Thursday, September 02, 2004

தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்!

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.

ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).

காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.

இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.

அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம். எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான்:
முன்பு இந்துத்துவா என்றால்
பாரதப் பண்பாடு
இப்போது
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து
சிசுக் கருவை
எடுத்துத் தீயில் வீசுதல்

கவிஞர் இன்குலாப்
எரியும் கொழுந்துகளில்
ஆண்கள்
பெண்கள்
வகிர்ந்த வயிற்றிலிருந்து
குருதி சொட்டும்
கொப்புள் கொடியோடு
கண் விழிக்காத
கருவறைச் சிசுக்கள்

கவிஞர் பொன்னீலன்
குறிகளுடனும் குண்டாந்
தடிகளுடனும்
வாள்களுடனும்,
சூலாயுதங்களுடனும்
மறுபடியும்
குகை விட்டுக் கிளம்பின - அந்தக்
கற்கால மிருகங்கள்
....
நிறைச் சூலி வயிறுகீறி
கண் திறவா பசும் குருத்தை
கோரைப் பற்கள் துருத்தும்
கடைவாயில் சிவப்பொழுக
கிழித்துக் கிழித்து
விழுங்கி ஆனந்தித்தன.

கவிஞர் சுகுணா திவாகர்
சுன்னத் குறியினரை தேடியலையும்
வாளின் பசி முன்
கையறு நிலையன்றி யாதுமில்லை
மறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கோ
வென்றாயின அடையாளங்கள்

இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான். அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.

சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?

எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.

படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல).

அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.
தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்! புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!

8 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அபூ உமரு,

நல்லாத்தான் எளுதுறீங்க. நம்ம ஆளு கேப்பான்னு நெனைக்கரீங்களா, கேக்கமாட்டான். அங்க என்னடான்னா முஸ்லிம் பெண்மணிங்க முழுக்கால் சட்டை, முழுக்கால் பேண்டு, தலைல முக்காடு போட்டுக்கிட்டு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கறாங்க; நாம இன்னும் அவங்களை கண்ணு தெரியுதா, மூக்கு தெரியுதா, ஜமாத்துல கேள்வி கேளுன்னு ராவுடி பண்ணிக்கிட்டிருக்கோம்.

மீடியாவுல நீ வந்தாத்தான எதுனாச்சும் பேச பதில் தர முடியும். நீ முயற்சியே பண்ணாம எல்லாம் உங்க வூட்டுக்கு வந்து கதவத் தட்டி தலைல கொட்டணுமுன்னா நடக்குமா. "எல்லாம் காவி மயம், எல்லாம் காவி மயம்" கூப்பாடு போடு. வாத்தா, வந்து காவி மயம் எங்கெங்க இருக்குன்னு பாருத்தா. குஜராத் கலவரத்துக்கு அப்புறம் அந்தக் கேச எடுத்து நடத்துறவன் காவியா, ஏன், இப்ப கோர்ட்டு எல்லாத்தையும் தோண்டி எடுங்கப்பான்னு சொல்லுதே, நீதிபதி என்ன காவியா?

எல்லா எடத்துலயும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நீ போராடணுமின்னா, தயாராகணுமில்ல. தயாராகு.

உமரு,

நீங்க ராத்திரி பகலா எதுனாச்சம் இப்படி எழுத. பதில் யாராச்சும் போஸ்ட் பண்ணுவாங்கன்னு நெனைக்கறீங்களா. இண்டர்நெட்டுல இருக்ற கோடிக்கணக்கான ப்ளாக்குல இதுவும் ஒண்ணு. மக்களுக்கு மெயில் அனுப்பியே உங்க தாவு தீந்துருத்தா. நம்ம ஆளுங்க நல்லாப் பேசுவியாங்கத்தா. சேவைக்கு மட்டும் ஒதுங்கிருவாங்க. அதெல்லாம் இஸ்லாமியப் பத்திரிகைக்காரங்க பாத்துக்குவாங்க. பெரம்பூருல ஒண்ணும், மதுரைல ஒண்ணும், நெல்லைல ஒண்ணும் வச்சிருக்கோமில்ல, அவிங்க பாத்துக்குவாங்க. அப்படித்தாந்தா மத்தவங்க தலைல பொறுப்பப் போடணும்.

