ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து 'நான் புரிந்து கொண்ட நபிகள்' என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
மார்க்சியம், பெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது.
மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய அவசியங்கள் இருக்கின்றன. ஒரு மார்க்சியராக இருந்து கொண்டு அ.மார்க்ஸ் இந்தப் பணியைச் செய்கிறார் என்பது நல்ல விசயம்.
நாம் அறிந்து வைத்திருக்கின்ற இஸ்லாத்திற்கு 1400 ஆண்டுகால வரலாறு என்பது ஒரு புறமிருக்க, இந்த வரலாற்றில் அதன் ஆரம்பக் கட்டம், கலிபாக்களின் காலம், அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பேரரசாகப் பரவக்கூடிய காலம், இந்தியாவுக்குள் இஸ்லாம் வந்த காலம், உலக அளவிலான காலனி ஆட்சிக்காலம், காலனி எதிர்ப்புகள் தொடங்கிய காலம், இஸ்லாம் குறித்தான அல்லது அரபு தேசங்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய கற்பிதங்கள், இன்றைய இஸ்லாமின் நெருக்கடிகள் என இவை எல்லாவற்றுக்குள்ளும் புதையுண்ட ஒன்றாக தோற்றகால இஸ்லாம் குறித்த மதிப்பீடு மறைந்து கிடக்கிறது.
உள்ளுக்குள் கிடக்கின்ற இந்த இஸ்லாமின் செய்திகளை இன்றைய அரசியல் சமூக பார்வையை கொண்டு மீட்டெடுத்தல் என்பது முக்கியமான பணியாகத் தெரிகிறது. அ.மார்க்சின் இந்தத் தலையீடு நல்ல ஒரு தலையீடு. இஸ்லாம் என்ற மதத்தை அணுகுவது எப்படி என்பதைப் பற்றி முறையியல் ரீதியாக சில கோட்பாடுகளை, சில வழிகாட்டுதல்களை மார்க்ஸினால் இந்த நூலில் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை அ.மார்க்ஸ் எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்க்கும்போது, நபிகள் நாயகம் எல்லா சாதாரண மனிதர்களையும் போலவே கருவானவர், உருவானவர், நோயுற்று மறைந்தவர் என்ற செய்தியைப் பதிவு செய்கிறார். அவர், அற்புதங்களை நிகழ்த்தாதவர், வெற்றி தோல்விகளை அனுபவித்தவர், நபிகளின் வாழ்வில் ஏழ்மை உண்டு, துயரம் உண்டு என்று நபிகளை அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தக் கூடிய பின்புலம் மிக முக்கியமானது. வேறொரு கட்டுரையில் நபிகளின் மரணத்தை அவர் சித்தரிக்கிறார். நபிகள் இறைத்தூதர் என்றாலும் ஒரு மனிதருடைய மரணமாக - ஒப்பீட்டுக்காக சொல்வதாக இருந்தால் அவர் உயிர்த் தெழவில்லை என்ற இந்த மதிப்பீடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
நாம் அவதாரக் கடவுள்களை வைத்திருக்கிறோம், அவதாரங்களை வைத்திருக்கிறோம், இறை மைந்தர்களை வைத்திருக்கிறோம். ஒரு மதம் என்று சொன்னால் அதில் அதிசயத் தன்மை இருக்க வேண்டும். அதிசயங்களை நிகழ்த்தவில்லை என்றால் அவர் ஆண்டவனில்லை, ஆண்டவனோடு தொடர்பு கொண்டவரில்லை என்ற பார்வைகள் இருக்கக் கூடிய பின்புலத்தில் நபிகளை மனிதராக வாழ்ந்தவர், வயிறு நிறைய பேரீச்சம் பழங்களைக்கூட உண்ணாதவர், வணிகத்தில் ஈடுபட்டவர் நபிகள் என்று சித்தரிப்பது எல்லாமே வித்தியாசமான ஆனால் அவசியமான சித்தரிப்பு.
