Sunday, August 06, 2006

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

"இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.

"அல்ஃபாத்திஹா" எனும் "அல்ஹம்து சூராவை" அழகிய தமிழில் "திறப்பு" கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை."

அப்பாஸ் இப்ராஹீம்
"இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை"
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI


கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.

ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் "அல்ஃபாத்திஹா" அல்லது "தோற்றுவாய்" என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

"அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்"

ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.

கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.

அரபி மூலம் - தமிழாக்கம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.

மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.

இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;

வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!

ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.

திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் "அல் ஃபாத்திஹா" எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து "திறப்பு" என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.

திறப்பு

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

* * *

உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;

உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!

எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!"

- கண்ணதாசன்


எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.

கண்ணதாசன் போற்றிய முஸ்லிம் பெருமக்கள்

சமூகத்தின் சிறந்த சான்றோர்களை, அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, மணிவிழா கண்ட பெரியோர் களை, மணவிழா கண்ட புதுமண மக்களைக் கவியரசர் கண்ணதாசன் அவ்வப்போது வாழ்த்துப் பாடி மகிழ்ந் திருக்கிறார். சாதி மத பேதமில்லாமல் எல்லாத் தரப் பினரையுமே அவர் மனங்கனிந்து வாழ்த்தியிருக்கிறார். முஸ்லிம் பெருமக்கள் பலரையும் அவர் போற்றிப் பாடியிருக்கிறார்.

திருச்சியிலுள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிறுவிய வள்ளல் ஜமால் முகம்மதின் கல்விப் பணியையும் கொடைத் திறனையும் போற்றிப் பாராட்டுகிறார் கண்ணதாசன்.

"சேர்த்துக் காத்துச் செலவுசெய் கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முகம்மது; தமிழக மக்களின்
கல்விப் பசிக்குக் கனிகள் கொடுத்தவர்;
ஊருணி நீர்போல் உலகம் முழுதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்!
சென்னை நகரிலும் திருச்சி நகரிலும்
கல்விக் கூடம் கண்டவர் முகம்மது!
சீதக் காதியின் சிவந்த கரம்போல்
அள்ளித் தந்தவர்; அருட்பே ராலே
விளங்கும் இந்த வித்தக சாலை
அறிவு மாணவர் ஆயிரம் வளர்த்துத்
தானும் வளர்ந்து தழைத்தினி தோங்குக!"

("கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்" பக். 146)


கவியரசரால் வாழ்த்தப்பட்ட திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அண்மையில் பொன்விழாக் கொண்டாடிக் கல்விப் பணியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மை யின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.

"புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!"

("கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்" பக். 158)


நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.

"நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்" என்ற நூலை இயற்றியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. அவருடைய நூலுக்குக் கண்ணதாசன் வழங்கிய அணிந்துரையில்,

"நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!"


என்று மனம் திறந்து பாராட்டுகின்றார். சமயநெறி நோக்காது ஆற்றல் மிக்க கவிஞர்களைத் தம் கவிதை வரிகளால் ஊக்குவிப்பது, கவியரசரின் இயல்பு!

கண்ணதாசன் வாழ்த்திய முஸ்லிம் மணமக்கள் முஸ்லிம் பெருமக்களைப் போற்றியது போன்றே தம்முடைய முஸ்லிம் நண்பர்களுக்கு நடைபெற்ற திருமண விழாக்களின் போது, அருமையான வாழ்த்துப் பாக்களை அகங்கனிந்து பாடி நல்லாசி வழங்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

"மணநாள் என்பது வாழ்வின் திருநாள்!
நிக்காஹ் முடிக்கும் நிகரிலாப் பொன்னாள்!
இல்லறம் தொடங்கும் இளமைத் தனிநாள்!
நபிகள் பெருமான் நடத்திய வாழ்வை
வாழ்க்கைத் துணையொடும் வாழ்ந்த
பெருமையை
முகமது ஹனீபா மனதிற் கொண்டு
நீண்ட நாள் வாழ நெஞ்சார வாழ்த்துவேன்!
நானும் அவனும் நகமும் சதையும்
பூவும் காம்பும் பொன்னும் ஒளியும்
இனியதோர் நட்புக்கு இலக்கணம் நாங்கள்
அதனால் தானே அன்பனின் மணத்தை
ஆயிரம் மைல்கள் ஆசையில் கடந்து
காணவந் துள்ளேன் கனிந்து வந்துள்ளேன்!"


என்று தம் நண்பன் முகம்மது ஹனீபாவோடு தமக்குள்ள நட்பின் ஆழத்தை இயம்பி மகிழும் கண்ணதாசன்,

"எல்லாம் வல்ல இறைவன் மூலவன்
அல்லா அருளால் அனைத்தையும் பெறுக!"


என்று மணவாழ்த்தை முத்தாய்ப்பாக முடிக்கிறார். முகம்மது ஹனீபா அன்ஷர் பேகம் மணமக்களை வாழ்த்தியது போலவே, தமது நண்பர்களாகிய சவுக்கத் அலீ மரியம் பீவிக்கும், நூர் முஹம்மது முஹம்மது பீவிக்கும் நடைபெற்ற திருமணங்களின் போதும் மங்கல வாழ்த்துப் பாடியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மணமக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுவதோடு,

"எல்லாம் வல்ல அருளாளன்
எல்லை இல்லாப் பேராளன்
அல்லா என்றும் உமைக்காப்பார்
அன்பை உணரும் இறையன்றோ!"


என்று இறைவனிடம் இறைஞ்சவும் செய்கிறார்.

கவியரசர் தந்த இஸ்லாமிய கீதங்கள் : ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல் களை எழுதித் தமிழ்ப் படவுலகில் தனியாட்சி செலுத் தியவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய இசைப் பாடல்களில் இஸ்லாமிய கீதங்களும் உண்டு.

"எல்லாரும் கொண்டாடுவோம்!
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லாரும் கொண்டாடுவோம்!"


என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி எல்லாராலும் இன்றளவும் பாடப்படுகின்ற, காலத்தை வென்று நிற்கும் இசைப்பாடலாகும்.

பாவமன்னிப்பு, சங்கர் சலீம் சைமன், நான் அவனில்லை, குழந்தைக்காக..., கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கருத்துகள் அமைந்த இசைப்பாடல் களைக் கவியரசர் கண்ணதாசன் பாடியுள்ளார்.

நிறைவுரை

இதுகாறும் கண்டவற்றால் முஸ்லிம் நண்பர் களோடும், கவிஞர்களோடும், அறிஞர்களோடும், பெரிய வர்களோடும் கவியரசர் கண்ணதாசன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் என்பதை உணர்கிறோம்.

நட்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கவியரசர் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத மேற்கொண்ட முயற்சியும், திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையும், "அல்ஃபாத்திஹா" எனப்படும் திருமறையின் தோற்று வாய்க்குத் "திறப்பு" என்ற தலைப்பில் அவர் தந்துள்ள மொழியாக்கமும் கண்ணதாசனின் இஸ்லாமிய ஈடு பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மனித நேய மகாகவிக்கு முஸ்லிம் மக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்

(கட்டுரையாளர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்.)

நன்றி: சமரசம் 1-15 ஜூலை 2006

Friday, July 07, 2006

நூல் மதிப்புரை - நான் புரிந்து கொண்ட நபிகள்

நூல் மதிப்புரை: ந. முத்துமோகன்

ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து 'நான் புரிந்து கொண்ட நபிகள்' என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

மார்க்சியம், பெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது.

மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய அவசியங்கள் இருக்கின்றன. ஒரு மார்க்சியராக இருந்து கொண்டு அ.மார்க்ஸ் இந்தப் பணியைச் செய்கிறார் என்பது நல்ல விசயம்.

நாம் அறிந்து வைத்திருக்கின்ற இஸ்லாத்திற்கு 1400 ஆண்டுகால வரலாறு என்பது ஒரு புறமிருக்க, இந்த வரலாற்றில் அதன் ஆரம்பக் கட்டம், கலிபாக்களின் காலம், அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பேரரசாகப் பரவக்கூடிய காலம், இந்தியாவுக்குள் இஸ்லாம் வந்த காலம், உலக அளவிலான காலனி ஆட்சிக்காலம், காலனி எதிர்ப்புகள் தொடங்கிய காலம், இஸ்லாம் குறித்தான அல்லது அரபு தேசங்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய கற்பிதங்கள், இன்றைய இஸ்லாமின் நெருக்கடிகள் என இவை எல்லாவற்றுக்குள்ளும் புதையுண்ட ஒன்றாக தோற்றகால இஸ்லாம் குறித்த மதிப்பீடு மறைந்து கிடக்கிறது.

உள்ளுக்குள் கிடக்கின்ற இந்த இஸ்லாமின் செய்திகளை இன்றைய அரசியல் சமூக பார்வையை கொண்டு மீட்டெடுத்தல் என்பது முக்கியமான பணியாகத் தெரிகிறது. அ.மார்க்சின் இந்தத் தலையீடு நல்ல ஒரு தலையீடு. இஸ்லாம் என்ற மதத்தை அணுகுவது எப்படி என்பதைப் பற்றி முறையியல் ரீதியாக சில கோட்பாடுகளை, சில வழிகாட்டுதல்களை மார்க்ஸினால் இந்த நூலில் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை அ.மார்க்ஸ் எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்க்கும்போது, நபிகள் நாயகம் எல்லா சாதாரண மனிதர்களையும் போலவே கருவானவர், உருவானவர், நோயுற்று மறைந்தவர் என்ற செய்தியைப் பதிவு செய்கிறார். அவர், அற்புதங்களை நிகழ்த்தாதவர், வெற்றி தோல்விகளை அனுபவித்தவர், நபிகளின் வாழ்வில் ஏழ்மை உண்டு, துயரம் உண்டு என்று நபிகளை அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தக் கூடிய பின்புலம் மிக முக்கியமானது. வேறொரு கட்டுரையில் நபிகளின் மரணத்தை அவர் சித்தரிக்கிறார். நபிகள் இறைத்தூதர் என்றாலும் ஒரு மனிதருடைய மரணமாக - ஒப்பீட்டுக்காக சொல்வதாக இருந்தால் அவர் உயிர்த் தெழவில்லை என்ற இந்த மதிப்பீடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

நாம் அவதாரக் கடவுள்களை வைத்திருக்கிறோம், அவதாரங்களை வைத்திருக்கிறோம், இறை மைந்தர்களை வைத்திருக்கிறோம். ஒரு மதம் என்று சொன்னால் அதில் அதிசயத் தன்மை இருக்க வேண்டும். அதிசயங்களை நிகழ்த்தவில்லை என்றால் அவர் ஆண்டவனில்லை, ஆண்டவனோடு தொடர்பு கொண்டவரில்லை என்ற பார்வைகள் இருக்கக் கூடிய பின்புலத்தில் நபிகளை மனிதராக வாழ்ந்தவர், வயிறு நிறைய பேரீச்சம் பழங்களைக்கூட உண்ணாதவர், வணிகத்தில் ஈடுபட்டவர் நபிகள் என்று சித்தரிப்பது எல்லாமே வித்தியாசமான ஆனால் அவசியமான சித்தரிப்பு.

இறை அனுபவங்களை பெறக்கூடிய நேரத்தில் 'ஓதுவீர்' என்ற அந்த இறைச்செய்தி கிடைத்தவுடன் அதனுடைய அர்த்தம் ஓரளவுக்குப் புரியாத நிலையில் மனைவி கதீஜாவிடம் ஓடிவந்தார் நபிகள். கதீஜா அது இறை செய்தியாக இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பிறகுதான் நபிகள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த இறை செய்தியை ஏற்பவராக ஆகிறார்.

இறைசெய்தி நபிகளிடம் இறங்கும் பொழுது, அவர் அனுபவிக்கக் கூடிய உடல் வாதைகள், என்னுடைய உடம்பிலிருந்து உயிர் கிழித்தெறியப் பட்டது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது என்ற நபிகளி வார்த்தைகள் இவற்றையெல்லாம் மார்க்ஸ் பதிவு செய்கிறார்.

இறைவெளிப்பாடு என்பதை இந்திய தத்துவமரபில் பேரின்பம் என்று சொல்வார்கள். பேரின்பம் என்று சொல்வது அந்த செய்தி இறைவனிடம் இருந்து வந்தது என்பதை கௌரவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இறைச்செய்தி என்பது மிக சிக்கலான ஒரு அனுபவம். சமூகப் பிரச்சனைகளை சமய மொழியில் அனுபவிக்கக் கூடிய ஒரு மனிதர், நெருக்கடிகளை தன்னிலேயே அனுபவிக்கும் போது, இறைச் செய்தி என்ற ஒன்று அவருள் எப்படி நிகழ்கிறது என்பதை ரியலிஸ்டிக்காக என்று சொல்கிறோமே, அவ்வாறு எடுத்துக் காட்டுகிறார்.

இந்த தளத்தில் வைத்துப் பார்க்கும்போது நபிகளை அதிசயங்களுக்கு அப்பாற்பட்டவராக, சாதாரண ஏழையாக வணிகச்சூழலில் வாழ்ந்து, அலைந்து, திரிந்து அந்த மக்களின் பிரச்சனைகளை தன்னுடைய நெஞ்சிலே சுமந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று நிரந்தரமாக தேடிக் கொண்டே இருந்து, அதற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அதன் மூலமாக புதியதொரு மதத்தை தொடங்குவது போன்ற ஒரு விடிவை நோக்கி நடந்து சென்ற மனிதராகக் காட்டுகிறார். இது அ.மார்க்சின் சித்தரிப்பு என்பது ஒரு புறமிருக்க இஸ்லாத்தின் தோற்றகாலச் சூழல்களை வெகுவாக நெருங்கிச் செல்லும் முயற்சியாகும்.

அ.மார்க்ஸின் இந்தச் சித்தரிப்பை முனைப்பாக நாம் முன்னெடுத்தச் செல்ல வேண்டும். இது போன்ற ஒரு சாதாரண மனிதராக நாம் ஏசுவை சித்தரிக்கத் தொடங்கினால் எப்படி சித்தரிப்போம். எப்படிச் சித்தரிக்க முடியும்? என்ற முயற்சிகளில் கூட ஈடுபடுவது நல்லது. இது போன்ற ஒரு சித்தரிப்புக்கு வள்ளலாரையோ, குருநானக்கையோ கூட நாம் ஆட்படுத்த வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு அற்புதமான எடுத்துக் காட்டாக மார்க்ஸ் ரொம்ப அழகாக நபிகள் நாயகத்தை இந்தப் புத்தகத்தில் வளர்த்தெடுக்கிறார்.

இரண்டாவது இந்த நூலில் பேசப்படும் விசயம், சமூகத் தளத்தை நோக்கி பரவும் பொழுது, இஸ்லாத்தின் சிந்தனை தோற்றம் எப்படி நிகழ்கிறது என்பதற்கான புறச் சூழல்களையும் அ.மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். இனக்குழு மரபுகளும் வணிகக்குழு மரபுகளும் நிறைந்த ஒரு வட்டாரமாக, உள்ளுக்குள் கிட்டத்தட்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்கக் கூடிய நிலைக்கு அராபிய சமூகம் ஏற்கெனவே தயாராக இருந்தது. ஆனால் இனக்குழுக்களின் இடையிலான சண்டைகள், இனக்குழுக்கள் வணிகப் பாதைகளை கைப்பற்றுவது, வணிகக்குழுக்கள் இடையில் உள்ள சண்டைகள் என்ற சூழலில் ஒருங்கிணைந்த சமூக வாழ்வை உருவாக்கக்கூடிய தேடலுக்கு ஆட்பட்ட சமுதாயமாக அது இருந்தது. ஏற்கனவே அங்கு ஏக இறைக் கோட்பாட்டைப் பேசிய ஹனீப்கள் இருந்தார்கள்.

