து புனித நூல்களில், 'கடவுள் ஒன்றுதான்; கடவுளுக்கு பெற்றோர் இல்லை; கடவுளுக்கு ஒப்பாக யாதுமில்லை' போன்ற இஸ்லாம் கூறும் ஏகதெய்வ கொள்கை உள்ளதை ஆதாரங்களுடன் டாக்டர் ஜாகிர் நாயக் சமர்ப்பித்தார்.

பகவத் கீதை: 'சிந்தனையைப் பறிகொடுத்தவர்கள் தான் சிலைகளை வணங்குகிறார்கள்'
பகவத் கீதை: 'நான் யாராலும் பெற்றெடுக்கப்படவில்லை'
யஜுர் வேதம்: 'கடவுளுக்கு நிகராக படைக்கப்பட்டவைகளை வணங்குபவர்கள் இருளில் நுழைகிறார்கள்'
ரிக் வேதம்: 'கடவுள் ஒருவர்தான்; அவனையே வணங்க வேண்டும்; அவனையே புகழ வேண்டும்'

இவ்வாறு எண்ணற்ற மேற்கோள்களைக் காட்டிய டாக்டர் ஜாகிர் நாயக், 'ரிக் வேதத்தில் கடவுளுக்கு அளிக்கப் பட்ட பேர்களில் ஒன்று பிரம்மா. பிரம்மா என்றால், படைப்பாளன் என்று பொருள், இதற்கு அரபியில் சொல்ல வேண்டு மென்றால் 'ஃகாலிக்' என்று குறிப்பிடலாம் என்று தெரிவித்தார். இதேபோல், இன்னொரு பெயரான விஷ்ணுவுக்கு 'ரட்சகன்' என்று பொருள். இதை அரபியில் 'ரப்பு' என்று குறிப்பிடலாம் என்றார்.

சுருக்கமாக வேதங்கள் சொல்லும் கடவுள் 'ஏகன்' என்றும், அவன் இணை, துணையற்றவன் என்றும் ஆதாரங்களோடு விளக்கிவிட்டு, திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக திருக்குர் ஆனின் 112வது அத்தியாயமான சூரத்துல் இக்லாஸை மேற்கோள் காட்டினார் டாக்டர் ஜாகிர் நாயக்.

கடவுள் என்று ஏற்றுக்கொள்வதற்கு நான்கு சோதனைகளை திருக்குர்ஆன் வைத்துள்ளது. அவை, 1) கடவுள் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் 2) தேவையற்றவனாக இருக்க வேண்டும் 3) எவரையும் பெற்றெடுத்திருக்கக் கூடாது, எவராலும் பெற்றெடுக்கப்பட்டிருக்கவும் கூடாது, 4) ஒப்பாக யாரும் இருக்கக் கூடாது.

இந்தியாவில் சிலர் பகவான் ரஜ்னிஷை கடவுள் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த சோதனைகள் எதிலும் ரஜ்னிஷ் வெற்றிபெறவில்லை. ரஜ்னிஷ், மத்தியப் பிரதேசத்தில் 11-12-1931ல் பிறந்து 19-01-1990ல் மரணமடைந்ததார் என்பது உண்மை. அமெக்க அரசு அவரைக் கைது செய்து சிறையில் வைத்தபோது, மெதுவாக சாகவைக்கும் நஞ்சு அவருக்கு கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 21 நாடுகள் அவருக்கு விசா அளிப்பதற்கு மறுத்துவிட்டன. கடவுளுக்கு இத்தகைய நிலை ஏற்படுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கேட்டுக் கொண்டார்.

கடவுளை அல்லாஹ் என்று முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். இந்தப் பதமும் தனித்தன்மை வாய்ந்தது. இந்தப் பதத்தை பன்மையாக்க முடியாது, மேலும் எந்தவகையிலும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் தன்மையுடையதாக மாற்றவும் முடியாது என்று விளக்கமளித்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.

"இந்த விவாத அரங்கிற்கு ஏற்பாடு செய்தபோது, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் தனது உரைகளைப் பற்றியும் நூற்களைப் பற்றியும் எனது கருத்தை அறிய விரும்புவதாகக் கூறினார்கள். அவர் எழுதிய Hinduism and Islam - The Common Thread (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாம் - ஒரு பொதுவான இழை) என்ற நூலையும் அவரது வீடியோ பேச்சு ஒன்றையும் நான் பார்த்தேன். அதில் உள்ள பல விஷயங்களில் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில், பல விஷயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளேன்" என்றார் நாயக்.

"ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது ஆதாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை நான் முற்றிலுமாக வரவேற்கிறேன். அதேபோல், ஆழமாக அதைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கும் நான் உடன்படுகிறேன். Similarities between Hinduism and Islam (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்திற்கு பொதுவானவை) என்ற தலைப்பில் நானும் ஒரு நூலை எழுதியுள்ளேன்" என்றார் டாக்டர். ஜார் நாயக்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், இரண்டாவது பக்கத்தில், "ஹிந்துக்கள் பல கடவுள்களை வணங்குவதாக எண்ணம் பொதுவாக நிலவுகிறது; ஆனால், ஒரே கடவுள்தான் உண்டு. 33 கோடி தேவர்களும், தேவதைகளும் இருப்ப தாகச் சொன்னாலும் ஒரே பரமாத்மா தான் உண்டு. ஒளியில் ஏழு நிறங்கள் சேர்ந்தாலும் கூட ஒரே வெள்ளை நிறம் தான் வெளிப்படுகிறது. இதுபோன்றுதான் ஹிந்துக்களின் கடவுள் கொள்கை" என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டினார்.

ஒளியைப் பற்றிய ஸ்ரீஸ்ரீரவிசங்கன் மேற்கோள் சிந்தனைக்குப் பொருத்தமானதல்ல என்று சொன்ன டாக்டர் ஜாகிர் நாயக், ஒவ்வொரு நிறமும் வெவ்வேறானவை என்றும், அவை அனைத்தும் வெள்ளை நிறம் உடையதல்ல என்றும், இந்த ஏழு நிறத்தில் ஒன்று இல்லை என்றாலும் வெளிச்சமில்லை என்றும் தெளிவுபடுத்தினார். எனவே, பல கடவுளர்கள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றைத்தான் சுட்டிக் காட்டுகிறது என்று சொல்லப்படுவதை டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார்.

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் இருக்கின்றன. இந்த பாகங்கள் தனித்தனியாக மனிதனாக முடியாது. அனைத்துப் பாகங்களும் ஒன்றுசேர்ந்தால் தான் மனித உடலாகும். இதேபோல் வெவ்வேறு பொருட்கள் கடவுளாக முடியாது என்று டாக்டர் ஜாகிர் நாயக் வாதிட்டார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், 'ஹிந்து மதத்தில் ஒரு கடவுளுக்கு 108 பெயர்கள் உள்ளன. இது இஸ்லாத்தில் கடவுளுக்கு அளிக்கப்பட்டுள்ள 99 பெயர்களைப் போன்றுள்ளது' என்று எழுதியுள்ளதையும் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். கடவுளுக்கு 99 பெயர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே கடவுளைத் தான் சுட்டிக் காட்டுகின்றன என்பதை உதாரணத்தோடு அவர் விளக்கினார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், வழிபாட்டு முறைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ள கருத்துக்களையும் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். ஒரு நபருடைய படம் அந்த நபராக முடியாது, ஒரு நபருடைய விசிட்டிங் கார்டு அந்த நபராக முடியாது. இதேபோல் சிலை தெய்வீகத்தன்மையின் அடையாளமாக விளங்க முடியாது என்பதை 'யஜுர்' வேதத்தை மேற்கோள் காட்டி (யஜுர் வேதம் 33:3:7) டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். யஜுர் வேதத்தின் இந்த வசனம், கடவுளுக்கு இணைதுணை இல்லை என்றும், ஒப்பாகவும் இல்லை என்றும் பறைசாற்றியுள்ளது. எனவே, சிலைக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று கருதி கடவுளுக்கு நிகராக்குவது யஜுர் வேதத்திற்கு எதிரானது என்று டாக்டர் ஜாகிர் நாயக் வாதிட்டார்.

"நான் ஒருவரிடம் பணம் கேட்டிருந்தேன். அவர் பணத்துடன் தனது விசிட்டிங் கார்டையும் அனுப்பி வைத்தார். நான் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அவரது விசிட்டிங் கார்டுக்கு நன்றி சொல்வது அறிவுப்பூர்வமானதாக அமையாது. ஹிந்து சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் 'சிலை வழிபாடு தவறு' என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு உயர்நிலை உணர்வு ஏற்படும்போது, கடவுளை வணங்கு வதற்கு சிலை தேவையில்லை என்பதை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த உயர்நிலைக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இஸ்லாம் உயர்த்தியுள்ளது. எனவேதான், இஸ்லாத்தில் சிலைவழிபாடு இல்லை என்று டாக்டர் ஜாகிர் நாயக் குறிப்பிட்டார். (அவர் இந்தக் கருத்தை தெவித்தபோது பலத்த கரவொலி மைதானத்தை அதிர வைத்தது)

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், உருவமற்ற கடவுள் வழிபாட்டை இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், இதன் எடுத்துக்காட்டாகத்தான் முஸ்லிம்கள் கஅபாவை வணங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளதையும் ஜாகிர் நாயக் மறுத்தார். முஸ்லிம்கள் ஒருபோதும் கஅபாவை வணங்கவில்லை, கஅபாவை கடவுள் என்றும் முஸ்லிம்கள் எண்ணுவதில்லை. கஅபா தொழுகைக்கான ஒரு திசைதான் என்று தெளிவுபடுத்தினார்.

முதன்முதலாக உலக வரைபடத்தை அமைத்தவர் அல்இத்ரீஸி என்ற முஸ்லிம்தான். அவர் கஅபாவை மையமாக வைத்து உலக வரைபடத்தை அமைத்த போது தென்துருவத்தை மேலேயும், வடதுருவத்தை கீழேயும் வைத்து அமைத்திருந்தார். இதற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேற்கத்திய வரைபடவியலாளர்கள் உலக வரைபடத்தை வரைந்தபோது அவர்கள் வடபுலத்தை மேலேயும், தென்புலத்தை கீழேயும் வைத்து வரைந்தார்கள். ஆனால் அப்போதும் கூட "கஅபா" தான் மையமாக அமைந்தது என்று ஜாகிர் நாயக் விளக்கமளித்தார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில் 26வது பக்கத்தில், கஅபாவில் உள்ள அனைத்து சிலைகளையும் முஹம்மத் அழித்தார் என்றும், ஆனால் மைய கல்லான கருப்புக்கல்லை அவர் அழிக்கவில்லை என்றும் எழுதியுள்ளார். கருப்புக்கல் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிடும் 'ஹஜ்ருல் அஸ்வத்' கல்லை மக்கள் வணங்கியதாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை. எனவே, இந்தக் கல்லை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று கூறுவதும் தவறானது என்று டாக்டர் ஜாகிர் நாயக் விளக்கினார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர், முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் 'ஒளு' செய்யும் முறை வேதாந்த பரம்பரையில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், இதற்கு யூத மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தையும் ஜாகிர் நாயக் மறுத்தார். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஒளு செய்யும் முறை இருந்ததை அவர் மேற்கோள் காட்டினார். பழைய ஏற்பாட்டில் மூஸாவும், ஹாரூணும் தமது உடல்களை சுத்தப்படுத்துவதை பற்றிய வசனங்களையும், புதிய ஏற்பாட்டில் பவுல் அடிகள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது உரையின் இறுதியில், வாழும் கலைக்கு சிறந்த வழிகாட்டும் நூலாக திருக்குர்ஆன் விளங்குகிறது என்று சொல்லிவிட்டு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு மேடையிலேயே வழங்கினார் டாக்டர். ஜாகிர் நாயக். மனிதர்களை புரிந்து கொள்வதற்காக கடவுள், மனித வடிவத்தில் வருவதாக பலரும் நம்பிக்கைக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது சரியான நம்பிக்கை இல்லை. டேப் ரிக்கார்டரை நாம் தயாரிக்க வேண்டுமென்றால், நாம் டேப் ரிக்கார்டராக வேண்டிய அவசியமில்லை. டேப் ரிக்கார்டரை தயாரித்துவிட்டு, அதை எப்படி இயக்க வேண்டும் என்ற வழிகாட்டும் நூலை மட்டும்தான் நாம் தயாரிக்க வேண்டும். இதேபோல் மனிதனைப் படைத்த இறைவன், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் நூலை மட்டும்தான் அனுப்ப வேண்டும், அவன் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான சிறந்த நூலை கடவுளைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது. அந்த சிறந்த நூலாக - இறைவன் அனுப்பிய நூலாக திருக்குர்ஆன் அமைந்துள்ளது.

தனது உரையை திருக்குர்ஆனின் 6வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 108வது வசனத்தை மேற்கோள் காட்டி நிறைவு செய்தார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: "அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏசாதீர்கள்; (அப்படி ஏசினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்".

பெரும் கரகோஷத்துடன் டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை நிறைவு செய்தவுடன், அடுத்து ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உரையாற்ற அழைக்கப்பட்டார்.


கடவுளைப் பற்றிய உயர்ந்த கோட்பாட்டை வேதங்கள் எடுத்துக்காட்டுகின்றன!
- ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

"நீங்கள் எல்லா புனித நூல்களையும் படித்தவர்களாக இருக்கலாம். நீங்கள் வாதிடலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால் வார்த்தைகளுக்கு அப்பால்தான் புரிந்துணர்வு அமைந்துள்ளது" என்ற கபீர்தாஸின் கவிதை ஒன்றுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது உரையைத் தொடங்கினார்.

