Friday, December 30, 2005

இந்தியாவில் இஸ்லாம்-10

தொடர்-10: தோப்பில் முஹம்மது மீரான்

மேதை அல்பிருணியின் இந்திய வருகையும் - சர்ச்சையும்

இஸ்லாம் உலகில் வேருன்றி இரு நூற்றாண்டுகள் கடந்த பின் இந்தியாவிலாகட்டும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலாகட்டும், பயணம் செல்லும் அரபு நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமுடைய தோற்றம் எவ்வாறு இருக்குமென ஒரு முன்மதிப்பீடு இருக்கும். அதற்கு நேர் மாற்றமாக இருப்பின் முஸ்லிம் அல்லவென்று கருதப்படுவது இயல்புதானே. இன்று கேரளாவையோ, தமிழ்நாட்டையோ சார்ந்த, உருதுமொழி பேசத் தெரியாத முஸ்லிம் ஒருவர், வேட்டி கட்டிக் கொண்டு தொப்பி அணியாமல் வடமாநிலம் ஒன்றுக்கு செவ்வாரேயானால் அங்குள்ளவர்கள் இவரை ஐயப்பாடோடுதான் நோக்குவார்கள் என்ற துக்ககரமான உண்மையை யாரறிவார்.

மாலிக்காபூர், மதுரையை நோக்கி படையுடன் வரும் வழியில் கண்ணனூர் என்ற இடத்தில் தமிழ் முஸ்லிம்களை சந்திக்கிறார். தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறியபோதும், தோற்றத்தில் தென்பட்ட சந்தேகத்தால் முஸ்லிம்கள் என்று அவரால் நம்ப முடியவில்லை. பிறகு 'கலிமா' பலமுறை சொல்ல வேண்டினார். முஸ்லிம்கள் கலிமா பலமுறை சொல்லி கேட்ட பிறகுதான் முஸ்லிம் என்று நம்பிக்கைக் கொண்டார். இருந்தும் அம்முஸ்லிம்களை அரை முஸ்லிம் (Half-Mussalman) என்றே அமீர் குஸ்று குறிப்பிடுகிறார்.

கி.பி.1311ல் இது நடந்தது. இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள முஸ்லிம்களின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கலாமே?

கஜனி முஹம்மதுடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்து 40ஆண்டுகள் இங்கு தங்கி, இந்தியாவைப் பற்றி தெரிந்தவர் அல்பிருணி (கி.பி.973-1048) என்ற மேதை. அவருடைய 'அல்பிருணி பார்த்த இந்தியா' என்ற நூலில் கேரளாவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"மலபார்: கோவா முதல் கொல்லம் வரையிலுமாகும். அதன் நீளம் 300 பர்சக் (1பர்சக் 3 அரை மைல்) மலபாரிலுள்ள முக்கிய நகரங்களான கோவா, பாக்கனூர், மங்கலாபுரம், ஏழிமலை, பந்தலாயினி, கொடுங்கல்லூர் முதலிய இடங்களிலுள்ள மக்களெல்லாம் புத்த மதத்தினராவார்கள்..." (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் - வேலாயுதன் பணிக்கச்சேரி பாகம் 1 பக்கம் 103-104)

கி.பி.943ல் வந்த "மசூதி" கொங்கணியில் உள்ள சவுன் நகரத்தில் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின் வந்த அல்பிருணி, அப்பகுதிகளில் முஸ்லிம்களே இல்லை என்று கூறுகிறார். இவற்றில் எதை ஏற்றுக் கொள்ள முடியும்?

ஹிந்து மதம் கேரளாவில் அதன் முழு வளர்ச்சியடைந்த காலமாகும். பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகள். புத்த மதம் நலிந்து போன காலமது. இருந்தும் அல்பிருணி மலபாரில் உள்ளவர்களெல்லாம் புத்த மதத்தினர் என்று குறிப்பிட்டதை ஏற்று ஏதேனும் வரலாற்று ஆசிரியர் இவருடைய கூற்றின்படி கொல்லம் முதல் கோவா வரையிலும் பரந்து கிடக்கும் பகுதிகளில் ஹிந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்று குறிப்பிடவில்லையே. பிற்கால வரலாற்று ஆசிரியர்களும் பிருணியுடைய இக்கூற்றுக்கு எந்த விலையும் கற்பிக்கவில்லையே.

சில வேளை அல்பிருணி குறிப்பிட்டுள்ள மலபார் பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருக்க மாட்டார். யாரிடமிருந்தேனும் கேட்டுத்தெரிந்து கொண்ட அறிவை வைத்து எழுதியிருக்கக் கூடும். இல்லை, வடபகுதியில் தாம் பார்த்த முஸ்லிம்களைப் போலல்லாமல், தலைமுண்டனம் செய்து மேல் துண்டால் உடம்பைப் போர்த்தி திரிந்த முஸ்லிம்களைப் பார்த்து புத்த மதத்தினர் என்று தவறாக எண்ணி அப்படி எழுதியிருக்கலாம். அல்பிருணி எழுதியதுதான் உண்மை என்ற முடிவுக்கு வருவோமேயானால் 11-ம் நூற்றாண்டு வரையிலும் மலபார் பகுதிகளில் புத்த மதத்தினனர்களைத் தவிர முஸ்லிம்களோ பிற மதத்தினரோ இல்லை என்றுதானே அர்த்தம்(?)

இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிசப்தமாகவும், பல ஆண்டுகளுக்குப் பின் (கி.பி.712) சிந்து மார்க்கமாக ஓசை எழுப்பிக் கொண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காலோசையின்றி இஸ்லாம் இங்கு பிரவேசித்தது யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அதுவன்றி, திட்டமிட்டே இந்த 'பிரவேசிப்பை' மூடிமறைத்தனரோ?

கி.பி.712ல் முகம்மது இபுனு காசிமும் அவருக்கு முன் உமர் இபுனு கத்தாப்(ரலி) அவர்கள் காலத்தில் (634-643) தானா பகுதியில் கப்பலில் இறங்கியவர்களையும் வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதியில் கடற்கரை நகரங்களில் நெடுகிலும் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வடபகுதிகளிலும் வேகமாக பரவிய உண்மையை மறைக்கவும், 9-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைப்(West Coast) பகுதியில் ஆங்காங்கே தோன்றியது என்ற தவறான கருத்தை ஆணி அடித்து உண்மைப் படுத்தும் நோக்கோடு இஸ்லாத்தின் ஆரம்ப வருகையே நாட்டை ஆக்கிரமித்து ரண ஆறுகள் ஓடச் செய்வதற்காகத்தான் என்று களங்கமற்ற இந்திய மனதில் நஞ்சை கலப்பதற்காகவே இபுனு காசிமின் வருகையை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர்.

இந்தியாவின் வடபகுதிகளைப் பற்றிய வரலாறு 6, 7, 8 நூற்றாண்டுகளில் ஒளி மிக்கதாக இருக்கும்போது தென்னிந்தியாவிலுள்ள மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பெருமாள் ஆட்சிகள் நடத்தும் வரலாற்றில் இம்மூன்று நூற்றாண்டுகள் இருண்டுபோனது எப்படி? ஏன்?

இருண்ட காலமெனக் கூறி ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணம் சொல்லி உதாசீனமாக ஒதுக்கி வைக்கப்பட்ட இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படும் சில கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகள் பற்றியும் சில மன்னர்களைப் பற்றியும் சுந்தரமூர்த்தி நாயனார், ஆதி சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை போதனைகள் முதலியவைப் பற்றிய தெளிவான தகவல்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன?

இப்படிப்பட்ட தகவல்கள், திரட்டிய வழியில், அதேகாலக்கட்டத்தில் தோன்றிய வளர்ந்த இஸ்லாத்தைப் பற்றியும் இங்குள்ள முஸ்லிம்களைப் பற்றியும் தகவல்கள் ஏன் திரட்ட தவறிவிட்டன? முஸ்லிம்களை சம்பந்தப்பட்ட இடங்கள் வரும்போது இருண்ட காலமெனக் கூறி ஒரு திரையைப் போடுவது எதனால்?

- தோப்பில் முஹம்மது மீரான்


தொடரும்....

அக்டோபர் 28 - நவம்பர் 03, 2005

Sunday, December 25, 2005

இந்தியாவில் இஸ்லாம்-9

தொடர்-9 தோப்பில் முஹம்மது மீரான்

கற்பனையான பயண நூல்கள்

சென்ற இதழில் சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் எழுதிய சில்சிலத்து தவாரிக் என்ற நூலைக் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.

சுலைமானுடைய நூலில் அவருடைய சொந்த அனுபவங்கள் மட்டுமின்றி கி.பி. 851-க்கு முன் அரேபியர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்துள்ள தகவல்கள் முழுவதும் அதில் காணப்படுகின்றன. அதனாலேயே சில வரலாற்று அறிஞர்கள் சுலைமான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று ஊகிக்கின்றனர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் - வேலாயுதன் பணிக்கச்சேரி - பாகம் 1, பக்கம் 78-79)

சுலைமானுடைய நூலை மட்டும் ஆதாரம் காட்டி இந்தியாவிலோ குறிப்பாக தென்னிந்தியாவிலோ இஸ்லாம் கி.பி 851-க்குப் பிறகுதான் வந்திருக்கக் கூடும் என்று நம்புபவர்கள் அந்தப் பயண நூலில் வேறு ஒரு இடத்தில் காணும் செய்தியை அப்படியே விட்டுவிடவோ அல்லது கவனம் செலுத்தாமலோ இருந்துவிட்டனர்.

"He (the king of Jutz) is unfriendly to the Arabs, still he acknowledges that the King of Arabs is the greatest of Kings. Among the princess of India there is no greater friend of Mohammedam faith than he." (History of India as told by its own Historians! Elliot and Dowsan VoL.1 page 4)

இந்தியாவிலுள்ள பிற அரசர்களை விட ஜர்ஸில் உள்ள அரசர்களுக்கு இஸ்லாத்தின் மீது பகைமை இருந்ததாக கூறியுள்ளாரே? இஸ்லாம் இங்கு பரவி இருந்ததாலும்-வளர்ந்து வருவதாலும் தானே இப்படி பகைமை வைத்திருக்க முடியும். கி.பி.851க்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு, கிழக்கு கடற்கரை பகுதிகளில் தோன்றிவிருக்க வேண்டும், அல்லது தோன்றியது என்று வாதம் தொடுப்பவர்கள் சுலைமானுடைய பயண நூலை மேற்கோள் காட்டுவது எவ்விதம் பொருத்தமாக இருக்க முடியும்? இன்னும் அதையே நாடுவது, மூழ்கி இறக்கப் போகும் ஒருவர் காகிதத் தோணியை எட்டிப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.

இதைப் போல் சுலைமானுடைய கூற்றில் மேலும் பல முரண்பாடுகள் இருப்பதையும் காண முடிகின்றன. அவருடைய சில்சிலத்து தவாரிக் எனும் பயண நூலில் வேறு ஓர் இடத்தில் கூறப்பட்டிருப்பதை Roland-E-Miller தம்முடைய -Mappila Muslims of Kerala" எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

"Most of the princess..... believe that the length of their and their reigns is granted in recompense for their Kindness to the Arabs. In truth there are no princess more heartily affectionate to their Arabs, and their subjects profess the same friendship for us" (page 46)

A.D.943ல் மசூதி (Masudi) எனும் அரபி பயணி ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இவர் ஒருவரைத் தவிர 10-வது நூற்றாண்டிற்கு முன் எந்த முஸ்லிம் பயணியும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை. இதை மில்லரும் உறுதிப்படுத்துகிறார். ஆனால் மசூதி தென் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன. மசூதியுடைய பயண நூலான அல்தன்பிஹ் வல் இஷ்றாப் (Al Tanbih wal-Ishraf)ல் தென் இந்தியாவைப் பற்றியச் செய்திகள் சுலைமானுடைய நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்று மில்லர் கருத்து தெரிவிக்கின்றார்.

இந்தியாவுக்கு வந்த அல்மசூதி, தென்னிந்தியாவை நேரடியாகப் பார்த்தாரோ இல்லையோ இதை இங்கு சர்ச்சைக்குட்படுத்த வேண்டாம். அல்மசூதி, சுலைமானுடைய பயண நூலிலிருந்தும், வேறு சில அரபி வர்த்தகரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவுமிருக்கலாம் அல்லது நேரடியாக பார்த்து அப்பயண நூல் எழுதியதாகவுமிருக்கலாம். தம்முடைய நூலில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையின் பக்கம் வெளிச்சம் காட்டுகின்றன.

"islam is flourishing in the country of the Balhara" - என்று "மசூதி" குறிப்பிட்டிருப்பதாக மில்லர் கூறுகிறார் (பக்கம் 46) 'பல்ஹரா' என்பது தென்மேற்கு கடற்கரைப் பகுதியை ஆண்டு வந்த அரசர் பெயராகும். இவருடைய தலைநகரம் கொங்கன் என்றும் கூறுகின்றார். இவர் ஒரு சேர அரசர் என்பதில் சந்தேகமில்லை என்று மில்லர் குறிப்பிடுகிறார். "கொங்கனில்" 'சவுன்' நகரத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாக" மசூதியின் பயணக் குறிப்பிலிருந்து எடுத்தாளுகின்றார் வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் எனும் நூலில் - பாகம் 3 பக்கம் 42)

நாம் சொல்லவரும் விஷயத்திற்கு சாதகமாகவும், பாதகமாகவும் சாட்சியம் கூறும் இந்த பயணக் குறிப்புகள் எல்லாம் நம்பகமான ஆவணங்களாக ஏற்றுக் கொள்வதற்கு முடியாத முரண்பாடுகள் நிறைந்த கற்பனைக் கதைகளாகும்.

