Thursday, January 04, 2007

சதாமின் கடைசி நிமிடங்களும் பா.ராவும்

குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன், சதாமின் கடைசி நேரம் பற்றியும் இராக்கின் முக்கிய சம்பவங்கள் மற்றும் மத்திய கிழக்கின் அடுத்த கட்ட பிரதிபலிப்பு பற்றியும் எழுதியிருந்தார்.

பொதுவாக, பா.ராகவனின் ஆழமான எழுத்துக்கள் எல்லோராலும் விரும்பப் படுபவை. அவரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்து, அவரது நிலமெல்லாம் தொடருக்கு பிரத்யேகப் பதிவை இட்டேன். ஆனால், சதாமைப் பற்றிய பா.ராவின் கட்டுரை தவறான ஒரு தகவலுடன் ஆரம்பிக்கிறது:

//உயிர் விடும் கணத்தில், அவர் தாம் இருபத்து நான்கு வருடங்கள் ஆண்ட இராக்கை வாழ்த்தியிருக்கலாம். அல்லது இறைவன் பெயரை உச்சரித்திருக்கலாம். இரண்டும் இல்லாமல், வாழ்நாளெல்லாம் பரம விரோதியாகவே கருதிய ஷியா இனத்தைச் சேர்ந்த முக்தாதா அல் சத்ர் என்ற முப்பத்து மூன்று வயது குட்டிப் போராளியின் பெயரைச் சொல்லிவிட்டு உயிரைவிட்டது விநோத மர்மம்தான். ஒரு வேளை எப்போதும் அவர் எதிரிகளை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்பதன் அடையாளம்தான் அதுவோ, என்னவோ! - பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில்//


"முக்ததா, முக்ததா, முக்ததா" என்று மும்முறை (உற்சாகக் குரலில்) கூவுபவர், தண்டனைக் காட்சியைப் பார்வையிட அனுமதி பெற்றிருந்த ஷியாக்களுள் ஒருவர்.

அரபி தெரியாததால் அங்கு நடைபெற்ற உரையாடல்களை, பா.ரா அவர்களால் ஊகிக்க முடியாமல் போய்விட்டது துரதிஷ்டவசமானதாகும். ஒருவேளை சி.என்.என் தொலைக்காட்சி சதாமின் கடைசி வார்த்தைகள் என்று தவறாகக் குறிப்பிட்டதை பா.ரா. நம்பி விட்டார் போலும். (சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வெளிவந்து விட்டது).

அமெரிக்கா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அவரது மகன்கள் "உதை" மற்றும் "குஸை" போன்று சதாமும் வீரமரணம் அடைவார் என்றுதான் அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ பதுங்குக்குழிக்குள் இருந்து எலிபோல் பிடித்துக் கொண்டு வரப்பட்டது அவரது வீரத்தை மரணிக்கச் செய்திருந்தது. அதனால்தான் என்னவோ, பிடித்துக் கொண்டுவரப்பட்டது சதாம் இல்லை என்ற புரளி கற்பனை ஆதாரங்களுடன் பரப்பப்பட்டு வந்தது.

அந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாமை "அசத்" (சிங்கம்) என்று போற்றுவதற்குக் காரணமாக அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அவரது கடைசி நிமிடங்கள் அமைந்துவிட்டன‌.

கடைசி நேரத்தைப் பதிவு செய்த கைத்தொலைபேசிகாரர் எந்த எண்ணத்தில் இதனைப் பதிவு செய்தாரோ தெரியாது. ஆனால் அந்த வீடியோ பதிவு பல புரட்சிகளுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமையவிருக்கிறது என்பதுதான் பா.ரா தொடங்கி பலரின் யூகமாகும்.

அதிபராக இருந்த சதாம் தவறு செய்யாதவரல்லர். அமெரிக்காவின் நீதிமன்ற நாடகத்தில் குர்ஆன் பிரதியுடன் காட்சியளித்த‌ அதே சதாம்தான், முன்பு ஈராக்கின் வீதிகளில் தனது சிலையை வைத்திருந்தார். அவரது சிலையை இராணுவ டாங்கிகளில் கட்டி இழுத்து உடைத்த அந்த விநோதமான சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்த யாராலும் மறக்கவியலாது.

இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், இங்கிலாந்தும் என்ன செய்துக்கொண்டிருக்கின்றதோ அதற்கு ஒரு படி கீழாகத்தான் சதாமின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதற்கெல்லாம் காரணமான அதே அமெரிக்கா முன்னொரு காலத்தில் சதாமின் பின்னணியில் இருந்தது மறைக்க முடியாத உண்மை.

