Sunday, September 19, 2010

கர்கரே -ஐ கொலை செய்தது யார்? கருத்தரங்கம் வீடியோ

S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னாள் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? (Who killed Karkare?) என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்.

வழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னால் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்).

நாள்: 14-03-2010

இடம்: நீதியரசர் கிருஷ்ணய்யர் மஹால், K.K.நகர், மதுரை

நன்றி: வேர்கள் வெளியீட்டகம், 235, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை. Tel: 044-45566909

Thursday, January 04, 2007

சதாமின் கடைசி நிமிடங்களும் பா.ராவும்

குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன், சதாமின் கடைசி நேரம் பற்றியும் இராக்கின் முக்கிய சம்பவங்கள் மற்றும் மத்திய கிழக்கின் அடுத்த கட்ட பிரதிபலிப்பு பற்றியும் எழுதியிருந்தார்.

பொதுவாக, பா.ராகவனின் ஆழமான எழுத்துக்கள் எல்லோராலும் விரும்பப் படுபவை. அவரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்து, அவரது நிலமெல்லாம் தொடருக்கு பிரத்யேகப் பதிவை இட்டேன். ஆனால், சதாமைப் பற்றிய பா.ராவின் கட்டுரை தவறான ஒரு தகவலுடன் ஆரம்பிக்கிறது:

//உயிர் விடும் கணத்தில், அவர் தாம் இருபத்து நான்கு வருடங்கள் ஆண்ட இராக்கை வாழ்த்தியிருக்கலாம். அல்லது இறைவன் பெயரை உச்சரித்திருக்கலாம். இரண்டும் இல்லாமல், வாழ்நாளெல்லாம் பரம விரோதியாகவே கருதிய ஷியா இனத்தைச் சேர்ந்த முக்தாதா அல் சத்ர் என்ற முப்பத்து மூன்று வயது குட்டிப் போராளியின் பெயரைச் சொல்லிவிட்டு உயிரைவிட்டது விநோத மர்மம்தான். ஒரு வேளை எப்போதும் அவர் எதிரிகளை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்பதன் அடையாளம்தான் அதுவோ, என்னவோ! - பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில்//


"முக்ததா, முக்ததா, முக்ததா" என்று மும்முறை (உற்சாகக் குரலில்) கூவுபவர், தண்டனைக் காட்சியைப் பார்வையிட அனுமதி பெற்றிருந்த ஷியாக்களுள் ஒருவர்.

அரபி தெரியாததால் அங்கு நடைபெற்ற உரையாடல்களை, பா.ரா அவர்களால் ஊகிக்க முடியாமல் போய்விட்டது துரதிஷ்டவசமானதாகும். ஒருவேளை சி.என்.என் தொலைக்காட்சி சதாமின் கடைசி வார்த்தைகள் என்று தவறாகக் குறிப்பிட்டதை பா.ரா. நம்பி விட்டார் போலும். (சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வெளிவந்து விட்டது).

அமெரிக்கா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அவரது மகன்கள் "உதை" மற்றும் "குஸை" போன்று சதாமும் வீரமரணம் அடைவார் என்றுதான் அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ பதுங்குக்குழிக்குள் இருந்து எலிபோல் பிடித்துக் கொண்டு வரப்பட்டது அவரது வீரத்தை மரணிக்கச் செய்திருந்தது. அதனால்தான் என்னவோ, பிடித்துக் கொண்டுவரப்பட்டது சதாம் இல்லை என்ற புரளி கற்பனை ஆதாரங்களுடன் பரப்பப்பட்டு வந்தது.

அந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாமை "அசத்" (சிங்கம்) என்று போற்றுவதற்குக் காரணமாக அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அவரது கடைசி நிமிடங்கள் அமைந்துவிட்டன‌.

கடைசி நேரத்தைப் பதிவு செய்த கைத்தொலைபேசிகாரர் எந்த எண்ணத்தில் இதனைப் பதிவு செய்தாரோ தெரியாது. ஆனால் அந்த வீடியோ பதிவு பல புரட்சிகளுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமையவிருக்கிறது என்பதுதான் பா.ரா தொடங்கி பலரின் யூகமாகும்.

அதிபராக இருந்த சதாம் தவறு செய்யாதவரல்லர். அமெரிக்காவின் நீதிமன்ற நாடகத்தில் குர்ஆன் பிரதியுடன் காட்சியளித்த‌ அதே சதாம்தான், முன்பு ஈராக்கின் வீதிகளில் தனது சிலையை வைத்திருந்தார். அவரது சிலையை இராணுவ டாங்கிகளில் கட்டி இழுத்து உடைத்த அந்த விநோதமான சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்த யாராலும் மறக்கவியலாது.

இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், இங்கிலாந்தும் என்ன செய்துக்கொண்டிருக்கின்றதோ அதற்கு ஒரு படி கீழாகத்தான் சதாமின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதற்கெல்லாம் காரணமான அதே அமெரிக்கா முன்னொரு காலத்தில் சதாமின் பின்னணியில் இருந்தது மறைக்க முடியாத உண்மை.

He "was courteous, as he always had been, to his U.S. military police guards," Maj. Gen. William B. Caldwell said. "He spoke very well to our military police, as he always had. And when getting off there at the prison site, he said farewell to his interpreter. He thanked the military police squad, the lieutenant, the squad leader, the medical doctor we had present, and the colonel that was on site."

Source : Yahoo news


தூக்கிலிடப்பட்ட காட்சியின் அலைபேசி பதிவு (கூகில் வீடியோ)

வீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று கருப்புத் துணி தவிர்த்து, சற்றும் பதட்டப்படாமல், பார்வையாளர்களாகச் சென்றிருந்த ஷியாக்கள் எழுப்பிய "முக்ததா முக்ததா" என்ற பின்னிணி சப்தத்துடன் அவருக்கு முன்னே வெளிப்படுத்திய கிண்டல்களையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் "ஹிய ஹாய் அல் மர்ஜலா" ("இதுதான் உங்கள் வீரமா?") என்று ஷியாக்களை நோக்கி வெளிப்படுத்தினார்.

இறுதி நேரம் நெருங்கும்போது "அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹ்; வ‌அஷ்ஹது அன்ன‌ முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" என்று இஸ்லாத்தின் கொள்கை வரியை முதன்முறை முழுதுமாக முழங்கினார். இரண்டாவது முழக்கத்தின் "முஹம்மத்" என்ற வார்த்தை வரை வந்தபோது தூக்கு மேடை விசை அழுத்தப்படவே, அவர் நின்ற தட்டு மிக சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட்டு கொலைக் கயிறு 69 வயது திடமான வீரமிக்க முன்னாள் அதிபரின் கழுத்தில் இறுகி உடலைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டது. அந்தக் கயிறு எதிர்பார்த்ததுபோல் அவரது உயிர் மேலெழுந்துவிட்டது.

