போனமாதம் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஊடகங்களால் கை, கால் வைத்து ஊதி பெரிதாக்கப்பட்டதால் சினிமா படமாகப்போகும் நிலைக்கு தற்போது வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜாபர்பூர் நகர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த நூர் இலாஹியின் மனைவி இம்ரானா (வயது 28) கடந்த ஜுன் மாதம் (2005) அவரது சொந்த மாமனார் அலி முஹம்மது என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதே வழக்கு.
தனது கணவர் ஊரில் இல்லாத இரவில் மாமனார் தன் கைகளால் வாயை பொத்தியும் இம்ரானாவின் கைகளை கட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக இம்ரானாவின் தரப்பு குற்றச்சாட்டு.
ஆரம்பத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டை மாமனார் முஹம்மது அலியும் அவரின் உறவினர்களும் மறுத்துவிடுகின்றனர். இச்செய்தி அவ்வூரில் பரவுகிறது. நூர் இலாஹியின் உறவினர்களான ஜமீல் மற்றும் ஷா-தீன் ஆகிய இருவரும் அவ்வூரின் மதரசா மவ்லவி முஹம்மது ஷமீம் என்பவரிடம் சாதாரணமாக இவ்விசயத்தை சொல்கிறார்கள். இவர் ஃபத்வா கொடுப்பவரோ அல்லது ஃபத்வா கொடுப்பதற்கு தேவையான விஷய ஞானம் உள்ளவரோ அல்ல. ஷரியத் சட்டம் எதையும் பார்க்காமல் அந்த கணவன் மனைவி பந்தம் ரத்து ஆகிவிடும் என்றும் கற்பழித்தவரே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எந்த ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் ஒரு முட்டாள்தனமான கருத்தை சொல்கிறார். இதனைத்தான் ஊடகங்கள் "லோக்கல் ஷரியத் கோர்ட்" என்று வெளியிட்டது.
இம்ரானாவின் செய்தியை அறிந்த உள்ளூர் "தைனிக் ஜாகரன்" என்ற ஹிந்தி பத்திரிகையின் நிருபர் இச்செய்தியை பிரசுரிக்காமல் இருக்க அக்குடும்பத்தினரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கிறார். ஏழை குடும்பத்தினரால் கொடுக்க முடியாததால் அதனை பிரசுரித்துவிடுகிறார். அதனை ஜீ டீ.வி. கொத்திக்கொள்ள அதிலிருந்து மற்ற சானல்கள், பத்திரிகைகள், செய்தி ஏஜன்சிகள் என அவரவருக்கு தேவையான செய்திகளை தடவி பப்ளிசிட்டி செய்து கொண்டன.
மீடியா வழி வந்த இச்செய்தியை முன்வைத்து "ராஷ்ட்ரிய சஹாரா" என்ற உருது பத்திரிகையின் சார்பாக தாருல் உலூம் தேவ்பந்தி நிறுவனத்திடம் மேற்கண்ட விஷயத்திற்கு கருத்து கேட்கப்படுகிறது.
தாருல் உலூம் தேவ்பந்த் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்ப்பு நிறுவனம் ஒன்றும் அல்ல. பிரிவுகளை கண்டிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஹனஃபி இமாம் கருத்துகளை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் ஒரு பிரிவினரின் மதரஸா மட்டுமே அது.
"முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக் கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது." (திருக்குர்ஆன் 4:22) என்ற வசனத்தை மேற்கோள் காட்டி "மாமனாரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் திருமணம் உறவு முறிந்துவிடும் என்று தாருல் உலூம் தேவ்பந்த் கருத்து கூறியுள்ளது.
இது இம்ரானா சார்பாக சொல்லப்பட்ட ஃபத்வா அல்ல என்றும் பொதுவாக கேட்கப்பட்ட கருத்துக்குரியது என்றும் தாருல் உலூம் இதற்கு
மறுப்பு வெளியிட்டுள்ளது.
அதே தீர்ப்பில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவருக்கே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பேசப்படும் கருத்தை பலமாக ஆட்சேபித்து தவறு என்றும் திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு தீர்ப்பு சொன்னால் அது யாராக இருந்தாலும் அதற்கான இஸ்லாமிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். அதன்படிதான் அத்தீர்ப்பு சரியா? தவறா? என்று உரசி பார்க்கப்படும். இஸ்லாத்திற்கு முரணாக இருக்கும்போது சாதாரண பிரஜைக்கும் இத்தவறை சுட்டிக்காட்ட உரிமை உண்டு.
"பாலியல் வன்புணர்ச்சிக்கு குற்றவியல் சட்டபடி தண்டனை தர வேண்டும். சேர்ந்து வாழ்வது குறித்து அந்தக் கணவன் -மனைவிதான் முடிவு செய்ய வேண்டும். அப்பெண் மீது தவறில்லாத போது அவரை எதற்காக தண்டிக்க வேண்டும்" என்பதாக முஸ்லிம் அல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இஸ்லாம் பாலியல் வன் புணர்ச்சி செய்தவரை மரண தண்டனைக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்ட அப்பெண் கணவனுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த தடையும் விதிக்கவில்லை.