He "was courteous, as he always had been, to his U.S. military police guards," Maj. Gen. William B. Caldwell said. "He spoke very well to our military police, as he always had. And when getting off there at the prison site, he said farewell to his interpreter. He thanked the military police squad, the lieutenant, the squad leader, the medical doctor we had present, and the colonel that was on site."

Source : Yahoo news


தூக்கிலிடப்பட்ட காட்சியின் அலைபேசி பதிவு (கூகில் வீடியோ)

வீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று கருப்புத் துணி தவிர்த்து, சற்றும் பதட்டப்படாமல், பார்வையாளர்களாகச் சென்றிருந்த ஷியாக்கள் எழுப்பிய "முக்ததா முக்ததா" என்ற பின்னிணி சப்தத்துடன் அவருக்கு முன்னே வெளிப்படுத்திய கிண்டல்களையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் "ஹிய ஹாய் அல் மர்ஜலா" ("இதுதான் உங்கள் வீரமா?") என்று ஷியாக்களை நோக்கி வெளிப்படுத்தினார்.

இறுதி நேரம் நெருங்கும்போது "அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹ்; வ‌அஷ்ஹது அன்ன‌ முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" என்று இஸ்லாத்தின் கொள்கை வரியை முதன்முறை முழுதுமாக முழங்கினார். இரண்டாவது முழக்கத்தின் "முஹம்மத்" என்ற வார்த்தை வரை வந்தபோது தூக்கு மேடை விசை அழுத்தப்படவே, அவர் நின்ற தட்டு மிக சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட்டு கொலைக் கயிறு 69 வயது திடமான வீரமிக்க முன்னாள் அதிபரின் கழுத்தில் இறுகி உடலைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டது. அந்தக் கயிறு எதிர்பார்த்ததுபோல் அவரது உயிர் மேலெழுந்துவிட்டது.

மேலெழுந்தது சதாமின் உயிர் மட்டும் அல்ல. அவரது புகழும்தான். ஆமாம், மத்திய கிழக்குத் தலைவர்கள் தொடங்கி கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் மக்கள் மனங்களில் மரணத்தை காதலித்த மாவீரராக உயர்ந்து நிற்கிறார் சதாம்.

- Abu Umar
Jeddah, KSA

6 comments:

வாசகன் said...

இப்பதிவை பா.ராவுக்கும் குமுதம்-ரிப்போர்ட்டருக்கும் அனுப்பிவையுங்கள் சார்.

ஜூ.வியிலும், நம் சக வலைப்பதிவரான 'ஜென்ராம்' ஒரு சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார்.
http://stationbench.blogspot.com/2007/01/blog-post_04.html

சிலவரிகள்.
"அமெரிக்க, ஆங்கிலக் கூட்டுப்படையின் ஆக்கிரமிப்பின்போது இருப்பதைவிட சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்ததாக 90 சதவிகித இராக்கியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சதாம் காலத்தைவிட இப்போதுதான் தங்கள் உயிருக்குப் பதுகாப்பு இல்லை என்று 95 சதவிகித மக்கள் கருதுகிறார்கள்."

மரைக்காயர் said...

//வீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று கருப்புத் துணி தவிர்த்து, சற்றும் பதட்டப்படாமல், பார்வையாளர்களாகச் சென்றிருந்த ஷியாக்கள் எழுப்பிய "முக்ததா முக்ததா" என்ற பின்னிணி சப்தத்துடன் அவருக்கு முன்னே வெளிப்படுத்திய கிண்டல்களையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் "ஹிய ஹாய் அல் மர்ஜலா" ("இதுதான் உங்கள் வீரமா?") என்று ஷியாக்களை நோக்கி வெளிப்படுத்தினார்.//

நெருங்கி வந்துவிட்ட சாவைக் கண்டு கலங்காமல் அதை எதிர் கொண்ட துணிச்சல்..

வெறிநாய்கள் போல சுற்றி நின்று கூச்சலிட்ட, முகம் மறைத்த கோழைகளை 'இவ்வளவுதான் உங்கள் வீரமா?' என்று உதாசீனப்படுத்திய கம்பீரம்..

மக்கள் மனதில் சிங்கமென உயர்ந்து நிற்கிறார் சதாம்.

நல்லதொரு பதிவிற்கு நன்றி.