இறை அனுபவங்களை பெறக்கூடிய நேரத்தில் 'ஓதுவீர்' என்ற அந்த இறைச்செய்தி கிடைத்தவுடன் அதனுடைய அர்த்தம் ஓரளவுக்குப் புரியாத நிலையில் மனைவி கதீஜாவிடம் ஓடிவந்தார் நபிகள். கதீஜா அது இறை செய்தியாக இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பிறகுதான் நபிகள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த இறை செய்தியை ஏற்பவராக ஆகிறார்.
இறைசெய்தி நபிகளிடம் இறங்கும் பொழுது, அவர் அனுபவிக்கக் கூடிய உடல் வாதைகள், என்னுடைய உடம்பிலிருந்து உயிர் கிழித்தெறியப் பட்டது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது என்ற நபிகளி வார்த்தைகள் இவற்றையெல்லாம் மார்க்ஸ் பதிவு செய்கிறார்.
இறைவெளிப்பாடு என்பதை இந்திய தத்துவமரபில் பேரின்பம் என்று சொல்வார்கள். பேரின்பம் என்று சொல்வது அந்த செய்தி இறைவனிடம் இருந்து வந்தது என்பதை கௌரவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இறைச்செய்தி என்பது மிக சிக்கலான ஒரு அனுபவம். சமூகப் பிரச்சனைகளை சமய மொழியில் அனுபவிக்கக் கூடிய ஒரு மனிதர், நெருக்கடிகளை தன்னிலேயே அனுபவிக்கும் போது, இறைச் செய்தி என்ற ஒன்று அவருள் எப்படி நிகழ்கிறது என்பதை ரியலிஸ்டிக்காக என்று சொல்கிறோமே, அவ்வாறு எடுத்துக் காட்டுகிறார்.
இந்த தளத்தில் வைத்துப் பார்க்கும்போது நபிகளை அதிசயங்களுக்கு அப்பாற்பட்டவராக, சாதாரண ஏழையாக வணிகச்சூழலில் வாழ்ந்து, அலைந்து, திரிந்து அந்த மக்களின் பிரச்சனைகளை தன்னுடைய நெஞ்சிலே சுமந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று நிரந்தரமாக தேடிக் கொண்டே இருந்து, அதற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அதன் மூலமாக புதியதொரு மதத்தை தொடங்குவது போன்ற ஒரு விடிவை நோக்கி நடந்து சென்ற மனிதராகக் காட்டுகிறார். இது அ.மார்க்சின் சித்தரிப்பு என்பது ஒரு புறமிருக்க இஸ்லாத்தின் தோற்றகாலச் சூழல்களை வெகுவாக நெருங்கிச் செல்லும் முயற்சியாகும்.
அ.மார்க்ஸின் இந்தச் சித்தரிப்பை முனைப்பாக நாம் முன்னெடுத்தச் செல்ல வேண்டும். இது போன்ற ஒரு சாதாரண மனிதராக நாம் ஏசுவை சித்தரிக்கத் தொடங்கினால் எப்படி சித்தரிப்போம். எப்படிச் சித்தரிக்க முடியும்? என்ற முயற்சிகளில் கூட ஈடுபடுவது நல்லது. இது போன்ற ஒரு சித்தரிப்புக்கு வள்ளலாரையோ, குருநானக்கையோ கூட நாம் ஆட்படுத்த வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு அற்புதமான எடுத்துக் காட்டாக மார்க்ஸ் ரொம்ப அழகாக நபிகள் நாயகத்தை இந்தப் புத்தகத்தில் வளர்த்தெடுக்கிறார்.