நம்மாளு இங்க ப்ளாக்குல வந்து எளுத மாட்டான். அபூ உமருக்கு ஒரு கடிதாசி எளுதி, எப்படிய்யா தமிழ் எழுதறதுன்னு கேப்பானா, கேக்கமாட்டான். தமிழ் வேணாந்தா, இங்கிலீசுலயாவது தப்புந்தவறுமா எதுனாச்ச்சம் எளுதுய்யா.

எதோ எனக்குக் கெடைக்ற நேரத்துல நான் வந்து இப்படி எதுனாச்சம் போஸ்ட் பண்றேன், கவலைப் படாதீங்க.

எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன். சும்மா காவி காவின்னு பேசுறதுல அர்த்தம் இல்லை. நமக்க்காக சட்ட ரீதியா சண்ட போட வந்திருக்கவன் இந்துதான். பக்கத்து வீட்டுக்காரன் இந்துதான்.

ஏன் உமரு, இந்துக்கூட சம்மந்தமே வச்சுக்காதீங்கன்னு சொல்றியளோ. காலேஜுல ப்ரொ·ப்சரு இந்துதான். யூனியன் லீடரு இந்துதான். எனக்கு கம்ப்யூட்டர் பளகித்தந்தவரு இந்துதான். இப்படி ப்ளாகுல வந்து எளுதப் பளகித்தந்தது இந்துதான். எப்படி உமரு அவனை ஒதுக்குறது.

எந்தெந்த ப்ளாகுல எப்படியெப்படி முசுலீம்இஸ்லாமியத்தீவிரவாதிகலைப் பத்தி எளுதுறாங்கன்னு தெரியுமா. எல்லா எடத்துக்கும் போயி மறுப்பு சொல்ல முடியாது. இங்கயாவது வந்து டிஸ்கசனுன்னா என்னான்னு பாத்தாத்தான நாளைக்கு வேற எங்கியாச்சும் எதுனா செய்யலாம்.

எப்படியோ போங்க, நான் பேசறது யாருக்கும் புடிக்காது, அதுனால பேசாம இருக்க முடியுமா? இப்படித்தான் பேசுவேன்.

வேணுமுன்னா, நம்ம ஆளுங்க யாராச்சும் ப்ளாக்குக்கு வந்து பதில் எளுதட்டும்.

வஸ்ஸலாம்
அசன் லெப்பை, முகவை
கேம்ப்: சிங்கை

Anonymous said...

லெப்பசா,

என்னவேய்? ரொம்பத்தான் கெடந்து குதிக்காதியொ. சோலியப்பாத்தமா வூட்டுக்குப் போயி ராகத்தா சாயா ஒண்ண குடிச்சுப்போட்டு நம்ம ஊர்சேதி கெடைக்கான்னு பாக்றதுக்கே மனுசனுக்கு நேரம் பத்தல. நீரு இங்கன வந்து எளுத வேற சொல்லுதீராக்கும், சோலியப் பாருங்கவே.

இந்த டிஸ்கசனெல்லாம், படிச்சவுகளுக்குதான். கம்ப்யூட்டரத் தெறந்து தினகரன் படிச்சமா, எதுனாச்சும் மெயில் வந்து வுளுந்து கெடக்கான்னு பாத்தமா, மூடிட்டுப் போவணும்.

இண்டர் நெட்டுக்கும், டெலிபோனுக்கும் பில்லு நீங்க தரியளோ.

அபூ உமரு, வாப்பா, மவராசனா ப்ளாக்கு செய்யுங்கோ, வெப்ஸைட்டு செய்யுங்கோ, பக்கீர்ஸா எளுதுங்கோ, கானாப் பாட்டு கெட்டுங்கோ, என்ன வேணுமுன்னாலும் செய்யுங்கோ, எங்கள எளுதப் பளவ மட்டும் சொல்லாதியொ வாப்பா.