ரிஷி (கடைசி பக்கம்) said...

உங்களுடைய கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன்.

சதாமின் மரணம் இந்தியாவில் உள்ள எல்லோரையும் சற்று பாதித்தது

சீனு said...

//(சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வெளிவந்து விட்டது).//
தெரியப்படுத்தியதற்கு நன்றி.

//இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், இங்கிலாந்தும் என்ன செய்துக்கொண்டிருக்கின்றதோ அதற்கு ஒரு படி கீழாகத்தான் சதாமின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.//
உண்மை.

//மக்கள் மனதில் சிங்கமென உயர்ந்து நிற்கிறார் சதாம்.//
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததை போல அடித்துவிட்டார்.

அபூ ஸாலிஹா said...

//அந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாமை "அசத்" (சிங்கம்) என்று போற்றுவதற்குக் காரணமாக அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அவரது கடைசி நிமிடங்கள் அமைந்துவிட்டன‌.//

உண்மையான வரிகள்!

மொபைல் போனில் பதிவான சதாம் ஹூசைன் கொலை செய்யப்படும் காட்சியைப் பலர் பலவாறு சித்தரித்தாலும், நொடிப்பொழுதில் தான் மரணத்தைத் தழுவ இருக்கிறோம் என்ற உண்மை உறைக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனிடம் காணப்படும் பதட்டமோ நடுக்கமோ இல்லாத சதாம் ஹூசைனின் மிக சாதாரணமான முக பாவனையை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் மறக்கவியலாது.

அமெரிக்காவின் நாடகத்தின் இறுதிக்கட்டம் இதுதானென்று ஏற்கனவே தெரிந்தனாலோ என்னவோ அவரிடத்தில் அமைதி குடி கொண்டிருந்தது.

சதாம் ஹூசைனுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தண்டனை, அவர் திக்ரிட் பகுதியில் பிடிபட்டபோதே அமெரிக்க எழுதுகோலால் எழுதப்பட்ட ஒன்றுதான்.

தீவிர விசாரணைக்குப் பின்னரே ஈராக்கிய நீதிமன்றம் இத்தீர்ப்பை சதாமுக்கு வழங்கியதாகக் கூறி அனைவருக்கும் அல்வா வழங்கி அமெரிக்கா நடத்திய இந்த பயங்கரக் காமெடி நாடகத் துவக்கத்தையும், அதைத் தொடர்ந்து ஸீரியஸான கிளைமாக்ஸாக திட்டமிட்டபடியே காரியம் கனகச்சிதமாக முடிந்ததையும் வாயில்லா பிராணியாக உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

1982 ல் தன்னைக் கொலை செய்ய முயன்ற ஷியா பிரிவு மக்களைப் பழி தீர்க்கவே துஜெய்ல் நகரத்தில் 148 பேரைக் கொன்று "மனித குலத்திற்கு அநீதி இழைத்த" குற்றத்திற்காகவே அவர் மீது வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்பட்டது.

ஈராக்கைக் குறி வைத்து அமெரிக்கா படையெடுத்த நாளிலிருந்து அங்கே 700,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. 3000 க்கும் மேற்பட்ட அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு நடந்ததற்குப் பின்பே  ஈராக்கில் அணுஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது நாம் கொடுக்கும் அறிக்கை அல்ல. ஆய்வு செய்த நிபுணர்களின் அறிக்கைகள்.

அல்காய்தாவுடன் சதாமுக்குத் தொடர்பு எதுவும் இல்லை என்பதும் சதாமோ, ஈராக்கிய மக்களோ உலக அமைதிக்கு எவ்விதத்திலும் பங்கம் விளைவிக்கும்படியான மிரட்டல் விடுத்ததில்லை என்பதும் அமெரிக்க சம்மேளனம் ஏற்கனவே அறிவித்த ஒன்றுதானே? இவ்வளவும் அறிந்த பிறகும் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. இதில் இலட்சக்கணக்கில் மடிந்து போன அப்பாவி மக்களும், ஆயிரக்கணக்கில் இறந்த படைவீரர்களும் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக தெரியவில்லையா?

புஷ்ஷயும் பிளேயரையும் தவிர வேறு யார் இந்த அக்கிரம நிகழ்வுகளுக்குப் பொறுப்பாவார்கள்?

