Sunday, September 26, 2004

திருமண அழைப்பிதழ்

கம்ப்யூட்டரில் ஒரு ஃபைலை தேடிக்கொண்டிருக்கும் போது அகப்பட்டது என் திருமண அழைப்பிதழ். மைக்ரோ சாப்ட் வேர்டில் நானே தொகுத்து நானே டைப் செய்தது (அல்ஹம்துலில்லாஹ்). எளிமையாகவும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வையும் ஊட்டியதால் பத்திரிகையின் மாடலை பலபேர் காப்பி செய்து வாங்கி போயிருக்கிறார்கள். உங்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்பதால் யுனிகோடில் மாற்றி இங்கு பதிவு செய்கிறேன். நீங்களும் வரதட்சணையும் வாங்காமல் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள். சீர் வாங்குவதைக்கூட தவிர்க்க பாருங்கள். அவர்களாக கொடுத்தாலும்தான். மனைவியுடன் சந்தோசமாக இருக்க உங்கள் உழைப்பில் வாங்கிய கட்டிலைத்தானே விரும்புவீர்கள்?. அப்படிப்பட்ட ஆண்மகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

என் நண்பரின் கவிதை ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

வரதட்சணை
கன்னிகள் சந்தையில்
மணமகன் விலைபோக
பெற்றோர்கள் முணுமுணுக்கும்
வர்த்தகப் பரிபாஷைகள்!

உழைத்து மானத்தோடு
பிழைக்கத் தெரியாதோர்..."
பிச்சைக்கு" சூட்டிக்கொண்ட
புதிய புனைப் பெயர்கள்!

அழைப்பிதழின் அளவு:
சாதாரண A4 size பேப்பரை இரண்டாக மடக்கினால் வரும் நான்கு பக்கங்களைக் கொண்டது. உபரியாக எந்த பேப்பரும் இணைக்கப்படவில்லை. 786, பிறை இவைகள் இல்லாத எளிமையான அழைப்பிதழ்.
_____________________________________________
.....முதல்பக்கம்......

திருமண ஒப்பந்த அழைப்பிதழ்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

மணமகன்
(மணமகனின் பெயர்)
(தந்தை பெயர்) இப்னு (அவரின் தந்தை பெயர்)
ஊர் மற்றும் விபரம்

மணமகள்
(மணமகளின் பெயர்)
(தந்தை பெயர்) பின்த் (அவரின் தந்தை பெயர்)
ஊர் மற்றும் விபரம்

மணநாள்
இன்ஷா அல்லாஹ், (அரபி பிறை, மாதம், வருடம்)
00.00.0000 -------- கிழமை, மதியம் 11.30 மணி

மணஅவை
இடம் அல்லது மண்டபத்தின் பெயர் மற்றும் விபரம்

மணவிருந்து
பகல் 12.30

மண-கவிதை
"ஆணினம்" நான் என மார்தட்டி,
அவளிடம் நீ வாங்கிடும் பெட்டி,
அன்பரே! அல்லாஹ்வின் பிடி கெட்டி,
"அஞ்சிடுக!" அது ஒன்றே ஈருலக வெற்றி!

மற்ற பக்கங்கள்....................

......அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான்....... (அல்குர்ஆன் 2:185)

திருமணம் பற்றி அல்குர்ஆனும் நபிமொழியும்

மணப் பெண் தேர்வு
பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அழகுக்காகவும் பாரம்பரியத்திற்காகவும், மார்க்கப்பற்றிற்காகவும் மணந்துக் கொள்ளப்படுகின்றனர். நீ மார்க்கப்பற்றுள்ள பெண்ணை தேர்வு செய்து வெற்றியடைந்துக் கொள் என நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

பெண்ணின் சம்மதம்
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும் என்று நபி(ஸல்) கூறியபோது, கன்னிப்பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி), நூல்: புகாரி

மஹர் Vs வரதட்சணை
பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமண கொடைகளை) மகிழ்வோடு வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 4:4)

....ஒரு (பொற்)குவியலையே (மஹராக) நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது..... (அல்குர்ஆன் 4:20)