இஸ்லாமிய
ஆதாரத்தின் படி1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை "இவன்தான் என்னைக் கெடுத்தான்" என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)
2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.
3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.
4. "அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்" என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை!
இனி இம்ரானாவின் விஷயத்துக்கு வருவோம்.
"உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்" (திருக்குர்ஆன், 4:23)
மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தால் கூட அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று 4:23ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து பலாத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது குற்றவாளிக்கு பரிசளிப்பது போன்றதாகும்.
கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் "நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.
இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. இம்ரானா தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
ஒரு ஏழை குடும்பத்தில் நடந்த ஒரு சொத்து தகராறு, உள்ளூர்வாதிகளால் கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டு பிறகு விவகாரம், ஊடகங்களால் சரியாக விசாரிக்காமல் ஊதி பெரிதாக்கி விட்டன.
சம்பவம் நடந்தது ஜுன் 3-ந்தேதி. செய்தி திரிக்கப்பட்டு - ஜோடிக்கப்பட்டு வெளியே வந்தபிறகு சம்பந்தப்படாதவர்கள் 15-ந் தேதிதான் லோக்கல் மவ்லவியிடம் சாதாரணமாக கருத்து கேட்டிருக்கிறார்கள். அதன் மறுநாள் 16-ந்தேதி காவலர்களால் கைது செய்யப்படுகிறார். இதன் பிறகே இம்ரானா காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புகார் பதிவு செய்கிறார். சம்பவம் நடந்து சுமார் 2 வாரம் கழித்துதான் புகார் பதிவு செய்யப்படுகிறது. ஜுன் 20-ந்தேதி இம்ரானா முஜஃபர் நகர் கோர்ட்டில் ஆஜராகிறார்.
இதற்கு பின்னணியில் இருப்பது வீட்டை விற்பது சம்பந்தமாக நூர் இலாஹிக்கும் அவரின் தந்தை அலி முஹம்மதுக்கும் நடந்த பிரச்சினையாகும். அலி முஹம்மது 20 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க வீட்டை விற்க முற்படுகிறார். ஆனால் நூர் இலாஹியும் அவரது மனைவி இம்ரானாவும் இதனை எதிர்க்கிறார்கள். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்கள் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுவிடுகிறார். பிறகுதான் இத்தகைய குற்றாச்சாட்டு இம்ரானாவினால் வைக்கப்படுகிறது.
59 வயது பெரியவர் ஒரு இளவயது பெண்ணை வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது கற்பழிக்க முடியுமா என்பதுதான் இங்கு கேள்வி. அலி முஹம்மதுவின் மனைவியாகிய மூதாட்டி தன் கணவரால் இத்தகைய செயலை செய்யமுடியாது என்று கண் கலங்குகிறார். நூர் இலாஹியிடம் உங்களின் தாய் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்கிறாரே அவரை நம்புகிறீர்களா? என்று கேட்ட போது, ஆமாம் அவரின் பேச்சை நம்புகிறேன் என்கிறார். உங்கள் தந்தை இத்தகைய செயலை செய்யமுடியுமா? என்று கேட்டதற்கு அவ்வாறு செய்ய முடியாது என்கிறார். இது பலரின் முன்னிலையில் இம்ரானாவின் சகோதரர்கள் இருவரும் அங்கு இருந்தும் இந்த பதிலை நூர் இலாஹி சொல்கிறார். இம்ரானாவும் தான் எந்த ஃபத்வாவையும் கேட்கவில்லை என்று மறுத்துவிடுகிறார்.
இம்ரானா தரப்பு குற்றச்சாட்டு தவிர இம்ரானாவுக்கு சாதகமான எந்த ஆதாரமும் இல்லை என்றும் இது ஒரு சொத்து தகராறு என்கிறது
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மற்றும்
தி ஹிந்து. மாமனாரின் சொத்துக்களை அபகரிக்க மகனும் மருமகளும் நடத்திய நாடகம் என்பதும் மற்றவர்களின் வாதம். இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. அலி முஹம்மது துப்பாக்கியை காட்டி மிரட்டினார் என்ற ஒரு செய்தியும் அவரை கைது செய்யும்போது எந்த துப்பாக்கியையும் போலிசார் பறிமுதல் செய்யவில்லை என்பதிலிருந்து பொய்யாகி விடுகிறது.
இந்நிகழ்ச்சியை இஸ்லாத்தை எதிர்ப்பவர்களும் இந்தியாவின் காவி இயக்கங்களும் இஸ்லாத்திற்கெதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளன. அத்வானி, அருண்ஜேட்லி முதல் அசோக் சிங்கால் வரை பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்று கதற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு பெண்ணுரிமை இயக்கம் இம்ரானாவிற்கு 5 ஆயிரம் ரூபாய் பேரத்திற்கு "தான் முஸ்லிம் தனியார் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றும் "சிவில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என்றும் சொல்லுமாறு கேட்டுள்ளார்கள்.