இஸ்ரேல் எண்ணிலடங்கா சமயங்களில், பாலஸ்தீனத்தின் மீது தொடுத்துள்ள காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித் தாக்குதல்களையும் கொத்துக்கொத்தாக உயிர்களைக் கொலை செய்வதையும் "மனித சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி" யாக சர்வதேச அளவில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரோனின் உத்தரவின் பேரில் லெபனானின் ஸப்ரா மற்றும் ஷரிலா முகாம்களில் வைத்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே?

இத்தகைய கொடுங்கோலனுக்கு எதிராக அப்போது ஏன் புஷ்ஷும் பிளேயரும் வாய் திறக்கவில்லை?

சதாம் இழைத்துள்ள குற்றங்களுக்கு அவரே பொறுப்பாக வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தனிச்சையாக செயல்படும் ஓர் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்ந்திருந்து அதன் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமானால் அதை உலக மக்கள் ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள்.

சதாமுக்கு நடந்த வாத பிரதிவாதங்களில் நீதியின் அடிப்படை நெறிகள் கூட கடைபிடிக்கப்படவில்லை. பல்வேறு அரசியல் காரணங்களால் குர்த் இன மக்கள் சதாமுக்கு பரம்பரை எதிரிகள் என்று சின்ன பிள்ளைக்குக்கூட தெரிந்த விஷயம். அப்படி இருந்தும் குர்த் இனத்தைச் சேர்ந்த ஒருவரை இவ்வழக்கின் தலைமை நீதிபதியாக நியமித்தபோதும்,

சதாமுக்காக வாதாடிய வக்கீல்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வந்தபோதும் சட்டத்தின் குரல்வளையில் தூக்குக் கயிறுகள் மாட்டி ஏற்கனவே நெறிக்கப்பட்டு விட்டது.

எனவே சதாம் தன் இறுதிக் கணங்களில் சாந்தமாக முகத்தை வைத்திருந்ததில் வியப்பில்லை.


- அபூ ஸாலிஹா

Anonymous said...

சதாமிடம் சமையல்காரராக இருந்த தமிழரின் பேட்டி இவ்வார குமுதத்தில்::

‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!

சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.

‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல் நாள் _ சமையலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம், காலை, மதியம், இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி... நானும் அவற்றைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினைத்திருந்தேன். எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால், உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன். வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு, ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு ‘தினமும் எனக்கு சமையல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா?’ என்றேன்.

‘இல்லை அவர்தான் சதாம்’ என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.

சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடைய சகோதரி என்றுதான் கூறுவார். இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி, சிறையில் வைத்துவிட்டார். பிறகு, இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு, பத்து நாட்கள் கழித்து அனைவரையும் விடுவித்தார்.

அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.

டீயில் சர்க்கரை போட்டுக்கொள்ளமாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம், சிக்கன் ஃப்ரை, காய்கறிகள்... இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட், ரொட்டி, சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார். பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.

ஒரு நாள் சதாம் என்னிடம் ‘நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தியைச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?’ என்று கேட்டார். அது என்னவென்று புரியாமல் குழம்பி, ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்லை. நம்ம சமோசாதான்!

ஒரு நாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள்.

சதாம் உசேன் அரண்மனையில் எந்தச் சமையல்காரரையும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்கமாட்டார்கள். காரணம், சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரைன்வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் ஸ்லோபாய்சன் கலக்கச் செய்துவிடுவார்கள் என்பதால்தான்.

ஒரு நாள் அரண்மனையிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்,கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து ‘எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்குப் பலகோடி பணம் தருகிறோம்’ என்றார்கள். நான் அதை முழுமையாக மறுத்துஅவர்களைக் கடுமையாக எச்சரித்தேன். அவர்கள் மிரட்ட, ‘என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டு, காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் சதாம் என்னை அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

‘ரொம்ப நன்றி மொய்தீன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, எனது சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, என் மீது அவருக்கு அபார நம்பிக்கை!

வளைகுடா போரின்போது, சதாம் என்னிடம் ‘மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்’ என்றார். நான் மறுத்தேன். ஆனால், அவர்விடவில்லை. ‘நான் எனது நாட்டிற்கும், மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!’ என்று வற்புறுத்தினார்.

‘அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள், தூக்கிச்செல்ல முடியாவிட்டால், ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்’ என்று கூறி அப்படியே செய்தார்.

நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து ‘எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்’ என்றார்.

எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து, பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.

வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...’’ _ கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் காஜாமொய்தீன்.

நன்றி: குமுதம்