'அரேபியருக்கு ஒரு இறைத்தூதரை அருளுங்கள்' என்ற ஒரு எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் ஏற்கெனவே தோன்றிவிட்டது என்ற செய்தியை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்த எதிர்பார்ப்பை விடுதலையின் ஊற்றுக் கண்ணாக ஆக்கியவர் நபிகள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். வரலாற்றின் நெருக்கடிகளில் எப்படி பிரம்மாண்டமான மனிதர்கள் தோன்றுகிறார்கள் என்பதைச் சொல்லுகிற இடமிது.

திருக்குர்ஆனைப் பற்றி குறிப்பிடும்போது, அந்தக் காலத்தினுடைய சமகால அரசியல் ஆவணமாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதைப்போல நபிகள், இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூக திட்டத்தைத் தந்தவர் என்று குறிப்பிடுகிறார். அறவியல் கூறுகள், அரசியல் கூறுகள், இறையியல் கூறுகள் கொண்ட திட்டமாகத்தான் நமக்கு அது கிடைக்கிறது.

நபிகள் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலமாக யூதமதத்தையும், கிறித்தவ மதத்தையும் அதனுடைய சுற்று நிலைகளில் எடுத்துப் பார்த்தோம் என்றால் 7ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய துறவு நிறுவனங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த துறவு நிறுவனங்களின் பலத்தை மட்டுமே அது முன்னிலைப்படுத்திய காலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தில் நபிகள் உலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன்வைத்தார் என்பது முக்கியம். இந்த உலகிலேயே சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை எப்படிக் கொண்டு வருவது என்ற ஒரு கேள்வியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அ.மார்க்ஸ் நன்கு எடுத்துக் காட்டுகிறார். நபிகளின் திட்டம் ஒரு அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதாக இருந்தது என்பதை, நபிகளின் செயல்பாடுகள், அவை போர்களாக இருக்கலாம், அல்லது நபிகள் ஏராளமாக செய்து கொண்ட ஒப்பந்தங்களாக இருக்கலாம். அந்த ஒப்பந்தங்களிலும், போர்களிலும் சமூகத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதுதான் முனைப்பாக இருந்தது என்பதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட இஸ்லாத்திற்குள் துறவு நிறுவனம் கிடையாது என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். சூஃபியத்திற்குள் கொஞ்சம் துறவு நுழைந்திருக்கலாம், இருந்தாலும் துறவு நிறுவனங்களை, அப்பாலை சமயப் பண்புகளை சொல்லாத சமயம் இஸ்லாம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நபிகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தியவர் என்பதை மிக அழகாக அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். துறவு மூலமாக, துறவினை நிறுவனமாக ஆக்குவதன் மூலமாக, வெறும் அறரீதியான போதனைகளை நிகழ்ததுவதன் மூலமாக, அல்லது அவரவர் தங்கள் மனங்களை செப்பமிட்டுக் கொள்வதன் மூலமாக என்ற தளங்களுக்குள்தான் மதங்கள் வேலை செய்து வந்திருக்கின்றன. நபிகளைப் பொறுத்த மட்டில் மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்தியவர், தன்னுடைய இயக்கத்தை ஒரு ரகசிய இயக்கமாக நடத்தியவர். நபிகள் வாழ்க்கையின் ஒருபகுதி தலைமறைவு வாழ்க்கையாக அமைகிறது. புலம் பெயர்ந்து செல்கிறார். இந்தத் தலைமறைவு, புலம் பெயர்தல், ஆயுதம் தாங்கியப் போராட்டம் இவை எல்லாம் சமகால அரசியல் சொல்லாடல்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமகால அரசியல் சொல்லாடல்களைக் கொண்டு நபிகளை அணுகும் போது நபிகளின் செயல்பாடுகள் புதிய தளத்தில் அர்த்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் பணியை இந்தப் புத்தகத்தில் அ.மார்க்ஸால் நன்றாக செய்ய முடிந்துள்ளது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம்.

அதுபோல் மேலை கிறித்தவம் இஸ்லாமின் தோற்ற காலத்திலிருந்தே நபிகளுக்கு எதிராக, இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டமைத்த கற்பிதங்கள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இறை அனுபவத்தின் போது உடல்வாதைகள் இருந்தன என்று நபிகள் சொல்கிறார் என்றால் அதைக் கொச்சைப் படுத்தக் கூடிய விதத்தில் அது இறை செய்தியல்ல, இது சாத்தானுடைய செய்தி என்று சொல்வது, இஸ்லாத்தை கிறித்துவத்திற்கு எதிரானது என்று சித்தரிப்பது, இதுபோன்ற கற்பிதங்களை எல்லாம் கட்டி எழுப்பினார்கள் என்பதைக் காண முடிகிறது.
இந்தக் கற்பிதங்கள் பற்றி பலவேளைகளில் நாம் கவனப்படுத்தியது கிடையாது. ஆனால் உலக வரலாற்றின் மிக முக்கியமான விசயமாக இந்த கற்பிதங்கள் இருந்தன.

ஒரு அர்த்தத்தில் ஐரோப்பிய சமூகம் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக, இந்தியர்களுக்கு எதிராக அல்லது கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு எதிராக கற்பிதங்களை உண்டாக்குவதற்கு மிக முன்னதாக இஸ்லாத்தை தனக்கொரு மிகப்பெரிய போட்டி சக்தியாகப் பார்த்தது. இது எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சமூகம் இஸ்லாத்தையும், அரபு சமூகத்தையும், அதன் அரசியல் வடிவத்தையும் மிகப்பெரிய போட்டியாக நினைத்தது என்பதை மனதில் வைத்து பார்ப்போமானால் நமக்கு இந்தக் காலகட்டத்திலிருந்து கிடைக்கின்ற வரலாற்றை முழுவதும் வேறுவிதமாகப் பயிலுவதற்கு பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

கிறிஸ்தவ-இஸ்லாமிய போட்டியின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப் படவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி தனியாகக் கூட ஏராளமாக ஆய்வு செய்ய வேண்டுமென்பது முக்கியம். இந்தப் போட்டியில் ஓரளவுக்கு தோல்வியை சந்தித்தவர்கள் அரேபியர்கள் என்ற தளத்தில்தான் இன்றைய இஸ்லாம் வரையிலான நமக்குக் கிடைக்கக்கூடிய சித்தரிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தத் தோல்வி மனப்பான்மை என்பது அரேபியர்களை, இஸ்லாமியர்களை மேலும் மேலும் தங்களுக்குள்ளேயே, மத எல்லைகளுக்குள்ளேயே தங்களை அடக்கிக் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதையெல்லாம் கருத வேண்டியிருக்கிறது.

16-17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா காலனி ஆட்சியைத் தொடங்கிய போது அந்தக் காலனிய ஆட்சியினுடைய கொடூரமானத் தாக்குதல்களுக்கு அரேபிய சமூகம் / இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டது என்பதும், இந்தக் காலனி ஆட்சியில் பயன்படுத்தப் பட்ட வன்முறையை அரேபியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுடன் அந்த வன்முறையை அவர்களால் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை என்பதெல்லாம் சேர்ந்துதான் பிற்கால இஸ்லாத்தின் வரலாற்றைத் தீர்மானித்தன என்று கூட சொல்ல முடியும். மேற்கு நாடுகள் தாங்கள் உருவாக்கிய இஸ்லாமுக்கு எதிரான கற்பிதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏராளமாக இறக்குமதி செய்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இறக்குமதி செய்தது. ஒட்டுமொத்த உலகின் அபிப்பிராயமாக சார்ந்த பிலாலுக்கு பாங்கு சொல்லும் உரிமையை வழங்கியது, அதைப்பார்த்து பலர் முகம் சுளித்த போதும் நபிகள் அதில் பிலாலின் பக்கமே நின்றது போன்ற விசயங்கள் இவையெல்லாம் இஸ்லாத்தின் சமூக உள்ளடக்கத்தை இன்னும் அதிகமாக பலப்படுத்துகின்றன என்று அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

முதல் கலீபா அபுபக்கர் ஆட்சி ஏற்கும் பொழுது சொன்ன ஒருவரியை எடுத்துச் சொல்லி இருக்கிறார். உங்களில் பலம் குறைந்தவரே என் கண்ணில் பலம் வாய்ந்தவர், அல்லாவின் விருப்போடு நான் அவருக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை இது தொடரும், உங்களில் பலமிகுந்தவர் என் கண்ணில் பலமற்றவராகவே தெரிகிறார். அல்லாவின் விருப்பத்துடன் அவர்களிடமிருந்து பிறரின் உரிமைகளை ஈட்டிக்கொடுக்கும் வரை. நான் அல்லாவுக்கும் அவன் தூதருக்கும் பணிந்து நடக்காத போது நீங்கள் என்னைப் பணிய வேண்டியதில்லை என்ற வாசகங்களை பதிவு செய்திருக்கிறார்.

மதங்களின் ஏக இறை கொள்கைக்கும் இன்றைய சில விவாதங்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஏக இறைக் கொள்கை என்பது புனித அதிகாரங்களுக்காக உருவாகி வந்தது என்ற குற்றச்சாட்டு மதங்களை நோக்கி வைக்கப்படுகிறது. ஆனால் நபிகளைப் பற்றி பேசும்போது அவருடைய ஏக இறைக் கொள்கையின் வழி மக்களை ஒன்று படுத்துவதே தவிர அதை அதிகார மையமாக உருவாக்கவில்லை என்பது. அபுபக்கரின் பலமிக்கவர், பலமற்றவர், உரிமைமிக்கவர், உரிமையற்றவர் என்ற சொல்லாடல் அதிகாரம் குறித்த கருத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஏக இறை என்ற விஷயத்தை வைத்து ஒரு அதிகார மையமாக உருவாகாமல் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சமத்துவம் போன்ற தளத்தை உருவாக்க இஸ்லாம் முயற்சி செய்திருக்கிறது என்ற செய்திகளை நமக்கு இந்த நூல் சொல்கிறது.

இந்த நூலை முதல் பார்வையில் பார்க்கும் பொழுது, அ.மார்க்ஸ் விமர்சனம் இல்லாமல் இஸ்லாத்தை ஆதரித்து ஒரு நூலை எழுதி இருக்கிறார் என்ற வெளித்தோற்றம் கிடைக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டுமல்ல, ஏசுவை மையமாக வைத்து கிறித்தவர்கள் வரலாற்றை, பௌத்தத்தின் வரலாற்றை, இந்திய நாட்டில் தோன்றிய சமயம் சார்ந்த சில சிந்தனையாளர்களின் வரலாற்றை அணுகிப் பார்ப்பதற்கான ஒரு முறையியலை இந்த நூல் தந்திருக்கிறது. எனவே விமர்சனம் இல்லாமல் ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்று சொல்வதற்கு இடமில்லை என்று நான் வலுவாக நம்புகிறேன்.

-ந. முத்துமோகன்

நான் புரிந்து கொண்ட நபிகள்
ஆசிரியர் : அ.மார்க்ஸ்
வெளியீடு : கருப்பு பிரதிகள்,
45ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை - 5.
விலை : ரூ.80/- பக்கம் : 204


நன்றி: கீற்று

Tuesday, June 27, 2006

இந்து பயங்கரவாதிகளின் தண்டனை ரத்து

கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை
11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து


சென்னை, ஜுன் 28,

கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

கோவை கலவரம்

கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்களை சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.

செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவைஅரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த கும்பலை சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்தும் எரித்தனர். அந்த பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்ததாக சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனை பார்த்த கலவர கும்பல் நேராக அந்த வேனுக்கு சென்று வேனில் இருந்த அபீப் ரகுமான் என்பவரை கத்தியால் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

4 பேர் படுகொலை

பின்னர் வேனில் இருந்த ஆரிஸ் என்பவரை இழுத்துப்போட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது. இதில் அவரும் இறந்தார். சற்று நேரத்தில் உக்கடம் கலவரத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிப்பும், சுல்தானும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் கூட்டத்தினரை பார்த்ததும் அரசு ஆஸ்பத்திரி வாசலிலேயே ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடினார்கள். ஆனால் வன்முறை கும்பல் அவர்களை விரட்டியது. இதில் ஆரிப்பை துரத்தி அடித்து கொன்றனர்.

சுல்தான் காயத்துடன் தப்பிவிட்டார். மேலும் லியாகத் அலிகான் என்பவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவரை ஆஸ்பத்திரியின் கேட்டிலேயே வன்முறை கும்பல் தடியால் அடித்துக்கொன்றது. இந்த கலவரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் அபீப் ரகுமான், ஆரிஸ், ஆரிப், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 30.11.97 அன்று நடந்தது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை

இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்தார்.

பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ëப்பு வழங்கினார்.

சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு 18.8.2000 அன்று கூறப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை எதிர்த்து 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த வழக்கில் இருந்து 11 பேரையும் விடுதலை செய்தனர்.

நன்றி: தினத்தந்தி

Wednesday, April 26, 2006

மயிலாடுதுறை to இலண்டன் (செய்தி)

பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பலர் அறிந்ததே. சுடப்பட்ட குண்டுகள் திரு. மஹாஜனின் கல்லீரலையும் கணையத்தையும் கடுமையாகச் சேதப் படுத்தியுள்ளதால் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

இவருக்கு சிறப்புச் சிகிச்சையளிக்க இலண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைத்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முஹம்மது ரிலா முன்வந்துள்ளார்.

இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் திரு மஹாஜனின் கல்லீரல் கடும் சேதமடைந்துள்ளதால் அவருக்கு செயற்கைக் கல்லீரல் கணையம் மூலம் அவரது உடலியல் இயக்கங்கள் நடக்க உதவி வருகின்றனர்.

திரு மஹாஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையளிக்க உதவுமாறு இந்துஜா மருத்துவமனை மருத்துவர் குழு அழைப்பின் பேரில் டாக்டர் ரிலா மும்பை வருகிறார். டாக்டர் ரிலா 800க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். ஐந்து வயதே நிரம்பிய அயர்லாந்து குழந்தை ஒன்றுக்கு செய்த கல்லீரல் அறுவை சிகிச்சையால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் பிரசுரிக்கப் பட்டது.

டாக்டர். ரிலா தமிழகத்தைச் சேர்ந்தவராவர். இவர் மயிலாடுதுறை நகரில் பிறந்தவர். தனது மருத்துவப் பட்ட மற்றும் மேற்பட்டப் படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தபின் ஐக்கிய இராச்சியம் சென்று உயர்பட்டப் படிப்பையும் FRCS அங்கீகாரத்தையும் 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.

டாக்டர் ரிலா ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்து தர முன்வந்துள்ளார்.