Hinduism and Islam - The Common Thread என்று தான் எழுதிய நூலில் பல தவறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். குஜராத் கலவரம் நடைபெற்றபோது ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்தான், தான் அந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிட்டார். தனக்கு முழுமையாக திருக்குர்ஆனை தெரியாது, ஆனால் தனது நோக்கம், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பரஸ்பரம் நேசமும் - அன்பும் இருக்க வேண்டும் என்பது தான் என்று அவர் தெரிவித்தார். நோக்கம் முக்கியமானது என்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வலியுறுத்தினார்.

லாஜிக் (தர்க்கத்தை) சார்ந்து நிற்க வேண்டாம் என்றும், வாதங்கள் நம்மை வெகுதூரத்திற்கு அழைத்து செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹிந்துக்களில் பல்வேறு சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. இதேபோல், முஸ்லிம்களிடையே ஷியா, சுன்னத்தி, காதியானி என்று பல சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. பல்வேறு சிந்தனைப் பிரிவுகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளன. இவை அனைத்துக்கும் பொதுவானவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை என்ற வார்த்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், சகிப்புத்தன்மை என்பது மிக வலிமையற்ற பதமாகும். நாம் ஒருவரையொருவர் சகித்துக் கொள்வதற்கு பதிலாக நேசம் கொள்வதற்கு முன்வர வேண்டும். ஒருவர் மற்றொருவருடைய மதத்தை நேசம் கொள்வது மிகமிக அவசியமானதாகும்.
நான் ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஓவியரைப் பாராட்டினேன். ஆனால் ஓவியத்தைப் பாராட்ட மாட்டேன் என்று கூறுவது சரியான நிலைப்பாடாக இருக்காது. இந்த உலகத்தைப் படைத்த கடவுள் படைப்புகளுக்குள் நுழைந்து விட்டார். சூஃபி ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அன்பின் மூலமே நீங்கள் பரம்பொருள் அடைய முடியும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட நாம் கைகுலுக்கிக் கொள்ள வேண்டும். நேசம்தான் அனைத்தையும் மிகைத்து நிற்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார்.

தான் பாகிஸ்தான் சென்றிருந்த போது தன்னிடம் "நீங்கள் ஏன் பல கடவுளர்களை வணங்குகிறீர்கள்?" என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது என்று தெவித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அதற்கான பதிலையும் தெவித்தார். கோதுமை மாவை பிசைந்த பின் அதிலிருந்து ரொட்டியும், சப்பாத்தியும், பூயும், சமோசாவும் செய்யலாம். அதுபோல்தான் அனைத்தும் கடவுளின் லீலைகளாக அமைந்துள்ளன என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் விளக்கினார்.

தனது உரையில், டாக்டர் ஜாகிர் நாயக்கின் அறிவாற்றலை பாராட்டிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஏராளமான ஹிந்துக்கள் இங்கு ஜாகிர் நாயக் கொண்டு வந்துள்ள ஹிந்து வேதங்களை பார்த்திருக்கவும் மாட்டார்கள், படித்திருக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். இந்த வேதங்கள் ஒரு உயர்ந்த கோட்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. ஒரே கடவுள், ஒன்றே குலம் என்பதை நினைவூட்டுகின்றன.

வார்த்தைகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு நாம் வாதம் செய்ய வேண்டாம். வேற்றுமையுள்ள சூழ்நிலையில் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமுதாயமும் தனக்குள்ளேயே பார்த்துக் கொள்ள வேண்டும். தன் சமுதாயத்திற்கு உள்ளே உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் சமுதாய சீர்திருத்தமாகும். வன்முறை இல்லாத போக்கு போதிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார்.

உபநிஷத்துகளிலிருந்து ஒரு கதையை அவர் தனது உரையில் கூறினார். ஒரு தந்தையிடம் மகன், 'கடவுள் எப்படி இருப்பார்?' என்று கேட்கிறான். தந்தை அந்த மகனிடம், 'இந்தக் கட்டடத்தைப் பார்த்தாயா? இதற்கு முன் அங்கு என்ன இருந்தது?' என்று கேட்கிறார். 'வெற்றிடம் இருந்தது' என்று மகன் பதில் சொல்கிறான். 'கட்டடத்தை இடித்துவிட்டால் மீண்டும் என்ன இருக்கும்?' என்று கேட்கிறார் தந்தை. இதற்கு அந்த மகன், 'மீண்டும் வெற்றிடம் தான் இருக்கும்' என்று பதிலளிக்கிறான்.

இந்த தத்துவத்தை நாம் புந்து கொள்ள வேண்டும். வேறுபாடுகளின் அடிப்படையில் நாம் விவாதங்களை செய்ய முடியாது. கடவுளுடன் செல்லமாக விளையாட வேண்டும். இந்த உருவ வழிபாடுகளெல்லாம் அதுபோன்ற செயல்கள்தான். அவற்றை நாம் முக்கியமானதாகக் கருத வேண்டாம். இவையெல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு தான். நான் இங்கே வந்தபோது நீங்கள் மலர்க்கொத்துகளை கொடுத்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி என்னை மகிழ்வித்தீர்கள். அதுபோன்றதுதான் உருவ வழிபாடும் என்று வாதிட்டார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.

மற்றவர்களின் செயல்பாடுகளை நாம் குறைசொல்லக்கூடாது. அவர்கள் நம்மிடம் கல்வியை நாடி வரும்போது மட்டுமே நாம் விமர்சனங்களை செய்யலாம். நான் யோகாசனத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கின்றேன். அது மதங்களைக் கடந்து அனைவரும் படிக்க வேண்டிய கலையாகும். மூச்சைக் கட்டுப்படுவதுடன் நாம் உள்ளத்தையும் கட்டுப்படுத்த முடியும். மூச்சும் உள்ளமும் ஒருங்கிணைந்தது. நாங்கள் ஈராக்கிற்கு சென்றபோது, ஏராளமானோர் இரவுத்தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் யோகா படித்துக் கொடுத்ததன் மூலம் அவர்கள் மனக்குறைகள் நீங்கின என்று அவர் தெரிவித்தார்.

இறுதியாக அவர், எந்த ஒரு மதமும் வன்முறையை போதிக்கவில்லை. நமக்குள் உள்ள பொதுவான விஷயங்களை நாம் போற்றுவோம். தர்க்கங்களைத் தவிர்ப்போம். அதிகமாக புன்னகைப்போம். கோபப்படுவதை அரிதாக்கிக் கொள்வோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு 60 நிமிடங்கள் பேசுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் 30 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.
 
வாழும் கலைக்கு வழிகாட்டி திருக்குர்ஆனே...
- டாக்டர் ஜாகிர் நாயக் பதிலுரை

இதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு பதிலளித்து பேசுவதற்கு 10 நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.

திருக்குர்ஆனின் 17வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 81வது வசனமான "சத்தியம் வந்தது, அசத்தியம் மறைந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் என்றும் கூறுங்கள்" என்ற வசனத்துடன் தனது பதிலுரையை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கினார்.

"இஸ்லாத்தில் வாழ்த்தும் முறையே அமைதியை வலியுறுத்துகிறது. அமைதியைப் பரப்புவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அந்த அடிப்படையில், நாம் அனைவரையும் நேசிக்கிறோம், ஸ்ரீஸ்ரீரவிசங்கரையும் நேசிக்கிறோம். (உடனடியாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறுக்கிட்டு, "என்னை நேசிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறினார்) ஜாகிர் நாயக் "எனக்கு வேறு வழி இருந்தாலும் கூட உங்களை நான் நேசிப்பேன்" என்று குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து பேசினார்.

நாம் யாரை நேசிச்கின்றோமோ அவர்கள் தவறு செய்தால், அவர்களைத் திருத்துவதுதான் நமது நேசிப்பின் அடையாளமாக இருக்கும். ஒரு குழந்தை தனது தந்தையிடம், 'மாடியிலிருந்து நான் கீழே குதிக்கப்போகிறேன்' என்று சொன்னால், அந்தக் குழந்தையின் மீது உள்ள நேசத்தின் காரணமாக தந்தை சும்மா இருக்கமாட்டார். குழந்தையைத் திருத்துவார். அதுபோல்தான் நமது நேசத்திற்குரியவர்கள் தவறு செய்தால் நாம் அவர்களைத் திருத்தவேண்டும். ஒருவர் தவறு செய்தால் நாம் அவரை ஏச வேண்டாம், ஆனால் அவரை திருத்துவதற்கு முயல வேண்டும்.

தர்க்கம் (லாஜிக்) எதற்கும் வழிவகுக்காது என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார். ஆனால், அவரை தர்க்கரீதியாக செயல்படுபவராகவே பார்க்கிறேன். ஆன்மீகத்திற்கு தர்க்கமும், ஆதாரமும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் திருக்குர்ஆனை படித்திருப்பார். அவர் மீண்டும் அதை படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வேதங்கள் சொல்பவற்றை நாம் அறிந்திருக்கிறோம். வாழும் கலைக்கு மிகத்தேவையான உன்னதமான நூலாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இந்த திருக்குர்ஆன் அடிப்படையில் அமைந்துள்ள வாழும் கலை அமைப்பில் உலகம் முழுவதும் 130 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் சேருமாறு உங்களையும் அழைக்கிறேன்." என்று டாக்டர் ஜாகிர் நாயக் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

"நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் ஆகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்." (3:19) என்ற திருக்குர்ஆன் வசனத்துடன் தனது உரையை நிறைவு செய்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.

மற்றவர்களை நமது வழிக்கு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்- ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மறுப்புரை

டாக்டர் ஜாகிர் நாயக் உரை முடிவடைந்தவுடன் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு மீண்டும் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது பதிலுரையில், "உங்கள் வழிக்கு மாறவேண்டும் என்று யாரையும் நாம் வலியுறுத்தக் கூடாது. தர்க்கத்தையும் நாம் பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி நாம் எந்தக் கருத்தையும் தெவிக்க மாட்டோம். நம்மை நாமே மாற்றிக் கொள்வோம். நிபந்தனையற்ற தெய்வீகத்தன்மையை நாம் அனுபவ ரீதியாகத்தான் உணர முடியும். இங்கு ரஜ்னீஷைப் பற்றிய மேற்கோள் காட்டப்பட்டதற்கு நான் வருத்தப்படுகிறேன். நமக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றது. ஆனால், அந்த வேறுபாடுகளை மதித்து நமக்கிடையே நேசத்தை வளர்ப்பதுதான் முக்கியமானதாகும். நாம் முழு மனிதகுலத்தின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும். மற்றவர்களை நமது வழிக்கு மாற்றக் கூடிய வழிமுறையை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்று முடித்துக் கொண்டார்.

நேரடி விவாதம் இத்துடன் நிறைவு பெற்றது. விவாதத்தின் தலைப்பு "புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்த அடிப்படையில் வலுவாக கருத்து சொல்லாமல் இருந்தது விறுவிறுப்பான விவாதத்தை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அவர் தனது வாதங்களுக்கு ஆதாரமாக வேதங்களை மேற்கொள்ளாமல் உரையாற்றியதும் ஏமாற்றமாக இருந்தது.

விவாத உரைகளுக்குப்பின் இருவரும் திரண்டிருந்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

திருக்குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை சரியானதே!
- ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அளித்த பதில்களிருந்து...

கேள்வி: திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் கொள்கை சயானதா? தவறானதா?

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: சரியானதுதான்.

கேள்வி: சமீப காலமாக தற்கொலைத் தாக்குதல்களும், பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெறுகின்றது. இந்த தாக்குதலில் ஈடுபடுவோர் ஒரு நோக்கத்துடன் செயல்பட்டு தங்கள் நோக்கத்தை நியாயப்படுத்துகின்றார்கள். இத்தகையவர்களை நாம் நேசிக்க வேண்டுமா? தர்க்க ரீதியாக பதில் சொல்ல வேண்டாம்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: நான் தர்க்கத்தை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடவில்லை. ஆனால் குதர்க்கம் செய்யக்கூடாது என்றுதான் குறிப்பிட்டேன். நாம் இத்தகையவர்களை கவனிக்க வேண்டும். சிலரை கண்டிப்பதற்காக நாம் தர்க்கத்தை பயன்படுத்தக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். எங்கள் அமைப்பினர் சிறைகளுக்குச் சென்று, குற்றவாளிகளுடன் பழகி, அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களைத் திருத்தும் பணிகளை செய்து வருகிறார்கள்.

கேள்வி: நான் ஒரு மருத்துவமனை கண்காணிப்பாளர். பெங்களூரில் இந்திய விஞ்ஞான நிறுவனத்தில் தாக்குதல் நடைபெற்ற போது பணியில் இருந்தேன். அந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் யாருமில்லை. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றும், இஸ்லாம் தான் காரணம் என்றும் உடனே செய்திகள் பரப்பப்படுகின்றது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: நான் அரசு, காவல்துறை, செய்தி ஊடகங்கள் சார்பாக கருத்து சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக இஸ்லாத்தின் மீது பழிபோடப்படுகிறது. ஆனால், எனக்கு இதில் உடன்பாடில்லை. இந்த தவறான சித்தரிப்பை அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதன் முதல்படியாக ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும்.

கேள்வி: அனைவரிடமும் அன்பு மட்டும்தான் செலுத்த வேண்டுமென்றால், மகாபாரதத்தில் கிருஷ்ணன் ஏன் அர்ஜுனனை யுத்தத்திற்கு செல்லப் பணித்தார்?