14-வது நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த இபுனு பதூதாவின் பயண நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கருங்கக்கூறின்: இந்தப் பயணிகள் (10வது நூற்றாண்டிற்கு முன்பு வந்தவர்கள்? யாருமே நேரடியாக தென்னகம் விஜயம் செய்யவில்லை. அவ்வப்போது இங்கு வந்துபோகும் அரபி வர்த்தகரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட கேட்டறிவைக் கொண்டு, கற்பனையில் பயணம் செய்து இவர்கள் பயண நூல்கள் இயற்றிவிட்டனர் என்பதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலர் இந்நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி நிருபணம் செய்துள்ளனர்.

இபுனு பதூதாவும் இதைத்தான் செய்தார். இந்தியா வரும் முன் நடந்த சில வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட அறிவோடு கற்பனையும் கலந்து அவர் எழுதிய பயண நூலை மத்திய கால இந்திய வரலாற்றுக்கு ஆவணமாக எடுத்துக் கொண்ட நூல்தான் மாபெரும் அறிஞரான முஹம்மது பின் துக்ளக் வரலாற்றில் ஒரு முட்டாள் மன்னராக்கப்பட்டான். (உண்மையின் வெளிச்சத்தில் முஹம்மது பின் துக்ளக் எனும் தலைப்பில் 'முஸ்லிம் முரசில்' நான் எழுதிய தொடர் கட்டுரையைப் பார்க்க ஜூலை 89-ஜூன் இதழ்கள்)

ஒரு நாட்டையே பார்க்காமல் அந்த நாட்டைப் பார்த்ததாக கற்பனையில் புணையப்பட்ட பயண நூல்களை மேற்கோள்காட்டி இஸ்லாம் இங்கு 9வது நூற்றாண்டிற்கு முன் நுழையவில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள பயண நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இஸ்லாம் இங்கு தோன்றியதைப் பற்றி ஆராய்வதை விட மக்கள் அவர்களுடைய கலாச்சாரம், தொழில், தண்டிக்கப்பட்ட முறை, பழக்கத்திலிருந்த நாணயங்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்றிற்கு அடிப்படையான ஆவணங்களை முன்வைத்துதான் இவ்வரலாற்று உண்மையை ஆராய வேண்டும்.

- தோப்பில் முஹம்மது மீரான்

தொடரும்..

மக்கள் உரிமை: அக் 21 - 27, 2005

Friday, December 23, 2005

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-3

3. பலதார மணம் செய்த ஆண்களுக்கு ஆதரவான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்

இரண்டாம் திருமணம் செய்ததாக இரண்டாம் மனைவி வாக்குமூலம் அளித்தாலும் குற்றம் இல்லை!

கன்வால்ராம் மற்றும் சிலர்
எதிர்
ஹிமாச்சலப் பிரதேச நிர்வாகம்

AIR.1966 SC 614

ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை மணந்துகொள்ளும் ஆடவருக்கு ஆதரவையும், முதல் மனைவிக்கு வேதனையையும் எவ்வாறெல்லாம் உச்சநீதிமன்றம் வழங்குகின்றது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது கன்வால்ராம் வழக்கு.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 1966-இல் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஹிமாச்சலப் பிரதேச கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். பராய்னா என்ற முறைப்படி மணமுடித்துக் கொள்வது இக்கிராம மக்களின் அங்கீகரிக்கப்பட்ட திருமணமுறையாக அமைந்துள்ளது. இந்தத் திருமண முறையில் சப்தப்பதி கிடையாது. இத்திருமண முறையில் இன்றியமையா சடங்குகள் வருமாறு:

மணமகளின் உறவினர் ஒருவர் மணமகளுக்கு அவளது வீட்டில் சுஹாக் அளித்தல், மணமகளின் உறவினர் மணமகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து வருதல்(பராய்னா), பானையில் நாணயங்கள் போடுதல், வாசலில் பூஜை செய்தல், வேதப்பாராயணம் செய்தல், மணமகள் பானையைத் தூக்கிக் கொண்டு சமையல் அறைக்கு எடுத்துச் செல்லுதல், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் விருந்தளித்தல். வாசலில் பூஜை செய்வதும் சமையல் அடுப்பிற்கு தலைவணங்குவதும் திருமணத்தின் இன்றியமையா சடங்குகள் என்று கன்வால்ராமின் முதல் மனைவி நீதிமன்றத்தில் கூறினார். இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டவர்கள் கன்வால்ராமின் இரண்டாவது திருமணத்தில் சுஹாக் மற்றும் பராய்னா சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்கள். ஆனால் மற்ற சடங்குகள் குறித்து ஏதும் கூறவில்லை.

இரண்டாம் திருமணம் செய்து கொண்டதற்காக கன்வால்ராம் மீது கிரிமினல் வழக்குத் தொடர்வதற்க முன்பாக, அவரது இரண்டாம் மனைவியுடன் கன்வால் பாலுறவு வைத்துக் கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டுமென முதல் மனைவி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்த இரண்டாம் மனைவி முதல் திருமணத்தை ரத்து செய்த பிறகே கன்வால்ராம் தன்னைத் திருமணம் முடித்ததாக வாக்குமூலம் அளித்தார்.

முதலில் இவ்வழக்கை விசாரித்த ஹிமாச்சல் பிரதேச நீதியியல் ஆணையாளர் (Judicial commissioner) இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கிரிமினல் குற்றத்தை கன்வால்ராம் புரிந்துள்ளதாகத் தீர்ப்பு கூறினார். இத்தீர்ப்பை எதிர்த்து கன்வால்ராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில்,

"குற்றஞ்சாட்டப்பட்ட கன்வால்ராம் அவரது இரண்டாம் மனைவி என்று கூறப்படுபவருடன் உடலுறவு கொண்டதாக அளித்துள்ள வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டோ - முதல் திருமணம் ரத்தான பின்தான், கன்வால் ராம் தன்னை மணம் முடித்துக் கொண்டார் என்ற இரண்டாம் மனைவியின் நிரூபிக்கப்படாத வாக்குமூலத்தை வைத்துக்கொண்டோ கன்வால்ராம் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று தீர்ப்பளிக்க முடியாது. இரண்டாம் மனைவி தனக்கும் கன்வால்ராமுக்கும் திருமணம் நடந்ததாகக் கூறும் ஒப்புதல் வாக்குமூலத்தை கன்வால்ராமுக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அதனை அளித்த இரண்டாம் மனைவிக்கு எதிரானதாகவும் கருதமுடியாது" என்று கூறி கன்வால்ராமை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.

இரண்டாம் திருமணம் சட்டத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், பாவ்ராவ் லோகாண்டே வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்தது போல் விவாகஹோமமும், சப்தப்பதியும் நிறைவேற்றப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டாக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியது.

சரி, இரண்டாம் மனைவியின் வாக்குமூலம் ஒருபுறம் இருக்கட்டும். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இந்து ஆடவரே நீதிமன்றத்தில் தாம் இரண்டாவதாக திருமணம் முடித்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்தால் நீதிமன்றம் இந்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குமா?

இக்கேள்விக்கு விடை அளிப்பதுதான் நாம் பார்க்கவிருக்கும் அடுத்த வழக்கு.

(தொடரும்..)

- பேராசிரியர் இ.அருட்செல்வன்

நன்றி: நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்

புத்தொளி வெளியீட்டகம்
முதல் பதிப்பு: ஜுன் 1997

புத்தகம் கிடைக்கும் இடம்:
ஸாஜிதா புக் சென்டர்
204 தம்புச் செட்டித் தெரு, 2-வது மாடி
சென்னை - 600 001

Thursday, December 15, 2005

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-2

2. "விவாக ஹோமமும்" "சப்தபதியும்"

பாவ்ராவ் சங்கர் லோகாண்டே
எதிர்
மராட்டிய அரசு

AIR 1965 SC 1566

பாவ்ராவ் லோகாண்டே தமது முதல் மனைவியுடனான திருமணப் பந்தம் நீடிக்கையிலே இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவரது முதல் மனைவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் லோகாண்டே மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்தப் பெண்மணி அளித்த வாக்குமூலத்தில்,

"என் கணவரது இரண்டாவது திருமணம் எங்கள் பகுதியில் நடைமுறையில் உள்ள கந்தர்வ முறைப்படி நடந்தது. இத்திருமணத்தில் மரத்தினால் செய்யப்பட்ட அமரும் பலகையில் மணமக்கள் அமர்வார்கள். ஒரு செம்பு குவளையில் தாம்பூலமும், தேங்காயும் கொண்டு வரப்படும். வேதங்கள் முழங்க, மணமக்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மாலை சூடிக்கொள்வார்கள். பரஸ்பரம் நெற்றியை முட்டிக் கொள்வார்கள். மணமகளின் தந்தை அல்லது தாய்மாமன் நெற்றிகள் முட்டிக்கொள்ளும் சடங்கிற்கு உதவியாக இருப்பார்கள். இத்துடன் கந்தர்வ திருமணம் நிறைவு பெறும்" என்று கூறினார்.

கந்தர்வ முறைப்படி நடந்த இரண்டு திருமணங்களில் கலந்து கொண்ட ஒருவர் இவ்வழக்கில் சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் சாட்சியம் கூறும்போது: "முன்பெல்லாம் அருகாமையிலுள்ள கஸாரா அல்லது தர்தானா பகுதியிலிருந்து ஒரு பிராமண பூசாரி வந்திருந்து மங்களநாண் வழங்குவார். கந்தர்வ திருமணத்திற்கு ஒரு தாக்கூர், ஒரு பிராமணர் மற்றும் ஒரு நாவிதர் வருவது அவசியம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அருகாமையிலிருந்து ஒரு தாக்கூரையும், ஒரு பிராமணரையும் அழைத்து வருவது என்பது கடினமானதாகவும், அதிகச் செலவு பிடிப்பதாகவும் ஆகிவிட்டது. எனவே நாவிதரின் உதவியுடன் மட்டுமே இப்போது திருமணங்கள் நடக்கின்றன" என்று விளக்கினார்.

கந்தர்வ முறை உட்பட எந்த முறைப்படியும், முதல் மனைவி இருக்கையிலே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தனது கணவர் குற்றவாளிதான். இந்து திருமணத்தின் அனைத்து சடங்குகளும் நிறைவேற்றப்பட்டதாக நிரூபிக்கப்படாவிட்டாலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தன் கணவர் குற்றம் இழைத்தவரே என்று லோகாண்டேயின் முதல் மனைவி வாதிட்டார். இவ்வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த மாஜிஸ்திரேட், லோகாண்டேவுக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து லோகாண்டே செசன்சு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். செசன்சு நீதிமன்றம் மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பை ஆமோதித்தது. பம்பாய் உயர்நீதிமன்றத்தில் லோகாண்டே மேல் முறையீடு செய்தார். அங்கும் அவருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. மனம் தளராத அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 1955-இல் இந்துச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அச்சட்டத்தின் கீழ் பலதாரமணம் எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குவதற்காக முதல் முறையாக இவ்வழக்கின் மூலம் தான் உச்சநீதிமன்றத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே நாட்டு மக்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அறிய ஆவலாக இருந்தனர். மாஜிஸ்திரேட், செசன்சு மற்றும் உயர்நீதிமன்றங்களில் மூக்குடைபட்ட தனது கணவர் உச்சநீதிமன்றத்திலும் தோல்வியுறப்போகிறார் என்று லோகாண்டேயின் முதல் மனைவி ஆவலுடன் காத்திருந்தார்.

இருதரப்பு வழக்கறிஞர்களின் விரிவான வாதத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது. கீழ் நீதிமன்றங்கள் இவ்வழக்கில் வழங்கிய தீர்ப்புகளை தள்ளுபடி செய்து இரண்டாம் திருமணம் என்பது நடக்கவேயில்லை, எனவே லோகாண்டே குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

தந்தர்வ முறைப்படி நடைபெற்ற இரண்டாவது திருமணம் சட்டவிதிகளின் படி நடக்கவில்லை. எனவே அதனைத் திருமணமாக அங்கீகரிக்க முடியாது. எனவே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றத்தை லோகாண்டே இழைக்கவேயில்லை என்று கூறி இந்துச் சட்டத்திற்கு விளக்கமளித்தது உச்சநீதிமன்றம்.

முல்லாவின் இந்துச் சட்டம் (12ஆம் பதிப்பு) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இந்தச் சட்ட நூல் கந்தர்வ திருமணம் குறித்து இப்படிக் கூறுகின்றது.

"கந்தர்வ திருமணம் என்பது ஒரு வாலிபனும் இளம் மங்கையும் தமது காதல் மற்றும் சிற்றின்ப உணர்வுகளின் காரணமாக தாமாகவே முன்வந்து செய்யக்கூடிய ஒன்றாகும். கூடா உறவு என்று தவறுதலாக இத்திருமணம் வர்ணிக்கப்படுகின்றது. ஸ்மிருதிகளின் முக்கிய நூல்களைத் தவறுதலாக விளங்கிக் கொண்டதால் இக்கருத்து நிலவுகின்றது.

(ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது சமுதாயத்தில் திருமணச்சடங்குகளில், மாற்றங்கள் - பழக்க வழக்கங்களின் (CUSTOMS) காரணமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதை நிரூபிக்காத வரையில்) மற்ற எந்தவொரு திருமணத்தின் போதும் நிறைவேற்றப்படும் அத்தியாவசியமான சடங்குகள் கந்தர்வ திருமணத்தின் போது செய்யப்பட்டாக வேண்டும்"

முல்லாவின் நூலை மேற்கோள் காட்டிவிட்டு ஒரு இந்துத் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படுவதற்கு இரண்டு சடங்குகள் இன்றியமையாதவை என்று உச்சநீதிமன்றம் அடையாளம் காட்டியது.