இஸ்லாத்தினை வேரறுக்க இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் கீழ்கண்ட வழிகளை கையாளுவது உண்டு.
1) முஸ்லிம்கள் எங்கு தவறு செய்தாலும் அதனை ஊடகங்களில் பதியவைப்பது.
2) அவ்வாறு முஸ்லிம்கள் தவறு செய்யவில்லை என்றால் அதற்கு சாதகமான சம்பவங்களின் வழியே முஸ்லிம்கள் தவறு செய்திருக்கலாம் (suspection) என்று பிரச்சாரம் செய்து ஊடகங்களில் பதிய வைத்துவிடுவது.
3) இத்தகைய விஷயங்கள் இஸ்லாத்திற்கெதிரானது என்று ஆதாரங்களைக்காட்டி சொன்னால் கூட, அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் இச்சம்பவங்களை இஸ்லாத்தின் வழிமுறையாக பிரச்சாரம் செய்வது.
4) பதிய வைத்த செய்திகளுக்கு எதிரான உண்மை சம்பவங்கள் தலை தூக்குமானால், பிறிதொரு காலத்தில் பதிய வைத்த இச்செய்தியை இஸ்லாத்தின் அசிங்கங்களாக பிரச்சாரம் செய்வது.
5) இந்தியாவை பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கும்போதெல்லாம் "பொது சிவில் சட்டம் தேவை" என்று கூப்பாடு போடுவது காவி இயக்கங்களின் வழிமுறையாகும்.
இந்த தீர்ப்பு தவறானது என்று இஸ்லாமிய இயக்கங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இச்செய்தியை ஆறப்போட்டு சில வருடங்கள் சென்று "முட்டாள்தனமான இஸ்லாத்தின் தீர்ப்பு" என்று இஸ்லாத்தின் மீது
சேறுவாறி இறைக்க இச்சம்பவத்தை பயன்படுத்துவார்கள். எதிர்காலத்தில் வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்த மாதிரி தவறான ஊடக வழிச் செய்திகளை வைத்து நடக்காத ஒன்று நடந்ததாக சொல்ல நல்லதொரு வாய்ப்பு. இதுவே நிகழ்கால இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் படிப்பினையாகும்.
"கணவன் மனைவியும்" சேர்ந்து வாழக்கூடாது என்று தாருல் உலூம் சொன்ன முட்டாள்தனமான கருத்து, முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் உலகஅளவில் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. (இதற்கான பல ஆதாரங்களை நம்மால் எடுத்து வைக்க முடியும்). மத்ஹப் போன்ற பிரிவுகளை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்ஹபின் பெயரால் நடந்த நிகழ்கால தடுமாற்றத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
"இஸ்லாம்" தொடர்ந்து ஊடகத்தினால் தாக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான முஸ்லிம்களின் ஊடகங்களில் "கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்கு தடை இல்லை" என்ற கருத்தை வலியிறுத்தினர். மற்றபடி இத்தகைய கற்பழிப்பு நடந்ததா என்ற செய்தியோ அல்லது இதற்கு பின்னணியில் உள்ள செய்தியோ முன்னுரிமை அளிக்கப்படவில்லை. குறிப்பிட்ட பத்திரிக்கைகளைத் தவிர.
1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறியாமைகளை போக்கிய ஒரு மார்க்கத்தின் பெயரால் இத்தகைய அசிங்கங்கள் நடப்பதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது.
பிரிக்கப்படாத கணவன் மனைவியை சேர்ந்து வாழ்வதற்காக பல பெண்ணுரிமை இயக்கங்கள்
போராட்டம் நடத்துகின்றன. தீர்ப்பு கூறும் அவையிடம் இந்த விவகாரம் முறையாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை. சம்பந்தப்பட்டவர் கேட்காத ஃபத்வா-வை சம்பந்தப்படுத்தி ஊடகங்களும் காவி இயக்கங்களும் அரசியல் நடத்துகின்றன.
இம்ரானா தனது மாமனாரால் பலாத்காரம் செய்யப்பட்டாரோ இல்லையோ ஆனால் ஊடகங்கள் அப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றன.
References:
http://www.milligazette.com/dailyupdate/2005/20050714b.htmAlso read:
Muslim Political Council's report on the Imrana episodeText of the Question and fatwa on ImranaStatements on Imrana case"Deoband Fatwa"islamonline.orgarabnewshttp://www.expressindia.com/fullstory.php?newsid=49943http://www.hindu.com/thehindu/holnus/001200507031202.htmhttp://abumuhai.blogspot.com/2005/06/blog-post_30.htmlhttp://athusari.blogspot.com/2005/07/blog-post_06.htmlhttp://timesofindia.indiatimes.com/articleshow/1158204.cmshttp://www.expressindia.com/fullstory.php?newsid=5042