Friday, December 23, 2005

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-3

3. பலதார மணம் செய்த ஆண்களுக்கு ஆதரவான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்

இரண்டாம் திருமணம் செய்ததாக இரண்டாம் மனைவி வாக்குமூலம் அளித்தாலும் குற்றம் இல்லை!

கன்வால்ராம் மற்றும் சிலர்
எதிர்
ஹிமாச்சலப் பிரதேச நிர்வாகம்

AIR.1966 SC 614

ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை மணந்துகொள்ளும் ஆடவருக்கு ஆதரவையும், முதல் மனைவிக்கு வேதனையையும் எவ்வாறெல்லாம் உச்சநீதிமன்றம் வழங்குகின்றது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது கன்வால்ராம் வழக்கு.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 1966-இல் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஹிமாச்சலப் பிரதேச கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். பராய்னா என்ற முறைப்படி மணமுடித்துக் கொள்வது இக்கிராம மக்களின் அங்கீகரிக்கப்பட்ட திருமணமுறையாக அமைந்துள்ளது. இந்தத் திருமண முறையில் சப்தப்பதி கிடையாது. இத்திருமண முறையில் இன்றியமையா சடங்குகள் வருமாறு:

மணமகளின் உறவினர் ஒருவர் மணமகளுக்கு அவளது வீட்டில் சுஹாக் அளித்தல், மணமகளின் உறவினர் மணமகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து வருதல்(பராய்னா), பானையில் நாணயங்கள் போடுதல், வாசலில் பூஜை செய்தல், வேதப்பாராயணம் செய்தல், மணமகள் பானையைத் தூக்கிக் கொண்டு சமையல் அறைக்கு எடுத்துச் செல்லுதல், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் விருந்தளித்தல். வாசலில் பூஜை செய்வதும் சமையல் அடுப்பிற்கு தலைவணங்குவதும் திருமணத்தின் இன்றியமையா சடங்குகள் என்று கன்வால்ராமின் முதல் மனைவி நீதிமன்றத்தில் கூறினார். இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டவர்கள் கன்வால்ராமின் இரண்டாவது திருமணத்தில் சுஹாக் மற்றும் பராய்னா சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்கள். ஆனால் மற்ற சடங்குகள் குறித்து ஏதும் கூறவில்லை.

இரண்டாம் திருமணம் செய்து கொண்டதற்காக கன்வால்ராம் மீது கிரிமினல் வழக்குத் தொடர்வதற்க முன்பாக, அவரது இரண்டாம் மனைவியுடன் கன்வால் பாலுறவு வைத்துக் கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டுமென முதல் மனைவி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்த இரண்டாம் மனைவி முதல் திருமணத்தை ரத்து செய்த பிறகே கன்வால்ராம் தன்னைத் திருமணம் முடித்ததாக வாக்குமூலம் அளித்தார்.

முதலில் இவ்வழக்கை விசாரித்த ஹிமாச்சல் பிரதேச நீதியியல் ஆணையாளர் (Judicial commissioner) இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கிரிமினல் குற்றத்தை கன்வால்ராம் புரிந்துள்ளதாகத் தீர்ப்பு கூறினார். இத்தீர்ப்பை எதிர்த்து கன்வால்ராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில்,

"குற்றஞ்சாட்டப்பட்ட கன்வால்ராம் அவரது இரண்டாம் மனைவி என்று கூறப்படுபவருடன் உடலுறவு கொண்டதாக அளித்துள்ள வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டோ - முதல் திருமணம் ரத்தான பின்தான், கன்வால் ராம் தன்னை மணம் முடித்துக் கொண்டார் என்ற இரண்டாம் மனைவியின் நிரூபிக்கப்படாத வாக்குமூலத்தை வைத்துக்கொண்டோ கன்வால்ராம் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று தீர்ப்பளிக்க முடியாது. இரண்டாம் மனைவி தனக்கும் கன்வால்ராமுக்கும் திருமணம் நடந்ததாகக் கூறும் ஒப்புதல் வாக்குமூலத்தை கன்வால்ராமுக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அதனை அளித்த இரண்டாம் மனைவிக்கு எதிரானதாகவும் கருதமுடியாது" என்று கூறி கன்வால்ராமை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.

இரண்டாம் திருமணம் சட்டத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், பாவ்ராவ் லோகாண்டே வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்தது போல் விவாகஹோமமும், சப்தப்பதியும் நிறைவேற்றப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டாக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியது.

சரி, இரண்டாம் மனைவியின் வாக்குமூலம் ஒருபுறம் இருக்கட்டும். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இந்து ஆடவரே நீதிமன்றத்தில் தாம் இரண்டாவதாக திருமணம் முடித்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்தால் நீதிமன்றம் இந்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குமா?

இக்கேள்விக்கு விடை அளிப்பதுதான் நாம் பார்க்கவிருக்கும் அடுத்த வழக்கு.

(தொடரும்..)

- பேராசிரியர் இ.அருட்செல்வன்

நன்றி: நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்

புத்தொளி வெளியீட்டகம்
முதல் பதிப்பு: ஜுன் 1997

புத்தகம் கிடைக்கும் இடம்:
ஸாஜிதா புக் சென்டர்
204 தம்புச் செட்டித் தெரு, 2-வது மாடி
சென்னை - 600 001

No comments: