Sunday, September 26, 2004

திருமண அழைப்பிதழ்

கம்ப்யூட்டரில் ஒரு ஃபைலை தேடிக்கொண்டிருக்கும் போது அகப்பட்டது என் திருமண அழைப்பிதழ். மைக்ரோ சாப்ட் வேர்டில் நானே தொகுத்து நானே டைப் செய்தது (அல்ஹம்துலில்லாஹ்). எளிமையாகவும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வையும் ஊட்டியதால் பத்திரிகையின் மாடலை பலபேர் காப்பி செய்து வாங்கி போயிருக்கிறார்கள். உங்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்பதால் யுனிகோடில் மாற்றி இங்கு பதிவு செய்கிறேன். நீங்களும் வரதட்சணையும் வாங்காமல் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள். சீர் வாங்குவதைக்கூட தவிர்க்க பாருங்கள். அவர்களாக கொடுத்தாலும்தான். மனைவியுடன் சந்தோசமாக இருக்க உங்கள் உழைப்பில் வாங்கிய கட்டிலைத்தானே விரும்புவீர்கள்?. அப்படிப்பட்ட ஆண்மகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

என் நண்பரின் கவிதை ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

வரதட்சணை
கன்னிகள் சந்தையில்
மணமகன் விலைபோக
பெற்றோர்கள் முணுமுணுக்கும்
வர்த்தகப் பரிபாஷைகள்!

உழைத்து மானத்தோடு
பிழைக்கத் தெரியாதோர்..."
பிச்சைக்கு" சூட்டிக்கொண்ட
புதிய புனைப் பெயர்கள்!

அழைப்பிதழின் அளவு:
சாதாரண A4 size பேப்பரை இரண்டாக மடக்கினால் வரும் நான்கு பக்கங்களைக் கொண்டது. உபரியாக எந்த பேப்பரும் இணைக்கப்படவில்லை. 786, பிறை இவைகள் இல்லாத எளிமையான அழைப்பிதழ்.
_____________________________________________
.....முதல்பக்கம்......

திருமண ஒப்பந்த அழைப்பிதழ்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

மணமகன்
(மணமகனின் பெயர்)
(தந்தை பெயர்) இப்னு (அவரின் தந்தை பெயர்)
ஊர் மற்றும் விபரம்

மணமகள்
(மணமகளின் பெயர்)
(தந்தை பெயர்) பின்த் (அவரின் தந்தை பெயர்)
ஊர் மற்றும் விபரம்

மணநாள்
இன்ஷா அல்லாஹ், (அரபி பிறை, மாதம், வருடம்)
00.00.0000 -------- கிழமை, மதியம் 11.30 மணி

மணஅவை
இடம் அல்லது மண்டபத்தின் பெயர் மற்றும் விபரம்

மணவிருந்து
பகல் 12.30

மண-கவிதை
"ஆணினம்" நான் என மார்தட்டி,
அவளிடம் நீ வாங்கிடும் பெட்டி,
அன்பரே! அல்லாஹ்வின் பிடி கெட்டி,
"அஞ்சிடுக!" அது ஒன்றே ஈருலக வெற்றி!

மற்ற பக்கங்கள்....................

......அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான்....... (அல்குர்ஆன் 2:185)

திருமணம் பற்றி அல்குர்ஆனும் நபிமொழியும்

மணப் பெண் தேர்வு
பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அழகுக்காகவும் பாரம்பரியத்திற்காகவும், மார்க்கப்பற்றிற்காகவும் மணந்துக் கொள்ளப்படுகின்றனர். நீ மார்க்கப்பற்றுள்ள பெண்ணை தேர்வு செய்து வெற்றியடைந்துக் கொள் என நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

பெண்ணின் சம்மதம்
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும் என்று நபி(ஸல்) கூறியபோது, கன்னிப்பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி), நூல்: புகாரி