1) விவாகஹோமம் ஓதுவது,
2) சப்தப்பதி. (சப்தப்பதி என்பது மணமகன் முன் செல்ல மணமகள் பின் தொடர நெருப்பைச் சுற்றி ஏழு முறை வலம் வருவது. உணவு, உடல்நலம், செல்வம், நட்பு, பாலுறவு, குழந்தை மற்றும் மகிழ்ச்சி ஆகிய ஏழு நற்பேறுகளுக்காக ஏழு முறை வலம் வருகின்றனர்.)

இதன் பிறகு உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில்-

கந்தர்வ திருமணத்தின் போது பிராமணரின் உதவியுடன் செய்யப்படும் சில சடங்குகளை இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சமூகத்தினர் கைவிட்டு விட்டதாக முதல் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. இதன் காரணமாக ஹோமமும், சப்தப்பதியும் கூட நிறைவேற்றப்பட்டதாகக் கூற முடியாது கணவரும் இரண்டாவது மனைவியும் புரிந்த சடங்குகள் மட்டும் இத்திருமணத்தை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் கருதுவதற்கு போதுமானது அல்ல. ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியாக சமுதாயத்திற்கு முன்னர் காட்சி அளித்தாலும், சமுதாயமும் அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் உண்மையிலேயே கணவன்-மனைவியாக வாழ்க்கை நடத்தினாலும் கூட இந்தக் காரணங்களினால் மட்டும் அவர்கள் சட்டத்தின் முன் கணவன்-மனைவி என்ற தகுதியைப்பெற இயலாது என்று கூறி, லோகாண்டேக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவேயில்லை. எனவே அவர் நிரபராதி என்று அறிவித்தது. இஸ்லாத்தைத் தழுவாமல் இரண்டாம் திருமணம் புரிந்து அதே நேரத்தில் சட்டத்தின் பிடியிலிருந்தும், பல மனைவிகளைப் பராமரிக்கும் பெரும் பொருளாதாரச் சுமையிலிருந்தும் தப்பிக்க எளிய வழியை இந்து ஆடவர்களுக்கு உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பு மூலம் காண்பித்துள்ளது.

இரண்டாம் திருமணத்திற்கு ஊரார் அனைவரையும் அழைக்கலாம், பிரமாண்டமான மண்டபத்தில் திருமணம் நடக்கலாம், அறுசுவை விருந்து உபசாரமும் நடைபெறலாம், ஆனால் ஒன்றே ஒன்றில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். விவாக ஹோமமும் சப்தப்பதியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்தால் இந்து என்று சொல்லிக்கொண்டு எத்தனை திருமணமும் புரியலாம் நாட்டை ஆளும் பொறுப்புக்குக் கூட வரலாம்!

சடங்குகள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு இந்து ஆடவரது முதல் திருமணப்பந்தம் நீடிக்கையில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணே நீதிமன்றத்தில் தனக்கும் இந்த ஆடவருக்கும் திருமணம் நடைபெற்றது என்று வாக்குமூலம் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட சூழலில் இந்துச் சட்டத்தை மீறி இரண்டாம் திருமணம் புரிந்த இந்து ஆடவர் தண்டிக்கப்படுவாரா? உச்சநீதிமன்றம் என்ன சொல்கின்றது?

(தொடரும்..)

- பேராசிரியர் இ.அருட்செல்வன்
நன்றி: நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்

புத்தொளி வெளியீட்டகம்
முதல் பதிப்பு: ஜுன் 1997

புத்தகம் கிடைக்கும் இடம்:
ஸாஜிதா புக் சென்டர்
204 தம்புச் செட்டித் தெரு, 2-வது மாடி
சென்னை - 600 001

Monday, December 12, 2005

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-1

இந்நூல் உருவாகப் பேருதவியாக அமைந்தது எக்னோமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி (டிசம்பர் 16,1995) இதழில் ஃபிளேவியா அக்னஸ் எழுதிய "ஹிந்து மென், மோனோகாமி அண்டு யூனிபார்ம்சிவில் கோட்" என்ற கட்டுரையாகும். - பேராசிரியர் இ.அருட்செல்வன்

1. உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு

சர்லா முத்கல் வழக்கில் உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியதை அனைவரும் அறிவர்.

ஏற்கனவே திருமணம் செய்திருந்த இந்து ஒருவர் இஸ்லாத்தைத் தழுவுகிறார். பிறகு இன்னொரு திருமணம் செய்கிறார்.

இவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இவரது இரண்டாவது திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான குல்தீப் சிங்கும், சஹாயும் தீர்ப்பு வழங்கினார்கள். முதல் மனைவியுடன் திருமணப் பந்தம் இருக்கையிலே இவர் இஸ்லாத்தைத் தழுவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 494-வது பிரிவின் படி குற்றமாகும் என்று இரு நீதிபதிகளும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர். (494வது பிரிவு இக்குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கின்றது).

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாண்புமிகு நீதிபதிகள் அனுமானங்களின் அடிப்படையிலேயே இத்தீர்ப்பை அளித்துள்ளனர்.

அந்த அனுமானங்கள் வருமாறு:

1) இந்துத் திருமணங்கள் இயற்கையாகவே ஒரு தாரத்தை மட்டும் அனுமதிக்கக் கூடியவை.

2) இந்துவாக இருப்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்யக் கூடாது என்ற கோட்பாட்டை நீதிமன்றங்கள் தொடர்ந்து அங்கீகரித்து வந்துள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்த ஆடவர்களைத் தண்டித்தும் வந்துள்ளன.

3) இந்துவாக இருப்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்ய விரும்பினால் அதற்காக ஒரே வழி இஸ்லாத்திற்கு மதம் மாறுவது தான் என்று இஸ்லாம் பகிரங்கமாக இந்துக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

4) இரண்டாம் திருமணம் செய்யும் நோக்கத்தில் முஸ்லிமாக மதம் மாறும் குறுக்கு வழியை அடைக்க பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே இந்துப் பெண்களின் துயரத்தைத் துடைக்கும்.

இந்த அனுமானங்களின் அடிப்படையிலேயே மாண்புமிகு நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த அனுமானங்கள் சரியானவைதாமா? பலதாரமணம் செய்ய விரும்பக்கூடிய இந்துவுக்கு உள்ள ஒரேவழி இஸ்லாம்தானா? பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்த வழி அடைக்கப்பட்டுவிடுமா? - இவற்றை ஆராய்வதே இந்தச் சிறு நூலின் நோக்கமாகும்.

இந்துத் திருமணங்கள் இயற்கையாகவே ஒரு தாரத்தை மட்டுமே அனுமதிக்கக் கூடியவை என்பது நீதிபதிகளின் முதல் வாதம். இந்துக்கள் போற்றும் கிருஷ்ணர், முருகன், தசரதன் போன்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ததாக இந்துமதப் புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தின் எந்த வேதத்திலும், புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் இந்து ஆண்கள் ஒரே ஒரு திருமணத்தைத்தான் செய்யவேண்டும். ஒன்றுக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படவே இல்லை.

இந்து மதம் எப்போது தோன்றியது என்று கூற முடியாத அளவுக்கு புராதனமானது என்று இந்துக்கள் கூறுவர். இந்து மதம் தோன்றியதிலிருந்து கி.பி. 1955-ஆம் ஆண்டு வரை பலதாரமணம் செய்யும் வழக்கம் சர்வசாதாரணமாக இந்துக்களிடம் இருந்து வந்தது. அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்தது.

ஆகவே, இந்துத் திருமணங்கள் இயற்கையாகவே ஒருதாரத்தை மட்டுமே அனுமதிக்கின்றது என்ற நீதிபதிகளின் வாதம் தவறானதாகும். இந்து மதம் 1955-இல் தான் தோன்றியது என்று நீதிபதிகள் கூறினால்தான் அவர்களின் வாதம் சரியானதாக இருக்க முடியும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பலதாரமணத்தைத் தடை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது எனில், இந்துமதம் இயற்கையாகவே ஒருதாரத்தை மட்டுமே அனுமதிக்கின்றது என்ற வாதத்தில் எள்முனையளவு கூட உண்மையில்லை என்பது தெளிவாகின்றது.

1955-இல் நிறைவேற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டம்தான் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்வதைத் தடுத்தது. நியாயமான பொது சிவில் சட்டத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் மாபெரும் முயற்சி என்று இச்சட்டத்தை நீதிபதி குல்தீப் சிங் இத்தீர்ப்பினிடையே வர்ணித்துள்ளார்.

நீதிபதி குல்தீப் சிங் மட்டுமல்லாது இன்னும் பலர் 1955-இல் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தை நாகரீகமானது. முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது. பெண்களுக்கு ஆதரவானது என்றெல்லாம் போற்றுகின்றனர்.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

சமத்துவத்தை நோக்கி (TOWARDS EQUALITY) என்று தலைப்பிட்டு 1974-இல் வெளியான ஒரு புள்ளிவிபர அறிக்கை இந்த வினாவுக்கு விடையளிக்கின்றது. பெண்களின் நிலையை ஆய்வு செய்த குழு ஒன்று அந்த அறிக்கையை வெளியிட்டது. 1951 முதல் 1960 வரை இந்து-முஸ்லிம் மற்றும் பழங்குடி மக்களிடையே பலதார மணம் புரிந்தோர்கள் பற்றிய விபரங்கள் அந்த அறிக்கையில் தரப்பட்டிருந்தன. அந்தப் புள்ளிவிபரம் இதுதான்.

இந்து 5.06
முஸ்லிம் 4.31
பழங்குடியினர் 17.98

பலதாரத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் இந்துக்களிடையே இந்த வழக்கம் குறையவில்லை என்பதை இந்தப் புள்ளிவிபரம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பழங்குடியினரும் இந்துக்கள்தாம். அவர்கள் தனி மதத்தவர்களல்லர் என்பதைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் முஸ்லிம்களை விட இந்துக்கள் தாம் அதிக அளவில் பலதாரமணம் செய்யதுள்ளனர் என்பது தெரியவரும். பலதாரமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்களைவிட அதற்குத் தடைவிதிக்கப்பட்ட இந்துக்கள் அதிக அளவில் பலதாரமணம் செய்து கொண்டனர் என்பதால், இந்தச் சட்டத்தினால் எந்தப் பயனும் விளையவில்லை என்பது தெளிவு.

பழங்கால இந்துச் சட்டமும், வழக்கங்களும் பலதாரமணத்தை அங்கீகரித்தன இரண்டாம் மனைவியர் பராமரிப்புச் செலவையும், இருப்பிடத்தையும் பெற உரிமை பெற்றிருந்தார்கள். ஆனால், 1955-இல் இயற்றப்பட்ட இந்துத் திருமணச்சட்டம், இந்துக்களால் இரண்டாவதாக மணக்கப்பட்ட பெண்களின் நிலையை மோசமாக்கிவிட்டது. அவர்கள் பராமரிப்புச் செலவு பெறமுடியாது. சட்டபூர்வமான மனைவி என்ற அந்தஸ்தும் பெற முடியாது.

இதுமட்டுமின்றி தெளிவற்ற இந்துத் திருமணச் சட்டத்தினால் பலதாரமணம் செய்து கொண்ட பலர் தண்டனை அனுபவிப்பதிலிருந்து விதிவிலக்குப் பெற்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்தும் அவர்கள் விலக்குப் பெற்றனர்.

நீதிமன்றத் தீர்ப்புகள் பல, பலதாரமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு ஆதரவாகவும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் பெண்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளன. இந்துவாக இருப்பவர் இரண்டாவது திருமணம் புரிவதை தடுத்ததோடு மட்டுமின்றி அத்தகையோரை நீதிமன்றங்கள் தண்டித்திருக்கின்றன என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இரண்டாவது அனுமானம் தவறானது என்பதைச் சந்தேகமின்றி அந்தத் தீர்ப்புகள் நிரூபிக்கின்றன.
இது பற்றி அடுத்து ஆராய்வோம்.

(தொடரும்..)

- பேராசிரியர் இ.அருட்செல்வன்
நன்றி: நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்

_______________________

புத்தொளி வெளியீட்டகம்
முதல் பதிப்பு: ஜுன் 1997

புத்தகம் கிடைக்கும் இடம்:
ஸாஜிதா புக் சென்டர்
204 தம்புச் செட்டித் தெரு, 2-வது மாடி
சென்னை - 600 001

Thursday, December 08, 2005

லிங்கமும் கருப்புக்கல்லும்

மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள "ஹஜருல் அஸ்வத்" என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.

இது தான் முக்கியமான வித்தியாசம்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். "ஹஜ்ருல் அஸ்வத்" பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி "நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்"என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகளை உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

"ஆம்ஸ்ட்ராங்" தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

Source

ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்

- கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்!!
நன்றி: தலித் முரசு (அக். - நவம்பர் 2005)...!

? கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வாக மாறினீர்கள்?

! 1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8,9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். "உயர்சாதி" என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை யாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்ற கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 1954ஆம் ஆண்டு கலந்து கொண்டு, சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிகமுக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக்கூடிய நிலை வரும்போது எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது. எந்தச் சமுதாயம் எங்களை அவமானப் படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.

அடிமை இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். கலைஞர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது, சட்ட மன்றத்தில் ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது ஒரு செய்தியைச் சொல்கிறார்: "எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றைவாடை தியேட்டரில் "ஆரியமாலா" என்ற நாடகம் நடத்த இருப்பதாகவும், அதுகுறித்த செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு - அடிக்குறிப்பொன்று அதில் சொல்லப் பட்டிருந்தது. தொழு நோயாளிகள் மற்றும் பஞ்சமர்களுக்கு எக்காரணம் கொண்டும் நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது."