நீங்களும் இந்த ராம்நாட்டு லெப்பையுமா சேந்து எளுதிக்கங்க.

நெல்லை ஷேக் மதார்

Anonymous said...

நான்தான் அத்தாவுல்லா-ங்க

பொறந்தது மருதங்க. பொறகு படிச்சது தஞ்சாவூர்ங்க. நிகழ்வு புளாக்ல யாராவது மண்ணல்லி போட்டுட்டா தொடைக்க வருவேங்க.

அசன் லெப்பை ரொம்ப கொளம்பி போயிருக்ராப்ல. இந்துகூட எந்த சம்பந்தமும் வச்சுக்கூடாதுன்னு யார் சொன்னாங்கன்னேன். அபூ உமர் படிக்றதும் எழுத கத்துக்கிட்டதும் மரத்தடித்தாங்க(1). மீனாக்ஸ் எழுத்துன்னா உசுர உடுவியான்.

சிங்கப்பூர்காரய்ங்க கப்ப(2) வந்தாக்க ஜமீலாபத்தை கைலியும் மல்லியபொடுசு தாவணியும் கடல்பாசியும் கரெக்டா வாங்கி வருவாய்ங்க. சேதி சொன்னா, புரிஞ்சிக்றதுல கோட்டை உட்ருவாய்ங்க.

ஆட்டோ சங்கத்லேந்து லாரி சங்க வரைக்கும் காவிங்க நொலைஞ்சிருக்காய்ங்கன்னுதான் அபூ உமரு சொன்னாப்ல. போன வாரம் தினமணி படிச்சிருந்தா தெரியுங்கப்பு. கவுர்மண்ட் டிபார்ட்மெண்ட் எல்லாத்லேயும் காவிங்க நுழைச்சிருக்காங்காய்ங்க, களை எடுக்கனும்னு சொன்னதுக்காக ஒரு மினிஸ்டருன்ட என்னே கலாட்டா பண்றாய்ங்க, இந்த காவிங்க. இவங்க நடிகைங்க பின்னாடிதான் சுத்தி திரிஞ்சாய்ங்க. இப்ப நடிகனுக்கும் தூண்டி போட்டு சவுந்தர்யா மாறி மேலேயே சாமாதி கட்ட ஆள் தேடுறாய்ங்க.

http://kosappettai.blogspot.com/2004/08/blog-post_11.html

அடுத்த மாசம் ஊருக்கு போறதுக்கு சியா(3)-வுல டிக்கெட் போட்ருக்கேன்ல. சிங்கப்பூர்ல வந்துதான் பொட்டி கட்டுவியேன். உங்க அட்ரஸ முலுசா கொடுங்கப்பு.

இப்படிக்கு
அத்தாவுல்லா ராவுத்தர்
பண்டர் செரீஃப் பேகவான்
புருணை தாருஸ்ஸலாம்

(1) மரத்தடி = http://www.maraththadi.com/
(2) கப்ப வந்தா = பயணம் வந்தால்
(3) சியா = Singapore Airlines

Anonymous said...

வாங்கத்தா! மரிக்கா!

அஸ்ஸலாமு அலைக்கும்.

போச்சு என் வாய் எப்பவுமே இப்படித்தான், எதுனாச்சும் ஒளறி இப்படி ஏச்சு வாங்குறதுக்கு நம்ம தலைல எளுதியிருக்கு. மாத்தமுடியுங்களா? முடியாது.

அத்தா நாஞ்சொல்லவரது என்னது, காவி காவின்னு சொல்லாம நம்மவிங்களும் அரசாங்க உத்தியோகத்துக்கு முயற்சி பண்ணா என்ன கொறச்ச. மீச மொளச்சதும் பாஸ்போட்டு எடுத்து, இதோ முச்தபா பக்கத்துல பரோட்டா போடுறாங்கிய. நாங்கதாங் கெட்டோம், நீயாச்சும் ஊரப்பாத்து இருத்தான்னா ஒரு பய கேக்றியானா.

