Sunday, November 27, 2005

இந்தியாவில் இஸ்லாம்-8

தொடர்-8: தோப்பில் முஹம்மது மீரான்

இந்தியாவில் அரேபியர்களின் காலனி

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அரபு நாட்டில் இஸ்லாத்தின் ஏக இறைக் கொள்கையை போதிக்க துவக்கிய நேரம் இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் வியாபாரத் தொடர்புடைய அரேபியர்களில் பலர் புது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள (அந்த நாட்டு) தங்கள் மனைவி மக்களிடம் புது மார்க்கத்தை எடுத்துக் கூறினர். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இஸ்லாம் பரவிய அதே காலத்திலேயே மாலத்தீவு, இலங்கை, சீனா, மலேசியா போன்ற இடங்களிலும் இஸ்லாம் இதுபோன்று பரவிவிட்டது.

"Before the end of the Seventh century, a colony of Mualim Merchants had established themselves in Ceylone" (History of South India - Dr. V. Krishnamurthi P-19)

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்ப்பட்டினம், விழிஞ்ஞம் அல்லது பூவார், கொல்லம் முதலிய துறைமுகப்பகுதிகளில் அரேபியர்கள் காலனி அமைத்து விட்டனர். இப்பகுதிகளில் வியாபார நிமித்தம் தங்கி வந்த அரேபியர்களுடைய வித்தியாசமான வணக்க முறையும், நேர்மையும், ஒழுக்கமும், அன்பும், பணிவான செயல்களும் அங்குள்ள மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தன. இஸ்லாம் இங்கு பரப்பப்படவில்லை. அன்றைய முஸ்லிம்களின் செய்கைகளால் இஸ்லாம் இயல்பாக பரவியது.

"Arab settlements after the introduction of Mohammedanism were made inseveral places on the coast (west coast) whose principal objects was mainly trade for which the Hindu state of the interion apparently gave all facilities" (South India under the Mohammadan Invades-S.Krishnaswamy Iyengar p-69)

இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய பின் இங்கு வந்த அரேபியர்கள் வர்த்தக கண்ணோட்டத்தோடு அல்லாமல் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இங்கு வரவில்லை என்பதை பார்த்தோம்.

இங்கு வந்த அராபியர்கள் தம் கலாச்சாரத்தை, மொழியை, பழக்கவழக்கங்களை எதையுமே இங்குள்ள மனைவி பிள்ளைகளிடம் திணிக்க முற்படவே இல்லை. இங்குள்ள பழக்க வழக்கங்களையே முன்போல் கடைப்பிடித்து வந்தனர். தம் தாய் மொழியிலேயே பேசி வந்தனர். உள்நாட்டு முறைப்படியே உடை உடுத்தி வந்தனர்.

இதனால் அரேபியர் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு கோட்பாட்டை கடைப்பிடித்து வந்த மக்களிடையே பரவி இருந்த இஸ்லாம் பிறர் கவனத்தை அன்று ஈர்க்கவில்லை.

கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture.... என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments.... என்ற நூலில் எழுதியுள்ளார்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலம் முதல் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இஸ்லாம் இங்கு பரவலாக வளரவில்லை என்பது ஓர் அளவு உண்மையாகும். சில துறைமுகப் பகுதிகளிலும், அதை ஒட்டிய சில உட்பகுதிகளிலும் மட்டும்தான் பரவியிருந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளான நாகப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களிலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்பட்டினம், கொல்லம், கொடுங்கல்லூர், கள்ளிக்கோட்டை முதலிய இடங்களிலும் செல்வாக்கு மிகுந்த சமுதாயமாகவே புகழ்பெற்று விளங்கியது.