இரண்டாவது இந்த நூலில் பேசப்படும் விசயம், சமூகத் தளத்தை நோக்கி பரவும் பொழுது, இஸ்லாத்தின் சிந்தனை தோற்றம் எப்படி நிகழ்கிறது என்பதற்கான புறச் சூழல்களையும் அ.மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். இனக்குழு மரபுகளும் வணிகக்குழு மரபுகளும் நிறைந்த ஒரு வட்டாரமாக, உள்ளுக்குள் கிட்டத்தட்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்கக் கூடிய நிலைக்கு அராபிய சமூகம் ஏற்கெனவே தயாராக இருந்தது. ஆனால் இனக்குழுக்களின் இடையிலான சண்டைகள், இனக்குழுக்கள் வணிகப் பாதைகளை கைப்பற்றுவது, வணிகக்குழுக்கள் இடையில் உள்ள சண்டைகள் என்ற சூழலில் ஒருங்கிணைந்த சமூக வாழ்வை உருவாக்கக்கூடிய தேடலுக்கு ஆட்பட்ட சமுதாயமாக அது இருந்தது. ஏற்கனவே அங்கு ஏக இறைக் கோட்பாட்டைப் பேசிய ஹனீப்கள் இருந்தார்கள்.
'அரேபியருக்கு ஒரு இறைத்தூதரை அருளுங்கள்' என்ற ஒரு எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் ஏற்கெனவே தோன்றிவிட்டது என்ற செய்தியை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்த எதிர்பார்ப்பை விடுதலையின் ஊற்றுக் கண்ணாக ஆக்கியவர் நபிகள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். வரலாற்றின் நெருக்கடிகளில் எப்படி பிரம்மாண்டமான மனிதர்கள் தோன்றுகிறார்கள் என்பதைச் சொல்லுகிற இடமிது.
திருக்குர்ஆனைப் பற்றி குறிப்பிடும்போது, அந்தக் காலத்தினுடைய சமகால அரசியல் ஆவணமாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதைப்போல நபிகள், இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூக திட்டத்தைத் தந்தவர் என்று குறிப்பிடுகிறார். அறவியல் கூறுகள், அரசியல் கூறுகள், இறையியல் கூறுகள் கொண்ட திட்டமாகத்தான் நமக்கு அது கிடைக்கிறது.
நபிகள் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலமாக யூதமதத்தையும், கிறித்தவ மதத்தையும் அதனுடைய சுற்று நிலைகளில் எடுத்துப் பார்த்தோம் என்றால் 7ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய துறவு நிறுவனங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த துறவு நிறுவனங்களின் பலத்தை மட்டுமே அது முன்னிலைப்படுத்திய காலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தில் நபிகள் உலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன்வைத்தார் என்பது முக்கியம். இந்த உலகிலேயே சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை எப்படிக் கொண்டு வருவது என்ற ஒரு கேள்வியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அ.மார்க்ஸ் நன்கு எடுத்துக் காட்டுகிறார். நபிகளின் திட்டம் ஒரு அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதாக இருந்தது என்பதை, நபிகளின் செயல்பாடுகள், அவை போர்களாக இருக்கலாம், அல்லது நபிகள் ஏராளமாக செய்து கொண்ட ஒப்பந்தங்களாக இருக்கலாம். அந்த ஒப்பந்தங்களிலும், போர்களிலும் சமூகத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதுதான் முனைப்பாக இருந்தது என்பதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட இஸ்லாத்திற்குள் துறவு நிறுவனம் கிடையாது என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். சூஃபியத்திற்குள் கொஞ்சம் துறவு நுழைந்திருக்கலாம், இருந்தாலும் துறவு நிறுவனங்களை, அப்பாலை சமயப் பண்புகளை சொல்லாத சமயம் இஸ்லாம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நபிகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தியவர் என்பதை மிக அழகாக அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். துறவு மூலமாக, துறவினை நிறுவனமாக ஆக்குவதன் மூலமாக, வெறும் அறரீதியான போதனைகளை நிகழ்ததுவதன் மூலமாக, அல்லது அவரவர் தங்கள் மனங்களை செப்பமிட்டுக் கொள்வதன் மூலமாக என்ற தளங்களுக்குள்தான் மதங்கள் வேலை செய்து வந்திருக்கின்றன. நபிகளைப் பொறுத்த மட்டில் மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்தியவர், தன்னுடைய இயக்கத்தை ஒரு ரகசிய இயக்கமாக நடத்தியவர். நபிகள் வாழ்க்கையின் ஒருபகுதி தலைமறைவு வாழ்க்கையாக அமைகிறது. புலம் பெயர்ந்து செல்கிறார். இந்தத் தலைமறைவு, புலம் பெயர்தல், ஆயுதம் தாங்கியப் போராட்டம் இவை எல்லாம் சமகால அரசியல் சொல்லாடல்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமகால அரசியல் சொல்லாடல்களைக் கொண்டு நபிகளை அணுகும் போது நபிகளின் செயல்பாடுகள் புதிய தளத்தில் அர்த்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் பணியை இந்தப் புத்தகத்தில் அ.மார்க்ஸால் நன்றாக செய்ய முடிந்துள்ளது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம்.