இவர் 'பிளவு கல்லீரல்' எனப்படும் ஒரு ஆரோக்கியமான கல்லீரலை இரு நோயாளிகளுக்குப் பிரித்து அளிக்கும் முறையை அறிமுகப் படுத்தி அதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லீரல் மாற்று அறுவைத் துரையில் 100க்கும் பேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள டாக்டர் ரிலா, உலகம் முழுவதும் இத்துறையில் பல்வேறு மருத்துவர்களுக்குப் பயிற்சியும் அளித்து மாபெரும் சேவை ஆற்றி வருகிறார்.

நன்றி: rediff.com

Wednesday, April 12, 2006

முஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்

- முஜீப் ரகுமான்
நன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006)

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். வகுப்புவாதத்தை ஊட்டி வளர்த்த ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்றும் வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே.

பூலே தொடங்கி அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவான், போன்றவர்கள் தலித் சமூக விழிப்புணர்வை ஊட்டியதன் விளைவாக அரசியல் ரீதியாக ஓரளவுக்கேனும் சுதந்திரமாக தலித்துகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி உருவான தலித் உத்வேகம் புதிய நகர்தலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் இன்று அன்னியமாய் தீண்டத்தகாதவர்களாக இருக்கிறார்கள். கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் குறித்து கட்டமைக்கப் படும் வெகுஜன உளவியலும், பொதுப்புத்தி உருவாக்கமும் முஸ்லிம்களை சமூக, பொருளாதார அரசியல் ரீதிகளில் தீண்டத்தகாதவர்களாக மாற்றியுள்ளது. உலக அரங்கிலும், நமது சூழல்களிலும் முஸ்லிம்கள் குறித்த ஒருவித மனஉருவாக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடைநிலை சாதியத்தை எதிர்கொள்ளும் தலித்தியம் கூட பிற ஆக்கப்பூர்வமான நிலைகளில் (அணுகும்) பார்வைகளை கொண்டிருக்கிறது. அதே சமயம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்திய சமூக அமைப்பும் பல்வேறு காரணிகளும் தலித்தியம் உட்பட எதிர்நிலை மனகருத்தியலை கொண்டிருக்கிறது.

வகுப்புவாத துவேஷங்களும், மதக் கலவரங்களும், திட்டமிட்டு பரப்பப் படும் அவதூறுகளும் 'நவீன தீண்டாமையை' முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விட்டிருக்கின்றன.. அனைத்து துறைகளிலும் அனைத்து வடிவங்களிலும், அனைத்து நிலைகளிலும் 'தீண்டாமை' கொடிகட்டிப் பறக்கிறது. இன்று தீண்டாமையின் அர்த்தம் குறியீடுகளாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்திய முஸ்லிம்கள் தீண்டாமையின் நெருக்கடிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இந்திய மைய நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப் படுத்தப்பட ஏதுவாக அமைந்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியலின் அனைத்து கட்டுமானங்களிலும், உள் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு விரோதமான தீண்டாமை வியாபித்து இருக்கிறது. உண்மையான தலித் அனுபவிக்கும் பிரச்சினை இன்று முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதாக போய்விட்டது. அனைத்து முறைகளிலும் ஒடுக்கப்படும் தலித் கூட முஸ்லிம்களை தீண்டத் தகாதவர்களாக நோக்கும் நுண் அரசியல் வலைப்பின்னல்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. அனைத்துக்கும் சிகரமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மறுஉற்பத்திகளின் நுகர்விய உளவியலிலும் கூட நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்திய சமூக மனங்களின் கூட்டு பிரக்ஞையிலும், நனவிலிநிலையிலும் 'தீண்டாமை' படிவுகளாக மாறிவிட்டது.

இசுலாமிய தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமூகம் எண்ணிலடங்கா நெருக்கடிகளைசந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூக அமைப்புகளும், கட்சி அமைப்புகளும், நிறுவனங்களும், அமைப்பு சாரா அமைப்புகளும் முஸ்லிம்களை ஒரு படித்தான நிலையிலேயே அணுகுகின்றனர். பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் நலிவுற்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்திய முஸ்லிம் சமூகம். உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் எண்ணிறந்த வாய்ப்புகளை இந்திய சமூகங்களுக்கு வாரி வழங்கிய போதும் முஸ்லிம்களை பொறுத்தவரையில் எவ்வித பயனும் இல்லாமலேயே இருக்கிறது. இந்து தீவிர அமைப்புகள் நினைத்ததை சாதித்துவிட்டன. கட்சி அமைப்புகள் ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்திபடுத்திவிட்டு வாக்குறுதிகளை காற்றில் விடுவதை நிதர்சனமாகவே கடந்த காலம் நமக்கு காட்டியுள்ளது.

கீழவெண்மணிகளும், புளியங்குடிகளும் பெற்ற கவனத்தை 'குஜராத் கலவரம்' இன்னும் பெறவில்லை. அயோத்தியா இன்று மறக்கப்பட்டு விட்டது. இந்திய துணை கண்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளில் வாடும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒடுக்கி வரும் மனநிலை அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் வியாபித்து விட்டது. இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் இது குறித்த பிரக்ஞை இல்லாதது அதைவிட கொடுமையானது. தலித்துகள் முஸ்லிம்களை தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ளாததும் முஸ்லிம்களும் அதை விரும்பாததும் ஒரு புறம் இருக்கிறது. இன்றைய முஸ்லிம் அறிவு ஜீவிகள் யாவரும் காஷ்மீர் பிரச்சனை, அயோத்தியா பிரச்சனை, வக்பு வாரியம், முஸ்லிம் சட்டம் பற்றி பேசுவதோடு நின்று விடுகின்றனர். இதுகாலம் வரை கலை, இலக்கியங்கள் முஸ்லிம்களை நிராகரித்தே வந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கான பண்பாடு, வாழ்க்கை யாவும் 'அந்நியமான' இரட்டை மனதாக, இரட்டை மொழியாக, இரட்டைப் பண்பாடாக இரட்டை வாழ்க்கையாக அமைந்திருப்பதை முஸ்லிம்களிடமிருந்து கண்டுணரலாம். முஸ்லிம்களை பொறுத்த வரையில் சமூக நீதியோ, பொருளாதார நீதியோ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லி கொள்ள முடியாதென்றாலும் 'எங்களை மனிதர்களாக நினையுங்கள்' என்பது விருப்பமாக இருக்கிறது.

அந்நியப்படுத்தலில் இருந்தும், பிரதிநிதித்துவப் படுத்துதலில் இருந்தும் சக மனிதனாக பாவிக்கின்ற நிலையின்றும் பிரித்து இனம் காண வேண்டாம் என்பது தான் முக்கியமாக இருக்கிறது. சாதிய மனோநிலை கூட கடைநிலையாக்குகின்ற உபாயங்களையே செய்து வருகிறது. முஸ்லிம்கள் தீண்டாமை மனோநிலையில் வேறுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அன்மை காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்பு கார், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுகின்ற நகர்ப்புற முஸ்லிம்களின் நிலை மோசமாக ஆகியிருப்பது உதாரணம். நகர்ப்புறத்தில் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் சுயதொழில்களை அதிகம் செய்பவர்கள். இவர்களை அதிகம் தீண்டாமை கண்ணோட்டத்துடன் வெறுத்து ஒதுக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற மனோபாவம் மீண்டும் அவர்களை அந்நியப்படுத்துகின்ற விஷயத்துடன் தொடர்புடையதாகும். இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் ஜனாதிபதியாக முடியும். நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்காவது யாராவது பட்டாசு வெடித்தால் கூட எல்லோரும் ஒருமாதிரியாக பார்க்கும் பார்வையை மட்டும் மாற்றிவிட முடியாது என்பதே எதார்த்தமான முஸ்லிம்களின் உணர்வாக இருக்கிறது. இதற்கு பொறுப்பும் முஸ்லிம்களே ஏற்க வேண்டியிருக்கின்றது. சமூக நல கண்ணோட்டமின்றி வெறுமனே சமயம் குறித்து பேசியும், விவாதித்தும் சண்டையிட்டு கொண்டிருக்கின்ற சூழல்களே இந்தியாவில் அதிகம் இருக்கிறது. நடுத்தர சமூகம் உருவாகாத ஒரு சமூக அமைப்பாக இன்னுமும் இருந்து கொண்டு பத்து சத மேட்டிமை முஸ்லிம்களின் நலனுக்காக தொண்ணூறு சதவீத முஸ்லிம்கள் பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற அளவில் அதிக உரிமைகள் பெறுப்படுவதாக இந்து அமைப்புகள் கூறிக் கொண்டிருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இங்கே இல்லை. சிறுபான்மையினர் என்ற அளவில் ஏமாற்றப்ஷபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கண்கூடாகும். கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவையில் நாளுக்கு நாள் அருகிக் குறைந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இன்னும் அரசை சாராமல் பொது, தனியார் துறைகளைச் சாராமல் தனியே காலம் கடத்தி விட முடியாது. சுய தொழிலால் தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த போதும் அடிக்கடி நடக்கின்ற கலவரங்கள் முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை மையப்படுத்துகின்றன. கடைநிலை வியாபாரங்களை செய்கின்ற முஸ்லிம்கள் இன்றைய உலகமயமாதலில் சிக்கி தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறார்கள். வியாபரத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் இந்த சமூகம் இன்றைய நவ வியாபார உத்திகளை அறியாமலும், வியாபார நிலை மாற்றங்களிலும், அடுத்த கட்ட நுகர்வுகளை சந்திக்கும் ஆற்றல் இல்லாமையாலும் 'வியாபாரம்' நலிந்து போய் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் 'பிரதிநிதித்துவம்' மட்டுமே அதில் பயனளிக்க கூடியதாக இருக்கும். தனியார் துறைகளில், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முஸ்லிம்களது வாழ்வுரிமை பிரச்சனைகளை எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். வெறுமனே பொதுசிவில் சட்டஎதிர்ப்போ, பாபரி மஸ்ஜித் பிரச்சனையோ வாழ்க்கைக்கு தேவையானதை செய்துவிடாது என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

பண்பாட்டு ஆதிக்கத்தையும் மௌன பண்பாட்டையும் வரித்துக் கொண்டிருக்கிற பாசிசம் ஒரு புறம் உரையாடல்களை துடைத்தெறிந்து கொண்டு மறுபுறம் வன்முறையில் ஈடுபடுகிறது. வன்முறையாளர்கள் தேசியவாதிகளாக இருக்க கூடிய சித்திரமும் வன்முறையில் பலிகடா ஆகுபவர்கள் தேசவிரோதிகளாக (உருவாக்குகிறது - ஊடகத்தினாலும்) மனச்சித்திரங்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக இழிவுகளுக்கு சமமான அல்லது இதற்கு மேலான தீண்டாமை / முஸ்லிம் விரோத உணர்வை பிரச்சனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கான வாழ்வாதார உரிமைகளை - எதிர் மனோபாவங்களை பெற்றிடவும் மாற்றிடவும் ஆன போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அல்லது ஏனைய நிலையில் உள்ளவர்களுடனான ஒத்திசைவுகளும், கூட்டு செயல்களும் உண்மையில் முஸ்லிம்களை தீண்டாதவர்களாகவே மாற்றியிருக்கிறது. சமூகத்தின் அத்தனை இடைநிலை உழைப்பு செயல்களை செய்கின்ற முஸ்லிம்களை அன்னியர்களாக அணுகும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான குறைந்தபட்ச செயல்களை உருவாக்க வேண்டும். அரசும், அதிகாரமும் கற்பித மனோபாவமும் தான் முஸ்லிம்களின் உளவியல் நெருக்கடிகள் அதிகமாக காரணமாக இருக்கின்றன. ஒரு தலித் தனது சாதியின் பெயரால் அழைக்கப்படும் போது படும் மனநெருக்கடிகளுக்கு மேலாக முஸ்லிமை தீவிரவாதி என்றழைக்கப்படும் போது அனுபவிக்கிறான்.

வெகுகாலம் வரை பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் தான் மாபெரும் இஸ்லாமிய விரோதிகள் என்று கற்பிக்கப்பட்டதை தாண்டி பிரக்ஞை பூர்வமான இன்றைய எதார்த்த நிலையை உணர வேண்டியதன் தருணத்தை அலச வேண்டியிருக்கிறது திராவிட அமைப்பினரும் தலித் அமைப்பினரும் 'பதவி ஆசையில்' பார்ப்பனர்களுடன் இணைந்து செயல்பட்டதும் வன்முறை கலவரங்களில் தலித்துகளே முன்னணி படையினராக திகழ்ந்து படுகொலை நடத்தியதையும் அலச வேண்டியதிருக்கிறது. தேசம், தேசியம், அடையாள பண்பாடுகள், அறம், ஒழுக்கம் போன்ற ஆதிக்க கருத்தியல்களை மறுதலித்துக் கொண்டு வாழ்வதற்கான நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.

எங்களுக்கான பங்கு என்ன? பிரதிநிதித்துவம் என்ன என்பதை பற்றி தான் உரையாடல் நடத்த வேண்டிய சூழலில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வித ஒடுக்குதல்களையும் எதிர்கொள்ள பெருங் கதையாடல்களையும், புனைவுகளையும், கற்பிதங்களையும் கட்டுடைக்க வேண்டியதும் அடக்கு முறைகளுக்கு எதிரான பிரக்ஞைகளை வளர்த்தெடுப்பதுமே இப்போதைய தேவையாக இருக்கிறது.

ஜெயமோகனின் மனுதர்மம்

- மேலாண்மை பொன்னுச்சாமி
நன்றி: கீற்று

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடத்துகிறது. பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த கலாச்சாரத் திருவிழாக் கூட்டத்தில் அப்போதைய பொதுச் செயலாளர் அருணன் ஒரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார். அப்போது துணைப் பொதுச் செயலாளரான நான் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினேன்.

அந்த நூல் எது தெரியுமா? திசைகளின் நடுவே.

அந்த நூலாசிரியரும் மேடையில் உட்கார்ந்திருந்தார். யார் தெரியுமா? ஜெயமோகன்.

நானும் சரி, த.மு.எ.ச.வும் சரி.... தாராளமயச் சிந்தனை படைத்தவர்கள். நம்மவர்கள் என்று எல்லோரையும் சட்டென நம்பி விடுவோம். தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். அதுதான் த.மு.எ.ச.வின் பண்பு. அன்பு அசலானது. காரியார்த்தமில்லாத நிஜமான அன்பு.

அந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்து விட்டு, ஜெயமோகனை பாராட்டி நான் நீள் கடிதம் எழுதினேன். அவர் நன்றி சொல்லி எனக்கு ஏழு பக்கக் கடிதம் எழுதினார். அந்தத் தொகுப்பில்தான் பல்லக்கு என்ற சிறுகதையும் இருந்தது. அதை எழுத்தாளர் சுஜாதாவும், அசோகமித்திரனும் பாராட்டியிருந்தனர். அந்தச் சிறுகதையின் கட்டமைப்பு நேர்த்தியைத்தான் அவர்கள் பாராட்டுவதாக நாங்கள் நினைத்தோம். அதே தொகுப்பில் மடாதிபதிகளின் கயமை பற்றி அம்பலப்படுத்திப் பேசுகிற இரு கதைகளும் இருந்தன. அதையெல்லாம் முற்போக்கு என்று நிஜமாகவே நம்பினேன். பாராட்டினேன்.