மேலெழுந்தது சதாமின் உயிர் மட்டும் அல்ல. அவரது புகழும்தான். ஆமாம், மத்திய கிழக்குத் தலைவர்கள் தொடங்கி கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் மக்கள் மனங்களில் மரணத்தை காதலித்த மாவீரராக உயர்ந்து நிற்கிறார் சதாம்.

- Abu Umar
Jeddah, KSA

Sunday, August 06, 2006

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

"இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.

"அல்ஃபாத்திஹா" எனும் "அல்ஹம்து சூராவை" அழகிய தமிழில் "திறப்பு" கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை."

அப்பாஸ் இப்ராஹீம்
"இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை"
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI


கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.

ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் "அல்ஃபாத்திஹா" அல்லது "தோற்றுவாய்" என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

"அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்"

ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.

கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.

அரபி மூலம் - தமிழாக்கம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.

மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.

இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;

வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!

ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.

திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் "அல் ஃபாத்திஹா" எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து "திறப்பு" என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.

திறப்பு

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

* * *

உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;

உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!

எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!"

- கண்ணதாசன்


எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.

கண்ணதாசன் போற்றிய முஸ்லிம் பெருமக்கள்

சமூகத்தின் சிறந்த சான்றோர்களை, அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, மணிவிழா கண்ட பெரியோர் களை, மணவிழா கண்ட புதுமண மக்களைக் கவியரசர் கண்ணதாசன் அவ்வப்போது வாழ்த்துப் பாடி மகிழ்ந் திருக்கிறார். சாதி மத பேதமில்லாமல் எல்லாத் தரப் பினரையுமே அவர் மனங்கனிந்து வாழ்த்தியிருக்கிறார். முஸ்லிம் பெருமக்கள் பலரையும் அவர் போற்றிப் பாடியிருக்கிறார்.

திருச்சியிலுள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிறுவிய வள்ளல் ஜமால் முகம்மதின் கல்விப் பணியையும் கொடைத் திறனையும் போற்றிப் பாராட்டுகிறார் கண்ணதாசன்.

"சேர்த்துக் காத்துச் செலவுசெய் கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முகம்மது; தமிழக மக்களின்
கல்விப் பசிக்குக் கனிகள் கொடுத்தவர்;
ஊருணி நீர்போல் உலகம் முழுதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்!
சென்னை நகரிலும் திருச்சி நகரிலும்
கல்விக் கூடம் கண்டவர் முகம்மது!
சீதக் காதியின் சிவந்த கரம்போல்
அள்ளித் தந்தவர்; அருட்பே ராலே
விளங்கும் இந்த வித்தக சாலை
அறிவு மாணவர் ஆயிரம் வளர்த்துத்
தானும் வளர்ந்து தழைத்தினி தோங்குக!"

("கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்" பக். 146)


கவியரசரால் வாழ்த்தப்பட்ட திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அண்மையில் பொன்விழாக் கொண்டாடிக் கல்விப் பணியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மை யின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.

"புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!"

("கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்" பக். 158)


நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.

"நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்" என்ற நூலை இயற்றியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. அவருடைய நூலுக்குக் கண்ணதாசன் வழங்கிய அணிந்துரையில்,

"நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!"


என்று மனம் திறந்து பாராட்டுகின்றார். சமயநெறி நோக்காது ஆற்றல் மிக்க கவிஞர்களைத் தம் கவிதை வரிகளால் ஊக்குவிப்பது, கவியரசரின் இயல்பு!

கண்ணதாசன் வாழ்த்திய முஸ்லிம் மணமக்கள் முஸ்லிம் பெருமக்களைப் போற்றியது போன்றே தம்முடைய முஸ்லிம் நண்பர்களுக்கு நடைபெற்ற திருமண விழாக்களின் போது, அருமையான வாழ்த்துப் பாக்களை அகங்கனிந்து பாடி நல்லாசி வழங்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

"மணநாள் என்பது வாழ்வின் திருநாள்!
நிக்காஹ் முடிக்கும் நிகரிலாப் பொன்னாள்!
இல்லறம் தொடங்கும் இளமைத் தனிநாள்!
நபிகள் பெருமான் நடத்திய வாழ்வை
வாழ்க்கைத் துணையொடும் வாழ்ந்த
பெருமையை
முகமது ஹனீபா மனதிற் கொண்டு
நீண்ட நாள் வாழ நெஞ்சார வாழ்த்துவேன்!
நானும் அவனும் நகமும் சதையும்
பூவும் காம்பும் பொன்னும் ஒளியும்
இனியதோர் நட்புக்கு இலக்கணம் நாங்கள்
அதனால் தானே அன்பனின் மணத்தை
ஆயிரம் மைல்கள் ஆசையில் கடந்து
காணவந் துள்ளேன் கனிந்து வந்துள்ளேன்!"


என்று தம் நண்பன் முகம்மது ஹனீபாவோடு தமக்குள்ள நட்பின் ஆழத்தை இயம்பி மகிழும் கண்ணதாசன்,

"எல்லாம் வல்ல இறைவன் மூலவன்
அல்லா அருளால் அனைத்தையும் பெறுக!"


என்று மணவாழ்த்தை முத்தாய்ப்பாக முடிக்கிறார். முகம்மது ஹனீபா அன்ஷர் பேகம் மணமக்களை வாழ்த்தியது போலவே, தமது நண்பர்களாகிய சவுக்கத் அலீ மரியம் பீவிக்கும், நூர் முஹம்மது முஹம்மது பீவிக்கும் நடைபெற்ற திருமணங்களின் போதும் மங்கல வாழ்த்துப் பாடியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மணமக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுவதோடு,

"எல்லாம் வல்ல அருளாளன்
எல்லை இல்லாப் பேராளன்
அல்லா என்றும் உமைக்காப்பார்
அன்பை உணரும் இறையன்றோ!"


என்று இறைவனிடம் இறைஞ்சவும் செய்கிறார்.

கவியரசர் தந்த இஸ்லாமிய கீதங்கள் : ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல் களை எழுதித் தமிழ்ப் படவுலகில் தனியாட்சி செலுத் தியவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய இசைப் பாடல்களில் இஸ்லாமிய கீதங்களும் உண்டு.

"எல்லாரும் கொண்டாடுவோம்!
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லாரும் கொண்டாடுவோம்!"


என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி எல்லாராலும் இன்றளவும் பாடப்படுகின்ற, காலத்தை வென்று நிற்கும் இசைப்பாடலாகும்.

பாவமன்னிப்பு, சங்கர் சலீம் சைமன், நான் அவனில்லை, குழந்தைக்காக..., கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கருத்துகள் அமைந்த இசைப்பாடல் களைக் கவியரசர் கண்ணதாசன் பாடியுள்ளார்.

நிறைவுரை

இதுகாறும் கண்டவற்றால் முஸ்லிம் நண்பர் களோடும், கவிஞர்களோடும், அறிஞர்களோடும், பெரிய வர்களோடும் கவியரசர் கண்ணதாசன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் என்பதை உணர்கிறோம்.

நட்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கவியரசர் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத மேற்கொண்ட முயற்சியும், திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையும், "அல்ஃபாத்திஹா" எனப்படும் திருமறையின் தோற்று வாய்க்குத் "திறப்பு" என்ற தலைப்பில் அவர் தந்துள்ள மொழியாக்கமும் கண்ணதாசனின் இஸ்லாமிய ஈடு பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மனித நேய மகாகவிக்கு முஸ்லிம் மக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்

(கட்டுரையாளர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்.)

நன்றி: சமரசம் 1-15 ஜூலை 2006

Friday, July 07, 2006

நூல் மதிப்புரை - நான் புரிந்து கொண்ட நபிகள்

நூல் மதிப்புரை: ந. முத்துமோகன்

ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து 'நான் புரிந்து கொண்ட நபிகள்' என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

மார்க்சியம், பெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது.

மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய அவசியங்கள் இருக்கின்றன. ஒரு மார்க்சியராக இருந்து கொண்டு அ.மார்க்ஸ் இந்தப் பணியைச் செய்கிறார் என்பது நல்ல விசயம்.

நாம் அறிந்து வைத்திருக்கின்ற இஸ்லாத்திற்கு 1400 ஆண்டுகால வரலாறு என்பது ஒரு புறமிருக்க, இந்த வரலாற்றில் அதன் ஆரம்பக் கட்டம், கலிபாக்களின் காலம், அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பேரரசாகப் பரவக்கூடிய காலம், இந்தியாவுக்குள் இஸ்லாம் வந்த காலம், உலக அளவிலான காலனி ஆட்சிக்காலம், காலனி எதிர்ப்புகள் தொடங்கிய காலம், இஸ்லாம் குறித்தான அல்லது அரபு தேசங்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய கற்பிதங்கள், இன்றைய இஸ்லாமின் நெருக்கடிகள் என இவை எல்லாவற்றுக்குள்ளும் புதையுண்ட ஒன்றாக தோற்றகால இஸ்லாம் குறித்த மதிப்பீடு மறைந்து கிடக்கிறது.

உள்ளுக்குள் கிடக்கின்ற இந்த இஸ்லாமின் செய்திகளை இன்றைய அரசியல் சமூக பார்வையை கொண்டு மீட்டெடுத்தல் என்பது முக்கியமான பணியாகத் தெரிகிறது. அ.மார்க்சின் இந்தத் தலையீடு நல்ல ஒரு தலையீடு. இஸ்லாம் என்ற மதத்தை அணுகுவது எப்படி என்பதைப் பற்றி முறையியல் ரீதியாக சில கோட்பாடுகளை, சில வழிகாட்டுதல்களை மார்க்ஸினால் இந்த நூலில் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை அ.மார்க்ஸ் எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்க்கும்போது, நபிகள் நாயகம் எல்லா சாதாரண மனிதர்களையும் போலவே கருவானவர், உருவானவர், நோயுற்று மறைந்தவர் என்ற செய்தியைப் பதிவு செய்கிறார். அவர், அற்புதங்களை நிகழ்த்தாதவர், வெற்றி தோல்விகளை அனுபவித்தவர், நபிகளின் வாழ்வில் ஏழ்மை உண்டு, துயரம் உண்டு என்று நபிகளை அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தக் கூடிய பின்புலம் மிக முக்கியமானது. வேறொரு கட்டுரையில் நபிகளின் மரணத்தை அவர் சித்தரிக்கிறார். நபிகள் இறைத்தூதர் என்றாலும் ஒரு மனிதருடைய மரணமாக - ஒப்பீட்டுக்காக சொல்வதாக இருந்தால் அவர் உயிர்த் தெழவில்லை என்ற இந்த மதிப்பீடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

நாம் அவதாரக் கடவுள்களை வைத்திருக்கிறோம், அவதாரங்களை வைத்திருக்கிறோம், இறை மைந்தர்களை வைத்திருக்கிறோம். ஒரு மதம் என்று சொன்னால் அதில் அதிசயத் தன்மை இருக்க வேண்டும். அதிசயங்களை நிகழ்த்தவில்லை என்றால் அவர் ஆண்டவனில்லை, ஆண்டவனோடு தொடர்பு கொண்டவரில்லை என்ற பார்வைகள் இருக்கக் கூடிய பின்புலத்தில் நபிகளை மனிதராக வாழ்ந்தவர், வயிறு நிறைய பேரீச்சம் பழங்களைக்கூட உண்ணாதவர், வணிகத்தில் ஈடுபட்டவர் நபிகள் என்று சித்தரிப்பது எல்லாமே வித்தியாசமான ஆனால் அவசியமான சித்தரிப்பு.

இறை அனுபவங்களை பெறக்கூடிய நேரத்தில் 'ஓதுவீர்' என்ற அந்த இறைச்செய்தி கிடைத்தவுடன் அதனுடைய அர்த்தம் ஓரளவுக்குப் புரியாத நிலையில் மனைவி கதீஜாவிடம் ஓடிவந்தார் நபிகள். கதீஜா அது இறை செய்தியாக இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பிறகுதான் நபிகள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த இறை செய்தியை ஏற்பவராக ஆகிறார்.

இறைசெய்தி நபிகளிடம் இறங்கும் பொழுது, அவர் அனுபவிக்கக் கூடிய உடல் வாதைகள், என்னுடைய உடம்பிலிருந்து உயிர் கிழித்தெறியப் பட்டது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது என்ற நபிகளி வார்த்தைகள் இவற்றையெல்லாம் மார்க்ஸ் பதிவு செய்கிறார்.

இறைவெளிப்பாடு என்பதை இந்திய தத்துவமரபில் பேரின்பம் என்று சொல்வார்கள். பேரின்பம் என்று சொல்வது அந்த செய்தி இறைவனிடம் இருந்து வந்தது என்பதை கௌரவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இறைச்செய்தி என்பது மிக சிக்கலான ஒரு அனுபவம். சமூகப் பிரச்சனைகளை சமய மொழியில் அனுபவிக்கக் கூடிய ஒரு மனிதர், நெருக்கடிகளை தன்னிலேயே அனுபவிக்கும் போது, இறைச் செய்தி என்ற ஒன்று அவருள் எப்படி நிகழ்கிறது என்பதை ரியலிஸ்டிக்காக என்று சொல்கிறோமே, அவ்வாறு எடுத்துக் காட்டுகிறார்.

இந்த தளத்தில் வைத்துப் பார்க்கும்போது நபிகளை அதிசயங்களுக்கு அப்பாற்பட்டவராக, சாதாரண ஏழையாக வணிகச்சூழலில் வாழ்ந்து, அலைந்து, திரிந்து அந்த மக்களின் பிரச்சனைகளை தன்னுடைய நெஞ்சிலே சுமந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று நிரந்தரமாக தேடிக் கொண்டே இருந்து, அதற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அதன் மூலமாக புதியதொரு மதத்தை தொடங்குவது போன்ற ஒரு விடிவை நோக்கி நடந்து சென்ற மனிதராகக் காட்டுகிறார். இது அ.மார்க்சின் சித்தரிப்பு என்பது ஒரு புறமிருக்க இஸ்லாத்தின் தோற்றகாலச் சூழல்களை வெகுவாக நெருங்கிச் செல்லும் முயற்சியாகும்.

அ.மார்க்ஸின் இந்தச் சித்தரிப்பை முனைப்பாக நாம் முன்னெடுத்தச் செல்ல வேண்டும். இது போன்ற ஒரு சாதாரண மனிதராக நாம் ஏசுவை சித்தரிக்கத் தொடங்கினால் எப்படி சித்தரிப்போம். எப்படிச் சித்தரிக்க முடியும்? என்ற முயற்சிகளில் கூட ஈடுபடுவது நல்லது. இது போன்ற ஒரு சித்தரிப்புக்கு வள்ளலாரையோ, குருநானக்கையோ கூட நாம் ஆட்படுத்த வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு அற்புதமான எடுத்துக் காட்டாக மார்க்ஸ் ரொம்ப அழகாக நபிகள் நாயகத்தை இந்தப் புத்தகத்தில் வளர்த்தெடுக்கிறார்.

இரண்டாவது இந்த நூலில் பேசப்படும் விசயம், சமூகத் தளத்தை நோக்கி பரவும் பொழுது, இஸ்லாத்தின் சிந்தனை தோற்றம் எப்படி நிகழ்கிறது என்பதற்கான புறச் சூழல்களையும் அ.மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். இனக்குழு மரபுகளும் வணிகக்குழு மரபுகளும் நிறைந்த ஒரு வட்டாரமாக, உள்ளுக்குள் கிட்டத்தட்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்கக் கூடிய நிலைக்கு அராபிய சமூகம் ஏற்கெனவே தயாராக இருந்தது. ஆனால் இனக்குழுக்களின் இடையிலான சண்டைகள், இனக்குழுக்கள் வணிகப் பாதைகளை கைப்பற்றுவது, வணிகக்குழுக்கள் இடையில் உள்ள சண்டைகள் என்ற சூழலில் ஒருங்கிணைந்த சமூக வாழ்வை உருவாக்கக்கூடிய தேடலுக்கு ஆட்பட்ட சமுதாயமாக அது இருந்தது. ஏற்கனவே அங்கு ஏக இறைக் கோட்பாட்டைப் பேசிய ஹனீப்கள் இருந்தார்கள்.

'அரேபியருக்கு ஒரு இறைத்தூதரை அருளுங்கள்' என்ற ஒரு எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் ஏற்கெனவே தோன்றிவிட்டது என்ற செய்தியை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்த எதிர்பார்ப்பை விடுதலையின் ஊற்றுக் கண்ணாக ஆக்கியவர் நபிகள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். வரலாற்றின் நெருக்கடிகளில் எப்படி பிரம்மாண்டமான மனிதர்கள் தோன்றுகிறார்கள் என்பதைச் சொல்லுகிற இடமிது.

திருக்குர்ஆனைப் பற்றி குறிப்பிடும்போது, அந்தக் காலத்தினுடைய சமகால அரசியல் ஆவணமாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதைப்போல நபிகள், இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூக திட்டத்தைத் தந்தவர் என்று குறிப்பிடுகிறார். அறவியல் கூறுகள், அரசியல் கூறுகள், இறையியல் கூறுகள் கொண்ட திட்டமாகத்தான் நமக்கு அது கிடைக்கிறது.

நபிகள் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலமாக யூதமதத்தையும், கிறித்தவ மதத்தையும் அதனுடைய சுற்று நிலைகளில் எடுத்துப் பார்த்தோம் என்றால் 7ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய துறவு நிறுவனங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த துறவு நிறுவனங்களின் பலத்தை மட்டுமே அது முன்னிலைப்படுத்திய காலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தில் நபிகள் உலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன்வைத்தார் என்பது முக்கியம். இந்த உலகிலேயே சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை எப்படிக் கொண்டு வருவது என்ற ஒரு கேள்வியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அ.மார்க்ஸ் நன்கு எடுத்துக் காட்டுகிறார். நபிகளின் திட்டம் ஒரு அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதாக இருந்தது என்பதை, நபிகளின் செயல்பாடுகள், அவை போர்களாக இருக்கலாம், அல்லது நபிகள் ஏராளமாக செய்து கொண்ட ஒப்பந்தங்களாக இருக்கலாம். அந்த ஒப்பந்தங்களிலும், போர்களிலும் சமூகத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதுதான் முனைப்பாக இருந்தது என்பதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட இஸ்லாத்திற்குள் துறவு நிறுவனம் கிடையாது என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். சூஃபியத்திற்குள் கொஞ்சம் துறவு நுழைந்திருக்கலாம், இருந்தாலும் துறவு நிறுவனங்களை, அப்பாலை சமயப் பண்புகளை சொல்லாத சமயம் இஸ்லாம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நபிகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தியவர் என்பதை மிக அழகாக அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். துறவு மூலமாக, துறவினை நிறுவனமாக ஆக்குவதன் மூலமாக, வெறும் அறரீதியான போதனைகளை நிகழ்ததுவதன் மூலமாக, அல்லது அவரவர் தங்கள் மனங்களை செப்பமிட்டுக் கொள்வதன் மூலமாக என்ற தளங்களுக்குள்தான் மதங்கள் வேலை செய்து வந்திருக்கின்றன. நபிகளைப் பொறுத்த மட்டில் மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்தியவர், தன்னுடைய இயக்கத்தை ஒரு ரகசிய இயக்கமாக நடத்தியவர். நபிகள் வாழ்க்கையின் ஒருபகுதி தலைமறைவு வாழ்க்கையாக அமைகிறது. புலம் பெயர்ந்து செல்கிறார். இந்தத் தலைமறைவு, புலம் பெயர்தல், ஆயுதம் தாங்கியப் போராட்டம் இவை எல்லாம் சமகால அரசியல் சொல்லாடல்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமகால அரசியல் சொல்லாடல்களைக் கொண்டு நபிகளை அணுகும் போது நபிகளின் செயல்பாடுகள் புதிய தளத்தில் அர்த்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் பணியை இந்தப் புத்தகத்தில் அ.மார்க்ஸால் நன்றாக செய்ய முடிந்துள்ளது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம்.