"இருண்ட நூற்றாண்டுகள்" என வரலாற்று பக்கங்களில் இடம் ஒதுக்கப்படாத இந்நூற்றாண்டுகளில் இஸ்லாம் ஓசை எழுப்பாமல் மெதுவாக அடி எடுத்து வைத்து பெற்ற வளர்ச்சியும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புத்த சமண மதத்தினருடைய மண்வாசனையைக் காட்டும் தோற்றமும் அவ்வப்போது இங்கு வந்த பயணிகளின் பயணக்குறிப்புகளில் இங்கு வாழ்ந்திருந்த முஸ்லிம்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டது. அன்றைய பயணக் குறிப்புகளை ஆவணமாக ஏற்று வரலாறு இயற்றுகையில் இருண்ட நூற்றாண்டில் தோன்றி இங்கு மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டன.

ஒன்பதாம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் இங்கு வருகை தந்துள்ள பயணிகளின் பயணக் குறிப்புகளிலோ, இலக்கியங்களிலோ முஸ்லிம்கள் இங்கு இருந்தனர் என்று தகவல் எதுவும் இல்லையே என்ற காரணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாம் இங்கு கி.பி. 9-ம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியிருக்க வேண்டுமென்று சில வரலாற்று ஆசிரியர்கள் வாதாடுகின்றனர். இவர்களுடைய வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுவது 'சுலைமான்' என்ற பாரசீக நாட்டு வர்த்தகருடைய பயணக் குறிப்பேயாகும்.

பயணக் குறிப்புகள்:
சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் கி.பி.851ல் இங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தம்முடைய பயணக் குறிப்பான 'சில்சிலத்து - தவாரிக்' எனும் நூலில் கீழ் கொடுத்தள்ளபடி குறிப்பிட்டுள்ளார்.

"......I know not that there is any one of either nation (Chinese and Indian) that has embraced Muhammadanism or Speaks Arabic ' (Malabar - W.Logan P.295)

"இந்தியா, சீனா, இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இஸ்லாத்தைத் தழுவியவரோ அல்லது அரபி பேசுபவரோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார் சுலைமான். இவருடைய இந்த கூற்றை வைத்துக் கொண்டுதான் இஸ்லாம் இங்கு 9-வது நூற்றாண்டுக்குப் பிறகு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறிக் கொண்டனர்.

அரபி பேசி வந்தவர்களையும், அரபிகளுடைய தோற்றத்தில் இங்குள்ளவர் இருந்ததையும் சுலைமான் பார்த்திருக்கவோ தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை அன்று, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், தம் நாட்டு உடையிலும் தம் தாய்மொழியில் பேசியும் வந்தது மட்டுமின்றி, தாம் முன் கொண்டிருந்த புத்தமத நெறியை பின்தொடர்ந்து தலையை மொட்டை அடித்திருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பயணி அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் சுலைமான் என்பவர் இந்தியாவைப் பார்த்ததில்லை என்று பெரும்பான்மையினரான வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலே குறிப்பிட்ட வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது. எனக்குத் தெரியாது (I Know not) என்று தான் குறிக்கின்றாரே தவிர, 'நான் பார்க்கவில்லை' என்று குறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்திருப்பாரேயானால் 'பார்க்கவில்லை' என்று குறிப்பிட்டிருப்பார். இந்தியாவைப் பற்றிய பயணக் குறிப்பு எழுதியவர்களில் முதல் முஸ்லிம் பயணி இவராகவே இருக்க வேண்டும். சுலைமான் வெளியிடும் நிலையில் வைத்திருந்த தம்முடைய பயணக் குறிப்பு அவரிடமிருந்து தவறிவிட்டது. 200 ஆண்டுகளுக்குப் பின் அபூஸைய்து அல்ஹஸன் இப்னு அல் எஸீது என்பவர் சுலைமானுடைய கைக்குறிப்பை பரிசோதனை செய்து நூல் வடிவில் எழுதி வெளியிட்டதுதான் இன்று சுலைமானுடைய பயண நூலாக அறியப்படும் - சில்சிலத்து தவாரிக்.

தொடரும்...