மஹர் Vs வரதட்சணை
பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமண கொடைகளை) மகிழ்வோடு வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 4:4)

....ஒரு (பொற்)குவியலையே (மஹராக) நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது..... (அல்குர்ஆன் 4:20)

மஹர் எனும் மணக்கொடையை உங்கள் மனைவியருக்கு மகிழ்வோடு வழங்கிவிடுங்கள் என்று இறைவன் கூறியிருக்க, இன்று இறைவனின் கட்டளைக்கு எதிராக, பெண்வீட்டாரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி பணமாகவும், பண்டமாகவும், நகையாகவும், விருந்தாகவும், பொருட்களாகவும், துணிகளாகவும், நிலம் மற்றும் வீடுகளாகவும் வரதட்சணை வாங்குவதை பார்க்கிறோம். இதில் சிலர் உங்கள் பெண்ணுக்கு, போடுவதை போடுங்கள்.....உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடாமலா இருப்பீர்கள்...? என பொடிவைத்து மறைமுகமாக வரதட்சணை எனும் தூண்டிலை, முதலில் போட்டுவிடுகின்றனர்.

ஊர் வழக்கம் மற்றும் சடங்கு சம்பிரதாயப்படி கொடுத்தனுப்பவில்லை எனில் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்கள் அல்லது தம் பெண்ணை நிம்மதியாக வாழவிடாமல் குத்திக் காட்டுவார்கள் என்ற பயத்தில், பெண் வீட்டார்கள் பொருட்களை கொடுத்தனுப்புகின்றார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, பெண் வீட்டாரிடம் கேட்டுப் பெறுவதுதான் வரதட்சணை, அவர்களாக தந்தால் தவறேதுமில்லை, பெற்றுக்கொள்ளலாம் என சிலர் கூறுகின்றனர்.

இப்படி கொடுத்துப் பழக்கப் படுத்தியிருப்பதால்தான் மணமுடிக்க முடியாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, சமுதாயப் பந்தலில் அதிகமாக படர்ந்து விட்டது. அவர்கள் "வடிக்கும் கண்ணீருக்கும்... வெடிக்கும் பெருமூச்சுக்கும்.... அவர்தம் பெற்றோர்களின் மன உலைச்சலுக்கும்..." இவையே காரணமாக இருப்பதால், இத்தகைய "தீய முன்மாதிரியை" தவிர்ந்துக் கொள்வதே சிறந்ததாகும்.

நாள், சட்சத்திரம், ஜாதகம் இல்லை
எவர் ஜோதிடனிடம் (எதிர்காலத்தையும், மறைவான விஷயத்தையும் கணிப்பவனிடம்) வந்து, அவன் கூறுபவற்றை (கேட்டு) உண்மைப்படுத்துவாரோ, அவர் முஹம்மது(ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி), நூல்: அபூதாவுத்

அன்பளிப்பு அல்லது மொய்
ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ், அவருக்கு வழங்கிய பாக்கியமாகும், என நபி(ஸல்) கூறினார்கள்.
காலித் பின் அதீ(ரலி), நூல்: அஹ்மத்

அன்பளிப்பு செய்துவிட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன், வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவன் போன்றவனாவான் என நபி(ஸல்) கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

வலிமா விருந்து
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலிமா (திருமண) உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

தம்பதியரின் கடமைகள்
நல்ல குணம் கொண்டவர்களே, ஈமானில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே. அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவனத்தில் நுழைவாள்.
உம்மு ஸலமா(ரலி), நூல்: இப்னுமாஜா

மணமக்களை வாழ்த்துதல்
நபி(ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்"

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும் என்று கூறுவார்கள்.
அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத்

எச்சரிக்கை
எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (விதித்துள்ள) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகில் புகுத்துவான். அதில் அவர் நிரந்தரமாக தங்கிவிடுவார் அவருக்கு இழிவான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 4:14)

Thursday, September 23, 2004

கற்றுக்கொள்ள ஆறு நிபந்தனைகள்

17.09.2004 அன்று ஜித்தாவில் நடைபெற்ற ""மொழியறிவும் சமூக முன்னேற்றமும்"" என்ற கருத்தருங்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கலாச்சார மையத்துடன் இணைந்து இப்படிபட்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை சிலர் செயல்வடிவம் கொடுத்திருந்தார்கள்.