அதுபோல் மேலை கிறித்தவம் இஸ்லாமின் தோற்ற காலத்திலிருந்தே நபிகளுக்கு எதிராக, இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டமைத்த கற்பிதங்கள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இறை அனுபவத்தின் போது உடல்வாதைகள் இருந்தன என்று நபிகள் சொல்கிறார் என்றால் அதைக் கொச்சைப் படுத்தக் கூடிய விதத்தில் அது இறை செய்தியல்ல, இது சாத்தானுடைய செய்தி என்று சொல்வது, இஸ்லாத்தை கிறித்துவத்திற்கு எதிரானது என்று சித்தரிப்பது, இதுபோன்ற கற்பிதங்களை எல்லாம் கட்டி எழுப்பினார்கள் என்பதைக் காண முடிகிறது.
இந்தக் கற்பிதங்கள் பற்றி பலவேளைகளில் நாம் கவனப்படுத்தியது கிடையாது. ஆனால் உலக வரலாற்றின் மிக முக்கியமான விசயமாக இந்த கற்பிதங்கள் இருந்தன.
ஒரு அர்த்தத்தில் ஐரோப்பிய சமூகம் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக, இந்தியர்களுக்கு எதிராக அல்லது கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு எதிராக கற்பிதங்களை உண்டாக்குவதற்கு மிக முன்னதாக இஸ்லாத்தை தனக்கொரு மிகப்பெரிய போட்டி சக்தியாகப் பார்த்தது. இது எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சமூகம் இஸ்லாத்தையும், அரபு சமூகத்தையும், அதன் அரசியல் வடிவத்தையும் மிகப்பெரிய போட்டியாக நினைத்தது என்பதை மனதில் வைத்து பார்ப்போமானால் நமக்கு இந்தக் காலகட்டத்திலிருந்து கிடைக்கின்ற வரலாற்றை முழுவதும் வேறுவிதமாகப் பயிலுவதற்கு பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
கிறிஸ்தவ-இஸ்லாமிய போட்டியின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப் படவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி தனியாகக் கூட ஏராளமாக ஆய்வு செய்ய வேண்டுமென்பது முக்கியம். இந்தப் போட்டியில் ஓரளவுக்கு தோல்வியை சந்தித்தவர்கள் அரேபியர்கள் என்ற தளத்தில்தான் இன்றைய இஸ்லாம் வரையிலான நமக்குக் கிடைக்கக்கூடிய சித்தரிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தத் தோல்வி மனப்பான்மை என்பது அரேபியர்களை, இஸ்லாமியர்களை மேலும் மேலும் தங்களுக்குள்ளேயே, மத எல்லைகளுக்குள்ளேயே தங்களை அடக்கிக் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதையெல்லாம் கருத வேண்டியிருக்கிறது.