எளவு இந்த வெள்ளி சம்பாத்தியத்த வுட்டுட்டு ஓடிரலான்னுதான் பத்து வருசமா யோசனை, முடியுதா.

அதத்தாந்தா சொன்னேன் தப்பா நெனச்சுக்குராதிய. யாவாரமுன்னு வந்தா ஈமான் இசுலாத்துல இருக்றவியனுக்குதான் பொருள விப்பேன்னா நடக்குமாத்தா, அதுனால கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்ன்றேன்.

வரட்டுங்களா, இத்தோட திங்கக்கெளமதான் உங்க ப்ளாக்கப் பாக்கமுடியும். ரெண்டு நாள் பினாங்கு.

வஸ்ஸலாம்.

அசன் லெப்பை

Anonymous said...

அத்தா, அபூ உமரு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

லெப்ப பேச்சுதாஞ்சரியாச்சு பாத்தியள்ள. நம்ம ஆளு ஒருத்தன் எளுதிரியானா. கேளு,
பேசுவியாங்க. நாம் பேசுவோந்தா, செய்ய மாட்டோம்.

உமரு, மரிக்காவ அந்தப் பக்கம் எங்கியாச்சும் அனுப்சு வைங்கத்தா. லெப்ப பினாங்கு
போயி வந்து இங்க நம்ம பயலுவ என்னத்தையாச்சும் எளுதுவானுவன்னு பாத்தா,
மரிக்கா, லெப்ப, அந்த ஷேக் மதாரு. என்னத்தா தமிளு எளுத மூணு பயலுவதானா.

நாந்தாஞ்சொன்னன இது வெளங்காதுன்னு. எதுனாச்சும் பயானுக்குன்னு கூப்புடுங்கத்தா
நம்மாளு வருவான். எளுதிப்பளக வரமாட்டான்.

வஸ்ஸலாம்

அசன் லெப்பை
சிங்கை

Anonymous said...

உமர்,
சரியாக சொன்னீர்கள். நம் சமுதாயம் எழுத மட்டுமல்ல எல்லா துறைகளிலும் கற்க/பழக வேண்டியது நிறைய இருக்கிறது. நல்ல பதிவு தொடருங்கள்.

சிங்கை_இஸ்மாயில்

Sardhar said...

போன செப்டம்பரிலேயே படித்துவிட்டாலும் பின்னூட்டம் இப்போதுதான் இடுகிறேன். அபூ உமர் எழுதிய இக்கட்டுரை என்னுள் சில உந்துதல்களை உண்டாக்கியது என்று தான் சொல்லவேண்டும்.

லெப்பை என்றும் ராவுத்தர் என்றும் பெயர் எழுப்புவதிலும், தமிழ் நாட்டு முஸ்லிம்னா பிரியாணி திங்கத்தான் லாய்க்கு என மாற்றான் கூறுவதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்காமல் "இந்த டிஸ்கசனெல்லாம், படிச்சவுகளுக்குதான்" என்று நம் சிந்தனைக்கு நாமே முக்காடு போட்டுக்கொள்ளாமல் எழுதப் பழக வேண்டும்.

Beneath the rule of men entirely great
The pen is mightier than the sword.

என்பது எவ்வளவு உண்மை.

உமருக்கு எமது வேண்டுகோள் : இக்கட்டுரையை இத்துடன் முடித்துவிடாமல், எழுத பழகுவது எப்படி போன்ற விபரங்களைக் கொடுத்தால் "பில்லு நீங்க தரியளோ?" ரக ஆட்களுக்கு தம் பொறுப்பு உணர்ந்து விடும்.


ஆதங்கத்துடன்
சர்தார்

Ahsan said...

உங்கள் எண்ணம் நன்றாக உள்ளது.
எனவே சர்தார் சொல்வது போல்
--------
உமருக்கு எமது வேண்டுகோள் : இக்கட்டுரையை இத்துடன் முடித்துவிடாமல், எழுத பழகுவது எப்படி போன்ற விபரங்களைக் கொடுத்தால்,..
-----------
அது நல்ல பயனுல்லதாய் அமையும்!

-அசன்