நான்கு தலைப்புகளில் புதிய கோணத்தில் செய்திகள் பரிமாறப்பட்டன:

1. இஸ்லாமும் மொழியறிவும்
2. ஆங்கில மொழியின் எளிய இலக்கணம்
3. உங்கள் திறமைகளை அறிந்துக் கொண்டீர்களா?
4. அரபி மொழி கற்பதெப்படி?

வழக்கம்போல பொதுவேலைகள் வந்துவிட்டதால் முழு கருத்தரங்கையும் கேட்க முடியவில்லை. கேட்டவற்றை மட்டும் எனது விளக்கத்துடன் தொகுத்து கொடுத்துள்ளேன்.

சிறுவர்கள் கூட ஆங்கிலத்தை அழகாக பேசுகிறார்கள் எனும்போது நம்மால் ஏன் அரபியை, ஆங்கிலத்தை அல்லது எந்த ஒரு துறையையும் தரமாக கற்றுக்கொள்ள இயலவில்லை என்பதற்கு பல மேற்கோள்கள் காட்டப்பட்டன.

எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அல்லது துறையாக இருந்தாலும் அதனைக் கற்றுக்கொள்ள ஆறு நிபந்தனைகள் அவசியம்:

1) புரிந்துக்கொள்ளுதல்
இதன் அளவு மனிதனுக்கு மனிதன் மாறுபடும். உதாரணமாக வகுப்பறையில் உள்ள மாணவர்களில் சிலர் ஆசிரியர் சொன்னவுடன் புரிந்துக் கொள்கிறார்கள். சிலருக்கு சிறப்பு வகுப்பு வைத்து மீண்டும் விளக்கினால்தான் புரியும். இரண்டாவது தரத்தை உடையவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

2) ஆர்வம்
எதில் மனிதர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதை எளிதில் புரிந்துக் கொள்கிறார்கள். இது நல்லவற்றிற்கு மட்டும் அல்ல. கெட்டவற்றிற்கும் பொருந்தும்.

3) பொறுமை
கல்வி பயிலும் காலங்களில் சூழ்நிலையை அனுசரித்து பொறுமை மற்றும் மனக்கட்டுப்பாடு பேணவேண்டும்.

4) தன்னிறைவு
உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளில் தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பசி, தூக்கமின்மை போன்றவை பாடத்தில் கவனம் செலுத்த விடாது.

5) வழிகாட்டல்
அ) ஆசிரியரின் வழிகாட்டல்
ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதே மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். உதாரணமாக: ஆங்கிலம் கற்க ஆங்கிலத்தின் வழியே முயற்சி செய்தால் அதிக பலன் கிடைக்கும். ஏனென்றால் ஒவ்வொரு மொழியும் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உச்சரிப்பில் வித்தியாசமானதாக இருக்கும்.
ஆ) பெற்றோர்களின் வழிகாட்டல்
எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எங்கு படிக்க வைப்பது, தூரமாக உள்ள கல்லூரிக்கு தினமும் போய் வந்தால் படிக்க நேரம் கிடைக்குமா? போன்ற விஷயங்களில் பெற்றோர்களின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

6) காலங்கள்
தேவையான காலம் ஒதுக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் பிற மொழி கற்பது என்பது அம்மொழியில் உள்ள சில அர்த்தங்களை கற்றுக்கொள்ள இருக்கலாம் தவிர அம்மொழியை அல்ல.