16-17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா காலனி ஆட்சியைத் தொடங்கிய போது அந்தக் காலனிய ஆட்சியினுடைய கொடூரமானத் தாக்குதல்களுக்கு அரேபிய சமூகம் / இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டது என்பதும், இந்தக் காலனி ஆட்சியில் பயன்படுத்தப் பட்ட வன்முறையை அரேபியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுடன் அந்த வன்முறையை அவர்களால் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை என்பதெல்லாம் சேர்ந்துதான் பிற்கால இஸ்லாத்தின் வரலாற்றைத் தீர்மானித்தன என்று கூட சொல்ல முடியும். மேற்கு நாடுகள் தாங்கள் உருவாக்கிய இஸ்லாமுக்கு எதிரான கற்பிதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏராளமாக இறக்குமதி செய்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இறக்குமதி செய்தது. ஒட்டுமொத்த உலகின் அபிப்பிராயமாக சார்ந்த பிலாலுக்கு பாங்கு சொல்லும் உரிமையை வழங்கியது, அதைப்பார்த்து பலர் முகம் சுளித்த போதும் நபிகள் அதில் பிலாலின் பக்கமே நின்றது போன்ற விசயங்கள் இவையெல்லாம் இஸ்லாத்தின் சமூக உள்ளடக்கத்தை இன்னும் அதிகமாக பலப்படுத்துகின்றன என்று அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
முதல் கலீபா அபுபக்கர் ஆட்சி ஏற்கும் பொழுது சொன்ன ஒருவரியை எடுத்துச் சொல்லி இருக்கிறார். உங்களில் பலம் குறைந்தவரே என் கண்ணில் பலம் வாய்ந்தவர், அல்லாவின் விருப்போடு நான் அவருக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை இது தொடரும், உங்களில் பலமிகுந்தவர் என் கண்ணில் பலமற்றவராகவே தெரிகிறார். அல்லாவின் விருப்பத்துடன் அவர்களிடமிருந்து பிறரின் உரிமைகளை ஈட்டிக்கொடுக்கும் வரை. நான் அல்லாவுக்கும் அவன் தூதருக்கும் பணிந்து நடக்காத போது நீங்கள் என்னைப் பணிய வேண்டியதில்லை என்ற வாசகங்களை பதிவு செய்திருக்கிறார்.
மதங்களின் ஏக இறை கொள்கைக்கும் இன்றைய சில விவாதங்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஏக இறைக் கொள்கை என்பது புனித அதிகாரங்களுக்காக உருவாகி வந்தது என்ற குற்றச்சாட்டு மதங்களை நோக்கி வைக்கப்படுகிறது. ஆனால் நபிகளைப் பற்றி பேசும்போது அவருடைய ஏக இறைக் கொள்கையின் வழி மக்களை ஒன்று படுத்துவதே தவிர அதை அதிகார மையமாக உருவாக்கவில்லை என்பது. அபுபக்கரின் பலமிக்கவர், பலமற்றவர், உரிமைமிக்கவர், உரிமையற்றவர் என்ற சொல்லாடல் அதிகாரம் குறித்த கருத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஏக இறை என்ற விஷயத்தை வைத்து ஒரு அதிகார மையமாக உருவாகாமல் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சமத்துவம் போன்ற தளத்தை உருவாக்க இஸ்லாம் முயற்சி செய்திருக்கிறது என்ற செய்திகளை நமக்கு இந்த நூல் சொல்கிறது.
இந்த நூலை முதல் பார்வையில் பார்க்கும் பொழுது, அ.மார்க்ஸ் விமர்சனம் இல்லாமல் இஸ்லாத்தை ஆதரித்து ஒரு நூலை எழுதி இருக்கிறார் என்ற வெளித்தோற்றம் கிடைக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டுமல்ல, ஏசுவை மையமாக வைத்து கிறித்தவர்கள் வரலாற்றை, பௌத்தத்தின் வரலாற்றை, இந்திய நாட்டில் தோன்றிய சமயம் சார்ந்த சில சிந்தனையாளர்களின் வரலாற்றை அணுகிப் பார்ப்பதற்கான ஒரு முறையியலை இந்த நூல் தந்திருக்கிறது. எனவே விமர்சனம் இல்லாமல் ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்று சொல்வதற்கு இடமில்லை என்று நான் வலுவாக நம்புகிறேன்.
-ந. முத்துமோகன்
நான் புரிந்து கொண்ட நபிகள்
ஆசிரியர் : அ.மார்க்ஸ்
வெளியீடு : கருப்பு பிரதிகள்,
45ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை - 5.
விலை : ரூ.80/- பக்கம் : 204
நன்றி: கீற்று