ஒரு சமுதாயம் எவ்வாறு இழிவுபடுத்தப் பட்டிருந்தது என்பதைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. இது, அடிமை இந்தியாவில் நடந்த விஷயம்.

இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெகஜீவன்ராம் அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும், துணைப் பிரதமராகவும் இருந்து, அவர் ராணுவ அமைச்சராக இருக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது. காசியிலே சம்பூராணந் சிலையை அவர் திறந்து வைத்துவிட்டு வந்த பிறகு, அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் அங்கு இருக்கிற சனாதனவாதிகள் எல்லாம் கங்கைக்குப் போய் - தண்ணீர் கொண்டு வந்து சிலையை சுத்தம் செய்து கழுவி, தங்களது சாதி வெறியை உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்தார்கள். இதை உலகமே பார்த்தது.

எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்தால், இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கக்கூடிய காலத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர், முப்படைக்கும் தளபதியாக இருந்த காலத்திலேயே இது நடந்தது.

? நீங்கள் மதம் மாறுவதற்கான சமூகக் காரணங்களைச் சொல்கிறீர்கள். சமூகக் காரணங்களால் நீங்கள் மதம் மாறினீர்களா? அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட அனுபவங்களால் மதம் மாறினீர்களா?

! சமூகத்தில் நானும் ஒரு அங்கம் தானே! சமூகம் பாதிக்கப்படும் போது அதில் நானும் ஒரு ஆள்தானே! அதை நான் பிரித்துப் பார்க்கவில்லை. பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ஒரு ஆளை சந்திக்கும்போது, ஒரு வீட்டிற்குப் போகும்போது, என்னை நடத்திய நடைமுறைகள், எனக்கு ஒரு காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காயம் நிரந்தரமாகவே உள்ள காயம். சமூகக் காரணங்களால்தான் நான் மதம் மாறினேன். நான் "கன்வின்ஸ்" ஆனதால் மதம் மாறினேன். என்னுடைய மனைவி கிறித்துவப் பெண். கம்யூனிஸ்ட் இயக்கத்திலேயே அந்தக் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்ததனாலே, என்னுடைய மனைவி நாத்திகவாதி. அவர் சர்ச்சுக்கு போவது கிடையாது; சடங்கு சம்பிர தாயங்களில் பங்கெடுத்தது கிடையாது. அப்போது நான் இப்படி ஒரு முடிவு எடுத்த பிறகு, அதை என் மனைவியிடம் சொல்லும்போது, என்னைத் திட்டினாங்க. இருந்திருந்து ஒரு மதவாதியாக மாறிட்டீங்களே! பகுத்தறிவு ஊட்டினவங்க காலம் முழுவதும் அதற்காகவே பாடுபட்டவங்க, சமூகத்தில் என்னென்னவோ செய்தீங்க. இருந்திருந்து மதவாதியாக மாறிட்டீங்களே என்று வருத்தப்பட்டார்.

? அதற்கு உங்களுடைய பதில் என்ன?

! அதற்குப் பிறகுதான் அவருக்கு சில நூல்களை எல்லாம் கொடுத்தேன். நான் என் மனைவியிடம் சொன்னேன்: நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்றால், அந்த இயக்கம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையில்தான் நீயும் நானும் இரவு பகலாகப் பாடுபட்டோம், உழைத்தோம், கஷ்டப்பட்டோம். பலநாள் ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் நடந்தது. இதில் ஏதாவது ஒரு மாற்றம் உனக்கு வந்திருப் பதாகத் தெரிகிறதான்னு கேட்டேன். யோசித்த பிறகு, ஆமாம் நம்முடைய தோழர்கள் எல்லாம் தோழமையோடுதான் இருக்காங்க. ஆனால், அவங்க வீட்டில் அப்படியில்லை. நம்ம வீட்டுக்கு வருகிற கட்சித் தோழர்கள் அக்கா-தங்கச்சி என்கிற உறவோடு, அந்த பந்தத்தோடு நம்மிடம் அன்பு செலுத்தறாங்க. அதெல்லாம் சரிதான். ஆனால் அவங்க அப்பாவோ, அம்மாவோ, தம்பியோ, தங்கச்சியோ நம்மள அப்படிப் பார்த்ததில்லையே! இதில் ஒரு உண்மை என்னவென்றால், இதை மாத்தணுங்கிறது தானே எனக்கும் உனக்கும் நோக்கம். ஆமாம். அதற்கு ஒரே வழி என்னன்னு சொன்னா - மதமாற்றம்தான்.

நம்முடைய எல்லாவிதமான முன்னேற்றத்திற்கும் இங்கு தடையாக இருப்பது ஜாதிதான். இந்த ஜாதியை ஒழிக்கணும், இந்த ஜாதி மாறணும். இது எங்கு போனாலும் இருந்திட்டு இருக்கில்ல. இது மாறுவதற்கு ஏதாவது வழி உண்டா? அது கம்யூனிஸ்ட் மூலம் முடியும் என்று நம்பினோம். நம்பிக் கொண்டிருந்தோம். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். உனக்கு நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டேன். ஜாதி ஒழியாது. ஜாதி ஒழியவில்லை என்று சொன்னால், மக்களுக்கு அந்தஸ்து எப்படி கிடைக்கும்? அப்ப கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லையே. அது நம்ப இஸ்லாத்து மூலமாக கிடைக்குமா என்று ஒரு கேள்வியை என் மனைவி கேட்டார். அது கிடைக்கும். எப்படி கிடைக்கும் என்று சொன்னால், கம்யூனிசத்தின் மூலமாக இந்தியாவைப் பொறுத்தவரை சாதி ஒழியும் என்பது சாத்தியமில்லை. அந்தத் தத்துவம் சரியா, தப்பான்னு நான் அங்கு போகவில்லை. இந்தியச் சூழ்நிலையில் எல்லா விதமான மாற்றத்திற்கும் தடையாக இருப்பது ஜாதி அமைப்பு முறை. இந்த ஜாதிகள் ஒழியாமல், இங்கு வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியிருக்கும்போது, நம் எண்ணங்கள் நிறைவேறாத ஒரு இயக்கத்திலே, ஒரு கொள்கையிலே ஏன் விடாப்பிடியாக நாம் இருக்கணும்? இதுதான் நான் அவருக்குச் சொன்ன பதில்.

? நீங்கள் சொல்கிற இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உண்டா?

! கம்யூனிச இயக்கங்களின் செயல்பாட்டு முறை, சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போதுமானதாக இல்லை. அதற்குக் காரணம் ஜாதி அமைப்பு முறை. பொதுவாக ஒரு பிரச்சினை என்று வரும்போது, கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய, மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் தலைமை ஏற்க வருகிறார்கள். அவர்கள் ஒரு பொறுப்புக்கு வரும்போது, ஒரு சில தீர்மானகரமான தெளிவான முடிவு எடுக்காமல், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தயக்கம் காட்டுகிறார்கள். அதுகுறித்து சொன்னாலும் கூட, அது எடுபடக்கூடிய நிலையில் இல்லை.

? நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தும், அம்பேத்கர் தழுவிய பவுத்த மார்க்கத்தைத் தேர்வு செய்யாமல் இஸ்லாத்திற்குச் சென்றது ஏன்?

! "நான் இந்துவாக சாகமாட்டேன்" என்று அம்பேத்கர் ஏற்ற உறுதிமொழி யின் அடிப்படையில் அவர் பவுத்தராக மாறினார். பவுத்தம் சரியா, தவறா என்ற கருத்துக்குள் நான் செல்லவில்லை. ஆனால், நடைமுறையில் பவுத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தானே கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பெரியவர் சக்திதாசன், டாக்டர் சேப்பன் இவர்கள் எல்லாம் இந்து மதம் வேண்டாமென்று பவுத்தத்திற்குப் போனார்கள். ஆனால், பழையபடி மீண்டும் எங்களுக்கு சாதி ஒழிய வேண்டும்; சாதிச் சலுகைகள் எங்களுக்கு வேண்டும் என்று போராடுகிறார்களே! கிறித்துவமும் பல நல்ல செய்திகளைச் சொன்னாலும், நடைமுறையில் சாதியத்தை வேரறுக்க முடியவில்லையே. பவுத்தத்தை ஏற்றால் சாதி ஒழியும் என்று சொன்னார்கள். ஆனால், ஒழிய வில்லையே! இதற்கு யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

அந்தக் காலத்தில், அஜிதா என்ற நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு போராளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் அவரைப் பற்றிய செய்தி வராத நாட்களே இருக்காது. அவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டவர். நீங்கள் பல்வேறு சிரமத்துக்கிடையில் பல தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள்; நானும் என்னுடைய சக்திக்கேற்றவாறு பல தியாகங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், நாம் விரும்பிய அந்த இலக்கை அடைவதற்கு - சாதி அமைப்பு முறை தடையாக இருக்கிறதே. அதை ஒழிக்காமல் நாம் எப்படி வெற்றிபெற முடியும் என்று நான் கேட்டேன். அதற்கு அந்தம்மா சொன்னார்கள்: "இங்கு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை". இங்கு ஏற்றத் தாழ்வு எல்லாம் சாதி அடிப்படையில் இல்லை என்று சொன்னார்கள். "இதை நான் நம்ப முடியாது" என்றேன். நம்பூதிரியும், நாயரும் கேரளத்திலே உண்டா என்றேன். "ஆம்" என்றார்கள். "தோட்டி" வேலை செய்கிறவர்கள். அங்கு உண்டா என்றேன். "ஆம்" என்றார்கள். இந்த வேலையை நாயரும் நம்பூதிரியும் செய்வார்களா என்றேன். "இது அவர்களுடைய வேலை அல்லவே" என்றார்கள். அப்ப நான் சொன்னேன் - ஜாதி நம்மிடையே பல வடிவங்களில் இருக்கிறது. ஆனால், நாம் ஏதோ ஒருவகையில் இதை எல்லாம் மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்றேன். ஆனால், இதை எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்டார். நான் சொன்னேன், ஒரே நொடியில் சாதியை ஒழிக்க முடியும். "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்று சொல்லிவிட்டால், ஒரே நொடியில் சாதி ஒழிந்துவிடும். நான் அப்படி ஒரே நொடியில் சாதியை ஒழித்து முஸ்லிம் ஆனேன்.

? இருப்பினும், நடைமுறையில் மதம் மாறியவர்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

! நானும் "முரசொலி" அடியாரும் சென்னையில் இருந்து வேலூர் செல்கிறோம். அங்குள்ள இஸ்லாமிய மையத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அவர் இன்னும் இஸ்லாத்திற்கு வரவில்லை. ஆனால், தொப்பி அணிந்திருந்தார். பார்க்க முஸ்லிம் போலவே இருப்பார். நான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அவருடைய தொப்பியை அணிய வேண்டும் என்ற ஆசையில், உங்களுக்கு தாடி இருக்கிறது, எனவே அந்தத் தொப்பியை எனக்குக் கொடுங்களேன் என்றேன். அதற்கு அவர், இன்னொரு நூல் தொப்பி இருக்கிறது; அதை நீ வைத்துக் கொள் என்று அதைக் கொடுத்தார். நான் பயணத்தின்போது, அதைக் கழற்றுவதும் போடுவதுமாக இருந்தேன். பிறகு, தொப்பியைக் கழற்றுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். ஊர் வந்ததும் அவருக்குப் பின்னால் நான் பேருந்திலிருந்து கீழே இறங்குகிறேன். நான் பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் அங்கிருந்த ரிக்ஷாக்காரர் முதல்முதலில் என்னைப் பார்த்து, "பாய் உங்களுக்கு எங்க போகணும்?" என்றார். நான் "கலிமா" சொல்லவில்லை; முஸ்லிமாக மாறவில்லை; பெயர் மாற்றவில்லை; ஆனால், இந்தத் தொப்பி கொடுத்த அங்கீகாரத்தை வைத்து அந்த ரிக்ஷாக்காரர் "பாய்" என்று என்னை அழைக்கிறார்.

பிறகு அந்த இஸ்லாமிய நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கு தென்மாவட்டங்களில் இருந்து முஸ்லிமாக மாறிய பலபேர் இருக்கிறார்கள். 5-லிருந்து 80 வயது பெரியவர்கள் வரை இருக்கிறார்கள். இந்தத் தொப்பியை அதற்குப் பிறகு தூக்கத்திலும் நான் எடுக்கவில்லை. எனக்குள் ஒரே பூரிப்பு. அடுத்த நாள் காலை வெளியே கிளம்பி, அங்குள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அங்குள்ள டீக்கடைக்குச் சென்றேன். அந்தக் கடையில் நிறைய இந்து சாமிப் படங்களை கடைக்காரர் வைத்திருந்தார். அங்கு போனதும், "கல்லா"வில் இருந்தவர் "வாங்க பாய் உட்காருங்க! "டேய், பாய்க்கு ஒரு டீ போடு" என்றார். இதைத்தான் மிகப்பெரிய சமூக அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். இவை எல்லாம்தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக பலப்படுத்தியது.

நான் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, எனக்கு சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. எங்கள் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கல்லூரி, 46 ஜமாஅத்துகளுக்குத் தொடர்புடைய ஒரு கல்லூரி. அது 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய புகழ்பெற்ற கல்லூரி. அந்தக் கல்லூரியில் ஆட்சிமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது நண்பர்கள், நீங்களும் ஆட்சிமன்றக் குழுவுக்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னார்கள். நீங்களும் போட்டிப் போடுங்கள் என்று வலியுறுத்தினார்கள். நான் தயங்கினேன். இருப்பினும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். நான் இன்றளவும் அந்த ஆட்சிமன்றக் குழுவில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் மிகமுக்கியமாக அறியப்படக்கூடிய தலைவர்கள், இஸ்லாம் பற்றியும் அதன் தத்துவம் பற்றியும் அறைக்குள்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய சமூக, மதம், பொருளாதாரம் எல்லாம் அந்தப் பள்ளிவாசலுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. மற்ற சமூகம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யாருக்கும் விளங்காமல் இருந்தது. அவர்கள் எல்லாம் நான் முன்வைக்கக் கூடிய சமூக சீர்திருத்தத்திற்கான செயல்திட்டங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

? இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான சமூகக் காரணங்களைக் கூறுங்கள்...

! ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு மதியம் இரண்டு மணி இருக்கும். அந்த வழியா "ஜனாஸா" ஒன்று கொண்டு வருகிறார்கள். "ஜனாஸா" என்றால் சாவு. அந்த வழியே கொண்டு வருகிறார்கள். அதை அடக்கம் செய்யக் கூடிய நேரம் வந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அந்த அடக்கத்தில் நாங்கள் எல்லோரும் கலந்து கொள்கிறோம். அந்த நேரத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டது. இறந்துவிட்ட அந்தப் பெரியவர் பேர் தெரியாது. எந்த ஊர் என்றும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளு அங்க ஒரு அனாதையா இறந்து கிடந்தார்.

அதுமாதிரி இறந்து கிடப்பவர் முஸ்லிம் என்று தெரிந்தால், உள்ளூர் போலீஸோ, அல்லது மருத்துவமனையோ - அங்கிருக்கும் ஜமாஅத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பார்கள். உடனே ஜமாஅத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்றால் (இன்றும் எல்லா ஜமாஅத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்). ஒரு மனிதனுக்கு அடக்கத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்து - அதற்கு மரியாதை செலுத்துவார்கள். அதே மாதிரி, அன்றைக்கு முழு மரியாதை அந்த இறந்துபோன பெரியவருக்குச் செய்யப்பட்டது.

ஆனால், அதேநேரத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெரியவர் இறந்து போய்விட்டார். அந்தப் பெரியவரை அடக்கம் செய்வதற்கு எல்லோரும் போகிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று ஒன்று இல்லை. ஆளுநர் ஆட்சி நடக்கிறது. அப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் திரு. பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் திரு. ராமு, அம்மாவட்ட எஸ்.பி.யும் ஒரு தலித்துதான். இந்த மூன்று பேருக்கும் மாநில அளவில் முழு அதிகாரம் இருக்கிறது. அதிலும் தலைமைச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.

அப்படிப்பட்ட நேரத்தில், அந்தப் பெரியவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு போகிறார்கள். அங்கிருந்த சாதி இந்துக்கள் சாலையை இடைமறிக்கிறார்கள். பெரும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கில் கூடி விட்டார்கள். கலவரம் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுகிறது. இரண்டு நாளாகப் பிணம் கிடக்கிறது. புதைக்க ஆளில்லை. சாதி இந்துக்கள் புதைக்கவே அனுமதிக்கவில்லை. தோழர்களே! என்ன நடந்தது தெரியுமா? எஸ்.பி.யும், கலெக்டரும் தலித் தலைவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, "எங்களுக்காக, எங்களுடைய வேலையைக் காப்பாற்றுவதற்காக, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள்; நாங்கள் ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கிறோம். ஆட்சியுமில்லை; எனவே, நாங்கள்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் பிரச்சினை செய்யாதீர்கள்" என்று கெஞ்சுகிறார்கள்.

தெருவில் இருந்த பிணத்தை அவருடைய வீட்டு முற்றத்திலேயே அடக்கம் செய்தார்கள் என்பதுதான் கொடுமையான வரலாறு. இந்தப் பிரச்சினை இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. யாராவது மறுக்க முடியுமா?

ஆனால், ஒருவர் முஸ்லிமாகி விட்டால், அவருக்கு அந்தச் சமூகத்தில் அங்கீகாரம் இருக்கிறது. அவருக்கு முழு மரியாதை கிடைக்கிறது. அவன் ஒருபோதும் அனாதையாக சாக அந்த சமூகம் அனுமதிக்காது. ஆற்றங்கரையிலோ, குளத்து ஓரத்திலோ, ரோட்டு ஓரத்திலோ அல்ல; அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் அவனை அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் மிகமுக்கியமான சமூகக் காரணம்.

? இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான வேறு சமூக நிகழ்வுகள் உண்டா?

இன்னொரு செய்தியையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய ஜாதிக் கலவரம் நடந்தது. இதில் தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அங்குள்ள துரைராஜபுரம் என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். "எங்க ஊர்ல ஒட்டுமொத்தமாக நாங்க எல்லோரும் முஸ்லிமாக மாறப்போறோம்" என்று அதில் பிரகடனப்படுத்தி இருந்தார்கள். இந்தச் செய்தி, தமிழ்நாட்டின் பிரபலப் பத்திரிகைகளில் வெளிவந்தது. அப்போது நாங்கள் அம்மக்களுடன் இணைந்து களப்பணிகளைச் செய்து வந்தோம். இந்தச் செய்தி வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம். அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் மதமாற்றம் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு வயசான அம்மா பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்: "அய்யா எங்க காலத்தில நாங்க இந்த அழுக்குத்துணியை கட்டிக்கிட்டு எப்படியோ காலத்தைக் கழிச்சிட்டோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் காலேஜிக்குப் போகுதுங்க. பள்ளிக்கூடத்திற்குப் போகுதுங்க. அதுக எல்லாம் வெள்ள துணி கட்டணும், பேண்ட் போடணும், செருப்புப் போடணும்னு நினைக்கிறாங்க. ஆனால், இந்த ஊர்ல அதப்போடக்கூடாதுண்ணு சொல்றாங்க. இந்தத் துணிமணிகள் நாங்க யாருக்கிட்டயும் போய் கேக்கல; வாங்கல. நாங்க உழைக்கிறோம்; உடுத்தணும்னு ஆசைப்படறோம். குழந்தைங்க நல்ல துணி உடுத்தணும்னு ஆசைப்படறாங்க. ஆனால், குழந்தைங்க இப்படி நல்ல துணி போடக்கூடாதுன்னு சொல்றாங்கய்யா!"

"சரி, இதெல்லாம் நீங்கள் முஸ்லிமாக மாறினால் கிடைச்சிருமா?"ன்னு பத்திரிகைகாரங்க அந்த அம்மாவ கேட்கிறாங்க. அப்போ அந்தம்மா சொன்னாங்க, "எங்க சொந்த பந்தங்கள்" இதுக்கு முன்னால சில ஆண்டுகளுக்கு முன்னால முஸ்லிமுக்குப் போயிருக்காங்க" என்று தேனீ மாவட்டத்தில் சில ஊர்களைக் குறிப்பிட்டு, அந்தம்மா பதில் சொன்னாங்க. "அப்படி மாறினவங்க எல்லாம், முட்டிக்குக் கீழே வேட்டி கட்டுறது, செருப்புப் போடுறது என்றெல்லாம் மாறியிருந்தாங்க" என்று சொன்னாங்க. நாங்க எதெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் அங்கு கிடைக்கிறது என்று சொல்லிவிட்டு, ஒரு சுவையான செய்தியை அந்தம்மா சொன்னாங்க. "எங்க ஊர்ல ஒரு பெண்ணை கற்பழிச்சுக் கொன்ற பிறகுதான் அதையொட்டி கலவரம் நடந்திச்சு. முஸ்லிமா மாறினா இதெல்லாம் நடக்காதான்னு நீங்க கேட்கிறீங்க. நீங்க இந்த ஊருக்கு வந்து மொதல்ல என்ன செஞ்சீங்க? நாங்க எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தோம். முதல்ல எங்க போனீங்க?" "நாங்க அந்த டீக்கடையில் டீ குடிக்கப் போனோம்" என்றார்கள் நிருபர்கள். "அந்த டீக்கடை யார் டீக்கடை தெரியுமா?" "அது ஒரு முஸ்லிம் கடை" என்று சொன்னார்கள். "அவரு பேரு உங்களுக்குத் தெரியுமா?" "தெரியலையே" என்றார்கள் நிருபர்கள். அந்த டீக்கடை பாய்க்குப் பேரு அல்லா பிச்சை, அவர் மூன்று வருஷத்திற்கு முன்னால, எங்க சமூகத்தில, எங்க பக்கத்து வீட்ல இருந்த ஆளு. அவரும் அவருடைய குடும்பமும் இப்ப முஸ்லிமா மாறிட்டாங்க. அவரு கடையில் எல்லாரும் டீ குடிப்பாங்க. அவருடைய கூட பிறந்த தம்பிதான் இன்னொரு கடை வச்சிருக்காரு - அவர் பேரு துரைப் பாண்டி. அவர் கடையில் நாங்களும் எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களும் டீ குடிக்கலாம். ஆனால், வேற யாரும் டீ குடிக்க மாட்டாக. ஒரே தாய் தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள் தான். ஆனால், எவ்வளவு பெரிய வேறுபாடு பார்த்தீங்களா... இத நீங்க பார்த்து, கேட்டு, தெரிஞ்சி உண்மைன்னு உங்களுக்குப் பட்டா நீங்க உங்க பேப்பர்ல எழுதலாம். எழுதுவீர்களா?" என்று அந்த அம்மா ரொம்பவும் இயல்பாகக் கேட்டார்கள்.

? இஸ்லாத்திற்குச் சென்றவர்களுக்கு சம அங்கீகாரம், சம உரிமை கிடைக்கிறதா?

இரண்டு செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மதம் மாறிட்டார் என்றால், அவர் முஸ்லிம் குடும்பத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். மற்ற மதத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு இஸ்லாத்திற்குள் எந்த பாகுபாடும் இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். கருத்த ராவுத்தர் என்பவர் மதம் மாறியவர்தான். உத்தமபாளையத்தில் இருக்கிறார். தலித்தாக இருந்தவர் தான். அவர் இன்றைக்கு அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கிறார். இவையெல்லாம் இந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் நடந்த சம்பவங்கள்தான்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் - ஒரு 63 ஆண்டுகளுக்கு முன்னால - சீலயம்பட்டி கிராமம்தான். இந்தக் கிராமத்திற்கு அய்யா பெரியார் போகிறார். மதமாற்றம் நடந்தது பற்றி கேள்விப்பட்டு, அந்த மக்களை எல்லாம் கட்டிவைத்துப் பெரியார் பேசுகிறார். ரொம்ப உணர்வுப்பூர்வமாக பெரியார் பேசுகிறார்: "நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்ததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கி விட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் இதுவரை எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டுத்தான் பேசுவதற்குப் போவேன். ஆனால், இப்போது என்னுடைய சொந்தச் செலவில் நான் உங்களை வந்து பார்த்துப் பாராட்டிவிட்டுப் போக இங்கு வந்திருக்கிறேன்" என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். பெரியார், மனந்திறந்து பேசக்கூடிய மிகச் சிறந்த மனிதாபிமானி அல்லவா! சமூக விடுதலை பெற்ற அந்த மக்களைப் பார்ப்பதற்காகத் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரு மாமனிதன் - தன்னுடைய சொந்த செலவிலேயே அந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்றால், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், மனிதப் பண்புக்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரைத் தான் சொல்ல முடியும்.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் என்று சொந்தமாக நிலபுலன் இல்லை. ஆனால், ஒரு கோடீஸ்வரன் எப்படி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ, அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வந்த இடத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் நமக்கு மதிப்பும் மரியாதையும். இரண்டாவது, மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அப்படி எதிர்பார்த்தாலோ நமது லட்சியம் தோற்றுப் போய்விட்டது என்று அர்த்தம். நானாக உருவாக்க வேண்டும். நானாக உழைக்க வேண்டும். நானாக முன்வந்து எல்லா காரியத்தையும் செய்ய வேண்டும். அதுக்குள்ள "லைசென்ச" மதமாற்றம் வழங்கியது. ஒரு தலித் டீ கடை போட வேண்டும் என்றால், பலமுறை யோசிப்பார். ஏனெனில், அவருக்குப் பழக்கமும் பயிற்சியும் இல்லை. ஆனால் இஸ்லாம் சுய முயற்சிக்கான தன்னம்பிக்கையை, அந்த தைரியத்தைக் கொடுக்கிறது. இடஒதுக்கீட்டை வைத்துதான் இந்த தலித் சமூகம் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தது. இப்பொழுது, அதுவும் இல்லை என்று ஆன பிறகு, அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நிலமும் நம்ம கையைவிட்டுப் போயிடுச்சி. அப்ப நிலமும் இல்லாமல் நீங்கள் எப்படி வாழ முடியும்?

ஆனால், முஸ்லிம் சமூகத்தைப் பார்த்தீர்கள் என்றால், நடைபாதையில் கடை வைத்திருப்பார்கள். சோப்பு, சீப்பு, கண்ணாடி, பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு ஒரு கடை வைத்திருப்பார். அதற்குப் பெரிய மூலதனம் வேண்டிய தில்லை. ஒரு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும். பெரிய நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் இந்த வியாபாரத்திற்குத் தேவையில்லை. ஆனால், துணிச்சலாக ஒரு கடையை பிளாட்பாரத்தில் போட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்திவிட்டுப் போகிறான். இதில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது இஸ்லாம் அந்தத் தன்னம்பிக்கையை அவனுக்கு அளிக்கிறது. அது ரொம்பவும் முக்கியமானது என்று சொல்ல வருகிறேன். நாடார் சமூகம் கூட இதைவிட மோசமான ஒரு நிலையில் இருந்த ஒரு சமூகம்தான். ஆனால், இன்றைக்குப் பொருளாதாரத்தில், அந்தஸ்தில், அரசியலில் அந்தச் சமூகம் முன்னேறி இருக்கிறது. திட்டமிட்ட ஒரு சமுதாய முன்னேற்றம்தான் அது.

? நாடார் சமூகம் மதம் மாறாமலேயே இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறதே?

அதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது ஒரு அடிமைச் சமுதாயம் அல்ல. பல "மேல் ஜாதி" ஆதிக்கத்தினால் அவர்கள் பல கொடுமைக்கு ஆளானார்கள். ஆனால், நிலம் அவர்களிடம் இருந்தது. பல அரசுகள் குறிப்பாக காமராசர் ஆட்சி அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் பல திட்டங்களை அந்தச் சமூகம் உள்வாங்கி, முன்னேறி இருக்கிறது. ஆனால் தலித் சமூகம் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து தலித்துகள் விடுபட வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இன்னும் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை நான் சொல்வேன். எந்த ஒரு அரசியல் கட்சியும் வளர்வதற்கு கொடி தூக்குவதும், அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யும் போக்கும் இன்னும் தலித்துகளிடம் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகப் புரட்சியை உண்டு பண்ணுவதற்கு - நீங்கள் எழுதணும், பேசணும், சிந்திக்கணும், சேரியில் போய் வேலை செய்யணும். இப்படியெல்லாம் செய்வதற்கு ஒரு பெரிய திட்டத்தைச் செய்வதற்கு - ஒருத்தர் இருவராவது துணிவுடன் முன்வந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். அரசாங்கம் இந்த மக்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் ஒருபோதும் நம்பாதீர்கள். இந்த மக்கள் இப்படியே காலங்காலமாக இருக்க வேண்டும்; நம்மிடம் கையேந்த வேண்டும் என்று நினைக்கிறவர்கள்தான் ஆட்சியிலே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று நம்புவது எப்படிச் சரியாகும்?

Saturday, December 03, 2005

சன் TV - நேருக்கு நேர் விவாதம்

450 வருட பழைமையான "பாபர் மஸ்ஜித்" சமூக விரோதிகளால் டிசம்பர் 6, 1992 -ல் இடிக்கப்பட்டு 13 வருடங்கள் நிறைவடைகின்றன. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில், கடந்த பாரதீய ஜனதா (காவி) ஆட்சியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக அப்பொழுது சன் தொலைகாட்சியில் நடந்த "நேருக்கு நேர்" நிகழ்ச்சி, தமிழ்மணம் வாசகர்களின் பார்வைக்காக Micromedia Flash-ல்.

Clip நிறைவடைந்ததும் அதன் கீழே தென்படும் Next பட்டனைத் தட்டி அடுத்த Clip-க்குச் செல்லலாம்.

அதிவேக இணைய இணைப்பு உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்யவும்.

பாபரி மஸ்ஜித்: TMMK vs RSS (நேருக்கு நேர் விவாதம்)

Clip 1
Clip 2
Clip 3
Clip 4
Clip 5

Sunday, November 27, 2005

இந்தியாவில் இஸ்லாம்-8

தொடர்-8: தோப்பில் முஹம்மது மீரான்

இந்தியாவில் அரேபியர்களின் காலனி

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அரபு நாட்டில் இஸ்லாத்தின் ஏக இறைக் கொள்கையை போதிக்க துவக்கிய நேரம் இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் வியாபாரத் தொடர்புடைய அரேபியர்களில் பலர் புது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள (அந்த நாட்டு) தங்கள் மனைவி மக்களிடம் புது மார்க்கத்தை எடுத்துக் கூறினர். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இஸ்லாம் பரவிய அதே காலத்திலேயே மாலத்தீவு, இலங்கை, சீனா, மலேசியா போன்ற இடங்களிலும் இஸ்லாம் இதுபோன்று பரவிவிட்டது.

"Before the end of the Seventh century, a colony of Mualim Merchants had established themselves in Ceylone" (History of South India - Dr. V. Krishnamurthi P-19)

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்ப்பட்டினம், விழிஞ்ஞம் அல்லது பூவார், கொல்லம் முதலிய துறைமுகப்பகுதிகளில் அரேபியர்கள் காலனி அமைத்து விட்டனர். இப்பகுதிகளில் வியாபார நிமித்தம் தங்கி வந்த அரேபியர்களுடைய வித்தியாசமான வணக்க முறையும், நேர்மையும், ஒழுக்கமும், அன்பும், பணிவான செயல்களும் அங்குள்ள மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தன. இஸ்லாம் இங்கு பரப்பப்படவில்லை. அன்றைய முஸ்லிம்களின் செய்கைகளால் இஸ்லாம் இயல்பாக பரவியது.

"Arab settlements after the introduction of Mohammedanism were made inseveral places on the coast (west coast) whose principal objects was mainly trade for which the Hindu state of the interion apparently gave all facilities" (South India under the Mohammadan Invades-S.Krishnaswamy Iyengar p-69)

இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய பின் இங்கு வந்த அரேபியர்கள் வர்த்தக கண்ணோட்டத்தோடு அல்லாமல் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இங்கு வரவில்லை என்பதை பார்த்தோம்.

இங்கு வந்த அராபியர்கள் தம் கலாச்சாரத்தை, மொழியை, பழக்கவழக்கங்களை எதையுமே இங்குள்ள மனைவி பிள்ளைகளிடம் திணிக்க முற்படவே இல்லை. இங்குள்ள பழக்க வழக்கங்களையே முன்போல் கடைப்பிடித்து வந்தனர். தம் தாய் மொழியிலேயே பேசி வந்தனர். உள்நாட்டு முறைப்படியே உடை உடுத்தி வந்தனர்.

இதனால் அரேபியர் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு கோட்பாட்டை கடைப்பிடித்து வந்த மக்களிடையே பரவி இருந்த இஸ்லாம் பிறர் கவனத்தை அன்று ஈர்க்கவில்லை.

கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture.... என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments.... என்ற நூலில் எழுதியுள்ளார்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலம் முதல் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இஸ்லாம் இங்கு பரவலாக வளரவில்லை என்பது ஓர் அளவு உண்மையாகும். சில துறைமுகப் பகுதிகளிலும், அதை ஒட்டிய சில உட்பகுதிகளிலும் மட்டும்தான் பரவியிருந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளான நாகப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களிலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்பட்டினம், கொல்லம், கொடுங்கல்லூர், கள்ளிக்கோட்டை முதலிய இடங்களிலும் செல்வாக்கு மிகுந்த சமுதாயமாகவே புகழ்பெற்று விளங்கியது.

"இருண்ட நூற்றாண்டுகள்" என வரலாற்று பக்கங்களில் இடம் ஒதுக்கப்படாத இந்நூற்றாண்டுகளில் இஸ்லாம் ஓசை எழுப்பாமல் மெதுவாக அடி எடுத்து வைத்து பெற்ற வளர்ச்சியும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புத்த சமண மதத்தினருடைய மண்வாசனையைக் காட்டும் தோற்றமும் அவ்வப்போது இங்கு வந்த பயணிகளின் பயணக்குறிப்புகளில் இங்கு வாழ்ந்திருந்த முஸ்லிம்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டது. அன்றைய பயணக் குறிப்புகளை ஆவணமாக ஏற்று வரலாறு இயற்றுகையில் இருண்ட நூற்றாண்டில் தோன்றி இங்கு மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டன.

ஒன்பதாம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் இங்கு வருகை தந்துள்ள பயணிகளின் பயணக் குறிப்புகளிலோ, இலக்கியங்களிலோ முஸ்லிம்கள் இங்கு இருந்தனர் என்று தகவல் எதுவும் இல்லையே என்ற காரணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாம் இங்கு கி.பி. 9-ம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியிருக்க வேண்டுமென்று சில வரலாற்று ஆசிரியர்கள் வாதாடுகின்றனர். இவர்களுடைய வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுவது 'சுலைமான்' என்ற பாரசீக நாட்டு வர்த்தகருடைய பயணக் குறிப்பேயாகும்.

பயணக் குறிப்புகள்:
சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் கி.பி.851ல் இங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தம்முடைய பயணக் குறிப்பான 'சில்சிலத்து - தவாரிக்' எனும் நூலில் கீழ் கொடுத்தள்ளபடி குறிப்பிட்டுள்ளார்.

"......I know not that there is any one of either nation (Chinese and Indian) that has embraced Muhammadanism or Speaks Arabic ' (Malabar - W.Logan P.295)

"இந்தியா, சீனா, இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இஸ்லாத்தைத் தழுவியவரோ அல்லது அரபி பேசுபவரோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார் சுலைமான். இவருடைய இந்த கூற்றை வைத்துக் கொண்டுதான் இஸ்லாம் இங்கு 9-வது நூற்றாண்டுக்குப் பிறகு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறிக் கொண்டனர்.

அரபி பேசி வந்தவர்களையும், அரபிகளுடைய தோற்றத்தில் இங்குள்ளவர் இருந்ததையும் சுலைமான் பார்த்திருக்கவோ தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை அன்று, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், தம் நாட்டு உடையிலும் தம் தாய்மொழியில் பேசியும் வந்தது மட்டுமின்றி, தாம் முன் கொண்டிருந்த புத்தமத நெறியை பின்தொடர்ந்து தலையை மொட்டை அடித்திருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பயணி அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் சுலைமான் என்பவர் இந்தியாவைப் பார்த்ததில்லை என்று பெரும்பான்மையினரான வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலே குறிப்பிட்ட வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது. எனக்குத் தெரியாது (I Know not) என்று தான் குறிக்கின்றாரே தவிர, 'நான் பார்க்கவில்லை' என்று குறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்திருப்பாரேயானால் 'பார்க்கவில்லை' என்று குறிப்பிட்டிருப்பார். இந்தியாவைப் பற்றிய பயணக் குறிப்பு எழுதியவர்களில் முதல் முஸ்லிம் பயணி இவராகவே இருக்க வேண்டும். சுலைமான் வெளியிடும் நிலையில் வைத்திருந்த தம்முடைய பயணக் குறிப்பு அவரிடமிருந்து தவறிவிட்டது. 200 ஆண்டுகளுக்குப் பின் அபூஸைய்து அல்ஹஸன் இப்னு அல் எஸீது என்பவர் சுலைமானுடைய கைக்குறிப்பை பரிசோதனை செய்து நூல் வடிவில் எழுதி வெளியிட்டதுதான் இன்று சுலைமானுடைய பயண நூலாக அறியப்படும் - சில்சிலத்து தவாரிக்.

தொடரும்...

மக்கள் உரிமை: அக் 14 - 20, 2005

இந்தியாவில் இஸ்லாம்-7

தொடர்-7: தோப்பில் முஹம்மது மீரான்

பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்

வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது.

சமண புத்த மதத்தை சார்ந்த பாணர், வேடர், குறவர் போன்ற மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் உயிருக்காக காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். இவர்கள் இப்போதும் சமண மத முக்கிய கடவுள்களான பார்சுவ நாதரையும், பத்மாவதியையும் வணங்கி வருகின்றனர் என்பதற்கு 'சிங்கேரி அம்மா' என்று ஊர்மக்கள் அழைத்து வருகின்ற, வயநாடு காட்டில் உள்ள சிங்கேரி பகவதிக் கோயிலில் நடக்கும் விழாவே ஓர் எடுத்துக் காட்டாகும்.

விழாக் காலங்களில் ஆதிவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து ஆராதிப்பது இந்த தாய் தெய்வத்தையாகும். அவர்களில் பாணர்களுக்கு தாய் கடவுள் மீது மிகவும் விருப்பம், தாயின் புகழ் உரைப்பதில் பரசுராமனை மக்கள் மறந்து போகின்றனர்.

இக்கோயிலில் உள்ள பார்சுவநாதரை 'பரசுராமனாகவும்' பத்மாவதியை 'பகவதியாகவும்' (பரசுராமனும் பகவதியும் ஹிந்து கடவுள்கள்) மாற்றிவிட்டனர் ஹிந்துக்கள். ஆனால் ஆதிவாசிகள் இப்போதும் சமணக் கடவுள்களாகவே பார்சுவநாதரையும் பத்மாவதியையும் கருதி வழிபட்டு வருகின்றனர் ('மாத்ருபூமி' மலையாள வார இதழ் 1989 நவம்பர் 5-11 இதழ்) என்று டாக்டர் நெடுவட்டம் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைவாழ் மக்களே தென்னக மண்ணின் மைந்தர்கள்.

சமண புத்த மதங்களின் தளர்ச்சி, ஆரிய மதத்தைத் திணிக்கும் பொருட்டு மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரம செயல்களால் பீதி அடைந்த மக்களின் ஆதரவற்ற நிலை, யூத மதத்தை யூதர்கள் பரப்பாமல் மவுனம் சாதித்தல், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவரும் சந்தர்ப்பம், இந்த சூழ்நிலை ஏக இறையையும் சமாதானத்தையும் சாந்தியையும், சிலை வணக்கமுறை அல்லாத ஓர் வணக்க முறையையும் போதிக்கும் ஒரு புது மதம் வளர சாதகமாக அமைந்தது. ஒடுக்கப்பட்டவர்களாக இருளில் தப்பிய மக்களுக்கு இஸ்லாத்தின் வருகை பேரொளியாக வழிகாட்டியது.

இஸ்லாம் மேற்கு கடற்கரையில் தோன்றியது நபி(ஸல்) அவர்கள் காலத்திலா? பிற்காலத்திலா?

அராபியர், ரோமானியர், கிரேக்கர் முதலியோர் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்ற துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது கொடுங்கல்லூர் ஆகும். இது இந்தியாவிலேயே பழமை வாய்ந்த துறைமுகங்களில் ஒன்று இந்தியாவில் நெடிய காலம் ஆட்சி புரிந்து வந்த வெளிநாட்டவர் முதலில் கப்பலில் இறங்கியது இங்கேயாகும்.