மேற்கண்டவைகளை நமது பள்ளிக்கூட நாட்களுடன் ஒத்துப்பாருங்கள். அதற்கென நேரம் ஒதுக்கி படித்தோம். ஆனால் இன்று, பிற நல்ல விஷயங்களைக் கற்பதற்கு நேரம் ஒதுக்குகின்றோமா? அப்படியே ஒதுக்கினாலும் மற்ற அம்சங்களும் பேணப்படுகின்றதா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பள்ளிக்கூட நாட்களில் யாரெல்லாம் இந்த ஆறு விஷயங்களில் குறை செய்தார்களோ, அவர்கள் இன்று மனவருத்தம் அடைகின்றார்கள் (நானும் தான்).

நல்ல செய்திகளை பிறருக்கு எடுத்துச்சொல்ல மொழியறிவு மிக அவசியமானதாகும். உங்கள் பகுதியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முன்வருவீர்களா?

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி மற்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த மொழியை அழகாக பேசுகிறார்கள். ஆனால் அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் மட்டும் அரபியை தரமாக பேசமுடியவில்லையே, காரணம் தெரியுமா?

சொல்லிக்கொடுப்பவர்கள் சரியாகச் சொல்லிக் கொடுத்தால் ஏன் இந்தப் பிரச்சினை. விருந்து உபசரிப்பில் பெயர் போன அரபிகள், மற்ற மொழியினரிடம் பேசும்போது "அன கலாம்", "அன்த்த கலாம்", "ஆகிர் கலாம்", "கிர்கிர் மாஃபி" என உடைந்த அரபியில் புதியவர்களுக்கு தகுந்தார்போல் பேசுவதால், தரமான அரபி மொழியை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள இயலவில்லை.முதலில் சொல்லப்பட்ட ஆறு நிபந்தனைகளும் ஒரு அரபி மொழி கவிஞர் சொன்னவைகள்தான். எனவே, கவிஞர்கள்தான் அரபி மொழி பேசும் மக்களை திருத்த வேண்டும்.

ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள்

நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா? கவலையே வேண்டாம். www.export911.com செல்லுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் சாதாரண ஆங்கில மொழியில் தேவையான விளக்கத்துடன் தந்திருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து ஏற்றுமதி இறக்குமதிக்கான விதிமுறைகளை இலவசமாக தந்திருப்பது இந்த தளம்தான். ICCPublication-னுடைய விதிமுறைகளை தெரிந்துக்கொள்ள அதற்கான புத்தகங்களை விலைகொடுத்துதான் வாங்க வேண்டும் என்கிற அவசியத்தை தகர்த்தெரிகிறது இந்த தளம்.
கீழ்கண்ட தலைப்புகளில் அதிகப்படியான விபரங்களை தொகுத்து தந்திருக்கிறார்கள்.

Export -Import Marketing
Management
Letters of credit
Export Cargo insurance
Shipping
Logistics
Manufacturing
Purchasing
Bar codes
and more information like Conversion, Calculations etc...

இப்பணியில் உள்ளவர்களுக்கு அதிக குழப்பம் உண்டாக்ககூடிய ஒரு விஷயம் உண்டு என்றால் அது INCO terms-ஆகத்தான் இருக்க முடியும். அவற்றை படத்துடன் விளக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.

Dagram of International Commercial Terms (INCO TERMS) http://www.export911.com/e911/export/incoterm.htm

மொத்தத்தில் இந்த இணையதளத்தை ஏற்றுமதி இறக்குமதி தொழிலின் நூலகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

Friday, September 10, 2004

கணக்க தப்பா எழுதியிருக்காங்க...

தப்பு எங்கேன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20040909153701&Title=TamilNadu+Page&lTitle=RھZLm&Topic=0

தினமணியின் செப்டம்பர் 10ஆம் தேதி செய்தி. அப்டியே புடிச்சி போட்ருக்கேன்.