ஜெயமோகனின் ரப்பர் குறுநாவல் வந்த போது, பணக்காரர்கள் சுயநலத்துடன் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிற அக்கிரமத்துக்கு எதிரான படைப்பு என்று நிஜமாகவே நம்பினேன். பாராட்டி எழுதினேன். பதிலுக்கு அவர் பல பக்கக் கடிதம் எழுதினார். அதற்கும் அப்புறம் அவருக்கு சில நெருக்கடிகள் வந்தபோது, எழுத்தாளர் சு.சமுத்திரத்துக்கும் எனக்கும் ஆதரவு கோருகிற கடிதங்கள் எழுதினார். நானும் பரிவுடன் ஆதரவு தெரிவித்து எழுதினேன்.

அப்போது எனக்கு இந்துத்துவா என்றால் என்ன என்பது தெரியாது. அப்போது அது ஒரு பிரச்சனையாகவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமஸ்தானத்தின் ஆட்சிக்குள் நாடார்கள் தலித்துகளை விடவும் கூடுதலாக ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டார்கள் என்ற வரலாறு எனக்கு அறிமுகமாகவில்லை. ஜெயமோகனுக்குள் இந்துத்துவா உயர்சாதி மனோபாவம் இயங்குகிறது என்ற சூட்சுமத்தை தொட்டுணரத்தக்க விழிப்புணர்வும் இல்லாமலிருந்தேன். இதை ஒப்புக் கொள்வதில் வெட்கமுமில்லை.

வித்தியாசமான எழுத்துக்காரர் என்று ஜெயமோகனை மதிப்பிட்டு, சிநேகமாக தழுவி அரவணைத்து, மேடைகளில் அவருக்கு வெளிச்சம் தந்தோம். பின் தான் தமிழ்நாட்டின் அரசியலில் இந்தத்துவா ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. பி.ஜே.பி.யின் ரதயாத்திரை எனும் ரத்தயாத்திரை நடந்தது. முஸ்லீம்களை இந்தியச் சகோதரர் என்ற நினைக்கிற தோழமையில் வெறுப்பு விரிசலை விதைத்தது, பி.ஜே.பி. தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக இந்துத்துவா முன்வந்த காலத்தில்தான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வெளிவருகிறது.

விஷ்ணு ஒன்றே கடவுள். அவர் புரள புரள யுகப் புரள்வும் நடக்கிறது. கரிய நாயாக மரணம் அலைய.... விஷ்ணு புரள்கிறார். பாலை மணல் காட்டில் சோனாநதி பிறக்கிறது. விஷ்ணு புரள்கிறார். அதே சோனா நதியின் வெள்ளப்பெருக்கில் பூமியே மணல் காடாகி.... மரணத்தில் குறியீடான கரிய நாய் அலைகிறது.

இந்த நாவல் கட்டமைத்த கருத்தியல் ஆபத்தானதாக இருந்தது. ஒற்றைக் கடவுளை முன்வைத்தது. பெருங்கடவுளை மட்டும் முன்னிறுத்துகிறது.

இந்த மண்ணின் மனிதர்களின் குல தெய்வங்கள், மண்ணின் மைந்தர்கள் வணங்கிய சிறு தெய்வங்கள், பெண் தெய்வங்கள், சிவபெருமான், தமிழ் முருகன் போன்ற சைவத் தெய்வங்கள், ஐம்பெரும் காப்பியங்களை தமிழுக்கு வாங்கிய சமண, பௌத்த மதங்கள் சகலத்தையும் பொய்யென ஸ்தாபித்து, விஷ்ணு ஒன்றே யுகக்கடவுள் என்று முன்வைத்த அந்த நாவல், இந்துத்துவா என்ற ராட்சஸனின் இலக்கியமுகமாக இருந்தது.

1985க்குப் பிறகு இந்தியாவில் - குறிப்பாக - தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் மதவெறிப் பிரச்சாரம் - ராமர் என்ற இதிகாச நாயகனை சரித்திர நாயகனாக புரட்டு செய்து, பாபர் மசூதி இடிப்புக்காக இஸ்லாமீய வெறுப்பு விஷத்தை உக்கிரமாக பரப்பப்பட்டது. இந்துத்துவாவின் அரசியல் பிரவேசம், தமிழக முற்போக்காளர்களிடம் முக முக்கியமான உள்மாற்றங்களைச் செய்தது. உலகப் பிரச்சனைக்குக் காரணம், வர்க்கமுரண்தான். வர்க்கமுரணை ஒழிப்பதற்கு வர்க்கப் புரட்சியும், வர்க்கங்களின் திரட்சியுமே தேவை என்று பயணப்பட்டுக் கொண்டிருந்த முற்போக்காளர்களிடம், இந்துத்துவா பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இந்தியத் திருநாட்டின் தனித்துவ நோயான சாதீயத்தை எதிர்த்த துணைப் பயணமும் தேவை என்ற வெளிச்சம் வந்தது.

சாதீயத்துக்கெதிரான தீண்டாமை எதிர்ப்பு இயக்கங்களை நடத்திய முற்போக்காளர்கள், சமூகநீதி குறித்த யாத்திரைகளை நடத்தினர். மொழிக்கான போராட்டம், சாதீய ஒழிப்புக்கான போராட்டம், பெண்ணுரிமைக்கான போராட்டம் எல்லாமே இந்துத்துவாவை எதிர்த்த பயணம் என்ற விழிப்புணர்வு வந்திருந்தது.

1950, 60களில் தஞ்சை நாகை மாவட்டங்களில் பி. சீனிவாசராவின் செங்கொடி இயக்கம், குமரி மாவட்டத்துச் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் மணி அவர்களின் செங்கொடி இயக்கம் கூலி உயர்வுப் போராட்டத்தையும், சாதீய ஆதிக்கத்துக்கெதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்திய பாரம்பரியம். திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தலித் மக்களுக்காக தோழர் ஏ.பால சுப்பிரமணியம், என் வரதராஜன் போன்றோர் கூலி உயர்வுப் போராட்டத்தையும், சாதீய ஆதிக்க ஒருங்கிணைந்த இயக்கம் நடத்திய முன்னனுபவம்.

மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகும் தகுதி செருப்பு தைக்கும் தலித்துக்கும் உண்டு என்று நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற தோழர். பி. ராமமூர்த்தி போன்ற செங்கொடித் தோழர்களின் சமூகநீதி இயக்கம். சட்டமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுத்த ஜீவா, சங்கரய்யா போன்ற செங்கொடித் தலைவர்களின் வரலாற்று ரீதியான மரபுகள்.

இவையெல்லாம் வரலாற்றுரமாக இருந்ததால்.... இந்துத்துவாவுக்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தையும், ஞானத்தையும் முற்போக்காளர்கள் முழுமையாக - சட்டென - சுவீகரித்து அந்தப் பாதையில் பயணத்தை தொடங்கியிருந்தனர்.

இதே வேளையில் வந்தது, ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். ஒற்றைக் கடவுள், ஒற்றை மதம், ஒற்றை (சமஸ்கிருத) மொழி என்ற பாசிசச் சிந்தனையுடன் வந்த இந்துத்துவாவுக்குரிய இலக்கிய முகமாக ஒற்றைக் கடவுளை முன்வைத்த விஷ்ணுபுரம் நாவல். வித்தியாசமான படைப்பாளி என்று தோற்றம் காட்டி எங்கள் தோழமையை பெற்று வந்து ஜெயமோகன், இந்த நாவலின் மூலமாக முழுமையாக அம்பலமாகிப் போய் விட்டார். விஷமத் தனமான படைப்பாளி என்ற அவரது சுயரூபம் அம்மணமாயிற்று. விஜயபாரதம் போன்ற மதச் சிந்தனைமிக்க இதழ்கள் விஷ்ணுபுரம் நாவல் விற்பனையில் அர்த்தப்பூர்வமாக முனைப்பு காட்டியது.

முகத்திரைகள் கிழிந்து, மழையில் நனைந்த சாயம் பூசிய நரியைப் போல வெளிச்சத்துக்கு வந்துவிட்ட ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு அதிர்ந்துபோனேன்.

அடடே.... இவரின் மாய்மாலத்தில் ஏமாந்துவிட்டோமே.... இவரது மாரீசமான் மின்னலில் மயங்கிவிட்டோமே என்று திகைத்தேன். எங்கள் அண்ணன் நாகர்கோயிலில் சி.ஐ.டி.யு என்ற செங்கொடித் தொழிற்சங்க ஊழியர் என்றும், நான் சி.பி.எம். முக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும், நான் தொலைபேசித் துறையில் இடதுசாரித் தொழிற் சங்கத்தில்தான் உறுப்பினர் என்றும் அவர் சொல்லிவந்த பசப்பு வார்த்தைகளில், வசீகரப்பட்டு மினுக்குகளில் ஒரு மோசக்காரரின் சாகசம் ஒளிந்திருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தேன்.

விஷ்ணுபுரம் நாவலின் குரூரத்தை தரிசித்த பின்பு ஏற்பட்ட விழிப்புணர்வோடு..... திசைகளின் நடுவே என்ற அவரது சிறுகதைத் தொகுப்பையும், ரப்பர் எனும் குறுநாவலையும் மறுவாசிப்புக்கும் மறுயோசிப்புக்கும் உட்படுத்தினேன்.

ரப்பர் குறுநாவலில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கெதிரான உயர்சாதியினரின் ஓலமும் குமைச்சலும் ஒலிப்பதை இப்போது உணரமுடிந்தது. ரப்பர் என்ற குறுநாவல், அவரது முந்தைய சிறுகதையின் விரிவாக்கம் தான். அந்தச் சிறுகதைதான், பல்லக்கு எழுத்தாளர் சுஜாதாவின் மிகப்பெரிய பாராட்டு பெற்ற சிறுகதை. அதுவும் தாழ்ந்த சாதியினரின் வஞ்சகத்தை உயர்சாதியினர் கோணத்திலிருந்து குமைச்சலும் வேதனையுமாக கோடிட்டுக் காட்டிய சிறுகதை.

திசைகளின் நடுவே தொகுப்பில் இரு மடாதிபதிகளுக்கு எதிரான சிறுகதைகள் இருந்தன. அவை கூட பார்ப்பனரல்லாத மடாதிபதிகளைப் பற்றித்தான் என்று இப்போது உணர முடிகிறது. உதாரணமாக, பார்ப்பனர் ஆதிக்கமில்லாத இந்துமடாதிபதி குன்றக்குடி ஆதினம். மண்டைக்காட்டில் மதக் கலவரம் நடந்து உயிர்ப்பலிகள் ஆகிக் கொண்டிருந்த தருணத்திலேயே நேரில் சென்று, களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்ட இரு மதத்து மக்களையும் சந்தித்து, சமாதானத்தையும், அமைதியையும் நிலை நாட்டியவர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

மதமாற்றச் தடைச்சட்டத்துக்கெதிரான காஞ்சிபுரத்தில் த.மு.எ.ச. மிகப்பெரிய பேரணியையும், மாநாட்டையும் நடத்துகிற அதே நாளில் திருச்சியில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், தினமலர் ஆசிரியர், காஞ்சி மடத்து ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் ஆகியோர் விழா நடத்தி பக்தகோடிகளுக்கு சூலாயுதம் வழங்கினர். சூலாயுதத்தின் மூன்று முனைகளுக்கும் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஒரு கூர்முனை இஸலாமியரை கொல்ல, மற்றோர் கூர்முனை கிறிஸ்துவரைக் கொல்ல, பிறிதோர் கூர்முனை கம்யூனிஸ்ட்களைக் கொல்ல என்று ஏற்கனவே விளகக்மாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. மதக்கலவரத்தை உருவாக்குகிற முனைப்பில் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.

இவரும் இந்துமத மடாதிபதிதான். ஆனால், பார்ப்பனர், பார்ப்பனீய ஆதிக்கத்திலுள்ள காஞ்சி மடாதிபதி ஆக.... பார்ப்பனீய ஆதிக்கத்துக்கும் ஆளுமைக்கும் உட்படாத இந்துமத மடாலயங்கள் தமிழகத்தில் உண்டு. அவை தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன. மத நல்லிணக்கத்துக்குப் பாடுபடுகின்றன. பார்ப்பனீய ஆளுமையிலுள்ள காஞ்சி மடாலயம், சூலாயுதத்தையும், மதவிரோதத்தையும் விநியோகிக்கிறது.

ஜெயமோகனின் சிறுகதைகள், பார்ப்பனீய ஆளுமையிலுள்ள மடாலயங்களையோ - மடாலயத் தலைவர்களையோ - மடாதிபதிகளையோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. விமர்சிக்கவில்லை. மாறாக-

பார்ப்பனீய ஆளுமைக்குட்படாத இந்து மடாதிபதிகளை மட்டுமே அவரது சிறுகதைகள் விமர்சித்திருந்தன. சூலாயுதமும், மதவிரோதமும் விநியோகிக்காத மடாதிபதிகளை மட்டுமே குறை கூறுகிறார், ஜெயமோகன் தம் சிறுகதைகளில்.

அப்படியெனில், ஜெயமோகனும் சூலாயுதம் வழங்குகிற குரூப்பைச் சேர்ந்தவராகிறார். சூலாயுதம் விநியோகிக்கிற மடாதிபதிகள் மனநிலையிலிருந்து, பார்ப்பனீயமல்லாத இந்து மடாதிபதிகளை குறை சொல்கின்றன ஜெயமோகனின் சிறுகதைகள்.

அப்படியெனில் - ஜெயமோகன் துல்லியமான இந்தத்துவா. தெட்டத் தெளிவான ஆர்.எஸ்.எஸ். இந்துராஷ்ட்ரீய சுயம் சேவக்கின் பிரச்சாரப் பீரங்கியாகவே இவரது சிறுகதை இலக்கிய யாத்திரை. இதிலொன்றும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், ஜெயமோகன், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில அலுவலகத்தில் அலுவலகச் செயலாளராக பணியாற்றிய முழுநேர ஊழியராக இருந்தவர்தாம் என்ற ரகசியமெல்லாம் பின்னாளில் தாம் அறிய முடிகிறது.

பல்லக்கு சிறுகதையில் ஜெயமோகனின் விஷமத்தனம் எது?

ஏகப்பட்ட நிலபுலன்களும், அரண்மனை மாதிரியான மிகப்பெரிய நாலுகட்டு வீடும் கொண்ட நாயர் குடும்பம். ஏகப்பட்ட குடும்ப உறுப்பினர்கள். உழைப்பில்லாத ஆடம்பரத் திளைப்பு, படாடோப வாழ்க்கை. ஒரு நிலப்பிரபுத்துவ உயர்சாதிக் குடும்பத்தின் காமக் கொண்டாட்டங்கள். களியாட்டங்கள். ராஜபோக ஆடம்பரப் படாடோபம்.

வரவு குறைய, செலவுகள் உயர.... வழக்குகளும், கோர்ட் செலவுகளுமான கௌரவப் போராட்டுங்கள்.