அதுபோல் மேலை கிறித்தவம் இஸ்லாமின் தோற்ற காலத்திலிருந்தே நபிகளுக்கு எதிராக, இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டமைத்த கற்பிதங்கள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இறை அனுபவத்தின் போது உடல்வாதைகள் இருந்தன என்று நபிகள் சொல்கிறார் என்றால் அதைக் கொச்சைப் படுத்தக் கூடிய விதத்தில் அது இறை செய்தியல்ல, இது சாத்தானுடைய செய்தி என்று சொல்வது, இஸ்லாத்தை கிறித்துவத்திற்கு எதிரானது என்று சித்தரிப்பது, இதுபோன்ற கற்பிதங்களை எல்லாம் கட்டி எழுப்பினார்கள் என்பதைக் காண முடிகிறது.
இந்தக் கற்பிதங்கள் பற்றி பலவேளைகளில் நாம் கவனப்படுத்தியது கிடையாது. ஆனால் உலக வரலாற்றின் மிக முக்கியமான விசயமாக இந்த கற்பிதங்கள் இருந்தன.

ஒரு அர்த்தத்தில் ஐரோப்பிய சமூகம் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக, இந்தியர்களுக்கு எதிராக அல்லது கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு எதிராக கற்பிதங்களை உண்டாக்குவதற்கு மிக முன்னதாக இஸ்லாத்தை தனக்கொரு மிகப்பெரிய போட்டி சக்தியாகப் பார்த்தது. இது எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சமூகம் இஸ்லாத்தையும், அரபு சமூகத்தையும், அதன் அரசியல் வடிவத்தையும் மிகப்பெரிய போட்டியாக நினைத்தது என்பதை மனதில் வைத்து பார்ப்போமானால் நமக்கு இந்தக் காலகட்டத்திலிருந்து கிடைக்கின்ற வரலாற்றை முழுவதும் வேறுவிதமாகப் பயிலுவதற்கு பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

கிறிஸ்தவ-இஸ்லாமிய போட்டியின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப் படவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி தனியாகக் கூட ஏராளமாக ஆய்வு செய்ய வேண்டுமென்பது முக்கியம். இந்தப் போட்டியில் ஓரளவுக்கு தோல்வியை சந்தித்தவர்கள் அரேபியர்கள் என்ற தளத்தில்தான் இன்றைய இஸ்லாம் வரையிலான நமக்குக் கிடைக்கக்கூடிய சித்தரிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தத் தோல்வி மனப்பான்மை என்பது அரேபியர்களை, இஸ்லாமியர்களை மேலும் மேலும் தங்களுக்குள்ளேயே, மத எல்லைகளுக்குள்ளேயே தங்களை அடக்கிக் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதையெல்லாம் கருத வேண்டியிருக்கிறது.

16-17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா காலனி ஆட்சியைத் தொடங்கிய போது அந்தக் காலனிய ஆட்சியினுடைய கொடூரமானத் தாக்குதல்களுக்கு அரேபிய சமூகம் / இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டது என்பதும், இந்தக் காலனி ஆட்சியில் பயன்படுத்தப் பட்ட வன்முறையை அரேபியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுடன் அந்த வன்முறையை அவர்களால் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை என்பதெல்லாம் சேர்ந்துதான் பிற்கால இஸ்லாத்தின் வரலாற்றைத் தீர்மானித்தன என்று கூட சொல்ல முடியும். மேற்கு நாடுகள் தாங்கள் உருவாக்கிய இஸ்லாமுக்கு எதிரான கற்பிதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏராளமாக இறக்குமதி செய்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இறக்குமதி செய்தது. ஒட்டுமொத்த உலகின் அபிப்பிராயமாக சார்ந்த பிலாலுக்கு பாங்கு சொல்லும் உரிமையை வழங்கியது, அதைப்பார்த்து பலர் முகம் சுளித்த போதும் நபிகள் அதில் பிலாலின் பக்கமே நின்றது போன்ற விசயங்கள் இவையெல்லாம் இஸ்லாத்தின் சமூக உள்ளடக்கத்தை இன்னும் அதிகமாக பலப்படுத்துகின்றன என்று அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

முதல் கலீபா அபுபக்கர் ஆட்சி ஏற்கும் பொழுது சொன்ன ஒருவரியை எடுத்துச் சொல்லி இருக்கிறார். உங்களில் பலம் குறைந்தவரே என் கண்ணில் பலம் வாய்ந்தவர், அல்லாவின் விருப்போடு நான் அவருக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை இது தொடரும், உங்களில் பலமிகுந்தவர் என் கண்ணில் பலமற்றவராகவே தெரிகிறார். அல்லாவின் விருப்பத்துடன் அவர்களிடமிருந்து பிறரின் உரிமைகளை ஈட்டிக்கொடுக்கும் வரை. நான் அல்லாவுக்கும் அவன் தூதருக்கும் பணிந்து நடக்காத போது நீங்கள் என்னைப் பணிய வேண்டியதில்லை என்ற வாசகங்களை பதிவு செய்திருக்கிறார்.