Quote:
தமிழக மக்கள் தொகை 6.24 கோடி: முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள் அதிகம்
புது தில்லி, செப். 10: தமிழக மக்கள் தொகை 6.24 கோடி என்று 2001-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை அறிக்கை தெரிவிக்கிறது.

இதில், இந்து மதத்தினர் 5.49 கோடி, முஸ்லிம்கள் 3.47 கோடி, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 3.78 கோடி. அதாவது, முஸ்லிம்களை விட, தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சீக்கியர்கள் 9545 பேர், புத்த மதத்தினர் 5393 பேர், ஜைன மதத்தினர் 83,359 பேர் உள்ளனர். எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட விரும்பாதவர்கள் 59,344 பேர்.

தலைநகர் சென்னையில், இந்துக்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர்.
சென்னையின் மொத்த மக்கள் தொகை 43.43 லட்சம். இந்துக்கள் 35.73 லட்சம், முஸ்லிம்கள் 3.79 லட்சம், கிறிஸ்தவர்கள் 3.31 லட்சம், சீக்கியர்கள் 2470, புத்த மதத்தினர் 1891, ஜைனர்கள் 45611, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட விரும்பாதோர் 8031.

அதேபோல், பிற மாவட்டங்களின் புள்ளி விவரங்களும், (மொத்தம், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், எந்த மதம் எனக் குறிப்பிட விரும்பாதோர் என்ற வரிசையில்) தரப்பட்டுள்ளன.

திருவள்ளூர்: 27.54 லட்சம், 12.97 லட்சம், 99 ஆயிரம், 1.69 லட்சம், 847, 486, 3928, 3478.
காஞ்சிபுரம்: 28.77 லட்சம், 25.83 லட்சம், 1.13 லட்சம், 1.70 லட்சம், 811, 521, 3954, 3679.
வேலூர்: 34.77 லட்சம், 30.16 லட்சம், 3.50 லட்சம், 1.02 லட்சம், 535, 380, 3489, 2106.
தருமபுரி: 28.56 லட்சம், 26.90 லட்சம், 1.23 லட்சம், 39 ஆயிரம், 375, 61, 383, 2006.
திருவண்ணாமலை: 21.86 லட்சம், 20.41 லட்சம், 78 ஆயிரம், 55 ஆயிரம், 86, 146, 8305, 1930.
விழுப்புரம்: 29.60 லட்சம், 27.26 லட்சம், 1.10 லட்சம், 1.15 லட்சம், 343, 193, 5092, 1789.
சேலம்: 30.16 லட்சம், 28.83 லட்சம், 7.76 லட்சம், 50 ஆயிரம், 535, 208, 1043, 2305.
நாமக்கல்: 14.93 லட்சம், 14.51 லட்சம், 26 ஆயிரம், 13 ஆயிரம், 117, 40, 80, 1091.
ஈரோடு: 25.81 லட்சம், 24.43 லட்சம், 77 ஆயிரம், 55 ஆயிரம், 329, 78, 1298, 3255.
நீலகிரி: 7.62 லட்சம், 5.99 லட்சம், 87 ஆயிரம், 342, 348, 1229, 970.
கோவை: 42.71 லட்சம், 38.47 லட்சம், 2.27 லட்சம், 1.85 லட்சம், 875, 267, 3562, 5237.
திண்டுக்கல்: 19.23 லட்சம், 16.84 லட்சம், 89 ஆயிரம், 1.45 லட்சம், 466, 222, 126, 2371.
கரூர்: 9.35 லட்சம், 8.83 லட்சம், 37 ஆயிரம், 13 ஆயிரம், 95, 19, 19, 825.
திருச்சி: 24.18 லட்சம், 20.40 லட்சம், 1.56 லட்சம், 2.18 லட்சம், 169, 67, 536, 1921.
பெரம்பலூர்: 4.93 லட்சம், 4.60 லட்சம், 24 ஆயிரம், 8 ஆயிரம், 3, 7, 15, 343.
அரியலூர்: 6.95 லட்சம், 6.50 லட்சம், 7 ஆயிரம், 3 ஆயிரம், 59, 3, 27, 535.
கடலூர்: 22.85 லட்சம், 21 லட்சம், 1 லட்சம், 73 ஆயிரம், 234, 83, 1284, 2151.
நாகப்பட்டினம்: 14.88 லட்சம், 13.28 லட்சம், 1.12 லட்சம், 45 ஆயிரம், 77, 40, 819, 1150.
திருவாரூர்: 11.69 லட்சம், 10.52 லட்சம், 83 ஆயிரம், 31 ஆயிரம், 26, 7, 205, 1930.
தஞ்சாவூர்: 22.16 லட்சம், 19.25 லட்சம், 1.63 லட்சம், 1.24 லட்சம், 38, 28, 657, 1306.
புதுக்கோட்டை:14.59 லட்சம், 12.94 லட்சம், 97 ஆயிரம், 66 ஆயிரம், 42, 19, 30, 1115.
சிவகங்கை: 11.55 லட்சம், 10.26 லட்சம், 59 ஆயரம், 67 ஆயிரம், 75, 28, 110, 1125.
மதுரை: 25.78 லட்சம், 23.51 லட்சம், 1.37 லட்சம், 86 ஆயிரம், 302, 82, 2046.
தேனி: 10.93 லட்சம், 10.11 லட்சம், 48 ஆயிரம், 33 ஆயிரம், 57, 25, 80, 423.
விருதுநகர்: 17.51 லட்சம், 16.37 லட்சம், 43 ஆயிரம், 68 ஆயிரம், 54, 41, 167, 1279.
ராமநாதபுரம்: 11.87 லட்சம், 9.28 லட்சம், 1.74 லட்சம், 84 ஆயிரம், 61, 24, 18, 1148.
தூத்துக்குடி: 15.72 லட்சம், 12.35 லட்சம், 72 ஆயிரம், 2.62 லட்சம், 52, 21, 107, 951.
திருநெல்வேலி: 27.23 லட்சம், 21.72 லட்சம், 2.52 லட்சம், 2.96 லட்சம், 89, 32, 1834.
கன்னியாகுமரி: 16.76 லட்சம், 8.59 லட்சம், 70 ஆயிரம், 7.45 லட்சம், 31, 26, 77, 714.
Unquote:

Thursday, September 02, 2004

தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்!

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.

ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).

காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.

இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.

அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம். எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான்:
முன்பு இந்துத்துவா என்றால்
பாரதப் பண்பாடு
இப்போது
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து
சிசுக் கருவை
எடுத்துத் தீயில் வீசுதல்

கவிஞர் இன்குலாப்
எரியும் கொழுந்துகளில்
ஆண்கள்
பெண்கள்
வகிர்ந்த வயிற்றிலிருந்து
குருதி சொட்டும்
கொப்புள் கொடியோடு
கண் விழிக்காத
கருவறைச் சிசுக்கள்

கவிஞர் பொன்னீலன்
குறிகளுடனும் குண்டாந்
தடிகளுடனும்
வாள்களுடனும்,
சூலாயுதங்களுடனும்
மறுபடியும்
குகை விட்டுக் கிளம்பின - அந்தக்
கற்கால மிருகங்கள்
....
நிறைச் சூலி வயிறுகீறி
கண் திறவா பசும் குருத்தை
கோரைப் பற்கள் துருத்தும்
கடைவாயில் சிவப்பொழுக
கிழித்துக் கிழித்து
விழுங்கி ஆனந்தித்தன.

கவிஞர் சுகுணா திவாகர்
சுன்னத் குறியினரை தேடியலையும்
வாளின் பசி முன்
கையறு நிலையன்றி யாதுமில்லை
மறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கோ
வென்றாயின அடையாளங்கள்

இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான். அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.

சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?

எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.

படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல).

அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.
தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்! புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!