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: சண்டையே போடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, நீதிக்காக சண்டை போட வேண்டும். காவல்துறையினர் அவர்களது கடமையை ஆற்ற வேண்டும். அர்ஜுனன் தனது கடமையை செய்வதற்கு தவறும்போது கிருஷ்ணன் அவரது கடமையை நினைவூட்டுகிறான். இது வன்முறையைத் தூண்டுவதாக அமையாது.

ஹிந்து வேதங்களில் நபிகள் நாயகம்
டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த பதில்களிலிருந்து...

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஹிந்து வேதங்களில் முன்னறிவிப்பு உள்ளதா?

ஜாகிர் நாயக்: ஸ்ரீஸ்ரீரவிசங்கர் எழுதிய நூலில், 26ம் பக்கத்தில் இதைப்பற்றி தெவித்துள்ளார். 'பாவிஷஹார்' புராணத்தில் "ஒரு மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர்) தனது தோழர்களுடன் வருவார். அவர் மணல் நிறைந்த பகுதியிலிருந்து வந்து தீமைகளை அழிப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வன வேதத்திலும் 'போற்றப்படுபவர்' (முஹம்மது என்பதன் பொருள்) வருவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ரிக் வேதத்திலும் முன்னறிவிப்பு உண்டு.

(டாக்டர் ஜாகிர் நாயக் மிக வேகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகளை வசையாக சொல்ல, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறுக்கிட்டு, "அப்படியானால் அனைத்து வேதங்களுக்கும் மதிப்பளியுங்கள். அதை காஃபிர்களுடைய நூல் என்று புறந்தள்ளி விடாதீர்கள்" என்று குறிப்பிட்டார்.)


"முஸ்லிமல்லாத மக்களிடையே இந்த விவாதம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது"
- நிகழ்ச்சி அமைப்பாளர் பேட்டி

ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையிலான இந்த விவாத அரங்கத்தை ஏற்பாடு செய்த 'டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்' அமைப்பின் நிர்வாகி உமர் ஷரீஃபை நாம் சந்தித்தோம். பெங்களூரில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

மக்கள் உரிமை: இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

பதில்: எங்கள் டிஸ்கவர் இஸ்லாம் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்பட்டது. எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு இஸ்லாமிய சொற்பொழிவை டிசம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். பிறகு சொற்பொழிவுக்கு பதிலாக ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கரை அணுகி கேட்டபோது, அவரும் இதற்கு உடன்பட்டார். பிறகு, டாக்டர் ஜாகிர் நாயக்கையும் அணுகினோம். இருவரும் சம்மதம் தெவித்த பிறகு நிகழ்ச்சிக்கான தேதியை முடிவு செய்தோம். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக 2,000 பேர் மட்டுமே அமரும் உள்அரங்கிற்குள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் பிறகு அது விரிவடைந்து, பெரிய நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 25,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.

மக்கள் உரிமை: அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் அல்லாத மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி கேட்டவர்கள் கூட அதிகமானோர் முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். ஏன் இந்த நிலை?

பதில்: இல்லை! முஸ்லிம் அல்லாத மக்கள் கேள்வி கேட்க ஆர்வமாக முன்வரவில்லை. திரண்டிருந்த மக்களில் 30 சதவிகிதத்தினர் முஸ்லிம் அல்லாத மக்களாவர்.

மக்கள் உரிமை: நீங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி கருத்துப் பரிமாற்றமா? அல்லது விவாதமா?

பதில்: நாங்கள் முதலில் கருத்துப்பரிமாற்றத்திற்குத்தான் ஏற்பாடு செய்தோம். அதனடிப்படையில் முதலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும், அதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக்கும் தலா 50 நிமிடங்கள் பேசுவதென்றும், அதன்பின் கேள்வி நேரம் வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடந்த காலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அமைப்பினர் முதலில் டாக்டர் ஜாகிர் நாயக் பேசவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். இதன்பிறகு முதலில் ஜாகிர் நாயக் 50 நிமிடங்களும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்களும், அதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்களும், இதன்பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 3 நிமிடங்களும் பேசுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. எனவே, கருத்துப் பரிமாற்றம் கடைசியில் விவாதமாகவே முடிவடைந்தது.

மக்கள் உரிமை: இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட முஸ்லிமல்லாத மக்களிடையே என்ன கருத்து நிலவுகிறது?

பதில்: இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பொதுவான மக்கள் மிக நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியதாக எங்களிடம் கூறினார்கள். காவல்துறை அதிகாகள், அரசுத்துறை அதிகாரிகள் இன்னும் பலர் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினார்கள். தொடர்ந்து எங்களிடம் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி அறிய தங்களது ஆவலை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஸ்ரீஸ்ரீரவிசங்கன் சிஷ்யர்கள், தங்கள் குரு அளவுக்கதிகமாக விமர்சிக்கப்பட்டதாக வருத்தப்பட்டார்கள்.


- ஜன்னாமைந்தன்

Source:
http://www.tmmkonline.org/

Wednesday, January 25, 2006

குஜராத் 'நினைவுத் துயரங்கள்' 4-ம் ஆண்டு

நினைவுத் துயரம் - குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை

எதிரே வருகிறது பிப்ரவரி. நான்கு ஆண்டுகளாகியும் கிஞ்சிற்றும் மறக்க முடியாத கொடூரத் துயரங்கள், கண்களை விட்டு அகல மறுக்கும் வன் செயல்கள், ரத்த வாடைகள், சரியாகச் சொல்வதென்றால் பிப்ரவரி 28, 2002 அன்று தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள்தான் பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் ரயில் எரிந்த சம்பவம் நிகழ்ந்தது. ரயில் எதனால் எரிந்தது? எப்படி எரிந்தது? விபத்தா? சதியா? யார் பொறுப்பு? என்பதெல்லாம் 'தெளிவாகாத' நிலையிலும் எல்லாருமே அந்தச் சம்பவத்தைக் கண்டித்தனர். இப்போது கோத்ரா நிகழ்வு ஒரு விபத்துதான் என்பதை யு.ஸி. பானர்ஜி விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தி விட்டது.

குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005

இவர்கள் குஜராத்தில் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இதர அமைப்புகளிலிருந்து வெளியேறிய தொண்டர்களும் அடங்குவர். இவர்களின் கூற்றுப்படி, 'குஜராத் படுகொலைக்கான ஏற்பாடுகள் நரேந்திர மோடி பதவி ஏற்ற அன்றிலிருந்தே தொடங்கிவிட்டது. தாங்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த பயங்கர தயாரிப்புகளை பயன்படுத்திட அவர்கள் ஏற்பாடு செய்ததே கோத்ரா ரயில் எரிப்பு.' (தி ஹிந்து 15.05.2002)

ஆனால் ஒரு தீவிர, இறுகிப் போன ஆர்.எஸ்.எஸ், ஆளாகவும் குஜராத் முதலமைச்சராகவும் இருக்கும் நரேந்திர மோடியோ ரயிலில் இருந்த ராம சேவகர்களைக் கொல்வதற்காக முஸ்லிம்கள்தான் ரயிலை எரித்தனர் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளை நியூட்டனின் வினை - எதிர் வினை தியரியைச் சொல்லி நியாயப்படுத்தினார், மோடி.

இந்த பூமியில் ஒரு பெரும் வன்முறை பயங்கரவாதம் நடக்கப் போகிறது என்பதை அதிகாரிகள் மோடிக்கு சுட்டிக் காட்டாமலில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் பண்டார்வாடா என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் விஹிபயினர் கோத்ரா சம்பவத்திற்கு 3 வாரம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்த கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள். முஸ்லிம்களை அழிப்பதே இவர்களின் குறிக்கோள். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை கொண்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

விஹிப தலைவர்கள் ஒவ்வொருவராக பேச தொடங்கினர். கூடியிருந்த மக்களின் இரத்தம் சூடேற்றப்பட்டது. போதுமான அளவுக்கு வெறியூட்டபட்டது. அந்த மக்களுக்கு முன் இப்படி பேசினார்கள்: 'எனதருமை இந்து சமுதாயமே! நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்கள் மனிதர்கள் அல்ல, அரக்கர்கள். நம் தெய்வத்தை வேட்டையாடும் இந்த அரக்கர்களை உங்கள் கிராமங்களை விட்டும் அப்புறப்படுத்துங்கள். கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். அவர்களை விரட்டுங்கள். கொல்லுங்கள். நெறுப்பிட்டு கொளுத்துங்கள்.' என்றெல்லாம் பேசி அங்கு கலவரத்தை தூண்டும் அத்துணை வேலைகளையும் செய்தார்கள்.

குஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்). இவர் விஹிபவினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.

இப்படியெல்லாம் பேசி ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உள்ளத்தில் முஸ்லிம்களின் மேல் வெறியை ஊட்டினார்கள். மேலும் கலவரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி முடிக்க ஒரு யுத்ததிற்கு எப்படி திட்டமிடப்படுமோ அதை போல கனகச்சிதமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டது.

கலவரத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, விஹிப, பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துப்பாக்கி பயிற்சியும் அடங்கும். பல இடங்களில் இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியே முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்கு இதுவே சான்று. (Outlook March 25, 2002).

இனப்படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே முஸ்லிம்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள், முஸ்லிம்களின் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், முஸ்லிம்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. இவர்கள் கஷ்டப்படகூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வளவு அக்கறை. (FrontLine March 29, 2002)

குஜராத் தலைநகரான காந்தி நகரில் பிப்ரவரி 27 அன்று நடந்த போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் '' நாளை நடக்கவிருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின் போது காவல்துறை தலையிடக் கூடாது'' என்று முதல்வர் மோடி கட்டளையிட்டார் என்பது ஊரறிந்த உண்மையாகும். நரேந்திர மோடியின் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா இது தொடர்பாக மக்கள் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 27 பிப்ரவரி அன்று காவல்துறை மூத்த அதிகாரிகளுக்கு மோடி கட்டளையிட்ட விவரம் குறித்து தன்னுடைய தந்தையிடமும் தெரிவித்திருக்கின்றார், ஹரேன் பாண்டியா, மோடியின் தவறுகளுக்கு அதிகாரப்பூர்வமான, நேரடியான சாட்சியாக இருந்த பாண்டியா படுகொலை செய்யப்பட்டு விட்டார். என்றாலும் பாண்டியாவின் தந்தை குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் நானாவதி ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஆக, இந்தப் படுகொலையில் குஜராத் அரசாங்கத்துக்கு இருந்த நேரடிப் பங்கு குறித்து எவருக்கும் கிஞ்சிற்றும் சந்தேகம் எஞ்சி இருக்கவில்லை. குஜராத் இனப்படுகொலை சாதாரண நிகழ்வல்ல. எந்த வகையில் பார்த்தாலும் சுதந்திர இந்தியாவில் குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான, பயங்கரமான தாக்குதல்கள் என்றே அந்த இனப்படுகொலையைச் சொல்ல முடியும்.

எங்களுடைய ஆட்சியில் வகுப்புக் கலவரமே நடந்தது கிடையாது என பா.ஜ.க. பீற்றிக் கொண்டதுண்டு. ஆனால் குஜராத் சட்டப்பேரவையில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் அது ஆட்சியில் இருந்த போதுதான் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான மிக மோசமான இனப்படுகொலை நடந்தது.

முஸ்லிம்கள் மட்டும் கோத்ராவை போதுமான அளவுக்குக் கண்டித்திருந்தால் குஜாராத்தில் பேரழிவு நடந்திருக்காது என்று அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த முனைந்ததுதான் மோசம். பிற்பாடு ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கும்படி மோடியை வாஜ்பாய் வலியுறுத்தினார். ஆனால் வாஜ்பாயைப் பொருத்தவரை, இன்று ஒன்றைச் சொல்வதும், நாளை அதற்கு முற்றிலும் மாறுபட்டதைச் சொல்வதும் கை வந்த கலை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியோ இன்னும் ஒருபடி மேலாக போய் கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு குஜராத்தில் சட்ட ஒழுங்கை மிகச் சிறப்பாக 'நிலை நிறுத்தினார்' மோடி என்று நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்.

அது மட்டுமா? குஜராத்தின் மோசமான படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் போனதுதான் கொடுமை, இதுவரை என்றுமே, எங்குமே நடக்காத அக்கிரமத்தைச் செய்யவும் மோடி கிஞ்சிற்றும் வெட்கப்படவில்லை. நிவாரண முகாம்களை இழுத்து மூட உத்தரவிட்டார், மோடி. தண்ணிர் விநியோகத்தையும், உணவு தானிய விநியோகத்தையும் துண்டித்து விடுவேன் என்று மிரட்டினார். மோசமான, பயங்கரமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட அபலைகள் மீது கருணை காட்ட மறுத்தார். இந்தக் கொடூரங்கள் எல்லாமே சமூக நல்லிணக்கத்துக்காகவே உயிரைக் கொடுத்த காந்தியின் மாநிலத்தில் நடந்தன என்பதுதான் வேதனையான முரண்.

அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களான சட்டத்துறை, அரசு இயந்திரம், நீதித்துறை ஆகிய மூன்றுமே வகுப்புவாத மயமாகி விட்ட நிலையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, அவர்களின் துயர் துடைப்பதற்காக யார் தான் வருவார்கள். அரசு எந்திரமும், காவல்துறையும் மிக ஆழமாக வெறியூட்டப்பட்டிருந்தன, (ஒரு சில கண்ணியமான, மரியாதைக்குரிய விதிவிலக்குகள் உண்டு).