மதங்களின் ஏக இறை கொள்கைக்கும் இன்றைய சில விவாதங்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஏக இறைக் கொள்கை என்பது புனித அதிகாரங்களுக்காக உருவாகி வந்தது என்ற குற்றச்சாட்டு மதங்களை நோக்கி வைக்கப்படுகிறது. ஆனால் நபிகளைப் பற்றி பேசும்போது அவருடைய ஏக இறைக் கொள்கையின் வழி மக்களை ஒன்று படுத்துவதே தவிர அதை அதிகார மையமாக உருவாக்கவில்லை என்பது. அபுபக்கரின் பலமிக்கவர், பலமற்றவர், உரிமைமிக்கவர், உரிமையற்றவர் என்ற சொல்லாடல் அதிகாரம் குறித்த கருத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஏக இறை என்ற விஷயத்தை வைத்து ஒரு அதிகார மையமாக உருவாகாமல் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சமத்துவம் போன்ற தளத்தை உருவாக்க இஸ்லாம் முயற்சி செய்திருக்கிறது என்ற செய்திகளை நமக்கு இந்த நூல் சொல்கிறது.

இந்த நூலை முதல் பார்வையில் பார்க்கும் பொழுது, அ.மார்க்ஸ் விமர்சனம் இல்லாமல் இஸ்லாத்தை ஆதரித்து ஒரு நூலை எழுதி இருக்கிறார் என்ற வெளித்தோற்றம் கிடைக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டுமல்ல, ஏசுவை மையமாக வைத்து கிறித்தவர்கள் வரலாற்றை, பௌத்தத்தின் வரலாற்றை, இந்திய நாட்டில் தோன்றிய சமயம் சார்ந்த சில சிந்தனையாளர்களின் வரலாற்றை அணுகிப் பார்ப்பதற்கான ஒரு முறையியலை இந்த நூல் தந்திருக்கிறது. எனவே விமர்சனம் இல்லாமல் ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்று சொல்வதற்கு இடமில்லை என்று நான் வலுவாக நம்புகிறேன்.

-ந. முத்துமோகன்

நான் புரிந்து கொண்ட நபிகள்
ஆசிரியர் : அ.மார்க்ஸ்
வெளியீடு : கருப்பு பிரதிகள்,
45ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை - 5.
விலை : ரூ.80/- பக்கம் : 204


நன்றி: கீற்று

Tuesday, June 27, 2006

இந்து பயங்கரவாதிகளின் தண்டனை ரத்து

கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை
11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து


சென்னை, ஜுன் 28,

கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

கோவை கலவரம்

கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்களை சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.

செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவைஅரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த கும்பலை சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்தும் எரித்தனர். அந்த பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்ததாக சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனை பார்த்த கலவர கும்பல் நேராக அந்த வேனுக்கு சென்று வேனில் இருந்த அபீப் ரகுமான் என்பவரை கத்தியால் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

4 பேர் படுகொலை

பின்னர் வேனில் இருந்த ஆரிஸ் என்பவரை இழுத்துப்போட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது. இதில் அவரும் இறந்தார். சற்று நேரத்தில் உக்கடம் கலவரத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிப்பும், சுல்தானும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் கூட்டத்தினரை பார்த்ததும் அரசு ஆஸ்பத்திரி வாசலிலேயே ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடினார்கள். ஆனால் வன்முறை கும்பல் அவர்களை விரட்டியது. இதில் ஆரிப்பை துரத்தி அடித்து கொன்றனர்.

சுல்தான் காயத்துடன் தப்பிவிட்டார். மேலும் லியாகத் அலிகான் என்பவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவரை ஆஸ்பத்திரியின் கேட்டிலேயே வன்முறை கும்பல் தடியால் அடித்துக்கொன்றது. இந்த கலவரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் அபீப் ரகுமான், ஆரிஸ், ஆரிப், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 30.11.97 அன்று நடந்தது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை

இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்தார்.

பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ëப்பு வழங்கினார்.

சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு 18.8.2000 அன்று கூறப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை எதிர்த்து 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த வழக்கில் இருந்து 11 பேரையும் விடுதலை செய்தனர்.

நன்றி: தினத்தந்தி

Wednesday, April 26, 2006

மயிலாடுதுறை to இலண்டன் (செய்தி)

பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பலர் அறிந்ததே. சுடப்பட்ட குண்டுகள் திரு. மஹாஜனின் கல்லீரலையும் கணையத்தையும் கடுமையாகச் சேதப் படுத்தியுள்ளதால் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

இவருக்கு சிறப்புச் சிகிச்சையளிக்க இலண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைத்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முஹம்மது ரிலா முன்வந்துள்ளார்.

இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் திரு மஹாஜனின் கல்லீரல் கடும் சேதமடைந்துள்ளதால் அவருக்கு செயற்கைக் கல்லீரல் கணையம் மூலம் அவரது உடலியல் இயக்கங்கள் நடக்க உதவி வருகின்றனர்.

திரு மஹாஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையளிக்க உதவுமாறு இந்துஜா மருத்துவமனை மருத்துவர் குழு அழைப்பின் பேரில் டாக்டர் ரிலா மும்பை வருகிறார். டாக்டர் ரிலா 800க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். ஐந்து வயதே நிரம்பிய அயர்லாந்து குழந்தை ஒன்றுக்கு செய்த கல்லீரல் அறுவை சிகிச்சையால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் பிரசுரிக்கப் பட்டது.

டாக்டர். ரிலா தமிழகத்தைச் சேர்ந்தவராவர். இவர் மயிலாடுதுறை நகரில் பிறந்தவர். தனது மருத்துவப் பட்ட மற்றும் மேற்பட்டப் படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தபின் ஐக்கிய இராச்சியம் சென்று உயர்பட்டப் படிப்பையும் FRCS அங்கீகாரத்தையும் 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.

டாக்டர் ரிலா ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்து தர முன்வந்துள்ளார்.

இவர் 'பிளவு கல்லீரல்' எனப்படும் ஒரு ஆரோக்கியமான கல்லீரலை இரு நோயாளிகளுக்குப் பிரித்து அளிக்கும் முறையை அறிமுகப் படுத்தி அதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லீரல் மாற்று அறுவைத் துரையில் 100க்கும் பேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள டாக்டர் ரிலா, உலகம் முழுவதும் இத்துறையில் பல்வேறு மருத்துவர்களுக்குப் பயிற்சியும் அளித்து மாபெரும் சேவை ஆற்றி வருகிறார்.