குடும்பம் நொடிக்கிறது. ஒவ்வொன்றாக விற்றுத் தின்கிற ஆடம்பரம். நிலபுலன் முழுவதும் விற்பனையாகி விட்டன. வீட்டிலள்ள பொருட்கள், விலை உயர்ந்த ஆடம்பர உபகரண்ங்கள், கலைவேலைப்பாடுள்ள கட்டில்கள் போன்றவைகளை விற்றுத் தின்கிற குடும்பம்.

எல்லா வேலைக்காரர்களும் வற்றிய குளத்துக் கொக்குகளாக சிறகடித்துவிட்டனர். ஒரு நாடான் மட்டும் போக மறுத்து அடம் பண்ணுகிறான். உங்க உப்பை தின்னு வளர்ந்த கட்டை, உங்ககிட்டேயே ஒழைச்சுச் செத்தாத்தான் நிம்மதி என்று தீரா விசுவாசத்தை காட்டி, காலைப் பிடித்து, தண்ணீர் விட்டு, சம்பளமில்லாத வேலைக்காரனாக அந்தக் கிழட்டுநாடான். (குமரி மாவட்டத்தில் புலையர்கள், ஈழவர்கள், தலித் மக்களின் கடையோரை விடவும் தாழ்ந்த நிலையில் நாடார்கள் இருந்த காலம், அது)

அந்த நாடான்தான், இந்த அரண்மனையின் உயர்ரகப் பொருட்களையெல்லாம் ரகசியமாக விற்று விற்று, பணம் வாங்கித் தருகிறான். குடும்பத்தின் பரம்பரைக் கௌரவச் சொத்தாக பல்லக்கு ஒன்று இருக்கிறது. அதையும் விற்க வேண்டிய நிலைமை. நொடித்துவிட்ட உயர்சாதி நாயர் குடும்பத்தின் கௌரவத்தை, அந்த நாடானின் ரகசிய விற்பனைதான் காப்பாற்றுகிறது. அதே ரகசிய முறையில் பல்லக்கும் விற்கப்படுகிறது.

நாயர் வீட்டின் காரணவர் (தலைவர்) தெருவில் வருகிறார். அவரது குடும்பப் பல்லக்கில் எவனோ ஒருவன் ஏறிச் செல்கிறான். இவருக்குள் வேதனையும், அவமானமுமாக இருக்கிறது. பல்லக்கில் போறது எவன் என்ற யாரிடமோ விசாரிக்கிறார். உங்க வீட்லே வேலை பாக்குற நாடானின் மகன் தான் வேதக்காரச் சாமியார் தயவுலே படித்து, வாத்தியார் உத்யோகம் பார்குறான். இப்ப ரொம்ப வசதி. தாழ்ந்த சாதிப்பயலெல்லாம் பல்லக்கில் போறான்.

உடைந்து போகிறார் காரணவர் விசுவாசத்துக்காக பசியோடு வேலை பார்ப்பதாக காலைப் படித்துக் கெஞ்சிய நாடான், விசுவாசக் காரணல்ல. வஞ்சகன். எஜமானர் வீட்டுப் பொருட்களையெல்லாம் கள்ள விலைக்கு தமது மகனுக்கே கடத்திய கள்ளன் என்பதை உணர்ந்ததால் வந்த மனஉடைவு. இதுதான் பல்லக்கின் சிறுகதை. இதைத்தான் எழுத்தாளர் சுஜாதா ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தார்.

கிறிஸ்துவ சாமியார் கருணையால் கல்வி கற்று, ஆசிரியராகி, ஓர் அந்தஸ்துக்கு ஒரு தாழ்ந்தசாதியான் உயர்ந்ததை சகித்துக் கொள்ளாமல் குமுறிக்குமைகிற உயர்சாதியினரின் ஆதிக்கக் குரலாகவே சிறுகதையின் குரல் படைப்பாளியின் குரலும் இது தான். அது மட்டுமல்ல.... அந்தத் தாழ்ந்த சாதியான், பண்பிலும், குணத்திலும் தாழ்ந்தவன் தான், ஈனத்தனமான கள்ளன்தான் என்ற சித்தரிப்பும் கதையின் இணைக்குரல்.

நிலப்பிரபுத்துவ உயர்சாதிக் குடும்பத்தின் சிதைவுக்காக வாசகனை கலங்கடிக்கிறார், ஜெயமோகன். கல்வி கற்று, ஆசிரியராகி ஓர் உயர்நிலைக்கு வந்து விட்ட தாழ்ந்த சாதியாரின் வஞ்சகக் குணத்திற்காக வாசகரை வெறுக்கச் செய்கிறார். இதுதான் இந்துத்துவாவின் கொள்கை. மனுதர்மம், சூத்திரச் சாதிக்கும் சண்டாளச் சாதிகளுக்கும் கல்வி மறுத்தது. பார்ப்பனீயம் அந்த வேதச் சட்டத்தை இம்மிபிசகாமல் கடைபிடித்து வந்தது. சண்டாளச் சாதிக்கும் சூத்திரர்களுக்கும் கல்வி எக்காலத்திலும் வழங்கப்பட்டதில்லை. கிறிஸ்துவம் இந்திய மண்ணுக்குள் நுழைந்த பிறகு தன், இழிசனராக கருதப்பட்ட சண்டாளச் சாதியினருக்கு கல்வி வாசனை எட்டிப் பார்த்தது. கிறிஸ்துவத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கப்பட்டதை வேத வைதீக இந்துமதம் பொறுத்துக் கொள்ளவில்லை. அவதூறுகளும், வசைகளுமாக துற்றியது. அதே வேலையைத்தான், ஜெயமோகன் சிறுகதையும் செய்கிறது.

ரப்பர் குறுநாவலும் இதே கதையின் கருத்தியல்தான். குமரி மாவட்டத்து உயர்சாதியினரான நாயர்கள் கையில் நஞ்சை நிலங்கள் யாவும் இருக்கின்றன. நெற்பயிலும், வாழை மரங்களுமாக அந்த நிலம், மாவட்டத்துக்கு உணவும், மகுடமும் தருகிறது. வாழை, காற்றை சுத்தமாக்குகிறது.

எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வருகிற கூட்டு வண்டியில் பொன்னுமணி என்ற நாடான் சிறுவன் வருகிறான்.

இடுப்புக்கு மேல் சட்டையணியக் கூட உரிமையில்லாதவர்கள் சாணார் சாதிப் பெண்கள். திறந்த மார்புகளோடு தான் திரிய வேண்டும். நாயர் எதிரில் வருகிறார் என்றால், தமது வியர்வை வாசம் அவர் நாசியை தீண்டாத தூரத்துக்கு தாமே ஒதுங்கி நின்று வழிவிட வேண்டும், சாணார் சாதி ஆண்கள். தீண்டாமையிலும் கொடியது வாசத் தீண்டாமை. அதிலும் சாணார் சாதிப் பெண்கள் என்றால், திறந்த நிலை மார்புகளோடு முன் பக்கமாக குனிந்து வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டும். இப்படியான சாதீய மேலாதிக்கத்தில் நாயர்களும், சாதீய அடுக்கு நிலையில் சாணார்களும் இருந்த காலத்தில் பொன்னுமணி வருகிறான்.

அவன் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். கூழைக்கும் பிடுகளும், காலைப் பிடித்து நக்குதலுமாக அவன் மிகுமரியாதை காட்டுகிறான். உயர்சாதியினரின் சாதி வளமுறை அறிந்தவன் என்ற நற்பெயரை பெறுகிறான். பண உதவிகளும் பெறுகிறான். அவனது வம்சமும், வணிகமும் பெருக.... பெருக.... மிகப் பெரிய செல்வந்தர்களாக நாடார்கள். ஆடம்பரக் கேளிக்கையான வாழ்க்கை முறையாலும், சோம்பேறித்தனத்தினாலும் நிலங்களை விற்கிற நிலைக்குத் தாழ்கிற நாயர்கள். வாழை மரங்களான நாயர்களின் நிலங்களை விலைக்கு வாங்குகிற நாடார்கள், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதற்காக.... காற்றை இதப்படுத்திய வாழைகளை வெட்டித் தள்ளிவிட்டு, காற்றை நச்சுப்படுத்துகிற ரப்பர் மரங்களை நடுகின்றனர். ரப்பர் வர்த்தகத்தில் அந்நிய முதலாளிகளுக்கே சோரம் போகின்றனர், நாடார்கள். இதுதான் ரப்பர் நாவல்.

நேசமணி, தோழர்மணி போன்ற நாடார்கள் காங்கிரஸ் தேசீயப் பேரியக்கத்திலும், கம்யூனிஸ்ட் பேரியக்கத்திலும் தேசபக்தியுடன் - தியாக சிந்தையுடன் சுதந்திரப் போர் நடததியிருக்கிற குமரி மண்ணில் நாடார்கள் தேசத்துரோகிகள் என்று நாவல் எழுதுவதற்கு சுரணையற்று பொய் சொல்லுகிற வெட்கமற்ற ஈனம் வேண்டும். அதில் ஜெயமோகன், ஜெயமோகனேதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். வாசத்தீண்டாமையும், தோள்ச்சீலை போட உரிமை இல்லாத அவலமும் உள்ள குமரி மாவட்டத்து சாணர்கள், உருண்டு புரண்டு, போராடி, கல்வியிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டு, மல்லுக்கட்டி, கட்டிப் புரண்டு மெல்ல மெல்ல மேல் நிலைக்கு வந்தார்கள் என்பது வரலாறு.

இது வாழ்த்தப்பட வேண்டிய வரலாறுதானே! அரிவாள் கம்பு எடுக்காமல் - ரத்தக் களறி செய்யாமல் – வன்முறைப் பிரயோகமில்லாமல் - கல்வியினாலும் வணிகத்தினாலும் ஒரு சாதி, மேல்நிலைக்கு உயர்ந்து வருவதை எந்த ஒரு மனிதநேயவாதியும் வரவேற்பான். வாழ்த்துவான். வர்ணாசிரமத்தை பாதுகாக்கிற மனுதர்மவாதிதான், சண்டாளச்சாதி முன்னேறுவதை சகித்துக் கொள்ளமாட்டான். பொருமிக் குமைவான். அந்த முன்னேற்றத்தை கயமை, ஈனம், ஏமாற்று, வஞ்சகம் என்று வசைபாடி அவதூறு செய்து காறித்துப்புவான். அதே பணியைத்தான் செய்கிறது. ஜெயமோகனின் ரப்பர் குறுநாவல்.

இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான - உயர்சாதி வெறி கொண்ட - மானுட வெறுப்பு கொண்ட - ஒருவர், எப்படி ஒரு கலைஞனாக முடியும்? கலைமனம் என்பது மெல்லியபூவின் வாசத்தைப் போல நுண்மையானது; மென்மையானது. ஒரு கலைஞனுக்காக எந்தப் பண்பும் ஜெயமோகனின் எழுத்தில் காணமுடியாது. மனசின் அடிமடியை பிசைய வைக்கிற - கண்கலங்க வைக்கிற எந்த ஒரு கலைப்படைப்பையும் இவர் தந்ததேயில்லை. இதயமில்லாத அறிவாளி, அவர்.

ஒரு பாசிச அறிவு ஜீவிதான், இவர். உலர்ந்த அறிவு ஜாஸ்தி. முசோலினியைப் போல - ஹிட்லரைப் போல - கொலம்பஸைப் போல இதயமில்லாத உயர் அறிவு ஜீவி. இதயமில்லாத அறிவாளிகள் இலக்கியத்துக்குள் நுழைந்தால், இந்துத்துவா பாசிசத்தைத்தான் நிறைவேற்றுவார்கள். அதைத்தான் ஜெயமோகன் செய்து கொண்டிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர் உயர்நிலைக்கு வருவதை - பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை சகித்துக் கொள்ளாத ஜெயமோகன்; பார்ப்பனீய ஆளுமைக்குட்படாத மடாதிபதிகளை மட்டும் குறை சொல்கிற ஜெயமோகன்; ஒற்றைக் கடவுளை மட்டும், ஒற்றை மதத்தை மட்டும் நிலைநாட்டுகிற ஜெயமோகன். அடுத்து என்ன செய்வார்?

இவ்வளவு தூரம் அம்பலத்துக்கு வந்துவிட்ட பிறகு, ஆயுதம் ஏந்தத்தானே செய்வார்?

பின் தொடரும் நிழலின் குரல் என்ற தலையணை பருமனில் ஒரு நாவல். முழுக்க கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாவல். வெளிப்படையான மூர்க்கமான தாக்குதல். கூச்சநாச்சமற்ற வெட்கமற்ற முரட்டுத் தாக்குதல்.

இத்தனை கொடூரமான முறையில் - குரூரமான விதத்தில் - கம்யூனிஸ்ட் எதிர்ப்பை கக்குகிற இவர்தான்,

எங்க அண்ணன் சி.ஐ.டி.யு. நான் சி.பி.எம். கட்சிக்கு ஓட்டு போட்டேன். தொலைபேசித் துறையில் இடதுசாரிச் சங்க உறுப்பினர் என்றெல்லாம் பேசிப் பேசிப் பசப்பினார்கள் என்றால்.... இவர் எத்தனை பெரிய மோசடிக்காரர்! எத்தனை மோசமான பொய்யர்!

காலம் காலமாக வைதீக இந்து மதம் விஷ்ணுவை மட்டும் ஒற்றைக் கடவுளாக முன் வைத்தது. சிறுதெய்வங்கள், கிராமப்புறத்து குலதெய்வங்கள், காட்டுப் பகுதிகளிலிருக்கிற காவல் தெய்வங்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குகிற ஏகப்பட்ட பெண் தெய்வங்கள் யாவற்றையும் கொலையுண்டு, ஆவிகளாக அலைகிற பேய்கள் என்றுதான் வைதீக இந்து மதம் சொல்லும். சமஸ்கிருதத்தை முறையாக கற்று, வைராக்யமாக ஆசார தர்மத்தை கடைபிடிக்கிற பார்ப்பன அர்ச்சகர்கள் யாரும் இந்த மாதிரிப்பட்ட தெய்வங்களுக்கும் - ஆலயங்களுக்கும் - அர்ச்சனை செய்ய வரவேமாட்டார்கள். வருகிற பார்ப்பன அர்ச்சகர்கள், பிழைப்பு நியாயத்துக்காக வருகிறவர்கள்தாம். எப்படியும் வயிற்றுப்பாடு கழியணுமே என்று வருகிறவர்கள்தாம்.

வைதீக இந்துமதம் பேய்களென அசூயையாக பார்க்கிற இந்த சிறு தெய்வங்கள், கிராமத்துக் குலதெய்வங்கள், காட்டுக்காவல் தெய்வங்கள், ஆயிரத்தெட்டு வகையான அம்மன் தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்கள் யாவற்றையும் ஆகம விதிகளுக்கு உட்படுததி, தமது ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டுமென ஆர்.எஸ்.எஸ். என்ற காவிக் கூட்டம் விரும்புகிறது.

காவியின் மதவெறி அரசியலுக்கு இந்த எளிய மக்களின் பண்பாட்டு வழிபாட்டுத்தளங்களை காவு வாங்க விரும்புகிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேட்கையின் இலக்கிய வெளிப்பாடுதான், ஜெயமோகனின் சமீபத்திய காவியம் கொற்றவை.