சட்டத்தின் ஆட்சியை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நிலைநாட்ட பாடுபட்டு வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற சர்வதேச மனித உரிமை அமைப்பு குஜராத் இனப்படுகொலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ''India - Justice the victim - Gujarat state fails to protect women from violence'' என்கிற தலைப்பில் அந்த விரிவான அறிக்கை ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் இனப்படுகொலைப்பற்றிய மற்ற அறிக்கையை போலவே அந்த அறிக்கையை வாசிப்பதும் ஒரு பயங்கரமான அனுபவமாகும். குஜராத் படுகொலையை சட்ட ஒழுங்கு சீர்குலைவு என்று மட்டுமே சொல்ல முடியாது. அவ்வாறு சொல்வது உண்மை நிலையை மிகவும் குறைத்து சொல்வதாகும். கச்சிதமாக திட்டமிட்டு வேண்டுமென்றே செய்து முடிக்கப்பட்ட இனப்படுகொலை என்றே அதனைச் சொல்ல வேண்டும்.

ஆம்னெஸ்டி அறிக்கையில் இதற்கென தனி அத்தியாயமே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. ''வன் செயல்களில் காவல்துறையினரின் ஆதரவும் நேரடி பங்கேற்பும்'' என்கிற தலைப்பில் நிறைய குறிப்புகளும், உண்மை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

''கொடுமைக்காளானவர்களுக்கு உதவ மறுத்ததோடு காவல்துறையினர் நின்றுவிடவில்லை. வன்தாக்குதல்களில் வெறிக்கும்பலுக்கும் ஒத்தாசையாக இருந்தனர். மிருகத்தனமாக நடந்து கொண்டனர். பொதுமக்கள் முன்னிலையில் பெண்களுடனும், குழந்தைகளுடனும் இழிவாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டனர். பாராபட்சமற்ற வகையில் சட்டத்தின் ஆட்சியை பராமரிக்க வேண்டியவர்கள் ஆதரவற்ற முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிய இந்துத்துவ கும்பலின் ஒரு பகுதியாக மாறிவிட்டதைப் போல, அவர்களுடைய நடத்தை இருந்தது'' என்று ஆம்னெஸ்டி அமைப்பு வேதனையுடனும், காட்டமாகவும் கண்டித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளே தங்களின் காவல் வாகனங்களிலிருந்து டீசலை எடுத்து கும்பலுக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த காவல்துறை டீசலைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இது பல்வேறு ஆய்வுக் குழுக்களின் விசாரணை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்றே நானாவதி - ஷா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்த பல்வேறு சாட்சிகளும் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் என்கிற கலவரத் தடுப்பு சிறப்புக் காவல்துறையினரே தங்களின் வேன்களிலிருந்தும், ஜீப்களிலிருந்தும் டீசலை எடுத்து வெறிக்கும்பலுக்கு கொடுத்ததாகவும் அந்த டீசலைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும் கொளுத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அஹமதாபாத்தில் ஒரு ஏரியா இன்ஸ்பெக்டரே வெறிக்கும்பலைத் தூண்டிவிட்டு உற்சாகப்படுத்தி முஸ்லிம்கள் மீது ஏவி விட்டதாக ஒரு பெண்மனி விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்துள்ளார். ''அந்த இன்ஸ்பெக்டரே தாமாக முன் வந்து தன்னுடைய வண்டியிலிருந்து டீசலை எடுத்துச் சென்று தீ வைக்குமாறு தூண்டி விட்டார்'' என்கிறார் அந்தப் பெண்மனி.

வகுப்புக் கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற ஓரே நோக்கத்துக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கலவரத் தடுப்பு சிறப்புக் காவல்படை தான் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல வகுப்புக் கலவரங்களைத் தடுப்பதில் ஓரளவுக்குப் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்கிற படை என பெயர் பெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையிலிருந்து (சுடீகு) தேர்ந்து எடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு படை தான் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ். இதற்கு முன்பு நாட்டின் பிற இடங்களில் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட சிறப்பு படை தான். ஆனால் குஜராத்தில் அரசியலும், மதவாதமும் இரண்டறக் கலந்து மதவெறி தீவிரமாக கிளறப்பட்ட கொந்தளிப்பான சூழலில் அந்த சிறப்புப் படையும் வகுப்புவாத மயமாகிப் போனது தான் பரிதாபமானது, வெட்கக் கேடானது. அந்த சிறப்புப் படையின் பெயருக்கே நீங்கா களங்கம் ஏற்பட்டு விட்டது.

காவல்துறையினரின் நடத்தை வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏனெனில் குஜராத் காவல்துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகள் பலரும் இந்து வலது சாரி அமைப்புகளின் உறுப்பினர்களே...! அவர்கள் தத்தமது கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக தத்தமது அமைப்புகளின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தான் முனைப்புடன் இருந்து வந்துள்ளார்கள் என்று ஆம்னெஸ்டி அமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.

வேறு எந்தவொரு நாகரிகமான சமூகத்திலும் இவ்வாறு சமூக விரோத அமைப்புகளில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் இணைந்தார் எனில் ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். இத்தகைய அரசியல் அமைப்புகள் யாதொன்றையும் சாராததாக காவல்துறை இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நிலை பெறுவதற்கு இது இன்றியமையாதவொன்றாகும்.

குஜராத் பேரழிவின் மோசமான, பயங்கரமான, சோகமான பரிமாணம் என்னவெனில் பெண்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டதும், அதிக அளவில் கற்பழிப்புகள் நிகழ்ந்ததும் தான் மனித மாண்புகளே கற்பழிக்கப்பட்டதைப் போன்று தோன்றுகிறது. குஜராத் பேரழிவின் இந்கப் பரிமாணத்தையும் ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையில் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டுள்ளது.

''பெண்கள் மீதான வன்தாக்குதல்கள்'' என்கிற தலைப்பில் கீழ் தொகுக்கப்பட்ட அத்தியாயத்தில் உலகெங்கும் நடந்த வகுப்புவாத, இன, வன்முறைகள் எல்லாவற்றிலும் குஜராத்தில் பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தனித்து நிற்கிறது.

குஜராத்திலும் சரி, நாட்டின் இதர பகுதிகளிலும் சரி எத்தனையோ கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் யாதொன்றிலும் 2002-இல் குஜராத் இனப்படுகொலையின் போது இருந்ததைப் போன்று இளம்பெண்கள், சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்க நடந்தேறிய அவலங்கள் முக்கியமான அம்சமாக இருந்தது கிடையாது.

பெண்கள் மீது மிக மிக கொடூரமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் பெண்களாகவும், முஸ்லிம்களாகவும் இரண்டு அடையாளங்களும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்ததுதான். முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குவதற்காக கிளம்பிய இந்து வலது சாரிகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் 'வெறுப்புக்குரிய' குறியீடுகளாக முஸ்லிம் பெண்கள் தென்பட்டார்கள். அதனால் அவர்களை மிரட்டவும், இழிவுபடுத்தவும், ஊனப்படுத்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் இந்து வலது சாரிகள் அதிகமான ஆர்வங் காட்டினார்கள்.

நேரடியாக தாக்கப்படாவிட்டாலும், கற்பழிப்புக்காளாக விட்டாலும் கூட வன்முறை, பேரழிவு ஆகியவற்றால் சின்னாபின்னமான குடும்பங்களைக் கோர்த்து, பராமரித்து வளர்க்க வேண்டிய திடீர் பொறுப்பும் கவலையும் சுமத்தப்படுவதால் பெண்கள் தான் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

குஜராத் இனப்படுகொலையின் போது பெண்கள் மீது மிக அதிகமான பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டன. கௌஸர் பானு மற்றும் பல்கீஸ் பேகம் ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன.

அஹமதாபாத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நரோடா பாடியா பகுதியைச் சேர்ந்தவர் கௌஸர் பானு எட்டு மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு எட்டு மாத சிசு வெளியே எடுக்கப்பட்டு நெருப்பில் வீசப்பட்டது. இந்த அளவுக்கு பயங்கரமான, மிருகத்தனமான கொடுமைகள் இந்திய வகுப்புக் கலவர வரலாற்றிலேயே நடந்தது கிடையாது.

பல்கீஸ் பேகமோ தாஹோட் மாவட்டத்தின் ரந்தீகாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த நிலையிலும் அவரை ஒரு கும்பலே கற்பழித்தது. அவருடைய கண் முன்னாலேயே அவருடைய உறவினர்கள் ஒன்பது பேரை கும்பல் வெட்டிச் சாய்த்தது. அவரையும் செத்துப் போய் விட்டதாக எண்ணிவிட்டு கும்பல் ஒடிவிட்டது. ஆனால் உயிர் பிழைத்த பல்கீஸ் பேகம் நடந்த உண்மைகளை உலகுக்கு சொல்லிவிட்டார். இந்த வழக்கில் மருத்துவர்களும், காவல்துறைகளும் கொடூரத்தை மூடி மறைக்கும் விதத்தில் கைகோர்த்துச் செயல்பட்டதுதான் சாபக்கேடு ஆகும். இறுதியில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையே வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டியதாகி விட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் கௌஸர் பானுவும், பல்கீஸ் பேகமும் மட்டுமா? ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையின்படி நூற்றுக்கணக்கான பெண்களும், இளம் பெண்களும் தத்தமது குடும்பத்தவர் முன்னாலேயே இழுத்துச் செல்லப்பட்டு துகிலுரியப்பட்டனர். வன்மம் மிகுந்த இந்து வெறியர்கள் அந்தப் பெண்களை திட்டினார்கள்: கிண்டலடித்தார்கள்: இழிவுப்படுத்தினார்கள்: கற்பழித்துக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பிறகு அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள், கூட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள், தடிகளாலும், திரிசூலங்களாலும், பட்டாக்கத்திகளாலும் அடிக்கப்பட்டார்கள். மார்பகங்கள் வெட்டப்பட்டன. கர்பப்பைகள் கிழிக்கப்பட்டன. பிறப்புறுப்பில் இரும்புத் தடிகளால் கிழித்தார்கள். துண்டம் துண்டமாக வெட்டி சாட்சியம் கிடைக்காதவாறு எரிக்கப்பட்டார்கள் என்று ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கை அலறுகிறது.

இவையெல்லாவற்றிலும் அரசும் உடந்தையாக இருந்ததால் குஜராத் மாநிலத்துக்குள் இருந்து நீதி பெறுவது குதிரைக் கொம்பாகிவிட்டதுதான் வேதனை...! உச்ச நீதி மன்றம் தலையிடாக வேண்டியதாகி விட்டது. இன்று இவ்வாறு பல்வேறு வழக்குகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடந்து வருகிறது.

''ஆதாரம் இல்லை'' என்று சப்பைக்கட்டு கட்டி 3000க்கும் அதிகமான வழக்குகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது. இந்த 3000 வழக்குகளிலும் மறுபடியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அவ்வாறு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் பல்கீஸ் பேகத்தின் வழக்கும் ஒன்று.

குஜராத்தில் நீதித்துறையின் கீழ்மட்டம் முழுமையாக வகுப்புவாத மயமாகிவிட்டது. நீதித்துறையின் மேல்மட்டமும் ஒரளவுக்கு வகுப்புவாத மயமாகி இருக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் விஸ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் நிலவரமாகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்?

எதிர்மறைவான உணர்வுகளைக் கிளற வேண்டும் என்பதற்காக நாம் இவற்றையெல்லாம் நினைவு கூரவில்லை. இனி எதிர்காலத்தில் இந்தியாவில் எங்குமே இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழக்கூடாது என்பதற்காகவே இவற்றை நாம் நினைவு கூர்கிறோம். வகுப்புவாத, பாசிச சக்திகளின் கையில் ஆட்சிக் கடிவாளம் சென்றால் என்ன நடக்கும் என்பதை இந்த ஞாபகங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

வகுப்பு வெறியர்களுக்கு எதிரான போர் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வகுப்பு வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்;: பலவீனப்படுத்தப்பட வேண்டும்.

அமைதியும், சகிப்புத்தன்மையும் நிறைந்த பண்பாடு நிலை நிறுத்தப்படும் போது தான் ஜனநாயகம் செழித்தோங்கும்.

ஒரு உயிர்த்துடிப்புள்ள, ஆரோக்கியமான சிவில் சொசைட்டியின் தேவையும் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஜனநாயகம் தழைக்க அத்தகைய சிவில் சொசைட்டி இன்றியமையாதவொன்றாகும். விஷய ஞானம் மிக்க, தகவல்களை நன்கு அறிந்த, தீரமும், உறுதியும் மிக்க குடிமகன்களால் அத்தகைய சொசைட்டியை அமைக்க முடியும்.

(பல்வேறு இடங்களிலிருந்து இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் திரட்டப்பட்டன).

நன்றி:
- G. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
http://www.tamilmuslim.com/Avalangal/gujarat-feb-27.htm

Friday, January 20, 2006

மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்?

கடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன்.

வந்திருந்த ஹாஜிகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 363 பேர்களின் இறப்பு (0.01 %) ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் மட்டுமே நடந்திருப்பதால், அதனைத் தடுக்க வேறு வழியே இல்லையா என்பதுதான் நம் அனைவரின் ஆர்வமாக இருக்கிறது.