நன்றி: rediff.com

Wednesday, April 12, 2006

முஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்

- முஜீப் ரகுமான்
நன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006)

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். வகுப்புவாதத்தை ஊட்டி வளர்த்த ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்றும் வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே.

பூலே தொடங்கி அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவான், போன்றவர்கள் தலித் சமூக விழிப்புணர்வை ஊட்டியதன் விளைவாக அரசியல் ரீதியாக ஓரளவுக்கேனும் சுதந்திரமாக தலித்துகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி உருவான தலித் உத்வேகம் புதிய நகர்தலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் இன்று அன்னியமாய் தீண்டத்தகாதவர்களாக இருக்கிறார்கள். கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் குறித்து கட்டமைக்கப் படும் வெகுஜன உளவியலும், பொதுப்புத்தி உருவாக்கமும் முஸ்லிம்களை சமூக, பொருளாதார அரசியல் ரீதிகளில் தீண்டத்தகாதவர்களாக மாற்றியுள்ளது. உலக அரங்கிலும், நமது சூழல்களிலும் முஸ்லிம்கள் குறித்த ஒருவித மனஉருவாக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடைநிலை சாதியத்தை எதிர்கொள்ளும் தலித்தியம் கூட பிற ஆக்கப்பூர்வமான நிலைகளில் (அணுகும்) பார்வைகளை கொண்டிருக்கிறது. அதே சமயம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்திய சமூக அமைப்பும் பல்வேறு காரணிகளும் தலித்தியம் உட்பட எதிர்நிலை மனகருத்தியலை கொண்டிருக்கிறது.

வகுப்புவாத துவேஷங்களும், மதக் கலவரங்களும், திட்டமிட்டு பரப்பப் படும் அவதூறுகளும் 'நவீன தீண்டாமையை' முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விட்டிருக்கின்றன.. அனைத்து துறைகளிலும் அனைத்து வடிவங்களிலும், அனைத்து நிலைகளிலும் 'தீண்டாமை' கொடிகட்டிப் பறக்கிறது. இன்று தீண்டாமையின் அர்த்தம் குறியீடுகளாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்திய முஸ்லிம்கள் தீண்டாமையின் நெருக்கடிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இந்திய மைய நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப் படுத்தப்பட ஏதுவாக அமைந்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியலின் அனைத்து கட்டுமானங்களிலும், உள் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு விரோதமான தீண்டாமை வியாபித்து இருக்கிறது. உண்மையான தலித் அனுபவிக்கும் பிரச்சினை இன்று முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதாக போய்விட்டது. அனைத்து முறைகளிலும் ஒடுக்கப்படும் தலித் கூட முஸ்லிம்களை தீண்டத் தகாதவர்களாக நோக்கும் நுண் அரசியல் வலைப்பின்னல்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. அனைத்துக்கும் சிகரமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மறுஉற்பத்திகளின் நுகர்விய உளவியலிலும் கூட நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்திய சமூக மனங்களின் கூட்டு பிரக்ஞையிலும், நனவிலிநிலையிலும் 'தீண்டாமை' படிவுகளாக மாறிவிட்டது.

இசுலாமிய தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமூகம் எண்ணிலடங்கா நெருக்கடிகளைசந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூக அமைப்புகளும், கட்சி அமைப்புகளும், நிறுவனங்களும், அமைப்பு சாரா அமைப்புகளும் முஸ்லிம்களை ஒரு படித்தான நிலையிலேயே அணுகுகின்றனர். பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் நலிவுற்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்திய முஸ்லிம் சமூகம். உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் எண்ணிறந்த வாய்ப்புகளை இந்திய சமூகங்களுக்கு வாரி வழங்கிய போதும் முஸ்லிம்களை பொறுத்தவரையில் எவ்வித பயனும் இல்லாமலேயே இருக்கிறது. இந்து தீவிர அமைப்புகள் நினைத்ததை சாதித்துவிட்டன. கட்சி அமைப்புகள் ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்திபடுத்திவிட்டு வாக்குறுதிகளை காற்றில் விடுவதை நிதர்சனமாகவே கடந்த காலம் நமக்கு காட்டியுள்ளது.

கீழவெண்மணிகளும், புளியங்குடிகளும் பெற்ற கவனத்தை 'குஜராத் கலவரம்' இன்னும் பெறவில்லை. அயோத்தியா இன்று மறக்கப்பட்டு விட்டது. இந்திய துணை கண்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளில் வாடும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒடுக்கி வரும் மனநிலை அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் வியாபித்து விட்டது. இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் இது குறித்த பிரக்ஞை இல்லாதது அதைவிட கொடுமையானது. தலித்துகள் முஸ்லிம்களை தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ளாததும் முஸ்லிம்களும் அதை விரும்பாததும் ஒரு புறம் இருக்கிறது. இன்றைய முஸ்லிம் அறிவு ஜீவிகள் யாவரும் காஷ்மீர் பிரச்சனை, அயோத்தியா பிரச்சனை, வக்பு வாரியம், முஸ்லிம் சட்டம் பற்றி பேசுவதோடு நின்று விடுகின்றனர். இதுகாலம் வரை கலை, இலக்கியங்கள் முஸ்லிம்களை நிராகரித்தே வந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கான பண்பாடு, வாழ்க்கை யாவும் 'அந்நியமான' இரட்டை மனதாக, இரட்டை மொழியாக, இரட்டைப் பண்பாடாக இரட்டை வாழ்க்கையாக அமைந்திருப்பதை முஸ்லிம்களிடமிருந்து கண்டுணரலாம். முஸ்லிம்களை பொறுத்த வரையில் சமூக நீதியோ, பொருளாதார நீதியோ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லி கொள்ள முடியாதென்றாலும் 'எங்களை மனிதர்களாக நினையுங்கள்' என்பது விருப்பமாக இருக்கிறது.