அலெக்சாண்டிரியா (எகிப்து)வுக்கும் முசிரிக்கும் இடையிலான தூரம் 100 நாள் பயண தூரம் என்று 'ப்ளீனி'(Pliny)என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். எகிப்தை சார்ந்த ஹிப்பாலஸ் (Hippalus)என்ற மாலுமி கடல் வழியாக முசிரிக்கு சுருக்கமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அத்தோடு பயண தொலைவு 40 நாட்களாக சுருக்கியது. இக்கண்டுபிடிப்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கூறி வருகின்றனர். எதுவாக இருப்பினும், அரபு நாடு இந்தியாவுடன் குறிப்பாக மேற்கு கிழக்கு கடற்கரை துறைமுகங்களோடு நெருங்கிய வியாபார தொடர்பு கொண்டிருந்தது. இது எல்லோரும் தெரிந்ததே.

அரேபியாவிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும். இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள் வருவதை எதிர்நோக்கியும், அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும் இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள் செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில் தங்குமிடமும் அளித்தனர்.

ஆட்சியாளர்களுடைய பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில் தங்கி வந்த அராபியர்களில் சிலர் உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை 'கலாசிகள்' என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த கலாசிகளை இங்குள்ள மக்கள் 'மகா பிள்ளை' (பெரிய இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்) என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற சொல் மருவி 'மாப்பிள்ளை' என்றாகிவிட்டது.

இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த குழந்தைகளையும் 'மகா பிள்ளை' என்றே அழைத்தனர். கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் 'மாப்பிள்ளை' என்றுதான் இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர். இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும், கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும் அழைக்கின்றனர் (Logan).

இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த குழந்தைகளோ அவர்களுடைய தாய் தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.

தொடரும்..

மக்கள் உரிமை: அக் 07 - 13, 2005

இந்தியாவில் இஸ்லாம்-6

தொடர்-6 : தோப்பில் முஹம்மது மீரான்

ஆரியர்களுடைய வருகை

புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.

முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.

அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி 'அரசரின்' அடுத்தபடியான 'வணிகர்' பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக 'பிராமணர்', பிராமணருக்குப் பின் 'அரசர்', அரசருக்குப்பின் 'வணிகர்' - இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்.

ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.

நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண - புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

"ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்." (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)

"ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன." (தென்னிந்திய வரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)

சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.

கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)

முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் 'கொடும் கொலையூர்' என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு 'அல்லூர்' என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு 'கொடும் கொலை அல்லூர்' என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.

இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் 'பரணி பாட்டு' (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.

"அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது" (டி.எச்.பி. செந்தாரச்சேரி: 'கேரள சரித்திர தார' பக்கம் 136)

கிறித்தவர்களும் யூதர்களும் வந்து முதலில் தங்கியது கொடுங்கல்லூரிலாகும். இதைப் போல் ஆரியர்களும் முதலில் வந்து தங்கியதும் இங்குதான். கொச்சி - வியாபார மையமாக மாறுவதற்கு முன் சேர நாட்டின் தலைநகராகவும், வியாபாரக் கேந்திரமாகவும் கொடுங்கல்லூர் விளங்கிவந்தது. மட்டுமின்றி இது ஒரு துறைமுகமும் கூட. அதனால்தான் அராபியர் உட்பட வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கொடுங்கல்லூரை தங்கள் தங்குமிடமாகத் தேர்வு செய்தனர்.

"அவர்கள் (அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாண்டிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறித்துவ மதத்துடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது."

தொடரும்...

மக்கள் உரிமை | செப் 30 - அக் 06, 2005

Tuesday, November 22, 2005

பா.ராவின் நிலமெல்லாம் ரத்தம்

சென்ற வருடம் (2004) நவம்பரின் ஆரம்பித்த தொடர் ஒரு வருடத்திற்கு பிறகு அதே நவம்பரில் (2005) முடிவுற்றுள்ளது. செய்தி தளங்களை மட்டும் மேயும் காலம் மாறி, வலைப்பதிவுக்கு காலடி எடுத்து வைத்த கால கட்டத்தில் பா.ராவின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின. (அப்போது வலைப்பதிவர்களைப்பற்றி பா.ரா தனது தமிழோவிய பதிவில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார்).

சுதந்திரத்திற்கு போராடும் ஓர் இனமான பாலஸ்தீனர்களையும், அவர்களின் போராட்டங்களையும் எப்போதுமே கொச்சைப்படுத்தி வருபவர்களுக்கும், அதை பின்பற்றுபவர்களுக்கும் "நிலமெல்லாம் ரத்தம்" தொடரின் மூலம் உண்மையான பல விஷயங்கள் சென்றடைந்துள்ளன. புதிதாக இத்தொடரை படிக்க விரும்பும் வாசகர்களுக்காக, பா.ராவின் முன்னுரையின் ஒரு பகுதியை இங்கு இடுவது அவசியம் என நினைக்கிறேன்.

//பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.

அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.

எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.

பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

எங்கே பாலஸ்தீன்?
அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.

அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.

அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (Ahmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?

அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.

இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.

எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழவழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?

தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்

- பா.ராகவன்
//


இவ்வாறாக ஆரம்பித்த இத்தொடர் இறைத்தூதர் ஆப்ரஹாம் (இப்ராஹீம் நபி) தொடங்கி, கிருஸ்துவத்தின் வளர்ச்சி, முஹம்மது நபி, இஸ்லாம் வால் முனையில் பரவியதா?, சுல்தான் சலாஹுத்தீன், ஹிட்லர், பால்ஃபர் பிரகடனம், அப்துந்நாசர், எகிப்தின் சூயஸ் கால்வாய், எங்கெல்லாம் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள், ஜியோனிஸம், மொசாத், மஸ்ஜித் அக்ஸாவின் பின்னணி, ஹமாஸ், யாசர் அரஃபாத் போன்ற பல விஷயங்களைப்பற்றி பேசுகிறது.

பா.ராவின் தொடரை படிக்க குமுதம் ரிப்போர்ட்டரும், ஜான் கிரிஸ்டோபர் காரணமாக இருந்தாலும், இத்தொடர் முடிவடைந்த பிறகும் தமிழ் இணைய வாசகர்களுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் "நிலமெல்லாம் ரத்தம்" தொடருக்காக இயங்கு எழுத்துரு மற்றும் அட்டவணை வசதியுடன் பிரத்யேக பதிவு போடலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு தொடரும் பேசும் விஷயங்களை தெரிந்துக்கொள்வதற்காக பதிவின் தலைப்பை இட்டுள்ளேன். சில தொடர் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைப்பற்றி பேசியிருந்தாலும் நீண்ட தலைப்புகளை (Post heading) இட பிளாக்கர் அனுமதிக்காது என்பதை அனைவரும் அறிந்ததே.

வலைப்பதிவின் வலது பக்கத்தில் காணப்படும் அட்டவணை Manual-ஆக இணைக்கப்பட்டது என்பதால் வலைப்பதிவில் எந்த இடத்தில் மேய்ந்தாலும், துணையாக அட்டவணை வந்துக்கொண்டே இருக்கும்.

42-வது தொடர் விடுபட்டதுபோல் இருக்கும். தொடர் வெளிவந்துக் கொண்டிருக்கும்போது கிரிஸ்டோஃபரின் பதிவில் ஒரு தொடர் விடுப்பட்டதாக தெரிந்தவுடன் அப்போதே ரிப்போர்ட்டரில் சென்று பார்த்தேன். அங்கும் காண முடியவில்லை. ரிப்போர்ட்டரில் தொடரின் எண் இடும்போது விடுபட்டிருக்கலாம்.

இத்தொடருக்கு பலர் குறிப்புகள் தந்து உதவியுள்ளார்கள் என்று பா.ரா எழுதியிருந்தார். எனது பங்குக்கு இப்பிரத்யேக பதிவு.

http://nilamellam.blogspot.com

நல்வரவு வாசகர்களுக்கு, வாழ்த்துக்கள் பா.ராகவனுக்கு.

அன்புடன்
அபூ உமர்

Sunday, October 30, 2005

யூத பாசிசவாதிகளின் மனிதாபிமானம்

யூத பாசிச காவலர்களின் அடாவடிதனத்தைப் பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.

Thursday, October 20, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 12

சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மனோரீதியான ஆழமான காயத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

குஜராத்தை சேர்ந்த ஆறு பெண்களை கொண்ட ஒரு குழு கலவரத்தை பற்றிய ஓர் ஆய்வறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையின் தலைப்பு 'குஜராத் இனபடுகொலை எப்படி சிறுபான்மையினரை பாதித்துள்ளது: எஞ்சியவர்கள் பேசுகிறார்கள்' என்பதாகும்.

இந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பையும் எடுத்துரைக்கபட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருக்கிறார். மேலும் சில சம்பவங்களையும் தொகுத்து உலகுக்கு அறிவிக்கிறார்கள்.
சாய்ரா பானு என்ற ஒரு பெண். அஹமதாபாத் அகதிகள் முகாமில் இருக்கிறார். இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் இப்படி கூறுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மதவெறி கும்பல் ஒன்று சாய்ராவின் உறவு பெண்ணான நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை தான் கொண்டு வந்த ஆயுதங்களினால் பிளந்தது. இன்னும் சிறிது காலத்தில் ரத்தகரை படிந்த இந்த உலகை பார்க்க வர இருக்கும் அந்த குழந்தை அமைதியான உறக்கத்தில் இருந்தது. கல் நெஞ்சம் கொண்ட கயவர்கள் அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். ஆரவாரம் இல்லாமல் அந்த சிசு எரிந்து மறைந்து போனது.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Wednesday, October 19, 2005

யூத பாசிசவாதிகளால் கொல்லப்பட்டவர்கள்

யூத பாசிசவாதிகளால் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள்


குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 11

குஜராத்தில் ஒரு பகுதியான ரந்திக்பூரில் பல்கீஸ் யாகூப் படேல் என்றொரு பெண். மிகவும் மோசமாக பாதிக்கபட்டவர்களில் ஒருவர். இவருக்கு நடந்ததை கேட்டால் கண்களிலிருந்து ரத்தகண்ணீர் வடிக்காதவர் எவரும் இருக்கமாட்டார். ஐந்து மாத கர்பிணியான இவருக்கு 20 வயது. மரணத்தின் வாயிலுக்குள் தலையை விட்டு மீண்டு வந்தவர்.

முஸ்லிம்களை கொலை செய்ய வந்தவர்களுக்கு, ஆணென்ன, பெண்ணென்ன, குழந்தை என்ன, கர்ப்பிணி என்றால் இவர்களுக்கு என்ன? முஸ்லிமாக பிறந்தால் இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. மண்ணுக்குள்ளோ அல்லது பூமிக்கு மேலோ ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
பல்கீஸை கொல்ல வந்த 3 பேரும் அவள் 5 மாத கர்ப்பிணியா? நிறைமாத கர்ப்பிணி என்றெல்லாம் அலட்டி கொள்ளவில்லை. வந்தார்கள். பல்கீஸை நிர்வாணப்படுத்தினார்கள். தானும் நிர்வாணமானார்கள். அவளை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக அடித்தார்கள். இவர்கள் மூவரும் பல்கீஸின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

பல்கீஸை போல அவளின் உறவினரும், இந்தியாவில் பிறந்ததற்காக இதே பரிசை பெற்றனர். அவர்களில் பல்கீஸின் சகோதரி சமீம், ஆமினா ஆதம், ஹலிமா, முன்னிபென் அப்துல் மற்றும் மதீனா ஆகியோரும் பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கபட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் 9 வயதே ஆன முன்னிபென் அப்துலையும் விட்டு வைக்கவில்லை. 45 வயதான ஹலிமாவையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தே கொன்றனர். பாசிஸ்ட்டுகளுக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காட்டு மிருகங்களே பார்த்து வெட்கப்படும் அளவுக்கு இவர்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டார்கள்.

இதெல்லாவற்றையும் விட வேதனையையும், ஆத்திரத்தையும் தூண்டும் ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. பல்கீஸின் சகோதரி சமீம் குழந்தை ஈன்றெடுத்து இரண்டு நாள் தான் ஆகிறது. பாசிஸ கும்பலிடமிருந்து தப்பி பிழைக்க அந்த குழந்தையும் தூக்கி கொண்டு ஓடும் போது, நெங்சில் ஈரம் இல்லாதவர்கள் அவளை வழி மறித்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். தன் பச்சிளம் குழந்தை சூடு தாங்க முடியாமல் கதறியதை கண்டு, பாவம் சமீம் துடியாய் துடித்தாள். கதறி அழுதாள். இரக்கமில்லாத பாசிஸ வெறியர்கள் இத்துடன் விடவில்லை. குழந்தை பெற்று இரண்டு நாளே ஆன அவளை தொடர்ந்து கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக சித்ரவதை செய்து கொன்றேவிட்டார்கள் ஈனர்கள்.
அங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவே நடந்தது. கொலை வெறிபிடித்த கயவர்கள் தன் ரத்த பசியை தீர்த்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

பல்கீஸ் மயங்கி கிடப்பதை இவர்கள் கவனிக்கவில்லை. அவளும் இறந்து விட்டதாக எண்ணி கிளம்பிவிட்டார்கள். தனக்கு சுய நினைவு வந்தபோது தான் தெரிந்தது நிர்வாணமாக நடு ரோட்டில் நாம் கிடக்கிறோம் என்று.

கணவனை இழந்து, இரண்டு வயது பிள்ளையை இழந்து, மானத்தை இழந்து, அவமானப்பட்டு கூனி குருகி போய் இருக்கும் பல்கீஸ்க்கு கண்ணீரும், வயிற்றில் வளரும் குழந்தையுமே ஆறுதல்.