சம்பவம் நடந்த பாலத்தை இடித்துவிட்டு 4 அடுக்குகளில் 4.2 பில்லியன் சவுதி ரியால் செலவில் மிக நவீன வசதிகளுடன் ஏர் ஆம்புலன்ஸ் இறங்க 2 ஹெலிபேட் வசதிகளுடன் கட்டுவதற்காக கடந்த 15-ந் தேதியே பாலம் இடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பாலத்தின் இரு ஓரங்களிலும் உள்ள 8 கட்டடங்களின் வழியே ஹாஜிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக 90 மீட்டர் அகலத்திற்கு எஸ்க்லேட்டர்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

ஒவ்வொரு தடவையும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடும்போது அதனைத் தடுக்க புதிய வழிகளை கையாளுகிறார்கள். ஆனால் பிரச்னை புதிய உருவில் வந்துவிடுகிறது. இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தவிர்க்க என்ன முன் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பதை நடந்து முடிந்த ஹஜ்ஜில் அங்கு இருந்ததாலும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் உதவியோடு எழுதுகிறேன்.

மினா என்ற இடம் எந்த வசதியும் இல்லாததுபோல் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகிறது. 25 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடுவதால், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை எனக்கு தெரிந்தவரை கட்டுரையின் இறுதியில் பட்டியலிட்டுள்ளேன்.

"இத்தனை வசதிகள் செய்யப்பட்டிருந்தும் ஏன் இந்த மரணங்கள் நிகழ்கின்றன?" என்பதுதான் இங்கு கேட்கப்படும் முக்கிய கேள்வியாகும். நிர்வாகம் எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும் ஹாஜிகளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? உள்நாட்டில் உள்ளவர்கள் 5 வருடத்திற்கு ஒரு முறைதான் ஹஜ் செல்ல அனுமதி கிடைக்கும். ஆனால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கட்டுப்பாடு இல்லை.

இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு பொறுப்பு யார்?

துல்ஹஜ் பிறை 8-லிருந்து 13 வரை ஹஜ்ஜின் முக்கிய நாட்களாகும். மக்கா, மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகியவை ஹஜ் காரியங்கள் செய்யும் இடங்களாகும். (பார்க்க ரூட் மேப்).

துல்ஹஜ் பிறை 8 ல் ஹாஜிகள் மினாவை வந்தடைவார்கள். பிறகு துல்ஹஜ் பிறை 9ல் அரஃபாவை அடைவார்கள். இதுதான் ஹஜ்ஜின் முக்கிய நாளாகும். இங்கு ஹாஜிகளுக்கு படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும்தான் பணி. அன்று மாலை சூரியன் மறையத்தொடங்கியதும் முஸ்தலிஃபாவிற்கு திரும்பி இரவு தங்கிவிட்டு துல்ஹஜ் 10-ம் நாள் மினாவிற்கு மீண்டும் திரும்புகிறார்கள். (பெண்கள் இரவிலேயே கிளம்புவதற்கு சலுகை உண்டு). துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய பிறைகளில் இங்குதான் தங்க வேண்டும். (பிறை 13-ல் விரும்பினால் தங்கலாம் அல்லது பிறை 12-லேயே மக்கா திரும்பினால் குற்றமில்லை). ஹஜ் கடமைகளை விபரமாக தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்).

துயர சம்பவங்கள் துல்ஹஜ் பிறை 12-ல் மட்டுமே அதிகம் நிகழ்கிறது. அதற்கு காரணம், அன்று ஜமராத்திற்கு கல்லெறிந்துவிட்டு சூரியன் மறைவதற்கு முன்பு மினாவில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும். இல்லையென்றால் 13-ம் பிறையும் தங்கி கல்லெறிந்துவிட்டுத்தான் புறப்பட வேண்டும். கல்லெறியும் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயத் தொடங்கியவுடன் ஆரம்பமாகிறது. சுமார் 12 மணியிலிருந்து அடுத்த 6 மணி நேரத்திற்குள் 90 சதவீத ஹாஜிகள் கல்லெறிந்துவிட போதுமான அவகாசம் கிடையாது. உள்நாட்டிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு துல்ஹஜ் பிறை 13, 14 -ல் வேலைக்கு செல்லவேண்டும் என்ற அவசரம். வெளிநாட்டு ஹாஜிகளுக்கு மக்காவில் உள்ள தங்குமிடத்திற்கு சென்று இளைப்பாற வேண்டும். அதற்கு காரணம், ஹஜ்ஜிற்கு வரும் பலர் முதிய வயதில் உடல் வலிமையற்றவர்களாக வருகிறார்கள்.

ஹஜ் செய்வதற்கு பொருள் பலமும் உடல் பலமும் இருந்தால் மட்டுமே கடமை. ஆனால் உடல் பலம் இருக்கும்போது பலருக்கு ஹஜ் கடமை ஞாபகம் வருவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

உடல் பலகீனமானவர்கள் முக்கியமாக துல்ஹஜ் பிறை 12-ல் காலையிலேயே கல்லெறியலாம் என்று மார்க்க தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இங்கு வரும் ஹாஜிகள் பலருக்கு ஹஜ் செய்வது எப்படி என்று தெரியாததால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மார்க்க சலுகைகள் தெரிவதில்லை. அதிக நெரிசலில் பலகீனமானவர்கள் மற்றும் பெண்கள் ஜமராத்திற்கு சென்று கல் எறிவதற்கு பதிலாக மற்றவர்களிடம் கொடுத்து எறியச்செய்யலாம்.

ஹாஜிகளில் சிலர் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு தக்க தங்கள் நடவடிக்கைகளை வைத்துக்கொள்வதில்லை. பிறை 12 அன்று கல்லெறியப் போகும்போது பயண பொருள்களை கூட எடுத்துச்செல்கிறார்கள். பொருள் கீழே விழுந்ததால் எடுக்க குனிந்தபோது நடந்த விபரீதம்தான் இத்தனைப் பேரை இழக்கச் செய்திருக்கிறது.

ஹாஜிகளில் சிலர் முறையான அனுமதி இல்லாமல் வந்தவர்களாகும். ஆகவே இவர்கள் 6 நாட்களும் ஜமராத்தை சுற்றியுள்ள பெருவெளியில் தங்கிவிடுகிறார்கள். பல தற்காலிக கூடாரங்களை (Portable Tents) சர்வ சாதாரணமாக இங்கு காணமுடியும். இத்தகையவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் குறையலாம்.

தற்போது இறந்தவர்களின் பலர் (3ல் 1 பங்கு) இதுவரை அடையாளம் தெரியவில்லை. காரணம் இவர்கள் ஹஜ்ஜிற்கு முறையான அனுமதி பெறாமல் வந்திருக்கலாம். அனுமதியுடன் வந்தவர்களுக்கு கைகளில் கட்டப்படும் தங்குமிடம் அடையாளத்துடன் கூடிய வளையம் கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒரு பிளாஸ்டிக் வளையமும், தொலைபேசி எண், போட்டோவுடன் உள்ள கார்டும் கொடுக்கப்படும். இந்த அடையாளங்கள் அவர்கள் எந்த கூடாரத்தை மற்றும் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை காட்ட உதவுகின்றன.

துயர சம்பவங்களை தடுக்க:

தற்போது ஹஜ் பயணத்திற்கு வந்தவர்களில் சிலர் முன்பே ஹஜ் செய்தவர்களாகும். நெருக்கடியால் ஏற்படும் விபத்து போன்ற சூழ்நிலையை நினைத்து, இவர்கள் புதியவர்களுக்கு வழிவிடவேண்டும். வழிகாட்டியாகவோ அல்லது மனைவி மற்றும் வயதானவர்களுக்கு துணையாகவோ வரும் சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர ஏற்கனவே ஹஜ் செய்தவர்கள் மீண்டும் ஹஜ்ஜிற்கு வரக்கூடாது என்று அவராகவே முடிவு எடுக்க வேண்டும்.

பணம் இருக்கிறது என்பதற்காக வருடா வருடம் ஹஜ் செய்யும் ஹாஜிகள், தங்களின் உறவினரான, தெருவிலுள்ள, ஊரிலுள்ள, நாட்டிலுள்ள, உலகத்திலுள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதையும் நினைத்துப் பார்க்கட்டும். வசதி இருந்தால் (உடல்வலிமை+பண வசதி) ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒரு தடவை செய்யவேண்டிய வணக்கத்தை வருடா வருடம் செய்யும் பல ஹாஜிகள், தினமும் செய்ய வேண்டிய தொழுகை போன்ற வணக்கங்களை செய்யாமல் இருப்பது ஏனோ? ஹஜ்ஜுடைய காலங்களில் நெருக்கடி காரணமாக ஒருவர் இறந்தால் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய வந்தவரும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டாமா?

நேரல் கண்ட காட்சிகள்:

(Tent City என்று அழைக்கப்படும் மினா நகரத்தின் படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்) துல்ஹஜ் 12 பிறை அன்று நெரிசலாக இருக்கும் என்பதால் பெண்களையும் குழந்தைகளையும் கூடாரங்களில் இருக்கச் செய்துவிட்டு ஆண்கள் மட்டும் கல்லெறிவதற்காக வெளியேறினோம். சம்பவம் நடந்த இடம் 5 நிமிட நடை தூரத்தில் இருக்கும்போது எங்களுடன் வந்தவர்களில் பாதிபேர் பிரிந்து விட்டார்கள். அவர்கள் இடதுபுறமாக சென்றிருக்க வேண்டும். வலது புறத்தில் கூட்டத்தின் அடர்த்தி குறைவாக தெரிந்தமையால் அங்கு நகருவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இராணுவத்தினர் வந்து மனித பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டார்கள். 1, 2, 3 என்று தொடங்கி நிறைய ஆம்புலன்ஸ்கள் வரத்தொடங்கிவிட்டன. உள்ளே ஆபத்து நிலையில் உள்ளவர்களும் மேற்புறத்தில் சிறிது பாதிக்கப்பட்டவர்களும் ஏற்றப்பட்டார்கள். அவை செல்வதற்கு இராணுவம் வசதி செய்து தந்தமையால் அந்த அடர்த்தியான கூட்டத்திலும் நகரத் தொடங்கிவிட்டன. அப்போதுகூட இத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.

கல்லெறியும் இடத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக, ஜமராத் பாலத்திற்கு நெருங்கும்போது காவலர்கள் அவர்களை தடுத்து சிறிது சிறிதாக அனுமதிக்கிறார்கள். தடுக்கப்பட்டு நிற்பவர்களில் சிலர் தனக்கு முன்னே நிற்பவர்களை கண்டுக் கொள்ளாமல் முண்டியடித்துக்கொண்டு முன்னேற பாய்வார்கள். இவ்வாறானோர் தான் பிரச்னையே. இதனால்தான் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மரணிக்கின்றனர்.

அப்போது "ஜமராத்தின் இடது புறமாக செல்லுங்கள்", என்று ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். எனவே மெதுவாக இடதுபுறமாக மக்கள் வெள்ளத்தில் நீந்தினோம். இதில் யாராவது சற்று சறுக்கினால் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து ஜாக்கிரதையாக கால்வைத்து சென்றோம். முழங்கால் அளவு பொருட்கள் விழுந்துகிடந்தது. பயண சாமான்களை கையில் சுமந்திருப்பவர்களை பாலத்தின் கீழ்பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பாலத்தின் மேற்புறம் எறிவது போல, பாலத்தின் கீழ்புறமும் கல்லெறிய முடியும்.


பாலத்தின் மேற்புறம் ஒருவழி பாதைதான். கல் எறிந்தவுடன் திரும்பிவர இயலாது. வலது, இடது என பிரியும் பாலத்தின் இரண்டு கிளைகளின் வழியே நாம் செல்ல வேண்டிய வழியை அடைந்துவிடலாம். ஆனால் கீழ் புறத்தில் எதிர்பார்க்காதபோது திடீர் திடீரென மக்கள் கூட்டம் வரலாம் என்பதால் அதனைத் தவிர்த்துவிட்டோம். மெதுவாக நகர்ந்து நசுங்கி பிழியப்பட்டு ஜமராத் பாலத்தின் ஆரம்பத்தை அடைந்துவிட்டோம். பாலத்தில் நுழைந்தவுடன்தான் நெருக்கம் குறைந்திருந்தது.

போனவருடம்தான் (ஹஜ் 2005) தூண் போல இருந்த ஜமராத் உயிர் சேதத்தைத் தவிர்க்க சுவர் போன்று நீட்டி கட்டியிருந்தார்கள் (பார்க்க படம்). கூட்டம் நிரம்பி வழிந்தது. நாங்கள் வலது புறமாக பாலத்தின் விழிம்பிற்கு ஒதுங்கி ஜமராத்தின் இறுதி வந்ததும் இடது புறமாக ஜமராத்தை நெருங்கினோம். மக்கள் ஜமராத்தை நெருங்கி கல்லெறிந்துவிட்டு "V" வடிவத்தில் பிரிந்து சென்றார்கள். ஜமராத்தின் முடிவில் கூட்டம் இல்லாததால் அங்கு நின்றுக்கொண்டு 'அல்லாஹ் அக்பர்' என்று சொல்லி பட்டாணி அளவில் இருக்கும் 7 கற்களை ஒவ்வொன்றாக ஜமராத் சுவரின் மீது எறிந்தேன். ஜமராத்தின் சுவரை நெருங்க முடியாதவாறும், எறிந்த கற்கல் நமது தலையில் விழாதவாறும் கட்டியிருந்தார்கள். நான் சற்று கவனித்தபோது சில செருப்புகளும் அவ்வப்போது வந்து விழுவது தெரிந்து. சிலர் இதனை சைத்தான் என்று நினைத்துக்கொண்டு அறியாமையினால் இவ்வாறு செய்கிறார்கள்.













