Thursday, April 14, 2005

இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 4

"நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!"(?)

("மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்" எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் "கல்கி" பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த "கல்கி" வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் ஒரு கூறியுள்ளார். அவருடைய ஆய்வுத்தகவலை இங்கு தந்துள்ளோம்)

இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் என்று இந்துமத அறிஞர்கள் சிலர் ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். கல்கியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன..

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:

"ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"

சிஷ்ய சாகா ஸமன்விதம்.."


(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)

இதன் பொருள்:
"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."

இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.. அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:

உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.

கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் "விஷ்ணு" என்றால் இறைவன்(அல்லாஹ்), "சோமாநிப்" எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி - சமாதனம் என்பதாகும். "ஆமினா" என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.

கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், "நம்பிக்கையாளர்" என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை "அல் அமீன்" (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.

மிகவும் உயர்ந்த குடும்பத்தில் - உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் - ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.

குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. "ஹிரா" குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.

கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.

பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.

குதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.

ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.

-சசி-

நன்றி : சமரசம் 1-15 ஜுன் 2004

3 comments:

அபூ முஹை said...

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:

''ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர்
ஆச்சார்யண ஸமன் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருபஸ்சேவ மஹாதேவ
மருஸ்தல நிவாஸினம்" (பவிஷ்ய புராணம் 3,3,5-8)

இதன் பொருள்:
"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்."

மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது.

''அவர்கள் 'கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்'' என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3)

மேலும் காண்க, அதர்ணவேதம் 20வது காணம், ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள், திருக்குர்ஆனில்:

2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்).

2:128. ''எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

2:129. ''எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்." (என்றும் பிரார்த்தித்தார்கள்)

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.

இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:

''உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)

''உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்'' (உபாகமம், 18:18)

புதிய ஏற்பாட்டில்:
மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)

Akbar Batcha said...

Dear Abu Umar,

I do happened to read this article. I think you have shortened this article. It has many more details.

But Muslim scholars have never attempt to analyse this. Why?

Abu Umar said...

இஸ்லாமிய அறிஞர்கள் குர்ஆன், சுன்னாவில் பெயர் குறிப்பிடப்பட்ட வேதங்களில் ஆய்வு செய்த அளவுக்கு மற்றவற்றில் செய்யவில்லை என்பது உண்மைதான்.

அனைத்து சமுதாயத்தவருக்கும் இறைவன் தூதர்களை அனுப்பியுள்ளான் என்ற இஸ்லாமிய கருத்தின்படி, மற்றவைகள் இறைவன் அனுப்பிய வேதமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்றும் அப்படியே அது இறைவனால் அனுப்பப்பட்ட வேதமாக இருந்தாலும் மனிதர்களின் சொந்த கருத்து கலந்துள்ளது என்பதிலும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கவில்லை.

இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்.

முஹம்மது நபிதான் கல்கி அவதாரம் என்று, இந்துக்கள் முஹம்மது நபியை வழிப்பட்டால் அதனை முதலில் எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருப்பார்கள்.

இஸ்லாத்தின் படி முஹம்மது நபி இறைவனின் செய்தியை மக்களுக்கு சொல்லி, செயல்படுத்தி காட்ட வந்த நற்குணமுடைய மனித தூதர் மட்டுமே.

தனது அடக்கத்தலத்தை வணங்கக்கூடாது என்றும் விழா எடுக்கக்கூடாது என்றும் தன்னை அளவுக்கு மீறி புகழக்கூடாது என்றும் சொல்லிச் சென்ற ஒரே மனிதர் முஹம்மது நபி மட்டுமே.