பிற்போக்கான இந்துத்துவவாதியான ஜெயமோகனை நவீன எழுத்தாளர் இந்தியத் தத்துவப் பெருமிதத்தை முன் வைக்கிற நவீனத்துவ சிந்தனையாளர் என்றெல்லாம் புகழ்கிறவர்கள் இப்போதும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த மாரீசமானை நிஜமான் என்று நான் நம்பவில்லையா ஒரு காலத்தில்? அப்புறம், விழிக்கவில்லையா?

அப்படித்தான் - இப்போது புகழ்கிறவர்களும் நாளை விழிப்பார்கள். நிச்சயமாக வரலாறு விழிக்க வைக்கும்.

ஹிட்லர் போன்றோரை மெச்சுவோரும் ராணுவ ஆட்சிதான் நாட்டுக்குத் தேவை என்ற கொக்கரித்தவர்களும் பாகிஸ்தான் ஆட்சியைப் பார்த்து விழித்துக் கொள்வதைப் போல........ ஜெயமோகனின் படைப்புகளை பார்த்தே அவரிடமிருந்து விழித்துக் கொள்வார்கள்.

மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு - 626127
இராஜபாளையம் - வழி
விருதுநகர் மாவட்டம்
04562 / 271233

Friday, March 17, 2006

இந்தியாவில் இஸ்லாம்-19

தொடர்-19: தோப்பில் முஹம்மது மீரான்

யார் அஞ்சுவண்ணத்தார்?

அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.

இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.

அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பு (Trade Association) என்றும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய வியாபார அமைப்பு என்றும் சொல்லி முற்றுப்புள்ளி போட்டு விட்டனர். பஹ்லவி, கூபிக் ஹீப்ரு மொழிகளில் எழுதப்பட்ட செப்பேட்டில் காணப்படும் 'கூபி' லிபியில் எழுதப்பட்ட பெயர்களை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நொண்டி சாக்குக் கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.

இங்கு சொல்லப்படும் வியாபார அமைப்புகளில் முஸ்லிம்களைப் பற்றியோ முஸ்லிம்களுடைய அமைப்புகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சுருங்கக்கூறின் துவக்க காலத்திலேயே வரலாற்றிலிருந்து முஸ்லிம்களைத் துடைத்து அப்புறப்படுத்துவதற்காக நடந்த பல சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று.

வியாபார அமைப்புக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சுவண்ணத்தாரையும், மணிக்கிராமத்தாரையும் அறுநூற்று பேரையும் (நாயர் அமைப்பு) ஈசோ சபீருக்கு வழங்கும் உரிமைகள் (அதிகாரங்கள்) முறையாக செய்யப்படுகின்றனவா என்று மேற்பார்வை செய்ய அதிகாரப்படுத்தியதாக செப்பேட்டில் காணப்படுகிறது. (செப்பேட்டில் 32-36 வரிகள்)

"32 க்கடவராகவும் உல்கு (கூ)ட்டுஞ்சரக்கு இவைகளை வச்சு உல்குவிடுப்பதாகவு ---
33 ம் சரக்குமி (வி) லையிடுமிடத்தும் மற்றுமே ஸாமிகரியம் எக்காரியமும்
34 வைகளைக் கூட்டியே செய்வதாகவும் அன்றன்று படுமுல்கு --- அஞ்சுவண்ணமும்
35 மணிக்கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும் நாலு வாதிலகத்து ---
36 ம் விலக்கும் பூமியாக காராண்மைக் கொடுக்குமெடத்து கோப்பதவாரங் ---
37 கோயில .........."

மேலேயுள்ள செப்பேட்டு வரிகளை டி.ஏ. கோபிநாத் ராவ் மொழிபெயர்த்துத் தருகிறார்.

"the levying of customs on dutiable articles should be done only in their presence. (Similarly) the apprising of articles and all other business of the Lord (The Kind) shall be done in company with their people. The Anjuvannam and the Manigramam shall take care of the customs collected every day.' (T.A.S. Page 84)

சுங்கவரி வசூலிப்பதை அஞ்சுவண்ணத்தார்களும் மணிக்கிராமத்தார்களும் கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை செப்பேட்டின் 34, 35 வரிகளில் பார்த்தோம். அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பாகவும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய அமைப்பாகவும் இருப்பின், கிருத்தவரான ஈகோ சபீருக்கு வழங்கப்பட்ட மானியத்தில் கிருத்தவர்களை சாட்சிகளாகவும் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்ய வாய்ப்பு இருக்காது. கிருத்தவர்களுக்கு வழங்கிய மானியத்தில் கிருத்தவர் அல்லாத வேறு மூன்று மதப்பிரிவினரைக் கொண்டு சாட்சி கையெழுத்துப் போட வைத்திருக்கின்றனர். ஈப்ரு மொழியில் கையொப்பம் போட்டவர்கள் யூதர்களும், பஹ்லவி மொழியில் கையொப்பம் போட்டவர்கள் பாரசீகத்தைச் சார்ந்த வணிகர்களும், கூஃபி லிபியில் கையொப்பம் போட்டவர்கள் அரேபியர்களான முஸ்லிம்களும் ஆவார்கள்.

இனி அஞ்சுவண்ணம் முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பாக இல்லாவிட்டால் கூஃபி லிபியில் கையொப்பம் போட்ட அரபி தெரிந்த வியாபாரிகள் யார்? அதில் காணப்படும் 11 முஸ்லிம் பெயர்கள் அதில் எப்படி இடம்பெற்றன? இந்த முஸ்லிம்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இந்தக் கேள்விகளுக்கு முன் இப்போது வரலாற்று ஆசிரியர்கள் மவுனம் சாதிக்கின்றனர். அஞ்சுவண்ணம் என்பது முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பை அல்லது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாகும்.

அஞ்சுவண்ணம் என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாகவும், அவ்வூரைச் சார்ந்த மக்கள் அஞ்சுவண்ணத்தார்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் டாக்டர் Dr. HULTZSCH என்பவர் குறிப்பிடுகிறார். சிலர் அஞ்சுவண்ணம் என்பது யூதர்களுடைய காலனி என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். கிருத்தவ மதத்திற்கு மதம் மாறி வந்த ஐந்து சாதியைத்தான் அஞ்சுவண்ணம் என்ற சொல் குறிப்பிடுவதாக திரு.வெங்கய்யா என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திரு.வெங்கய்யா குறிப்பிடும் ஐந்து சாதியினர் 1) ஈழவர் 2) தச்சர் 3) வெள்ளாளர் 4) வண்ணார். ஐந்தாவது சாதி பெயர் கோட்டயம் செப்பேட்டில் (தரிசாபள்ளி செப்பேட்டில்) தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.

இங்கு குறிப்பிடப்பட்ட நான்கு சாதியினரும் பெயர் தெரியாத ஐந்தாவது சாதியும் தான் அஞ்சுவண்ணத்தார் என்றால் கிருத்தவர்களாக மதம் மாறிய இவர்கள் எப்படி யூத அமைப்பாக குறிப்பிடப்பட்ட அஞ்சுவண்ணத்தார்கள் ஆனார்கள்?

மதம் மாறிய மேற்குறிப்பிட்ட ஐந்து சாதியாளர்களை 'அஞ்சுவண்ணத்தார்' என்று ஏற்றுக்கொள்வோமேயானால் யூதர்களுடைய அமைப்பாக சொல்லப்படும் அஞ்சுவண்ணம் எது?

தொடரும்...

மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 20 - 26 , 2006

Saturday, March 04, 2006

தீர்ப்பு :: பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்

இந்தியாவை உலுக்கிய பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்:
வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு


காவி கேடிகளால் குஜராத் இனப்படுகொலையில் 14 பேர் கொளுத்தி கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.

அந்த வழக்கு குஜராத் மாநில வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது இந்திய அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

உறவினர்களை கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் பரிகொடுத்த அபலைப் பெண் ஜஹீரா ஷேக்கின் பிறழ் வாக்குமூலமே குற்றவாளிகள் தப்ப காரணம் என்பதை மனித உரிமை போராளி தீஸ்தா செதல்வாட் ஜஹீரா ஷேக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேம்ஸ் லிங்டோவிடம் ஆஜர் படுத்தி உண்மை வாக்குமூலத்தை வெளியிடச் செய்தார். அந்த வாக்குமூலத்தில் "தன்னையும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 37 சாட்சிகளையும் பாஜகவின் எம்.எல்.ஏ மது ஸ்ரீவத்ஸவா அச்சுறுத்தியதாகவும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே தானும் தனது தரப்பினரும்..
பெஸ்ட் பேக்கரி கொடூரக் கொலைகள் குறித்து நீதி மறு விசாரணைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டினை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மும்பையில் பெஸ்ட் பேக்கரி நெருப்புக் கொலைகள் குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டும் உத்தரவைப் பிறப்பித்தது.

2002 பிப்ரவரி மாதம் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலைகளின் கொடூரங்களில் ஒன்றான பெஸ்ட் பேக்கரி படுகொலைகள் தொடர்பான தீர்ப்பினை மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அபய் திப்சே வழங்கியுள்ளார்.

இந்த வெறிச் செயலின் காரணகர்த்தாக்களாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மீதம் உள்ள 8 பேரின் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

1. ராஜுபாய் தாமிர்பாய் பரியா
2. பங்கஜ் விரேந்தர் கிர் கோஸை
3. பகதூர் என்ற ஜிட்டு
4. சந்திர சிங் சவுகான்
5. ஜக்தீஷ் சுனிலால் ராஜ்புத்
6. தினேஷ் பூல் சந்த் ராஜ்பர்
7. சானாபாய் சிமன்பாய் பரியா
8. சுரேஷ் என்ற லாலு தேவ்ஜிபாய் வாசவா
9. சைலேஷ்
என்ற காவி பயங்கரவாதிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முன்பாக இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 324, 326 மற்றும் 148 என்ற பிரிவுகளின் கீழ் சட்டவிரோதமாகக் கூடுதல், தீய நோக்குடன் தீயிடல், கொடுங்காயம் விளைவிக்கும் எண்ணத்துடன் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல் என்ற கடும் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்துள்ளதால் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் முன்பாக அவர்கள் முத­ல் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு குஜராத் வடோதரா விரைவு நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டு மும்பை அமர்வு நீதிமன்றத்திற்கு மறு விசாரணைக்கு வந்தபோது கூட ஜஹீரா ஷேக் மீண்டும் பிறழ் சாட்சி அளித்தார். இது தொடர்பாக ஜஹீரா ஷேக் மற்றும் அவரது தாயார் ஹைருன் னிஸா, ஜஹீராவின் சகோதரர்கள் நுத்ஃபுல்லாஹ், நஸீபுல்லாஹ், ஜஹீராவின் சகோதரி ஸாஹிராவுக்கும் நீதியரசர் திப்சே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஜஹீரா வேண்டுமென்றே தவறான பொய்யான தகவல்களை, சாட்சியங்களைக் கூறி தீஸ்தா செடல் வாட்டின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டியும் இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

இதற்கு ஜஹீராவும் அவரது தரப்பினரும் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.

ரூ.500 முதல், 10,000 வரை அபராதம் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டது.
கொளுத்திக் கொல்லப்பட்டு இன்று வரை உடல் கூட கண்டுபிடிக்கப்படாத ஜஹீராவின் மாமா கவுசரின் மனைவி ஷாஜகானுக்கு 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகையாய் குற்றவாளிகள் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடாக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் அந்த கொலைகாரப் பரதேசிகள் தங்களுக்கு அவ்வளவு தொகை கொடுக்க இயலாது என நீதிபதியிடம் கெஞ்சிய பிறகு 50,000 வழங்க நீதிபதி உத்தர விட்டார். நீதி மெல்ல கண் விழித்து பார்க்கிறது. மனித மிருகங்கள் வெலவெலத்து போயிருக்கின்றனர். அனைத்து இனப்படுகொலை யாளர்களையும் நீதியின் முன் மண்டியிட வைக்க வேண்டும் என்பதே நாட்டிலுள்ள நல்லோரின் விருப்பமாகும்.

நீதியின் வெற்றி

பெஸ்ட் பேக்கரி வழக்கின் தீர்ப்பு குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஆனந்த் கூறும்போது இது நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.

ஜஹீரா ஷேக்கிற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆனந்த் இதன் மூலம் சாமானிய மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்பட வழி பிறக்கும் என்றார்.

இந்த தீர்ப்பின் மூலம் வலுவற்றவர்களின் (சிறுபான்மை சமூகம்) மீது தாக்குதல் தொடுப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டுவிட்டது என்றார் முன்னாள் உச்சநீதிமன்ற வி.என்.காரே. ஒரு மாநிலத்தில் அரசுத் தரப்பே குற்றவாளிகளை தப்ப விட வழக்கு மாற்றப்பட்டு மற்றொரு மாநிலத்தில் விசாரித்து முடிக்கப்பட்டது வரலாற்று நிகழ்வு என மேலும் குறிப்பிட்டார்.

மறக்க முடியாத கண்ணீர் நினைவுகள்

2002 பிப்ரவரி 27ல் குஜராத் வடோதராவில் உள்ள ஹனுமான் தெஹ்ரியில் பெஸ்ட் பேக்கரி என்ற சிறுபான்மை இன நிறுவனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவி குண்டர்களின் இந்த வெறிச் செயலால் இந்தியாவே கொதிப்பில் ஆழ்ந்தது.

காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகம் அன்று கண்டது. 14 பேர் (இரண்டு குழந்தைகள்) உள்பட தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பதையே உணராமல் துடிதுடித்து இறந்தது இளகிய நெஞ்சங்களால் மறக்க முடியாத நிகழ்வல்லவா?

நீதியின் பயணம்

குஜராத்திலிருந்து பெஸ்ட் பேக்கரி நெருப்பு கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையமும் 'சிட்டிஸன் ஃபார் ஜஸ்டீஸ் அன்ட் பீஸ்' இயக்கமும் சேர்ந்து ஒரு சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது. 2004 ஏப்ரல் 12 அன்று தெற்கு மும்பையில் நீதி மறு விசாரணை செய்ய ஒரு தனி நீதிமன்றம் மும்பையில் அமைக்கப்படுகிறது.

அந்த தனி நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் விசாரணை நடத்தி 2004 டிசம்பர் 31 தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது. தெற்கு மும்பையின் மஜ்கான் பகுதியில் அமைக்கப்படும் இந்த நீதிமன்றத்திற்கு கூடுதல் அமர்வு நீதிபதி அபய் திப்சே நியமிக்கப்படுகிறார். இதன் பணி இறுதிக்காலம் நான்கு முறை நீடிக்கப்படுகிறது.

மறு விசாரணைப் பணிகள் செப்டம்பர் 22ல் தொடங்கப்பட்டு 2004 அக்டோபர் 4லி­ருந்து 75 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 7 பேர் எதிர் சாட்சி அளித்து வாக்குமூலங்கள் 3000 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத் வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது 73 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டனர். பேக்கரியில் உள்ள மற்ற இரு தொழிலாளர்களின் சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பதை விசாரணை அதிகாரி பி.பி. கனானி கூறியபோதும் குஜராத் கொடுங்கோல் அரசு கண்டு கொள்ளவில்லை.