3 ஜமராத்திற்கும் கல் எறிந்துவிட்டு வலது புறத்தில் உள்ள கீழிறங்கும் வழியை அடைந்த போது இறந்த உடல்களை, குளிரூட்டப்பட்ட பெருவாகனத்தில் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். வாகனத்தில் மட்டுமே 21 இருப்பதாக நண்பர் சொன்னார். அதுமட்டுமில்லாமல் கீழே வரிசையாக போர்த்தப்பட்டு இருந்த உடல்களை சரியாக கணக்கிடும் அளவிற்கு தூரத்திலிருந்து பார்க்க இயலவில்லை. ஆகவே பாதைவழியே இறங்கத் தொடங்கினோம். இறந்தவர்களை அடுக்க குளிரூட்டப்பட்ட புதிய பெருவாகனம் வந்து நின்றது. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் 400, 500, 700 என்று இஷ்டத்திற்கு ஃபிளாஷ் செய்தி வந்ததால் அவரவர் குடும்பத்தினர்களும் நண்பர்களும் செல்பேசியில் தொடர்பு கொண்டார்கள்.

நாங்கள் ஜமராத் பாலத்தில் இருந்தபோது முதியவர் ஒருவர் சப்தமாக, 'ஹாஜிகளை ஹாஜிகள் கொல்வார்களா' என்று சம்பவம் நடந்த திசைநோக்கி கைகாட்டி புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது.


ஹஜ் அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள்:

1) சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜிகளின் கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் தீ பற்றாத கூடாரங்களை உடைய நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய முதவ்விஃப் என்ற ஒழுங்குமுறையை பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூடாரங்கள் போதாததால் மினாவின் இடத்தையும் தாண்டி முஸ்தலிஃபாவின் ஒரு பகுதிவரை கூடாரங்களை நிறுவியுள்ளார்கள்.

2) தொற்று நோயை தவிர்க்க தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான அத்தாட்சி இருந்தால்தான் ஹஜ் செய்ய அனுமதி கிடைக்கும். (தடுப்பு ஊசி, மக்கா செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னரே போட்டால்தான் அதன் முழுமையான பலன் கிடைக்கும்)

3) ஜமராத்தில் நடக்கும் விபத்தை தவிர்க்க தூண் போன்ற பழைய அமைப்பை மாற்றி நீண்ட சுவர் போன்றதை 2005-ம் வருட ஹஜ் முதல் உருவாக்கப்பட்டது. (ஹஜ் அல்லாத மற்ற காலத்தில் காணப்படும் ஜமராத் பாலத்தைதான் படத்தில் பார்க்கிறீர்கள். படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்).

4) மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகிய அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் நவீன டாய்லட் வசதிகள்.

5) கண்டெய்னரில் இலவச தண்ணீர், பழச்சாறு, மோர் பாட்டில்கள் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டு அது முறையாக கண்காணிக்கப்படுகிறது.

6) மக்காவிலிருந்து மினா முஸ்தலிஃபாவின் ஒரு பகுதி வரை நடை வழியாக செல்லும் ஹாஜிகளுக்கு நிழல்தரும் விதமாக இரும்பு பந்தல் அமைப்பை ஏற்படுத்தி தந்திருப்பது.

7) அருகருகே கூடாரங்களை தவறவிட்டவர்களுக்கு சவுதி சாரணர்கள் மூலம் வழிகாட்டுவது. இந்த அலுவலகத்தின் மேல் வட்டவடிவ பலகையில் "i" என்று பெரிதாக எழுதியிருக்கும்.

8) வாகனங்கள் செல்வதற்கு தனித் தனியாக பல வழிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். ஹஜ் பயணிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தனியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

9) குறைந்தது 3 ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டபடியே இந்த 6 நாட்களும் கண்கானிப்பில் ஈடுபடும்.

10) போலீஸ், செக்யூரிட்டி, தீயணைப்பு, இராணுவம், தற்காலிக ஊடக இணைப்பாளர்கள் என சுமார் 60,000 பேர் உள்ளனர்.

11) பல கூடாரங்கள் சேர்ந்தது ஒரு முதவ்விஃப் ஆகும். அதன் எண் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் உயரமான பலகையில் எழுதப்பட்டுள்ளதால் மினாவில் உள்ள ஏதேனும் ஒரு பாலத்தில் நின்றுக்கொண்டு குறிப்பிட்ட முதவ்விஃப் கூடார தொகுப்பு எங்கு உள்ளது என்பதைக் கண்டுக்கொள்ள இயலும். இது உங்கள் கண்கள் புலப்படும் தூரம் வரைதான். (இவ்வெண்கள் சிலவற்றை வரிசையாக காண முடியவில்லை. எனவே இதனை நிர்வாகம் மேம்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்).

12) செம்பிறை ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. (பார்க்க படம்).

13) இதுவல்லாமல் கூட்டத்தில் புகுந்து செல்லக்கூடிய மற்றும் ஒரு ஆள் படுக்கக்கூடிய வகையில் பலவகை அவசர ஊர்திகள் (ஆட்டோ, மோட்டார் பைக் உட்பட) தயார் நிலையில் உள்ளன.

14) ஆங்காங்கே முதலுதவி மருத்துவ மையங்கள் உள்ளன.

15) நடந்து வரும் ஹாஜிகள் குறுக்குவழியாக மினாவை அடைவதற்கு குகைப் பாதைகள் (ஒரு வழிப்பாதை) உதவுகின்றன. இக்குகைள் இராட்சத மின்விறிகளை வைத்து காற்றோட்டம் செய்யப்படுகின்றன. (படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்)

16) ஜமராத் பாலத்தின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் நவீன மின்னணு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.

17) ஜமராத் பாலத்திற்கு பயணப் பொருட்களை (Luggages) கொண்டு செல்லாதீர்கள் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.

18) ஜமராத் சுவற்றில் மக்கள் நசுங்கிவிடக்கூடாது என்பதற்காக முதலாவதாக எதிர்படும் முனையில் இராணுவங்களை நிறுத்திவிடுகிறார்கள். அதன் முனை ஓவல் வடிவத்தில் இருக்கும்.


- அபூ உமர்

Courtesy of Images:
www.hajinformation.com, www.arabnews.com and www.bbc.co.uk

தொடர்புடைய சுட்டிகள்:

SR4bn Jamrat Expansion Begins
Nearly 3 Million Performed Haj: Al-Farsy
Indian, Pakistani Expats Fume Over Raw Haj Deal

Local Hajis Offer Feedback on Conduct of Pilgrimage
Families Claim Stampede Dead
Diplomats Suggest Website to Help Identify Bodies

Grieving Relatives Gather to Identify Stampede Victims
Death Toll in Stampede Crosses 360
‘It Was Like a Huge Wave of Sea Gushing Down on the Pilgrims’

345 Dead in Jamrat Tragedy
Editorial: Disastrous Indiscipline

Jamrat Project Aims to Avoid Stampede During Haj
Work on Jamrat Bridge Expansion to Start in February

Tuesday, January 17, 2006

பெங்களூர் தாக்குதல் - பொய்ப்பிரச்சாரங்கள்

தமிழக செய்தி ஊடகங்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம்!

மாலை மலர்: நம்பர் 1 மாலை நாளிதழ் அல்ல! நம்பர் 1 பொய் நாளிதழ்!!

காசுக்காக எதையும் செய்யும் துணிவு சிலருக்கு உண்டு. அந்த வரிசையில் சில பத்திரிகைகளும் சேர்ந்துள்ளது வேதனைக்குரியது. பெங்களூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் எப்படியெல்லாம் பொய்களை செய்தியாக்கி காசாக்கின என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக 'மாலை மலர்' நாளிதழ் விளங்கி வருகின்றது. இந்தியாவின் நம்பர் 1 தமிழ் மாலை நாளிதழ் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டுள்ளது மாலை மலர். இது உண்மையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் பொய் செய்திகளையும், முஸ்லிம் விரோத செய்திகளையும் வெளியிடும் நாளிதழ்களில் தினமலரை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது மாலை மலர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பஷீர் தான் பெங்களூரில் விஞ்ஞானியை சுட்டு கொன்றவர் என்று தலைப்பு செய்தியை வெளியிட்டது மாலை மலர் மட்டுமே. இதே போல் அது வெளியிட்ட பொய் செய்திகளில் மற்றொன்று 'தீவிரவாதிகள் சென்னை வழியாக தப்பி ஒட்டம்? விமான நிலையத்தில் கார்கள் சிக்கின' என்ற தலைப்பில் ஜனவரி 4ம் தேதி வெளியான முதல் பக்க செய்தியாகும். பெங்களூர் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், இந்த செய்தியை மாலை மலர் பிரசுரித்தது. பெங்களூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சென்னை வழியாகத் தப்பி விட்டார்கள் என்று தலைப்பை பார்த்தவுடன் எண்ணும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த கார்கள் தீவிரவாதிகள் பயன்படுத்திய கார்களா?

இந்த இரண்டு கார்களும் சென்னை விமான நிலையத்தின் பார்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பெங்களூர் சம்பவத்திற்கு முன்பு ஒரு காரும், அதற்கு பிறகு இன்னொரு காரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் இந்த கார்களின் நம்பர்களை வைத்து அதன் உரிமையாளர்களை உடனடியாக கண்டுபிடித்தனர். சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜீந்தர் சிங் சர்மா மற்றும் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி ஆகியோர்தான் இந்த கார்களின் உரிமையாளர்கள் என்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர். வெளியூர்களுக்குச் செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் அவர்கள் கார்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இந்த சாதாரண நிகழ்வை தீவிரவாதத்துடன் மாலை மலர் பத்திரிகை தொடர்புபடுத்தியது வெட்கக்கேடானது.

"சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி பஷீர்தான் விஞ்ஞானியைக் கொன்றான் - பரபரப்பு தகவல்கள்"

"சென்னைக்கு ஆபத்து. 24 மணி நேரமும் உஷார்"

"சென்னையில் கைதான தீவிர வாதியின் சதித்திட்டம் அம்பலம். பெங்களூர் கொண்டு செல்ல முடிவு"

"பிடிபட்ட தீவிரவாதியிடம் விடிய விடிய விசாரணை. சென்னையைத் தகர்க்க சதியா? பெங்களூர் தனிப் படை வந்தது"

"தீவிரவாதிகள் சென்னை வழியாக தப்பி ஓட்டம். விமான நிலையத்தில் கார்கள் சிக்கின"

"கர்நாடகாவில் இருந்து தப்பி வந்தான். சென்னையில் தீவிரவாதி கைது. அடைக்கலம் கொடுத்தவரிடம் விசாரணை"

"மதுரைக்கு அடுத்த குறி"

"விஞ்ஞானியைக் கொன்ற தீவிர வாதக் கும்பலின் முக்கியத் தலைவன் பிடிபட்டான். ஆந்திராவில் பெங்க ளூர் போலீஸ் வளைத்து பிடித்தது!!"

"தீவிரவாதிகளால் திருச்சிக்கு ஆபத்து. பரபரப்பான தகவல்கள்"

"லஷ்கர் தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் ஆட்கள் சேர்ப்பு. அப்துல் ரஹ்மான் கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள்"

"விஞ்ஞானிகள் மாநாட்டில் தாக்கிய 3 தீவிரவாதிகளுடன் தொடர்பு. சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்"

"பெங்களூர் தீவிரவாதிகள் வேலூரில் ஊடுருவலா? லாட்ஜ்லிபஸ் நிலையத்தில் அதிரடி சோதனை"

"தீவிரவாதியின் கூட்டாளியைப் பிடிக்க தஞ்சைக்கு போலீஸ் படை விரைந்தன"


- இவையெல்லாம் சென்ற வாரம் முழுவதும் வெளிவந்த செய்தித் தாள்களின் முக்கியத் தலைப்புச் செய்திகளாகும்.

இதே தலைப்புகளில் இந்த செய்தித் தாள்கள் வால்போஸ்டர்களும் வெளியிட்டன. தமிழ் தொலைக் காட்சிகளிலும் இதே தலைப்புடன் செய்திகள் ஒளிபரப்பாகின. மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பீதியையும், முஸ்லிம்களிடையே பதற்றத்தையும் சென்ற வாரச் செய்திகள் ஏற்படுத்தின. கடைசியில் அனைத்தும் புஸ்வானமாகின. ஆனால் பொய்களை பரபரப்பாக வெளியிட்ட நாளிதழ்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் உண்மையை மட்டும் பரபரப்பாக வெளியிடத் தவறியது வேதனைக்குரியதாகும்.

கடந்த டிசம்பர் 28-ம் அன்று பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ் என்றழைக்கப்படும் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஒரு சர்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இந்தியா முழுவதிலிருந்தும் விஞ்ஞானிகள் பங்கு கொண்டார்கள். வெளிநாடுகளிலிருந்தும் இந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பாதகன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர். பூரி கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைத் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவரைக் கைது செய்தனர். அப்துர் ரஹ்மான் லஷ்கரே தய்யிபா என்ற அமைப்பின் தென்னிந்திய தலைவர் என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். அப்துர் ரஹ்மானின் கூட்டாளி பஷீர் மைசூரி என்றும், அவர் சென்னைக்கு தப்பிச் சென்றுவிட்டதால் தமிழகக் காவல்துறையின் உதவியைப் பெற்று அவரை தாங்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தப் பின்னணியில்தான் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, தமிழகத்தில் பீதியைக்கிளப்பும் நோக்கத்தில் தமிழக பத்திரிகைகளும், தொலைக்காட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் அப்துர் ரஹ்மானுக்கும், லஷ்கரே தய்யிபா இயக்கத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கர்நாடக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேபோல் பெங்களுர் விஞ்ஞானியை சுட்டுக்கொன்றவர் சென்னையில் பிடிபட்ட பஷீர் என்று செய்தி வெளியிட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் அவருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதற்கான எவ்வித சான்றும் இல்லை என்று கூறி பஷீரை கர்நாடக காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் சமூகப் பொறுப்புடையவர்கள். அவர்கள் கையில் ஏந்தியிருக்கும் பேனா, பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு ஆயுதமாகும். ஆனால், தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகைகளில் பெரும்பான்மையினர் இந்தப் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை கடந்த வார நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதுவும், தமிழகக் காவல்துறையினர் "பெங்களூர் தாக்குதலுக்கும் சென்னையில் கைது செய்யப்பட்ட பஷீருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று மிகத்தெளிவாக தெரிவித்த போதிலும், அதைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் குற்றவாளியாக்குவதிலேயே ஊடகங்கள் கவனம் செலுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது. சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தை ஒரு குற்றப்பரம்பரையாக சித்தரிப்பது போல் இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த ஊடகங்கள் முஸ்லிம்களிடம் பஷீர் விஷயத்தில் பொதுமன்னிப்பு கேட்கும்வரை அவற்றை முற்றிலுமாக புறக்கணிப்பது நமது கடமையாகும்.