அந்நியப்படுத்தலில் இருந்தும், பிரதிநிதித்துவப் படுத்துதலில் இருந்தும் சக மனிதனாக பாவிக்கின்ற நிலையின்றும் பிரித்து இனம் காண வேண்டாம் என்பது தான் முக்கியமாக இருக்கிறது. சாதிய மனோநிலை கூட கடைநிலையாக்குகின்ற உபாயங்களையே செய்து வருகிறது. முஸ்லிம்கள் தீண்டாமை மனோநிலையில் வேறுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அன்மை காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்பு கார், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுகின்ற நகர்ப்புற முஸ்லிம்களின் நிலை மோசமாக ஆகியிருப்பது உதாரணம். நகர்ப்புறத்தில் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் சுயதொழில்களை அதிகம் செய்பவர்கள். இவர்களை அதிகம் தீண்டாமை கண்ணோட்டத்துடன் வெறுத்து ஒதுக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற மனோபாவம் மீண்டும் அவர்களை அந்நியப்படுத்துகின்ற விஷயத்துடன் தொடர்புடையதாகும். இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் ஜனாதிபதியாக முடியும். நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்காவது யாராவது பட்டாசு வெடித்தால் கூட எல்லோரும் ஒருமாதிரியாக பார்க்கும் பார்வையை மட்டும் மாற்றிவிட முடியாது என்பதே எதார்த்தமான முஸ்லிம்களின் உணர்வாக இருக்கிறது. இதற்கு பொறுப்பும் முஸ்லிம்களே ஏற்க வேண்டியிருக்கின்றது. சமூக நல கண்ணோட்டமின்றி வெறுமனே சமயம் குறித்து பேசியும், விவாதித்தும் சண்டையிட்டு கொண்டிருக்கின்ற சூழல்களே இந்தியாவில் அதிகம் இருக்கிறது. நடுத்தர சமூகம் உருவாகாத ஒரு சமூக அமைப்பாக இன்னுமும் இருந்து கொண்டு பத்து சத மேட்டிமை முஸ்லிம்களின் நலனுக்காக தொண்ணூறு சதவீத முஸ்லிம்கள் பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற அளவில் அதிக உரிமைகள் பெறுப்படுவதாக இந்து அமைப்புகள் கூறிக் கொண்டிருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இங்கே இல்லை. சிறுபான்மையினர் என்ற அளவில் ஏமாற்றப்ஷபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கண்கூடாகும். கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவையில் நாளுக்கு நாள் அருகிக் குறைந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இன்னும் அரசை சாராமல் பொது, தனியார் துறைகளைச் சாராமல் தனியே காலம் கடத்தி விட முடியாது. சுய தொழிலால் தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த போதும் அடிக்கடி நடக்கின்ற கலவரங்கள் முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை மையப்படுத்துகின்றன. கடைநிலை வியாபாரங்களை செய்கின்ற முஸ்லிம்கள் இன்றைய உலகமயமாதலில் சிக்கி தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறார்கள். வியாபரத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் இந்த சமூகம் இன்றைய நவ வியாபார உத்திகளை அறியாமலும், வியாபார நிலை மாற்றங்களிலும், அடுத்த கட்ட நுகர்வுகளை சந்திக்கும் ஆற்றல் இல்லாமையாலும் 'வியாபாரம்' நலிந்து போய் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் 'பிரதிநிதித்துவம்' மட்டுமே அதில் பயனளிக்க கூடியதாக இருக்கும். தனியார் துறைகளில், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முஸ்லிம்களது வாழ்வுரிமை பிரச்சனைகளை எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். வெறுமனே பொதுசிவில் சட்டஎதிர்ப்போ, பாபரி மஸ்ஜித் பிரச்சனையோ வாழ்க்கைக்கு தேவையானதை செய்துவிடாது என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

பண்பாட்டு ஆதிக்கத்தையும் மௌன பண்பாட்டையும் வரித்துக் கொண்டிருக்கிற பாசிசம் ஒரு புறம் உரையாடல்களை துடைத்தெறிந்து கொண்டு மறுபுறம் வன்முறையில் ஈடுபடுகிறது. வன்முறையாளர்கள் தேசியவாதிகளாக இருக்க கூடிய சித்திரமும் வன்முறையில் பலிகடா ஆகுபவர்கள் தேசவிரோதிகளாக (உருவாக்குகிறது - ஊடகத்தினாலும்) மனச்சித்திரங்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக இழிவுகளுக்கு சமமான அல்லது இதற்கு மேலான தீண்டாமை / முஸ்லிம் விரோத உணர்வை பிரச்சனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கான வாழ்வாதார உரிமைகளை - எதிர் மனோபாவங்களை பெற்றிடவும் மாற்றிடவும் ஆன போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அல்லது ஏனைய நிலையில் உள்ளவர்களுடனான ஒத்திசைவுகளும், கூட்டு செயல்களும் உண்மையில் முஸ்லிம்களை தீண்டாதவர்களாகவே மாற்றியிருக்கிறது. சமூகத்தின் அத்தனை இடைநிலை உழைப்பு செயல்களை செய்கின்ற முஸ்லிம்களை அன்னியர்களாக அணுகும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான குறைந்தபட்ச செயல்களை உருவாக்க வேண்டும். அரசும், அதிகாரமும் கற்பித மனோபாவமும் தான் முஸ்லிம்களின் உளவியல் நெருக்கடிகள் அதிகமாக காரணமாக இருக்கின்றன. ஒரு தலித் தனது சாதியின் பெயரால் அழைக்கப்படும் போது படும் மனநெருக்கடிகளுக்கு மேலாக முஸ்லிமை தீவிரவாதி என்றழைக்கப்படும் போது அனுபவிக்கிறான்.

வெகுகாலம் வரை பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் தான் மாபெரும் இஸ்லாமிய விரோதிகள் என்று கற்பிக்கப்பட்டதை தாண்டி பிரக்ஞை பூர்வமான இன்றைய எதார்த்த நிலையை உணர வேண்டியதன் தருணத்தை அலச வேண்டியிருக்கிறது திராவிட அமைப்பினரும் தலித் அமைப்பினரும் 'பதவி ஆசையில்' பார்ப்பனர்களுடன் இணைந்து செயல்பட்டதும் வன்முறை கலவரங்களில் தலித்துகளே முன்னணி படையினராக திகழ்ந்து படுகொலை நடத்தியதையும் அலச வேண்டியதிருக்கிறது. தேசம், தேசியம், அடையாள பண்பாடுகள், அறம், ஒழுக்கம் போன்ற ஆதிக்க கருத்தியல்களை மறுதலித்துக் கொண்டு வாழ்வதற்கான நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.

எங்களுக்கான பங்கு என்ன? பிரதிநிதித்துவம் என்ன என்பதை பற்றி தான் உரையாடல் நடத்த வேண்டிய சூழலில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வித ஒடுக்குதல்களையும் எதிர்கொள்ள பெருங் கதையாடல்களையும், புனைவுகளையும், கற்பிதங்களையும் கட்டுடைக்க வேண்டியதும் அடக்கு முறைகளுக்கு எதிரான பிரக்ஞைகளை வளர்த்தெடுப்பதுமே இப்போதைய தேவையாக இருக்கிறது.