மக்கள் உரிமை: அக் 14 - 20, 2005

இந்தியாவில் இஸ்லாம்-7

தொடர்-7: தோப்பில் முஹம்மது மீரான்

பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்

வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது.

சமண புத்த மதத்தை சார்ந்த பாணர், வேடர், குறவர் போன்ற மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் உயிருக்காக காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். இவர்கள் இப்போதும் சமண மத முக்கிய கடவுள்களான பார்சுவ நாதரையும், பத்மாவதியையும் வணங்கி வருகின்றனர் என்பதற்கு 'சிங்கேரி அம்மா' என்று ஊர்மக்கள் அழைத்து வருகின்ற, வயநாடு காட்டில் உள்ள சிங்கேரி பகவதிக் கோயிலில் நடக்கும் விழாவே ஓர் எடுத்துக் காட்டாகும்.

விழாக் காலங்களில் ஆதிவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து ஆராதிப்பது இந்த தாய் தெய்வத்தையாகும். அவர்களில் பாணர்களுக்கு தாய் கடவுள் மீது மிகவும் விருப்பம், தாயின் புகழ் உரைப்பதில் பரசுராமனை மக்கள் மறந்து போகின்றனர்.

இக்கோயிலில் உள்ள பார்சுவநாதரை 'பரசுராமனாகவும்' பத்மாவதியை 'பகவதியாகவும்' (பரசுராமனும் பகவதியும் ஹிந்து கடவுள்கள்) மாற்றிவிட்டனர் ஹிந்துக்கள். ஆனால் ஆதிவாசிகள் இப்போதும் சமணக் கடவுள்களாகவே பார்சுவநாதரையும் பத்மாவதியையும் கருதி வழிபட்டு வருகின்றனர் ('மாத்ருபூமி' மலையாள வார இதழ் 1989 நவம்பர் 5-11 இதழ்) என்று டாக்டர் நெடுவட்டம் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைவாழ் மக்களே தென்னக மண்ணின் மைந்தர்கள்.

சமண புத்த மதங்களின் தளர்ச்சி, ஆரிய மதத்தைத் திணிக்கும் பொருட்டு மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரம செயல்களால் பீதி அடைந்த மக்களின் ஆதரவற்ற நிலை, யூத மதத்தை யூதர்கள் பரப்பாமல் மவுனம் சாதித்தல், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவரும் சந்தர்ப்பம், இந்த சூழ்நிலை ஏக இறையையும் சமாதானத்தையும் சாந்தியையும், சிலை வணக்கமுறை அல்லாத ஓர் வணக்க முறையையும் போதிக்கும் ஒரு புது மதம் வளர சாதகமாக அமைந்தது. ஒடுக்கப்பட்டவர்களாக இருளில் தப்பிய மக்களுக்கு இஸ்லாத்தின் வருகை பேரொளியாக வழிகாட்டியது.

இஸ்லாம் மேற்கு கடற்கரையில் தோன்றியது நபி(ஸல்) அவர்கள் காலத்திலா? பிற்காலத்திலா?

அராபியர், ரோமானியர், கிரேக்கர் முதலியோர் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்ற துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது கொடுங்கல்லூர் ஆகும். இது இந்தியாவிலேயே பழமை வாய்ந்த துறைமுகங்களில் ஒன்று இந்தியாவில் நெடிய காலம் ஆட்சி புரிந்து வந்த வெளிநாட்டவர் முதலில் கப்பலில் இறங்கியது இங்கேயாகும்.

அலெக்சாண்டிரியா (எகிப்து)வுக்கும் முசிரிக்கும் இடையிலான தூரம் 100 நாள் பயண தூரம் என்று 'ப்ளீனி'(Pliny)என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். எகிப்தை சார்ந்த ஹிப்பாலஸ் (Hippalus)என்ற மாலுமி கடல் வழியாக முசிரிக்கு சுருக்கமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அத்தோடு பயண தொலைவு 40 நாட்களாக சுருக்கியது. இக்கண்டுபிடிப்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கூறி வருகின்றனர். எதுவாக இருப்பினும், அரபு நாடு இந்தியாவுடன் குறிப்பாக மேற்கு கிழக்கு கடற்கரை துறைமுகங்களோடு நெருங்கிய வியாபார தொடர்பு கொண்டிருந்தது. இது எல்லோரும் தெரிந்ததே.

அரேபியாவிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும். இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள் வருவதை எதிர்நோக்கியும், அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும் இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள் செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில் தங்குமிடமும் அளித்தனர்.

ஆட்சியாளர்களுடைய பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில் தங்கி வந்த அராபியர்களில் சிலர் உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை 'கலாசிகள்' என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த கலாசிகளை இங்குள்ள மக்கள் 'மகா பிள்ளை' (பெரிய இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்) என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற சொல் மருவி 'மாப்பிள்ளை' என்றாகிவிட்டது.

இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த குழந்தைகளையும் 'மகா பிள்ளை' என்றே அழைத்தனர். கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் 'மாப்பிள்ளை' என்றுதான் இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர். இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும், கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும் அழைக்கின்றனர் (Logan).

இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த குழந்தைகளோ அவர்களுடைய தாய் தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.

தொடரும்..

மக்கள் உரிமை: அக் 07 - 13, 2005

இந்தியாவில் இஸ்லாம்-6

தொடர்-6 : தோப்பில் முஹம்மது மீரான்

ஆரியர்களுடைய வருகை

புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.

முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.

அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி 'அரசரின்' அடுத்தபடியான 'வணிகர்' பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக 'பிராமணர்', பிராமணருக்குப் பின் 'அரசர்', அரசருக்குப்பின் 'வணிகர்' - இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்.

ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.

நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண - புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

"ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்." (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)

"ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன." (தென்னிந்திய வரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)

சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.

கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)

முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் 'கொடும் கொலையூர்' என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு 'அல்லூர்' என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு 'கொடும் கொலை அல்லூர்' என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.

இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் 'பரணி பாட்டு' (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.

"அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது" (டி.எச்.பி. செந்தாரச்சேரி: 'கேரள சரித்திர தார' பக்கம் 136)

கிறித்தவர்களும் யூதர்களும் வந்து முதலில் தங்கியது கொடுங்கல்லூரிலாகும். இதைப் போல் ஆரியர்களும் முதலில் வந்து தங்கியதும் இங்குதான். கொச்சி - வியாபார மையமாக மாறுவதற்கு முன் சேர நாட்டின் தலைநகராகவும், வியாபாரக் கேந்திரமாகவும் கொடுங்கல்லூர் விளங்கிவந்தது. மட்டுமின்றி இது ஒரு துறைமுகமும் கூட. அதனால்தான் அராபியர் உட்பட வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கொடுங்கல்லூரை தங்கள் தங்குமிடமாகத் தேர்வு செய்தனர்.

"அவர்கள் (அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாண்டிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறித்துவ மதத்துடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது."

தொடரும்...

மக்கள் உரிமை | செப் 30 - அக் 06, 2005

Tuesday, November 22, 2005

பா.ராவின் நிலமெல்லாம் ரத்தம்

சென்ற வருடம் (2004) நவம்பரின் ஆரம்பித்த தொடர் ஒரு வருடத்திற்கு பிறகு அதே நவம்பரில் (2005) முடிவுற்றுள்ளது. செய்தி தளங்களை மட்டும் மேயும் காலம் மாறி, வலைப்பதிவுக்கு காலடி எடுத்து வைத்த கால கட்டத்தில் பா.ராவின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின. (அப்போது வலைப்பதிவர்களைப்பற்றி பா.ரா தனது தமிழோவிய பதிவில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார்).