கர்நாடக காவல்துறை பிடித்துச் சென்ற பஷீர் யார்?

பெங்களூரில் விஞ்ஞானியை சுட்டுக் கொன்றவர் என்று மாலை மலர் பத்திரிகையினால் பட்டம் சூட்டப்பட்ட பஷீர், ஆலிம் பட்டம் பெற்ற ஒரு இஸ்லாமிய அழைப்பாளராவார். இவரது முழு பெயர் மௌலவி பஷீர் மைசூரி என்பதாகும். இவர் மைசூர் அருகே உள்ள எம்.ஓசூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி பட்கல்லைச் சேர்ந்தவர்.

மௌலவி பஷீர் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஈடுபாடுடையவர். பெங்களூரில் முஸ்லிம் அல்லாதவர் களிடையே திருக்குர்ஆனை அறிமுகப் படுத்துவதற்காகவும், இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள 'ஹவுஸ் ஆப் பீஸ்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து இஸ்லாமியப் பிரச்சாரத்தை மௌலவி பஷீர் மைசூரி செய்து வந்தார். அவாத் பார்ம் என்ற சித்த வைத்திய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மருந்துகளையும் அவர் விற்பனை செய்து வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் பஷீர்.

சென்னையில் நூல்களை அச்சடிப்பது பெங்களூரை விட மலிவானதாகவும், நேர்த்தியானதாகவும் இருப்பதால் அவர் உருது மற்றும் கன்னட மொழி நூல்களை அச்சடிப்பதற்காக சென்னைக்கு வருவார். இந்த வருடமும் சென்னைக்கு நூல்களை அச்சடிக்க வந்துள்ளார். கடந்த டிசம்பர் 22-ம் தேதி சென்னைக்கு வந்த அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பட்டேல் கிராபிக்ஸ் என்ற அச்சகத்தில் 'யாஸீன் சூரா'வின் கன்னட மொழிபெயர்ப்பு, இஸ்லாமியக் கொள்கை விளக்கம் மற்றும் தொழுகை முறை ஆகிய கன்னட மற்றும் உருது நூல்களை அச்சடிக்க கொடுத்துள்ளார். டிசம்பர் 22-ம் தேதி முதல் சென்னை காவல்துறையினர் அவரை விசாரணைக்காக பிடித்துச் சென்ற ஜன.3-ம் தேதி இரவு வரை அவர் சென்னையிலே தான் தங்கி இருந்துள்ளார்.

முழுக்க முழுக்க இஸ்லாமியப் பிரச்சாரமும், இஸ்லாமிய நூல்கள் மற்றும் சித்த வைத்திய மருந்துகளை விற்பதையும் தான் முழுநேரப் பணியாக செய்துவந்த பஷீரைத்தான் லஷ்கரே தய்யிபாவின் தென்னிந்திய தளபதியின் கூட்டாளி எனக் கூறி அவரைப் பிடித்து தருமாறு தமிழக காவல்துறைக்கு கர்நாடகா காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த தகவலைப் பெற்றுக் கொண்ட சென்னை மாநகர காவல்துறையினர், உடனடியாக விசாரணைகளை மேற் கொண்டனர். இதன் விளைவாக மௌலவி பஷீரின் நண்பர்களை முதலில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களின் துணை கொண்டு அச்சகப் பணிகள் முடிவடைந்து பெங்களூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் அருகே உள்ள தனியார் பேருந்து அலுவலகத்திற்குள் சென்று கொண்டிருந்த மௌலவி பஷீரையும் போலீஸார் பிடித்து சென்றனர்.

தமிழக உளவுத்துறையின் உயர் அதிகாரிகளும், சென்னை மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளும் மௌலவி பஷீரையும், அவருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நண்பர்களையும் விசாரித்தனர். சென்னைக்கு தான் வந்த நோக்கத்தை பஷீர் தெளிவாக சொல்ல, பட்டேல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஒய்.கே.பி.பஷீர், விசுவநாதன் உள்ளிட்டோரையும் காவல்துறையினர் அழைத்து வந்து விசாரித்தனர்.

பெங்களூரில் விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டிசம்பர் 28 அன்று நடைபெற்றது. அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் பஷீர் தொடர்ச்சியாக சென்னையில் இருந்துவந்தது தெளிவாக தமிழக காவல்துறையினருக்கு தெரிந்தது. அவர், தான் செய்யும் பணியைப் பற்றியும் தெரிவித்த தகவல்களும் உண்மையானது என தமிழக காவல்துறையினருக்கு புலப்பட்டது. மௌலவி பஷீர் தொடர்பாக விசாரணைக்கென அழைக்கப்பட்ட அவரது நண்பர்களும் அப்பாவிகள் என்பதை தமிழக காவல்துறையினர் தெளிவாக அறிந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுவித்தனர்.

30 மணி நேரத்திற்கும் மேலாக கர்நாடக காவல்துறையினர் தமிழக காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடத்திய விசாரணையில், மௌலவி பஷீருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

பெங்களூர் தாக்குதலில் பஷீருக்கு தொடர்பு உண்டு என்பதற்கான எவ்வித ஆதாரமும், தடயமும் இல்லை என்பதும் நிரூபணமானது. மௌலவி பஷீரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக காவல்துறையின் விருப்பமாக இருந்தது. ஆனால் கர்நாடக காவல்துறையினர் பஷீரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தாங்கள் பெங்களூர் கொண்டு சென்று 'உண்மை அறியும் கருவி' மூலம் உண்மை களை வரவழைப்போம் என்றும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து 'தீவிரவாத சம்பவத்தில் பஷீர் ஈடுபடவில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது' என்று கர்நாடக காவல்துறையினரிடம் எழுதி வாங்கிய பிறகே அவரை தமிழக காவல்துறையினர் ஒப்படைத்தனர். லஷ்கரே தய்யிபா இயக்கத்தின் தலைவன் சென்னையில் கைது என்று கதை விட்டுவிடக் கூடாது என்பதற் காகவே இவ்வாறு தமிழக காவல்துறையினர் எழுதி வாங்கியுள்ளார்கள் என்று தெரிகிறது.

மௌலவி பஷீரை கர்நாடகத்திற்கு அழைத்துச் சென்ற அம்மாநில காவல்துறையினர் அவரிடம் மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டிலும் சோதனை செய்தனர். மௌலவி பஷீருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது. இச்சூழலில் மௌலவி பஷீருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறி கடந்த ஜன.7-ம் தேதி இரவு அவரை கர்நாடக காவல்துறையினர் விடுவித்தனர். ஒரு அப்பாவியை தீவிரவாதி என சித்தரித்த கர்நாடக காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பெரும்பாவிகளாக உள்ளனர். இவர்கள் மீது மௌலவி பஷீர் வழக்கு தொடுப்பார் என்று தெரிகிறது.

அப்துல் ரஹ்மானுக்கும் லஷ்கருக்கும் தொடர்பு இல்லை...
கர்நாடக காவல்துறை அந்தர்பல்டி


"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பழமொழியில் வரும் 'அரண்டவன்' என்ற பதம் இன்று கர்நாடக காவல்துறைக்குத் தான் பொருத்தமானதாக அமைந்துள்ளது. பெங்களூர் மாநாட்டில் விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறையினர் நடத்திவரும் விசாரணைகளும், வெளியிடும் அறிக்கை களும் பெரும் குழப்பத்தில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெங்களூர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறி ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த முஹம்மது ரஜியுர் ரஹ்மான் என்ற அப்துர் ரஹ்மானை (வயது 34) கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர் லஷ்கரே தய்யிபாவின் தென்னிந்திய தளபதி என்றும், தென்னிந்தியாவில் லஷ்கருக்கு ஆள் பிடிக்கும் வேலையை இவர் செய்கிறார் என்றும், இவர்தான் பெங்களூர் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி முடித்தவர் என்றும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்துர் ரஹ்மானை ஆந்திர போலீஸார் கைது செய்ததை கர்நாடக முதலமைச்சரும் பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடக காவல்துறையின் இந்தக் கூற்றை ஆந்திர மாநில காவல்துறை யினர் மறுக்கின்றனர். அப்துர் ரஹ்மான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதி அரேபியாவில் வாழ்ந்து வந்தவர். கர்நாடக காவல்துறை யினர் அப்துர் ரஹ்மானிடம் இருந்து கைத்துப்பாக்கியையும், 25 லட்ச ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதாக கூறினார்கள். ஆனால் அவரது மனைவி இதனை மறுத்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் வந்த தனழ கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும், அவரிடமிருந்து சிம் கார்டு மற்றும் பாஸ்போர்ட் மட்டுமே கைப்பற்றப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்கொண்டாவில் பி.எஸ்.டி. காலனியில் உள்ள அப்துர் ரஹ்மான் வீட்டிலிருந்து சிம் கார்டு, பாஸ்போர்ட், செல்போன், இரண்டு ஏ.டி.எம். கார்டுகள், இன்சூரன்ஸ் பாலிசிக்கான பத்திரம் ஆகியவை மட்டுமே கைப்பற்றப்பட்டதாக அந்த நகரத்தில் இருந்து வரும் பத்திரிகைகள் தெரிவித்தன.

அப்துர் ரஹ்மானின் சகோதரர் ஹபீப், "காவல்துறையினர் எனது சகோதரனின் வீட்டில் சோதனையிட்டார்கள். 6 மணி நேரத்திற்கும் மேலாக எங்களிடமும் விசாரணை செய்தார்கள். பிறகு நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று எங்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் மறுநாள் எனது சகோதரரை கைது செய்துவிட்டு அவரை லஷ்கரின் தளபதியாக்கி விட்டார்கள்" என்று வேதனைப்பட்டுள்ளார்.

அப்துர் ரஹ்மானின் தந்தை, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மூத்த உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்துர் ரஹ்மான் மார்க்கப் பற்று மிக்கவர் என்றும், மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 ஆண்டுகள் சவூதியில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவரை உடனடியாக தங்கள் தளபதியாக லஷ்கர் நியமித்துள்ளது என்று கூறப்படுவதை ஆந்திர காவல்துறையினரும் மறுத்துள்ளார்கள். இந்த சூழலில் அப்துர்ரஹ்மானைப் பற்றி பரபரப்பான தகவல்களை செய்தி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு வெளியிட்டன. தமிழகத்தில் தீவிரவாத இயக்கத்திற்கு இவர் ஆள் சேர்த்தார் என்றும் செய்திகள் வெளியாயின. இவை அனைத்தும் புஸ்வானமாகக் கூடிய வகையில் கர்நாடக காவல்துறையினர் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளனர்.

தொடர்ச்சியாக அப்துர் ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில் இருந்து, அப்துர் ரஹ்மானுக்கும் லஷ்கரே தய்யிபாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு வேறு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் கர்நாடக காவல்துறையினர் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளதாக பெங்களூரில் இருந்து வெளிவரும் டெக்கான் ஹெரால்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திர மற்றும் தமிழக காவல்துறை யினர் முதலில் சொன்ன தகவல்களை பிறகு சொல்லி தனது கையாலாகாத் தன்மையை கர்நாடக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் கர்நாடக காவல்துறையினர் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. பெங்களூரில் தாக்குதல் நடத்தியவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒளிந்திருப்பதாகவும், அவர்களை பிடித்துத் தருமாறும் கேட்டுக் கொண்டது. அங்கு தமிழக காவல்துறை சோதனை நடத்தியதில் கர்நாடக காவல்துறையின் தகவல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. இதேபோல், தனியாக தஞ்சாவூரிலும், சென்னைக்கு அருகே உள்ள மாங்காட்டிலும் கர்நாடக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களது புலனாய்வு 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழிக்கு ஏற்பவே அமைந்துள்ளது.

நன்றி: www.tmmkonline.org

மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்..

மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்
- மு. தேவசகாய பாஸ்கரன்

"மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்" என்று கூறும் இக்கட்டுரை 'எங்கே கிறித்தவம்? யார் கிறித்தவர்?' என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான 'நம்வாழ்வு' ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது. (Source: http://www.tmmkonline.org)


'இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே' என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம். இந்த வார்த்தைகள் உரைப்பவர்களின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டு, கேட்பவர்களின் செவிகளோடு மட்டும் நின்று விடுகிறது என்பதே கசப்பான உண்மை.

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்களே. இருந்தபோதும் முஸ்லிம் மதத்தில் காணப்படும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் 'இறைவனின் மக்கள் நாம் அனைவரும்' என்ற உணர்வும் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுவதில்லை.