இப்போது மறு விசாரணையில் ஜஹீராவும் அவரது தாயாரும் முரண்பாடான தகவல்களைக் கூறத் தொடங்கினர். நவம்பர் 2-ஆம் தேதி இதற்கென ஜஹீரா அன்ட் கோ பிரத்தியேக செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினர். தீஸ்தா செதல் வாட் தன்னை கத்திமுனையில் மிரட்டி வாக்குமூலம் கொடுத்ததாகவும் மற்றும் அவரது தொடர் மிரட்டல்கள் எல்லை மீறியதாகவும் ஜஹீரா வகையறாக்கள் புகார் கூறினர். மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் போலி பேர்வழிகள் உலாவுகிறார்கள் பார்த்தீர்களா என காவிக் கூட்டம் கூத்தாடியது.

ஜஹீராவின் பல்டிகளின் பின்னணி குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு தனி குழுவை ஏற்படுத்தியது. அதன் மூலம் ஜஹீரா காவி கேடிகளின் கருவியாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சங்கும்பல் அம்பலப்படுத்தப்பட்டது.

பத்திரிகையாளர்கள் அண்ட முடியாத அளவுக்கு ஜஹீராவுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இந்துத்துவா வீரர்களின் (?) கட்டுப்பாட்டில் ஜஹீரா வைக்கப்பட்டார். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்பதைப் போல சீப்பாக செயல்பட்ட ஹிந்துத்துவ கும்பலின் செயல் இன்று சிரிப்பாய் சிரிக்கிறது.

நன்றி: www.tmmkonline.org

Tuesday, February 21, 2006

இந்தியாவில் இஸ்லாம்-18

தொடர்-18: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்...

Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time of the granting, and the last plate bears the signatures of witnesses in Pahlavi, Kuffic and Hebrew characters which talked the emergence of great scholars like Burneld, Harg, West and Gundert to decipher.

சாட்சி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள பர்னல், ஹாக், வெஸ்ட், குண்டர்ட் போன்ற பெரும் அறிஞர்கள் கடும் முயற்சிகள் செய்தனர் என்று கோபிநாத ராவ் கூறுகிறார். ஆனால் அவர்களால் இப்பெயர்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் சற்று முயன்றிருந்தால் இந்தப் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாட்சிப் பெயர்கள் முக்கியமல்ல என்ற குறுகிய நினைப்பில் முயற்சிகளைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரையில் இவ்வாய்ப்புக்கு அப்பெயர்கள் தான் மிகமுக்கியம்.

இந்த கடைசிச் செப்பேட்டில் சாட்சிகள் கையொப்பம் போட்ட மொழிகள் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு ஆகியவை. கூஃபி என்பது அரேபியாவிலுள்ள கூஃபா எறும் பகுதியில் அன்று நடைமுறையில் இருந்து வந்த அரபி மொழியின் வேறு ஒரு எழுத்து வடிவமாகும். ஈப்ரு யூதர்களுடைய மொழி யூத (இஸ்ரேல்) நாட்டு மொழி.

"அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் காத்தே 'கூஃபி' எனப்படும் கூஃபா எழுத்துக்கள் (லிபி) தான் புழக்கத்தில் இருந்தன. (M.R.M.அப்துல் ரஹீம் - இஸ்லாமிய கலைக் களஞ்சியம், தொகுதி 3) முதல்முதலாக கூஃபா லிபியில் திருக்குர்ஆன் எழுதப்பட்டதாக வரலாற்று தந்தையென அறியப்படுகின்ற இப்னு கல்தூன் தம்முடைய உலகப் புகழ்பெற்ற 'முகத்திமா' எனும் நூலில் குறிப்பிடுகிறார். கூஃபி லிபியில் சாட்சிகள் கையொப்பம் போட்டிருப்பதாக டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுவதிலிருந்து கையொப்பம் போட்டவர்கள் முஸ்லிம்கள் என்று உறுதியாகின்றது. தரீசா பள்ளி செப்பேட்டில் கூஃபி லிபியில் (அரபி மொழியில்) கை ஒப்பம் போட்டவர்களுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மைமூன் இப்னு இப்ராஹீம்
2. முஹம்மது இப்னு மானி
3. ஸால்க் இப்னு அலி
4. உதுமான் இப்னு அல்மர்சிபான்
5. முஹம்மது இப்னு யஹியா
6. அம்ரு இப்னு இப்ராஹீம்
7. இப்ராஹீம் இப்னு அல்தே
8. பஹர் இப்னு மன்சூர்
9. அல்காசிம் இப்னு ஹாமித்
10. அல்மன்சூர் இப்னு ஈசா
11. இஸ்மாயில் இப்னு யாகூப்

டாக்டர் வி.ஏ.கபீரின் 'Muslim Momument in Kerala' எனும் நூலில் 64வது பக்கத்தில் 1 வது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தவிர, Roland E.Miller-ருடைய Mappila Muslims of Kerala எனும் ஆய்வு நூலிலும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. (Revised Edition 1992, Published by Orient Longman Ltd. page 43)

கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட செப்பேட்டில் முஸ்லிம்களையும் யூதர்களையும் சாட்சிகளாக்கியுள்ளனர். ஆனால் சமீப காலம் வரை இந்த செப்பேட்டைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் யாருமே முஸ்லிம்கள் கையொப்பம் போட்டிருப்பதாக எங்கும் குறிப்பிடவே இல்லை. காரணம், கூஃபி லிபி பிற்காலத்தில் நடைமுறையில் இல்லாததால் அவர்களால் வாசிக்க முடியாமல் இப்பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்.

கி.பி.1750களில் இவ்விடம் விஜயம் செய்த பிரெஞ்சு நாட்டு பயணியான ஆன்கொட்டில் டூ பேரான் (Anquetil du Perron) இந்த செப்பேட்டை ஆய்வு செய்யும் வகைக்காக, பொன்னானி மகுதூம், கொயிலாண்டி ஆகியோரிடம் இதன் நகல் இருக்குமென்ற நம்பிக்கையில் அவர்களை அணுகியதாக Walter J. Fischel கூறுகிறார். ஆனால் அந்த செப்பேட்டை (மூல செப்பேடு) பற்றி எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த செம்பேடுகளை ஆய்வு செய்த எவரும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றியோ, அரேபியர்களைப் பற்றியோ குறிப்பிடாமலிருந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 13 - 19, 2006

Sunday, February 19, 2006

இந்தியாவில் இஸ்லாம்-17

தொடர்-17: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள 'தரீசாப் பள்ளி' என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.

இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய 'ஈசோ சபீர்' என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

தென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.

தரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.

இந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட 'ஸ்தாணு ரவி வர்ம்மா' என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.

ஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.

கொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 06 - 12, 2006

Saturday, February 18, 2006

படம் பார்த்து பகை கொள் (cartoon issue)

ஓவிய தூரிகையால் பற்றவைக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடைதான் கடந்த சில வாரங்களாக நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்.

திருக்குர்ஆனும் முஹம்மது நபியின் வாழ்க்கையும் (The Quran and the prophet Muhammad's life) என்ற குழந்தைகளுக்கான புத்தகம் எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகம்மது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் முன்னணி பத்திரிக்கையான Jyllands-Posten டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் (to draw Muhammad as they see him) என்று கூறியிருக்கிறது.

செப்டம்பர் 30, 2005ல் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்ற வாசகம் எழுதிய திரி கொளுத்தப்பட்ட வெடிகுண்டுத் தலைப்பாகையை அணிந்தவர் போல தொடங்கி 12 கார்ட்டூன்களை இந்த பத்திரிக்கை வெளியிட்டது. இதனால் டென்மார்க் முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு ஆளானார்கள். பிறகு உலகின் பல பகுதியிலிருந்து இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இருந்தாலும் இவையனைத்தும் கருத்துச் சுதந்திரம் என்ற வார்த்தையை வைத்து அந்தப் பத்திரிக்கை நிறுவனம் தனது காதை அடைத்துக்கொண்டது. இதனைப்பார்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற இஸ்லாமிய எதிர்ப்பு பத்திரிக்கைகள் ஜனவரியில் அதனை மறு பதிப்பு செய்தன. மறுபதிப்பு செய்த இதழ்களில் ஒன்றான நார்வே கிறிஸ்டியன், வாசகர்களிடமிருந்து வரும் முஹம்மது நபி பற்றிய சிறந்த கார்ட்டூனுக்கு பரிசு என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் பிரதமர் ஆண்டர்ஸ் ஃபோக்ரஸ்முஸ்ஸென் இது கருத்துச் சுதந்திரம் பற்றிய விஷயம் எனவும் இதில் தங்களால் தலையிட முடியாது என்று சொன்னதோடு உலகின் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் நான்கு நாடுகளில் டென்மார்க்-கும் ஒரு நாடு என்பதாக பீற்றிக்கொண்ட நேரத்தில், விஷயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

கதை சொல்வதற்கு கார்ட்டூன் வரைந்ததுபோலவும் முஸ்லிம்கள் முஹம்மது நபியின் கார்ட்டூன் வரைந்ததற்காக ஏன் கோபப்படவேண்டும் என்ற கேள்வி கேட்டு பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் மீடியாவை முடுக்கிவிட்டுள்ளார்கள். இவர்கள் என்ன கதை சொல்ல விரும்புகிறார்கள் என்பதை வெடிகுண்டு தலைப்பாகை கார்ட்டூனைப் பார்த்தாலேயே எவருக்கும் எளிதில் புரியும்.

12 கார்ட்டூன்களை தவிர இதே சூழ்நிலையில் வெளிடப்பட்ட வேறு ஒரு கார்ட்டூனையும் இங்கு உதாரணத்திற்கு சொல்லலாம். "முஸ்லிம்கள் தொழவில்லை. தலையை மண்ணில் புதைக்க முயலுகிறார்கள்" என்ற பொருள்பட உள்ள கார்ட்டூன், இவர்களின் நெஞ்சில் உள்ள காழ்ப்புணர்வை அறிந்துக்கொள்ள உதவுகிறது.

முஹம்மது நபியைப்பற்றி கேலிச்சித்திரம் வெளியாக்கிய பத்திரிக்கை நிர்வாகம் முன்பு ஏசு கிருஸ்து பற்றி கேலிச் சித்திரம் வெளியிட மறுத்த செய்தி இப்போது வெளிவந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அல்-ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் தலைமை நிலையத்தை கப்பற்படையிலிருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆக மேற்கத்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தின் லட்சணம் இதுதான் போலும்.

அரபு நாடுகளில் பெட்ரோலை ஏற்றுமதி செய்து எவ்வாறு செல்வம் கொழிக்கிறதோ, அதே போல பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் செல்வம் கொழிக்கும் டென்மார்க்கின் மடியில் அடிவிழுந்துள்ளது. டென்மார்க் பொருட்களை வாங்க மாட்டோம் என்ற வகையில் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிக்கவே, டென்மார்க் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் தற்போது நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.

டென்மார்க், உலக வர்த்தக சபையில் (WTO) சவுதிக்கு எதிராக முறையிடப்போவதாக மிரட்டவே, டென்மார்க் பொருள் புறக்கணிப்பிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சவுதி அரசாங்கம் கூறிவிட்டது. கடந்த டிசம்பர் 11, 2005-ல் உலக வர்த்தக சபையில் சவுதி அரேபியா முழுமையான உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் வாழும் பல கோடி முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணி தொடங்கவே, நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கடைசியாக லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள டென்மார்க் தூதரகத்தை ஆர்பாட்டக்காரர்கள் எரிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

'ஜைலாண்ட்ஸ் போஸ்டன்' நாளிதழின் முதன்மை ஆசிரியர், தங்களின் தவறுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டாலும், குறிப்பிட்ட கேலிச்சித்திரங்களை இணையத்திலும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகள் ஒன்றும் புதிது அல்ல. முன்பு சல்மான் ருஷ்டி சாத்தானின் வசனங்கள் என்ற நாவல் வெளியிட்டு முஹம்மது நபி மற்றும் அவர்களின் மனைவியரை கேவலமாக எழுதியதால், ஈரான் அரசாங்கம் மரண தண்டணை விதித்தபோது, பல மில்லியன் டாலர்களை செலவழித்து சல்மான் ருஷ்டிக்கு UK பாதுகாப்பு வழங்கியது.

இப்பிரச்னை இவ்வளவு பூதாகரமாகும் என்று ஐரோப்பா எதிர்பார்க்கவில்லை. மறுபதிப்பு செய்த சில நாளிதழ்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சமரசத்திற்காக ஐரோப்பிய ஒறுங்கிணைப்பு (E.U) அரபுநாடுகளுக்கு தனது தூதரை அனுப்பி வைத்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட இந்த கார்ட்டூன்களால் டென்மார்க் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல், லெபனான் தூதரக எரிப்பு என்று தொடங்கி பாகிஸ்தானில் கே.எஃபிஸியிலிருந்து பிட்ஸா ஹட் வரை பற்றி எரிவதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. ஈராக் விவகாரத்தால் மேற்குலகிற்கும் அரபுலகிற்கும் ஏற்கனவே வெறுப்பு கனன்றுக் கொண்டிருக்கும் நிலையில், டென்மார்க் பத்திரிக்கையால் பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்திற்கெதிரான செயல்களுக்கு எதிர்ப்பைப் பதியவைக்கும் வகையில் பேரணி நடத்துவது ஜனநாயக உரிமை என்றாலும், பொருட்களை நாசப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.

முஹம்மது நபி பற்றி அவதூறாக படம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் தலையை கொண்டு வருபவருக்கு 51 கோடி ரூபாயும் தனது எடைக்கு நிகராக தங்கமும் பரிசு என்று உத்திர பிரதேச மாநில ஹஜ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது யாகூப் கூறியுள்ளாராம். இவருக்கு மறைந்த ஈரான் இமாம் "கொமைனி" போல் பிரபலமடைய ஆசை வந்துவிட்டதோ என்னவோ.

பரிசு கொடுக்க இவருக்கு ஏது இவ்வளவு பணம், கார்ட்டூனிஸ்ட் ஒருவர் அல்ல பலர், குற்றவாளி கார்ட்டூன் வரைந்தவரா, வெளியிட்டவரா?, இவர்தான் அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பாளரா? போன்ற கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம். (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!).

"படம் பார்த்து கதைச் சொல்"வதற்காக வரையப்பட்ட கார்ட்டூன்கள் அல்ல இவை. "படம் பார்த்து பகை கொள்"வதற்காக வரையப்பட்டவை என்பதே உண்மை.

Related and ref. news links:
http://porukki.weblogs.us/archives/4
http://thamizhsasi.blogspot.com/2006/02/blog-post_05.html
http://thoughtsintamil.blogspot.com/2006/02/blog-post_07.html
http://athusari.blogspot.com/2006/02/blog-post.html
http://athusari.blogspot.com/2006/02/blog-post_03.html
மற்றும் தினமணி (18.02.2006)

Wednesday, February 15, 2006

இந்தியாவில் இஸ்லாம்-16

தொடர்-16: தோப்பில் முஹம்மது மீரான்

செம்பேடு தரும் சான்றுகள்..

சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் 'இராஜசேகர வர்மா' என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள 'வாழப்பள்ளி' என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான 'தினாரை' சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். "திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது...." (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) "...மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் - ஐயன் காட்டு

மற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ" (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)

சேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு "வாழப்பள்ளி சாசனம்" என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான 'தினார்' இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான 'தினாரை' குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

Those who stop the perpetually endowed bali ceremony (muttappali in the "Thiruvarruvay (temple) should pay to the King (or the god) a time of one hundred dinara...(T.A.S.Page 14 (English Translatio)

கோயிலில் வழக்கமாக நடைபெறும் 'பலி' எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) 'நூறு தினாரம்' பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.

".....both situated in Uragan and yielding one hundred and fifty tumi of paddy and three dinaras, two "velis' in the land in Ayyankadu Damodaran's"

கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை தனியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் 'தினாரம்' இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.

8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.

சிலர் 'தினாரம்' என்ற தங்க நாணயத்தை 'தங்க நாணயம்' என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் 'தினாரம்' என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

தினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய 'முகத்திமா' என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் 'மாலிக் இபுனு தீனார்' என்றாகும்.

அரேபியர்களிடையே 'தினார்' என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் 'தினார்' என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.

'தினார்' என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான 'டாலர்' எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ்
டிசம்பர் 30, 2005 - ஜனவரி 5, 2006

Sunday, February 12, 2006

இந்தியாவில் இஸ்லாம்-15

தொடர்-15: தோப்பில் முஹம்மது மீரான்

மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்

மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

பிறகு, தமது சிறிய தகப்பனாரான மாலிக் இபுனு தீனாரை சந்திப்பதற்காக கொடுங்கல்லூருக்குச் சென்றார். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபின் தாம் கட்டிய அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழுகை நடத்தவும், முஸ்லிம் அல்லாதவரைக் கொண்டு நிரம்பிய ஒரு நாட்டில் இஸ்லாத்தின் கொள்கையைப் பரப்பியதில் பூரிப்படைந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மீண்டும் கொடுங்கல்லூருக்கு திரும்பி வந்தார்.

மாலிக் இபுனு தீனார், மாலிக் இபுனு ஹபீப், தோழர்கள், சேவகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். மாலிக் இபுனு தீனாரும் சில நண்பர்களும் நீங்கலாக, ஏனையோர்களை கொல்லத்தில் தங்கவைத்துவிட்டு இவர்கள் ஸஹருக்கு திரும்பிப் போனார்கள், ஸஹரில் வைத்து மறுமை எய்த மன்னரின் கபரிடத்தில் மாலிக் இபுனு தீனாரும் தோழர்களும் விஜயம் செய்தனர்.

அதற்குப் பின் குராசானுக்கு அவர்கள் சென்றனர். அங்குதான் மாலிக் இபுனு தீனார் மரணமடைந்தார். மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் சில பிள்ளைகளை கொல்லத்தில் தங்க வைத்துவிட்டு மனைவியுடன் கொடுங்கல்லூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவரும் மனைவியும் இறைவனடி சேர்ந்தனர். மலபாரில் முதல்முதலாக நடந்த இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தின் வரலாறு இதுவாகும்.

இது எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று குறிப்பாக சொல்வதற்கு தகுந்த தடயங்கள் ஏதுமில்லை. ஹிஜ்ரி 200ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்திருக்கலாமென்பது பெரும்பான்மையோரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட மன்னரின் இஸ்லாம் மத மாற்றம் நபிகள் நாயகத்தின்(ஸல்) காலத்தின் என்றும், 'சந்திரப்பிளப்பை' மன்னர் நேரடியாகப் பார்த்ததாகவும், அவர் திருத்தூதரிடத்தில் சென்றதாகவும், திருத்தூதரை சந்தித்த பின் ஒரு முஸ்லிம் குழுவுடன் மலபாருக்கு திரும்பிவரும் வழியில் ஸஹரில் வைத்து இறந்ததாகவும் நிலவிவரும் ஊகம் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.

இன்று மக்களிடையே பரவி இருப்பது போல் மன்னரின் கபர் ஸஹரில் அல்ல, ஏமன் நாட்டிலுள்ள 'ஸஃபரி'யிலாகும். 'சாமூரிக் கபர்' என்ற பேரில் அறியப்படும் அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அந்த நாட்டு மக்கள் கருதி வருகின்றனர்.

அரசர் காணாமல் போன நிகழ்ச்சி மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அதிகம் பிரச்சார மிகுந்த கதையாகும். மன்னர் மேல் உலகிற்கு (வான உலகிற்கு) ஏறிச் சென்றதாகவும், ஒரு நாள் இறங்கிவருவார் என்றும் ஹிந்துக்கள் நம்பிவருகின்றனர். இதன் அடிப்படையில் தான் கொடுங்கல்லூர் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில விசேஷ தினங்களில் மிதியடியும் தண்ணீரும் தயார் செய்து வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் ஆகும்.

(திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் "கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம்)

சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டது முதல் இஸ்லாம் இங்கு தோன்றியதாக சிலர் கூறிவருகின்றனர். இங்கு இஸ்லாம் தோன்றியதோடு சேரமான் பெருமாள் கதையை இணைத்து வருவதால் சிலர் பெருமாள் காலத்தையே குழப்பி விடுகின்றனர். ஏதோ ஒரு பெருமாள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த பெருமாளுடைய காலம் 10-வது நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் என்று குழப்புகின்றனர்.

இங்கு சேரமான் பெருமாள் நாயனாரோ, பள்ளி - பாண பெருமாள் என்ற பெளத்த அரசரோ இஸ்லாத்தைத் தழுவியதன் அடிப்படையில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியதில்லை, இவர்களுடைய மத மாற்றம் இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுடைய மத மாற்றம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய திரும்புமுனை என்ற அடிப்படையில் இதை ஆராய்வோமானால் ஆண்டு தேதிகளிலும் பெயர்களிலும் காணப்படும் குளறுபடிகளால் உண்மையை சரிவர ஆராய முடியாது. இவ்விரு பெருமாள்களைப் பற்றித் தனியாக ஆராய்வோம். தற்போது கையிலிருக்கும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றின் அடிப்படையில் உண்மையின் வேர்களைத் தேட வேண்டும்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை - டிசம்பர், 23 - 29, 2005

Saturday, February 11, 2006

இந்தியாவில் இஸ்லாம்-14

தொடர்-14: தோப்பில் முஹம்மது மீரான்

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான "துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்" என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் "கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).

குடும்பங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு யூத, கிறிஸ்தவ குழுக்கள் மலபாரிலுள்ள துறைமுகமான கொடுங்கல்லூரில் கப்பலில் இறங்கினர். அன்றைய அரசர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு தங்குவதற்காக வீடும் தோட்டங்களும் தேவைக்கேற்ப வழங்கினர். அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கலாயினர்.

சில வருடங்களுக்குப் பின் அரேபியாவிலிருந்து முஸ்லிம்களான சில புகராக்கள், கண்ணியமிக்கவரும் அறிஞருமான ஒரு ஷெய்க்கின் தலைமையில் இலங்கைக்கு செல்லும் வழியில் கொடுங்கல்லூரில் இறங்கினார். புகராக்களின் வருகையை கேள்விப்பட்ட அரசர், அவர்கள் வருந்தினராக அரண்மனைக்கு வரவழைத்து வரவேற்று கொடுத்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய அரசர் ஆர்வம் காட்டினார்.

பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் போதனை செய்த தூய இஸ்லாத்தைப் பற்றியும் மானிட திறனுக்கப்பாற்பட்ட 'சந்திரப் பிளப்பை' பற்றியும் விளக்கமாக அரசருக்கு எடுத்துரைத்தார் ஷெய்க் அவர்கள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய வரலாற்றையும் அற்புத நிகழ்ச்சிகளையும் ஷெய்க்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரசருடைய இதயத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின் வாய்மை இடம்பெறவும் பெருமானார்(ஸல்) அவர்கள் மீது தனி அன்பும் மதிப்பும் ஏற்பட்டன. தூய இஸ்லாத்தின் பால் கவரப்பட்ட அரசர், அவர்களுடன் அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்தோடு இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் இங்கு இறங்க வேண்டுமென்று ஷெய்க்கிடத்திலும் குழுவினரிடத்திலும் வேண்டினார்.

ஷெய்க் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் மக்கள் தெரிய வேண்டாதென அரசர் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டார், ஷெய்க்கும் குழுவினரும் இலங்கை சென்று ஆதம் மலை தரிசனம் செய்துவிட்டு, வாக்களித்தபடி கொடுங்கல்லூரில் வந்து அரசரை சந்தித்தார்கள். மிக இரகசியமான முறையில் பயணத்திற்காக கப்பலும் ஏனைய தயாரிப்புகளும் ஏற்பாடு செய்ய அரசர் ஷெய்க்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகர்களின் ஏராளமான கப்பல்கள் வந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரை அணுகி தானும் தம்முடைய புகராக்குழுவும் அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள எண்ணுவதாகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர இயலுமா என்று ஷெய்க் கேட்டார். கப்பல் உரிமையாளர் அந்த வேண்டுதலை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

பயண நாள் நெருங்கிய போது குடும்பத்தினரோ, ஊழியர்களோ, அமைச்சர்களோ யாருமே ஏழு தினங்களுக்கு தம் அரண்மனைக்குள் நுழைவதையும் தம்மை சந்திப்பதையும் தடைசெய்து கட்டளைப் பிறப்பித்தார். தமது நாட்டை பல பகுதிகளாக பிரிவினை செய்து எல்லையை வரையறுத்து ஆட்சி முறைகளையும் சட்டங்களையும் வகுத்து ஒவ்வொரு பகுதி மீதான ஆட்சி உரிமையை அரச குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எழுதிவைத்தார். மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் மலபாரின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மலபாரின் எல்லைகள் தெற்கு கும்ஹுரியும் (கன்னியாகுமரி) வடக்கு காஞ்சன் கூத்தும் (காசர்கோடு) ஆகும்.

அரசு தொடர்பான பொறுப்புக்களை ஒப்படைத்த பின் அவர் ஷெய்க்குடனும் புகராக்குழுவுனனும் சேர்ந்து இரகசியமாக இரவே கப்பல் ஏறி பயணமானார். வழியில் ஃபந்தரீனாவில் (பந்தலாயனி) இறங்கி ஒருநாள் தங்கியபின் தஹ்ஃபத்தனுக்குப் (தர்ம்மடம்) போனார். அங்கு இறங்கி மூன்று தினங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். தஹ் ஃபத்தனிலிருந்து நேரடியாக ஹைருக்கே சென்றுவிட்டார். அரசரும் குழுவினரும் அங்கு இறங்கினர்.

அங்கு தங்கியிந்த சந்தர்ப்பத்தில், மலபாருக்கு வந்து இஸ்லாம் மார்க்க பிரச்சாரம் செய்யவும் பள்ளிவாசல்கள் கட்டவும் திட்டமிட்டிருந்த ஒரு குழு அவருடன் இணைந்தது. அவர்களுக்கு எல்லாவித உதவி ஒத்துழைப்புக்கள் நல்குவதாக அரசர் மகிழ்ச்சியுடன் வாக்களித்தார். அரசருடன் சேர்ந்து மலபாருக்கு வருவதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசர் நோய்வாய்ப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. நோய் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மலபார் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்களில் முக்கிய நபர்களை ஷரபு இப்னு மாலிக், அவருடைய தாயாரின் சகோதரன் மாலிக் இப்னு தீனார், அவருடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப் இப்னு மாலிக் ஆகியோரையும் பிரச்சாரக் குழுவிலுள்ள பிற உறுப்பினர்களையும் அழைத்து அரசர் பின்வருமாறு உபதேசம் செய்தார்: "இந்த நோய் மூலம் நான் இறந்துவிட்டாலும் உங்களுடைய மலபார் பயணத்தை தாமதப்படுத்தவோ, அதிலிருந்து பின்வாங்கவோ செய்யக் கூடாது."

"தங்கள் நாடு எங்கு இருக்கிறதென்றும், தங்கள் அதிகார எல்லை எவ்வளவு உண்டு என்றும் எங்களுக்குத் தெரியாது. அதனாலேயே நாங்கள் உங்களுடன் பயணம் செய்ய முடிவு எடுத்தோம்." அவர்களுடைய இந்த பதில் கேட்டபோது அரசர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் ஒப்படைத்தார். அக்கடிதத்தில் அவருடைய இராஜியத்தின் பெயரும், குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள அரசர்கள் ஆகியோரின் விவரங்கள் விளக்கப்பட்டிருந்தன.

கொடுங்கல்லூரிலோ, தஹ்ஃபத் தனிலோ (தர்ம்மடம்) ஃபந்தரீனா (பந்தலாயனி)விலோ, கவுல் (கொல்லம்)த்திலோ இறங்க வேண்டுமென்றும், தம்முடைய நோய் நிலைமைப் பற்றியோ, தாம் இறந்துவிட்டால் அந்த தகவலையோ மலபாரில் யாரிடத்தில் சொல்லவேண்டாமென்றும் அவர்களிடம் தனியாக நினைவுபடுத்தினார்.

அதிக நாட்கள் செல்லும் முன் அரசர் இம்மையை விட்டு பிரிந்தார். அல்லாஹ் அவர் மீது பெருவாரியாக அருளாசிகள் பொழியட்டும்!

சில வருடங்களக்குப் பின், கண்ணியம் மிகுந்த ஷரபு இப்னு மாலிக்' மாலிக் இப்னு தீனார், மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக், அவருடைய துணைவியார் கமரியா, அவருடைய பிள்ளைகள், தோழர்கள் ஆகியோருடன் மலபாருக்கு கப்பல் ஏறி நீண்டநாள் பயணத்திற்குப் பின் அவர்கள் கொடுங்கல்லூரில் கரை இறங்கினார்கள். மன்னர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை அங்குள்ள அரசரிடத்தில் ஒப்படைக்கவும், மன்னரின் மரணச் செய்தியை இரகசியமாக பாதுகாத்துக் கொள்ளவும் செய்தனர். கடிதத்தின் மூலம் செய்திகள் தெரிந்துகொண்ட அரசர். அவர்களுக்கு தங்குமிடங்களும், தோட்டங்களும் மற்றும் நிலங்களும் கொடுத்தார். அவர்கள் அங்கேயே தங்கினார்கள். காலம் தாழ்த்தாமல் ஒரு பள்ளிவாசலையும் அங்கு (கொடுங்கல்லூரில்) கட்டினார்கள். (இதுதான் இந்தியாவிலுள்ள முதல் பள்ளிவாசல்.)

மாலிக் இப்னு தீனார் அங்கேயே தங்கியிருந்து கொண்டு தம்முடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக்கை மலபாரின் பிற பகுதிகளில் பள்ளிவாசல் நிறுவவும், இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் பணித்தார்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ்: டிசம்பர், 09 - 15, 2005

Thursday, February 09, 2006

இந்தியாவில் இஸ்லாம்-13

தொடர்-13: தோப்பில் முஹம்மது மீரான்

ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய 'துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்' (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் "பள்ளி பாண பெருமாள்" என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் "இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் "சேரமான் பெருமாள்" என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.

இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.

"ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது." (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.

"இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது"

திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:

கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.

எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது 'தடை' எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான "துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்" என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் "கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.

தொடரும்..

நவம்பர் 25 - டிசம்பர் 1, 2005