சுதந்திரத்திற்கு போராடும் ஓர் இனமான பாலஸ்தீனர்களையும், அவர்களின் போராட்டங்களையும் எப்போதுமே கொச்சைப்படுத்தி வருபவர்களுக்கும், அதை பின்பற்றுபவர்களுக்கும் "நிலமெல்லாம் ரத்தம்" தொடரின் மூலம் உண்மையான பல விஷயங்கள் சென்றடைந்துள்ளன. புதிதாக இத்தொடரை படிக்க விரும்பும் வாசகர்களுக்காக, பா.ராவின் முன்னுரையின் ஒரு பகுதியை இங்கு இடுவது அவசியம் என நினைக்கிறேன்.

//பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.

அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.

எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.

பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

எங்கே பாலஸ்தீன்?
அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.

அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.

அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (Ahmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?

அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.

இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.

எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழவழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?

தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்

- பா.ராகவன்
//


இவ்வாறாக ஆரம்பித்த இத்தொடர் இறைத்தூதர் ஆப்ரஹாம் (இப்ராஹீம் நபி) தொடங்கி, கிருஸ்துவத்தின் வளர்ச்சி, முஹம்மது நபி, இஸ்லாம் வால் முனையில் பரவியதா?, சுல்தான் சலாஹுத்தீன், ஹிட்லர், பால்ஃபர் பிரகடனம், அப்துந்நாசர், எகிப்தின் சூயஸ் கால்வாய், எங்கெல்லாம் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள், ஜியோனிஸம், மொசாத், மஸ்ஜித் அக்ஸாவின் பின்னணி, ஹமாஸ், யாசர் அரஃபாத் போன்ற பல விஷயங்களைப்பற்றி பேசுகிறது.

பா.ராவின் தொடரை படிக்க குமுதம் ரிப்போர்ட்டரும், ஜான் கிரிஸ்டோபர் காரணமாக இருந்தாலும், இத்தொடர் முடிவடைந்த பிறகும் தமிழ் இணைய வாசகர்களுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் "நிலமெல்லாம் ரத்தம்" தொடருக்காக இயங்கு எழுத்துரு மற்றும் அட்டவணை வசதியுடன் பிரத்யேக பதிவு போடலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு தொடரும் பேசும் விஷயங்களை தெரிந்துக்கொள்வதற்காக பதிவின் தலைப்பை இட்டுள்ளேன். சில தொடர் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைப்பற்றி பேசியிருந்தாலும் நீண்ட தலைப்புகளை (Post heading) இட பிளாக்கர் அனுமதிக்காது என்பதை அனைவரும் அறிந்ததே.

வலைப்பதிவின் வலது பக்கத்தில் காணப்படும் அட்டவணை Manual-ஆக இணைக்கப்பட்டது என்பதால் வலைப்பதிவில் எந்த இடத்தில் மேய்ந்தாலும், துணையாக அட்டவணை வந்துக்கொண்டே இருக்கும்.

42-வது தொடர் விடுபட்டதுபோல் இருக்கும். தொடர் வெளிவந்துக் கொண்டிருக்கும்போது கிரிஸ்டோஃபரின் பதிவில் ஒரு தொடர் விடுப்பட்டதாக தெரிந்தவுடன் அப்போதே ரிப்போர்ட்டரில் சென்று பார்த்தேன். அங்கும் காண முடியவில்லை. ரிப்போர்ட்டரில் தொடரின் எண் இடும்போது விடுபட்டிருக்கலாம்.

இத்தொடருக்கு பலர் குறிப்புகள் தந்து உதவியுள்ளார்கள் என்று பா.ரா எழுதியிருந்தார். எனது பங்குக்கு இப்பிரத்யேக பதிவு.

http://nilamellam.blogspot.com

நல்வரவு வாசகர்களுக்கு, வாழ்த்துக்கள் பா.ராகவனுக்கு.

அன்புடன்
அபூ உமர்