இந்தியாவில் பிராமணர்கள் முதல், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வரை அனைத்து சமுதாய மக்களும் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் கலந்த நதிகளைப் போல் மற்ற அடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு, 'முஸ்லிம்' என்ற அடையாளத்தோடு காணப்படுகிறார்கள்.

நாம் நினைக்கலாம்... "முஸ்லிம்களுக்குள்ளேயும் பிரிவினைகள் உண்டு" என்று. முஸ்லிம் என்ற பெயரோடு பிரிவின் பெயரை இணைத்து சாதி சங்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடத்தில் இல்லை. மதம் என்ற ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களிடையே திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே உண்மை. பிரிவுகளை பெரிதுபடுத்துவதில்லை. அதனால்தான் இஸ்லாமியர்கள் தனி இடஒதுக்கீடு கோருகிறார்கள்.

கிறிஸ்தவர்களைவிட பெரும்பான்மையினரான இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனி இடஒதுக்கீடு சாத்தியப்படும்போது, கிறிஸ்தவர்களுக்கு இது ஏன் சாத்தியப்படவில்லை? கிறிஸ்தவர்களால் தனி இடஒதுக்கீடு கேட்கத்தான் முடியுமா? சாதி பிரிவினைகள் போக கிறிஸ்தவர்களிடையே எத்தனைப் பிரிவினைகள்!

கிறிஸ்தவம் என்ற மதத்தின் பெயரோடு சாதியின் பெயரை இணைத்து சங்கங்கள் வைப்பது போன்றவை இஸ்லாமிய மதத்தில் கிடையாது. இந்துத்துவாவின் அடிப்படையில் ஏற்பட்டதே வருணாஸ்ரம தர்மம். வருணாஸ்ரமத்தின் அடிப்படையில் நான்கு வருணங்கள். அவற்றிலிருந்து பிரிந்தவையே சாதிக் கொடுமைகள். பிரிவினைவாதங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகிய கொடுமைகளே பலர் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்துத்துவாவின் வழியில் ஏற்பட்ட சாதி பிரிவினைகளை உதறித் தள்ளியதன் மூலம் இந்துத்துவாவிலிருந்து முழுமையாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்துத்துவாவின் சாதியின் பெயரையோ, சாதிக்குரிய அடையாளத்தையோ தங்களோடு இணைத்துக் கொள்ளாமல், முழுமையாக களைந்து விட்டார்கள் என்பது கண்கூடு.

ஆனால் நாம் தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூடங்களிலும் ஒரே பாத்திரத்தில் கலங்கலாக காணப்படும் எண்ணெய்யும், தண்ணீருமாக இருக்கின்றோம். பின்பு எண்ணெய் வேறு, தண்ணீர் வேறாகப் பிரிந்து செல்கின்றோம்.

பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்பெண் மறுமணம், குடும்ப நலம், சமூக நீதி, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம் ஆகிய சீரிய கொள்கைகளை தனது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பாரதிதாசன் ஒரு நாத்திகர், பிறப்பால் இந்து. இருந்தபோதும் கிறிஸ்தவ கொள்கைகள் மீது ஏற்பட்ட பற்றுதல் அல்லது ஈடுபாட்டின் காரணமாக 'இயேசு மொழிந்த தெள்ளமுது' என்ற தலைப்பில் ஒரு கவிதை வடித்துள்ளார். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான். அதுதான் 'சாதி' என்ற தனது ஆதங்கத்தை இக்கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் சில வரிகள்...

மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? - இந்த
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா
ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? - சட்டம்
நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி - அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்
போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா...
பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா - இங்கு
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்
நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்
கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்
அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா!
- பாரதிதாசன் (கவிதை)

நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்களாக மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை திருமணங்களின் வாயிலாக இஸ்லாமியர்கள் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள். இதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வே காரணம். இந்த உணர்வே இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கைக்கு உரமூட்டுகிறது. இஸ்லாமிய சகோதரர்களிடையே உள்ள நல்ல செயல்களை நாம் முன்னுதாரணமாகக் கொள்வோம்.

கொள்கை ரீதியாகவும், மொழி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பல சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதி களும், சித்தாந்தவாதிகளும், வேதாந்தவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், பொது உடைமைவாதிகளும் மக்களை ஒருங்கிணைக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தோல்வி கண்டார்கள். மார்க்க ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம். மேலும், அவர்களிடையே காணப்படும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுக்குக் காரணம், அவர்கள் இன்றவும் உலகளாவிய பொது வழிபாட்டு மொழியைக் கடைப்பிடிப்பதேயாகும்.

பல புனிதர்கள், அருளாளர்கள் பெயரை நம் பெயராகக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரையும், சாதியின் பட்டத்தையும் சேர்த்துக் கொள்வது அந்தப் புனிதரை அவமானப் படுத்துவதற்கா? அல்லது சாதியை பெருமைப் படுத்துவதற்கா? கிறிஸ்தவர்கள் மதத்தைவிட சாதிக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. மதத்தின் பெயரால் நம்மால் ஒன்றுபட முடியுமா?

இந்துக்களோடு சாதியின் பெயரால் உறவுகளை சிலர் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளில் வெள்ளையர்கள், கருப்பர்கள் என்ற வேறுபாடு கிருத்துவ மதத்தில் பரவலாக முன்பு காணப்பட்டன.

வெள்ளையர்களும், கருப்பர்களும் வேறு வேறு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். மொழியால், கலாச்சாரத்தால், நாகரீகத்தால், உணவு பழக்க வழக்கங்களால் முற்றிலும் மாறுபட்டவர்கள். வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் நம்மிடையே அவ்வாறு இல்லை. ஒரே மண்ணின் மக்கள். ஒரே மொழியைப் பேசுபவர்கள். கலாச்சாரத்தால், நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள். நம்மிடையே சாதி அடிப்படையில் பிரிவினைகள் ஏற்படுத்தியது ஆதிக்க இந்துக்கள்.

"நாம் பலராயினும் கிருத்துவில் ஒருவரே நம்மில் யூதன் என்றும், கிரேக்கன் என்றும் இல்லை. அடிமை என்றும் சுதந்திர மனிதன் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் இல்லை" என்று சொன்ன கிருத்துவம் இந்திய மண்ணில் இந்துத்துவாவின் மாமுல்களை மாற்றியமைக்க முற்படாமல் கால் ஊன்றத் தொடங்கியது. இந்நிலை கண்ட தந்தை பெரியார் ஒருமுறை "கிறித்தவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் "ஒரு தீண்டப்படாதவனுக்கு தன்னுடைய பழைய மதத்தின் பின் இணைப்பாகவே கிறித்தவ சமயம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை பொருத்தவரை தனித்தன்மையோடு விளங்குபவை இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு மதங்கள் மட்டுமே. மீதி மதங்கள் அனைத்தும் இந்துத்துவாவின் பாதிப்பிலிருந்து விடுபடாமல் உள்ளன. ஞானஸ்நானம் பெறுகின்றோம், அப்போது நம் மீதுள்ள ஜென்மப் பாவங்கள் கழுவிக் களையப்படுகின்றன. அப்போதே ஜென்மப் பாவத்தினால் ஏற்பட்டுள்ள இந்துத் துவாவின் கறையான சாதியும் நம்மை விட்டு நீங்கியிருக்க வேண்டும். கொசுக்களை வடிகட்டி தூர எறிந்துவிட்டு ஒட்டகத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவில் சிலுவையின் நிழலில் கீறல்கள் காணப்படுகின்றன.

மற்ற மதங்களைவிட வலுவான நிர்வாகக் கட்டமைப்பு கிறிஸ்தவ மதத்தில் உள்ளது. துறவிகள், போதகர்கள், ஊழியக்காரர்கள் மட்டத்தில் இருந்து அவசரக்கால அடிப்படையில் இதற்கான முயற்சிகளும், பணிகளும், முன்மாதிரியான வாழ்க்கையும் மேற்கொள்ளப்பட்டால் கிறித்தவ மதத்திலும், உண்மையான சகோதரத்துவமும், தனித்துவமும் வருங்காலத்தில் ஏற்படும்.

நன்றி: நம்வாழ்வு (01-08 ஜனவரி 2006)

Sunday, January 01, 2006

இந்தியாவில் இஸ்லாம்-11

தொடர்-11: தோப்பில் முஹம்மது மீரான்

வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்

"இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்". (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar - Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.

நான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் இரத்த சாட்சியான பிறகு, திப்புவின் ஆட்சிக்குட்பட்டிருந்த மைசூர், கர்நாடகா, மலபார் போன்ற இடங்களைப் பற்றி சரிவர படித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க கி.பி.1799-ல் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பிரான்ஸில் புக்கானன் ஆவார். இவர் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களிலுள்ள ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் நிலை, கலாச்சாரம், தொழில், விவசாயம், மதம் ஆகியவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அதை நூல் வடிவில் வெல்லஸ்லி பிரபுவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

இப்படி ஊர் ஊராகச் சென்றிருந்த போது 'பொன்னானி'க்கும் சென்றிருந்தார். பொன்னானியில் ஒரு 'தங்களிடம்' இருந்து கேட்டறிந்த செய்திதான் மேலே தரப்பட்டுள்ளது. இதே 'தங்களின்' முன்னோர்கள் கொடுத்த சில அரபி மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முஹம்மது காசிம் பெரிஸ்தா என்ற வரலாற்று ஆசிரியர் மலபார் வரலாற்றை எழுதியுள்ளதாக புக்கானன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மது காசிம் பெரிஸ்தா போன்ற பெரிய பாரசீக வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று ஆவணங்கள் வழங்கிய 'தங்களின்' குடும்பத்தாரிடமிருந்து நேரில் கேட்டறிந்து தம் அறிக்கையில் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பரவிவிட்டதாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி ஒப்புக் கொள்கிறார் புக்கானன்.

நம்பிக்கையற்றவர் (Infidels)களுக்கு எதிராக போர்மூலம் இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முஹம்மது கஜினி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக (இந்திய வரலாறு - ஏ. ஸ்டிதரமேனோன்) சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை மெய்ப்பிப்பதற்காக வேண்டுமென, அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தோன்றிய வரலாற்று உண்மையை மறைக்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.

மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் புலர்ந்து ஏறத்தாழ 9நூற்றாண்டு காலம் வரையிலும், குறிப்பாக சொல்லப்போனால் 1491-ல் வாஸ்கோடகாமா கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பல் இறங்கும் வரை இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலோ, கேரளாவிலோ எந்தவித கிளர்ச்சியோ, போராட்டங்களோ ஜாதிக் கலவரங்களோ, அரசுக்கெதிரான போரிலோ ஈடுபடவில்லை என்பது வரலாற்று உண்மை. தாய் நாட்டிற்காக இராணுவ சேவை செய்து வந்தனர். இங்குள்ள மக்களோடு ஒன்றியும், இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்தும் ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வந்ததால் இங்குள்ள ஆட்சியாளர்களின் பேருதவியோடு இஸ்லாம் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.

இஸ்லாம் மார்க்கத்திற்கு சில நூற்றாண்டுகளில் கேரளக் கரையில் அதிக பிரச்சாரம் கிடைத்தது. இங்கு ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிறகு சிறப்பாக விளங்குவது முஸ்லிம் சமுதாயமாகும். இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்த வளர்ச்சி பல கோணங்களிலும் கேரள அரசர்கள் கடைப்பிடித்து வந்த மத சகிப்புத்தன்மை காரணமாகும். கோழிகோட்டு சாமூதிரிகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் உற்சாகமும் ஊட்டினர்.

சாமூதிரிகளின் கீழில் அரசாங்கம் இருந்த போது கோழிக்கோட்டில் சொல்லத் தகுந்த ஒரு சக்தியாக விளங்கினர் முஸ்லிம்கள். அவர்கள் மன்னர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், நாட்டு விவகாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவும் விளங்கினர். சாமூதிரிகள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி முஸ்லிம்களுக்கு தனி சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தனர்.

சாமூதிரிகளுடைய கப்பல் படைத்தலைவர்களான புகழ்பெற்ற குஞ்சாலி மரைக்காயர்கள், போர்ச்சுகீசியரின் நாட்டைப் பிடிக்கும் திட்டங்களுக்கு எதிராக அயராது தொடர்ந்த வீரமிக்க போர்கள் கேரள வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதியாகும். மாப்பிள்ளைகள் என அழைக்கப்படும் மலபார் முஸ்லிம்கள், சாமூதிரிக்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள். கடற்படையில் போதிய அளவு முஸ்லிம்கள் இல்லாவிட்டால் ஹிந்து சமுதாயத்தில்பட்ட மீனவ குடும்பங்களிலிருந்து ஒன்றிரண்டு நபர் வீதம் முஸ்லிம்களாக வளர்க்க சாமூதிரிகள் உத்தரவிட்டனர். கோழிக்கோட்டில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பெருக ஒருவேளை இந்தக் கட்டளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ. ஸ்டிதரமேனோன் (கேரள வரலாறு - பக்கம் 99) குறிப்பிடுகிறார்.

சாமூதிரி போன்ற மன்னர்களின் உதவியாலும், ஊக்குவிப்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்த உண்மையை, மக்கள் கவனங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவே முஹம்மது இபுனு காசிமையும் அவருக்குப் பிறகு வந்தவர்களையும் வாளேந்தி வந்து இஸ்லாத்தைப் பரப்பியவர்கள் என்ற இழிவான பழியை இவர்கள் மீது சுமத்தி, இந்திய வரலாற்றின் முன் வரிசையில் குற்றவாளிகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.

- தோப்பில் முஹம்மது மீரான்

தொடரும்..

நவம்பர், 11 - 17, 2005