பல்கீஸை கற்பழித்து அவமானப்படுத்திய இந்து வெறியர்கள் வேறு யாருமில்லை. அக்கம் பக்கத்து வீட்டு இந்துக்கள். சகோதர வாஞ்சையுடன் பழகிவந்தவர்கள். அவர்களுகென்று ஒரு நேரம் குறிப்பிடப்படும் போது, தன் புத்தியை காட்டிவிடுகிறார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், 'முஸ்லிம்களிடம் அன்யோன்யமாக பழகி அவர்களின் கழுத்தை அறுங்கள்' என்ற ஆர்.எஸ்.எஸின் மறைமுக செயல்திட்டமே விடையாக வந்து நிற்கிறது. பல்கீஸை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களில் 23 வெறியர்களை பெயர் சொல்லி குறிப்பிட்டிருந்தார்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Tuesday, October 11, 2005

இந்தியாவில் இஸ்லாம்-5

வரலாற்றுத் தொடர்:5 - தோப்பில் முஹம்மது மீரான்

இருமதங்களின் அழிவு...!

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.

கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் வைணவமும் இணைந்து சமண புத்த மதங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 'சிதறால்' என்ற ஊரில் 'திருச்சாணத்து மலையில்' இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். அக்கோயிலில் இருந்த 'பத்மாவதி' சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்துக்கள் வசப்படுத்தி விட்டனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். (மாத்ருபூமி வார இதழ் வாசகர் பகுதி 1989 ஜூலை 2-8) அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது 'சிதறால் அம்மா' என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் 'சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள 'நாகர் அம்மன்' கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. அக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் குணவரே பண்டிதர் என்றும் கமல வாகன பண்டிதர் என்று இரு சமண அறிஞர்கள் இருந்து வந்தனர். இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதும் துளு நாட்டைச் சார்ந்த போற்றிமார் (பிராமணர்கள்) அங்கு பூஜாரிகளாக பொறுப்பேற்றனர். (கேரள வரலாறு: ஏ.ஸ்ரீதரமேனோன் பக்கம் 87)

வயநாடு காட்டிற்குள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்ஙேரத் தேவரையும் செல்வரத் தேவியையும் பிரதிஷ்டை செய்துள்ள கோயில், இந்துக் கோயில் மாற்றம் செய்த சமணக் கோயிலாக என்று தெரிய வந்துள்ளது (மாத்ருபூமி வார இதழ். டாக்டர் நெடுவட்டம் கோபால கிருஷ்ணன் 1989).

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் சமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்த மதம், சங்க காலத்தில் அதன் முழு வளர்ச்சியை அடைந்திருந்தது. 'மணிமேகலை' புத்த மத நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாகோதை என்றும் மகோரயபுரம் என்று அறியப்படும் கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சேர நாட்டு அரசரான பள்ளிபாணப் பெருமாளும் புத்த மதத்தை சார்ந்தவரேயாகும் (இவர் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்).

சபரி மலை ஐய்யப்பனும் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு அரசர் என்று தெரிய வருகிறது. பிற்காலத்தில் இவர் இந்து தேவனாக்கப்பட்டார்.

"சாஸ்தா, அல்லது ஐய்யப்பன் இந்து தேவனாக்கப்பட்ட புத்தன் என்றும், சபரி மலையில் உள்ள சாஸ்தாக் கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரையில் புத்தமத சடங்குகள்தான் பெருவாரியாக காணப்படுகிறது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்" என்று திரு.ஸ்ரீதரமேனோன் குறிப்பிடுகிறார் (பக்கம் 89). 'சரணம் ஐய்யப்பா' என்று கூப்பிடுவது புத்த மதக் கொள்கையான 'சரணத்றணயத்தை' நினைவு கூறுவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை வேறு பல வரலாற்று பண்டிதர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். திருச்சூரிலுள்ள வடக்குந்நாதர் கோயிலும் 'கொடுங்கல்லூர் பரணிபாடும்' புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதிக் கோயிலும் புத்த பள்ளிகளாக இருந்து பிறகு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டவைகளில் குறிப்பிடத்தக்க சிலவாகும். தமிழ் நாட்டிலும் பல புத்த பள்ளிகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 23 - 29, 2005

Sunday, October 09, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 10

கலவரங்கள் நடந்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களே குறிவைக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த கோரதான்டவம் ஆடுவதற்காக 15, 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்து மதவெறியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தின் போதுதான் முதல் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பான்சமஹால் என்ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர்.

இப்படி திரட்டப்பட்ட கொலையாளிகள் ஒருவர் அல்ல ஒரு நூறு பேர் அல்ல ஓராயிரம் பேர் அல்ல 12 லட்சம் பேர் இந்த கலவரத்தில் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் வெறும் கையுடனும் வரவில்லை. அரிவாள், வீச்சு, சூலம், துப்பாக்கி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், வெடிபொருட்கள் இப்படி அனைத்து தயாரிப்புடனும் வந்து காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றார்கள்.

இவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மத்திய மாநில அரசுகள் கொடுத்தது. கலவரக்காரர்களுக்கு ரூ.500 தின கூலி, உணவு மற்றும் மது. இவர்கள் இறந்தால் 2 லட்சம் பணம். கைதானால் அனைத்து செலவும் VHP ஏற்கும். இப்படியாக அவர்கள் முஸ்லிம்கள் மீது பிரகடனப்படுத்தாத ஒரு போரையே தொடுத்தார்கள். எவ்வித தயாரிப்பும் இல்லாத அந்த முஸ்லிம்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

தன்னை பெற்றெடுத்த பெற்றோர், பாசத்துடன் வளர்த்து வந்த பிள்ளைகள், தன் சகோதர, சகோதரிகள், தன் மனைவி, உற்றார், உறவினர், சொத்து, சுகம் அனைத்து விட்டுவிட்டு நாளை நாம் மரணிக்க போகிறோம் என்று இந்த முஸ்லிம்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கயவர்கள் வந்தார்கள். கையில் கிடைத்ததை சுருட்டினார்கள். முஸ்லிம்களை துண்டாடி குவியலாக்கினார்கள். கேஸ் அடித்து கொன்றார்கள். சென்றார்கள் அடுத்த வீடுகளை நோக்கி.

இப்படியாக பெற்றோர்களையும், உற்றார்களையும் இடிந்து தவிப்பவர்களில் ஜாவிதும் ஒருவன். இவனுக்கு வயது 11. குடும்பத்தில் உள்ள அனைவரையும் இடிந்து தனிமரமாக நின்று கொண்டிருக்கிறான் இன்று. ஜாவிதின் தந்தையையும், தாயையும் மற்றும் சகோதரியையும் உயிருடன் எரித்து கொன்றார்கள். மேலும் ஜாவிதின் ஒன்று விட்ட அண்ணனையும் கொன்றார்கள், அவரின் மனைவியையும், சகோதரியையும் கற்பழித்து கொன்றார்கள். இன்று இவன் அகமதாபாத்தில் உள்ள ஷா ஆலம் தர்கா அகதிகள் முகாமில் இருக்கிறான்.

மதவெறி பிடித்த மிருகங்களின் செயல்களை கண்ணால் கண்ட ஜாவித், நடந்ததை மறக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான். ஜாவிதுக்கு ஆறுதல் கூற இன்று யாருமில்லை. பாசம் காட்டி வந்த பெற்றோர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டனர். உறவினர் என்று சொல்லி கொள்வதற்கும் யாருமில்லை. அவர்களையும் கொன்று விட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஜாவிதின் வாழ்க்கை. இப்படி நூற்று கணக்கான ஜாவித்கள் இன்று குஜராத்தில். பாசிஸ்ட்டுகளின் கொலை வெறியாட்டத்தால் நாளை நம் பிள்ளைகளும் ஜாவித் ஆக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை இந்தியாவில். முஸ்லிம்களை வேரறுப்பதே பாசிஸ்ட்டுகளின் வாழ்க்கை இலட்சியம்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Thursday, October 06, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 9

பாத்திமா பீவி முஹம்மத் யாகூப் ஷேக் என்றொரு பெண். இவர் தன் குடும்பத்தை சேர்ந்த 19 பேரை ரத்த வெறிபிடித்த பாசிஸ பேய்களுக்கு இறையாக்கிவிட்டு பரிதவித்து நின்ற பெண்களில் ஒருவர். நம் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலே நம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை. பாவம் இந்த பாத்திமா பீவி 19 பேரை பறிகொடுத்துவிட்டு படும் வேதனை.

இவர் கூறுகிறார், இந்த பாசிஸ வெறியர்களின் எல்லா காட்டுமிராண்டி தனங்களையும் மன்னித்துவிட முடியும். ஆனால் இவர்கள் நம் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் மன்னிக்கவே முடியாது என்று கூறுகிறார். அந்த அளவுக்கு நம் பெண்களிடம் மிக கொடூரமாக நடந்துகொண்டார்கள் காட்டுமிராண்டிகள்.

நரோடா பாடியா என்பது இவர் வசித்து கொண்டிருந்த இடத்தின் பெயர். இங்கு தான் 90 முஸ்லிம்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்கள். அவர்கள் காவல்துறையினரிடம் தங்களை காப்பாற்றும் படி வேண்டினார்கள், கெஞ்சினார்கள், கதறினார்கள், உயிர்பிச்சை கேட்டார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய அந்த காவல்துறையினர், காப்பாற்றுவதற்கு பதிலாக அறிவுரை கூறினார்கள். உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் உங்களை கொலைகார கும்பலிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதை சொல்வதற்காகவா இவர்கள் நம் வரி பணத்தில் உடம்பை வளர்க்கிறார்கள்? தப்பிப்பதற்கு வேறு வழியில்லாத முஸ்லிம்கள் பாசிஸ்ட்டுகளின் கைகளால் உயிருடன் எரிந்தார்கள்.

அந்த கிராமத்திலிருந்து தப்பித்துகொள்ள பாத்திமா ஷேக் குடும்பத்தினருடன் முயற்சி செய்து கொண்டிருந்த போது, பாசிஸ்ட்டுகளின் கைகளில் அகப்பட்டு கொண்டார்கள் அனைவரும்.

இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னுடன் கொண்டுவந்த ரூ.20,000 பணத்தை எடுத்து கொடுத்து, தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினார் பாத்திமா ஷேக்கின் சகோதரி. அந்த வெறிபிடித்த கூட்டம் அவரிடமிருந்து பணத்தையும் பறித்து கொண்டதோடு மட்டுமல்லாமல், ஒருவர் பின் ஒருவராக அந்த சகோதரியை கற்பழித்தனர். பாவம் அந்த சகோதரி தன்னை விட்டுவிடும்படி கத்தியும், கெஞ்சியும் எந்த பயனும் இல்லை. அவரை கந்தலாக்கிவிட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இதையே பாத்திமா ஷேக்கின் சகோதரி மகளுக்கும் நடந்தது. நடு ரோட்டில் அவர்கள் அசிங்கப் படுத்தப்பட்டார்கள். இவை அனைத்தையும் தன் கண்ணால் கண்ட இந்த பாத்திமா தன்னுடைய அழுகையை அடக்கமுடியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார்.

மேலும் பாத்திமா கூறுகிறார் தன் சகோதரியும், சகோதரியின் மகளும் மட்டும் இந்த கொடுமைக்கு ஆளாகவில்லை. குறைந்தது 25 பேர் இதேபோல் பாதிக்கப்பட்டார்கள். நடு ரோட்டில் அந்த பெண்கள் முழு நிர்வாணமாக்கபட்டு பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்கள். வயது முதிர்ந்த பெண்களையும் கூட முழு நிர்வாணப்படுத்தி தீயில் வீசியெறிந்தார்கள். இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல, காக்கி அரைகால் சட்டை அணிந்த பேய்கள் என்று கூறுகிறார் அந்த பெண்மனி.

எரித்து கொல்லப்பட்ட இந்த முஸ்லிம்களின் சடலங்கள் அனைத்தும் ஒரு கபர்ஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. எரிந்து போன அந்த முஸ்லிம்களின் சடங்களை மனதில் தைரியம் இல்லாதவர்கள் நிச்சயமாக பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கொடூரம். முஸ்லிம்களை எரித்த கயவர்கள் பாதியிலேயே அணைந்துவிடகூடாது என்பதற்காக அவர்களின் மீது முதலில் பெட்ரோலை, கேஸை ஊற்றி எரித்தார்கள். அதனால் எரிந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையோரின் உடல் முழுதும் வெந்து போன நிலையிலேயே இறந்திருக்கிறார்கள்.

தீயில் வெந்த முஸ்லிம்களின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பருத்து, வயிறு வெடித்து குடல்கள் அனைத்து வெளியில் தள்ளி மிகவும் கொடூரமாக காட்சியளித்தது. சில சடலங்கள், முகம் வீங்கி கண்கள் வெளியில் பிதிங்கிய நிலையில் விகாரகமாக காட்சியளித்தது. இன்னும் சில உடல்கள் கறிகட்டையை போல் கருப்பாகவும், சில உடல்கள் சதைகள் வெடித்த நிலையிலும், மாம்பழ கொட்டையின் மீது ஈக்கள் கூட்டாக உட்கார்ந்தால் எப்படி காட்சியளிக்குமோ அப்படி தான் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டிருந்தார்கள். நெங்சு வெடித்து விடும் அளவுக்கு கொடூரங்கள் அங்கே நிறைவேற்றப்பட்டன.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Sunday, October 02, 2005

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.

எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.

ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த "சுன்னத்" முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக 'கேரளா மகா சரித்திரம்' என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி 'கோபால குறுபு' குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் - கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.

இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது 'கேரள வரலாறு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.

"சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. 'கொற்றவை' என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்" (ஏ. சீதரமேனோன் - கேரள வரலாறு, பக்கம் 82)

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.

ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள 'புலயனார்' கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.

ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 16 - 22, 2005