மஹர் எனும் மணக்கொடையை உங்கள் மனைவியருக்கு மகிழ்வோடு வழங்கிவிடுங்கள் என்று இறைவன் கூறியிருக்க, இன்று இறைவனின் கட்டளைக்கு எதிராக, பெண்வீட்டாரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி பணமாகவும், பண்டமாகவும், நகையாகவும், விருந்தாகவும், பொருட்களாகவும், துணிகளாகவும், நிலம் மற்றும் வீடுகளாகவும் வரதட்சணை வாங்குவதை பார்க்கிறோம். இதில் சிலர் உங்கள் பெண்ணுக்கு, போடுவதை போடுங்கள்.....உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடாமலா இருப்பீர்கள்...? என பொடிவைத்து மறைமுகமாக வரதட்சணை எனும் தூண்டிலை, முதலில் போட்டுவிடுகின்றனர்.

ஊர் வழக்கம் மற்றும் சடங்கு சம்பிரதாயப்படி கொடுத்தனுப்பவில்லை எனில் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்கள் அல்லது தம் பெண்ணை நிம்மதியாக வாழவிடாமல் குத்திக் காட்டுவார்கள் என்ற பயத்தில், பெண் வீட்டார்கள் பொருட்களை கொடுத்தனுப்புகின்றார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, பெண் வீட்டாரிடம் கேட்டுப் பெறுவதுதான் வரதட்சணை, அவர்களாக தந்தால் தவறேதுமில்லை, பெற்றுக்கொள்ளலாம் என சிலர் கூறுகின்றனர்.

இப்படி கொடுத்துப் பழக்கப் படுத்தியிருப்பதால்தான் மணமுடிக்க முடியாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, சமுதாயப் பந்தலில் அதிகமாக படர்ந்து விட்டது. அவர்கள் "வடிக்கும் கண்ணீருக்கும்... வெடிக்கும் பெருமூச்சுக்கும்.... அவர்தம் பெற்றோர்களின் மன உலைச்சலுக்கும்..." இவையே காரணமாக இருப்பதால், இத்தகைய "தீய முன்மாதிரியை" தவிர்ந்துக் கொள்வதே சிறந்ததாகும்.

நாள், சட்சத்திரம், ஜாதகம் இல்லை
எவர் ஜோதிடனிடம் (எதிர்காலத்தையும், மறைவான விஷயத்தையும் கணிப்பவனிடம்) வந்து, அவன் கூறுபவற்றை (கேட்டு) உண்மைப்படுத்துவாரோ, அவர் முஹம்மது(ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி), நூல்: அபூதாவுத்

அன்பளிப்பு அல்லது மொய்
ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ், அவருக்கு வழங்கிய பாக்கியமாகும், என நபி(ஸல்) கூறினார்கள்.
காலித் பின் அதீ(ரலி), நூல்: அஹ்மத்

அன்பளிப்பு செய்துவிட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன், வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவன் போன்றவனாவான் என நபி(ஸல்) கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

வலிமா விருந்து
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலிமா (திருமண) உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

தம்பதியரின் கடமைகள்
நல்ல குணம் கொண்டவர்களே, ஈமானில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே. அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவனத்தில் நுழைவாள்.
உம்மு ஸலமா(ரலி), நூல்: இப்னுமாஜா

மணமக்களை வாழ்த்துதல்
நபி(ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்"

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும் என்று கூறுவார்கள்.
அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத்

எச்சரிக்கை
எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (விதித்துள்ள) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகில் புகுத்துவான். அதில் அவர் நிரந்தரமாக தங்கிவிடுவார் அவருக்கு இழிவான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 4:14)

2 comments:

இப்னு ஹம்துன் said...

ஆம்! உங்களுடைய கட்டுரை என் பழைய நினைவுகளை கிளரி விட்டது எனலாம். என்னுடைய திருமண அழைப்பிதழும் நானே தொகுத்து வரதட்சணையின்றி செய்ததுதான்.

Unknown said...

சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள்.