Wednesday, April 12, 2006

முஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்

- முஜீப் ரகுமான்
நன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006)

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். வகுப்புவாதத்தை ஊட்டி வளர்த்த ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்றும் வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே.

பூலே தொடங்கி அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவான், போன்றவர்கள் தலித் சமூக விழிப்புணர்வை ஊட்டியதன் விளைவாக அரசியல் ரீதியாக ஓரளவுக்கேனும் சுதந்திரமாக தலித்துகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி உருவான தலித் உத்வேகம் புதிய நகர்தலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் இன்று அன்னியமாய் தீண்டத்தகாதவர்களாக இருக்கிறார்கள். கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் குறித்து கட்டமைக்கப் படும் வெகுஜன உளவியலும், பொதுப்புத்தி உருவாக்கமும் முஸ்லிம்களை சமூக, பொருளாதார அரசியல் ரீதிகளில் தீண்டத்தகாதவர்களாக மாற்றியுள்ளது. உலக அரங்கிலும், நமது சூழல்களிலும் முஸ்லிம்கள் குறித்த ஒருவித மனஉருவாக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடைநிலை சாதியத்தை எதிர்கொள்ளும் தலித்தியம் கூட பிற ஆக்கப்பூர்வமான நிலைகளில் (அணுகும்) பார்வைகளை கொண்டிருக்கிறது. அதே சமயம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்திய சமூக அமைப்பும் பல்வேறு காரணிகளும் தலித்தியம் உட்பட எதிர்நிலை மனகருத்தியலை கொண்டிருக்கிறது.

வகுப்புவாத துவேஷங்களும், மதக் கலவரங்களும், திட்டமிட்டு பரப்பப் படும் அவதூறுகளும் 'நவீன தீண்டாமையை' முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விட்டிருக்கின்றன.. அனைத்து துறைகளிலும் அனைத்து வடிவங்களிலும், அனைத்து நிலைகளிலும் 'தீண்டாமை' கொடிகட்டிப் பறக்கிறது. இன்று தீண்டாமையின் அர்த்தம் குறியீடுகளாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்திய முஸ்லிம்கள் தீண்டாமையின் நெருக்கடிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இந்திய மைய நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப் படுத்தப்பட ஏதுவாக அமைந்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியலின் அனைத்து கட்டுமானங்களிலும், உள் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு விரோதமான தீண்டாமை வியாபித்து இருக்கிறது. உண்மையான தலித் அனுபவிக்கும் பிரச்சினை இன்று முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதாக போய்விட்டது. அனைத்து முறைகளிலும் ஒடுக்கப்படும் தலித் கூட முஸ்லிம்களை தீண்டத் தகாதவர்களாக நோக்கும் நுண் அரசியல் வலைப்பின்னல்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. அனைத்துக்கும் சிகரமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மறுஉற்பத்திகளின் நுகர்விய உளவியலிலும் கூட நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்திய சமூக மனங்களின் கூட்டு பிரக்ஞையிலும், நனவிலிநிலையிலும் 'தீண்டாமை' படிவுகளாக மாறிவிட்டது.

இசுலாமிய தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமூகம் எண்ணிலடங்கா நெருக்கடிகளைசந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூக அமைப்புகளும், கட்சி அமைப்புகளும், நிறுவனங்களும், அமைப்பு சாரா அமைப்புகளும் முஸ்லிம்களை ஒரு படித்தான நிலையிலேயே அணுகுகின்றனர். பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் நலிவுற்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்திய முஸ்லிம் சமூகம். உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் எண்ணிறந்த வாய்ப்புகளை இந்திய சமூகங்களுக்கு வாரி வழங்கிய போதும் முஸ்லிம்களை பொறுத்தவரையில் எவ்வித பயனும் இல்லாமலேயே இருக்கிறது. இந்து தீவிர அமைப்புகள் நினைத்ததை சாதித்துவிட்டன. கட்சி அமைப்புகள் ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்திபடுத்திவிட்டு வாக்குறுதிகளை காற்றில் விடுவதை நிதர்சனமாகவே கடந்த காலம் நமக்கு காட்டியுள்ளது.

கீழவெண்மணிகளும், புளியங்குடிகளும் பெற்ற கவனத்தை 'குஜராத் கலவரம்' இன்னும் பெறவில்லை. அயோத்தியா இன்று மறக்கப்பட்டு விட்டது. இந்திய துணை கண்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளில் வாடும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒடுக்கி வரும் மனநிலை அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் வியாபித்து விட்டது. இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் இது குறித்த பிரக்ஞை இல்லாதது அதைவிட கொடுமையானது. தலித்துகள் முஸ்லிம்களை தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ளாததும் முஸ்லிம்களும் அதை விரும்பாததும் ஒரு புறம் இருக்கிறது. இன்றைய முஸ்லிம் அறிவு ஜீவிகள் யாவரும் காஷ்மீர் பிரச்சனை, அயோத்தியா பிரச்சனை, வக்பு வாரியம், முஸ்லிம் சட்டம் பற்றி பேசுவதோடு நின்று விடுகின்றனர். இதுகாலம் வரை கலை, இலக்கியங்கள் முஸ்லிம்களை நிராகரித்தே வந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கான பண்பாடு, வாழ்க்கை யாவும் 'அந்நியமான' இரட்டை மனதாக, இரட்டை மொழியாக, இரட்டைப் பண்பாடாக இரட்டை வாழ்க்கையாக அமைந்திருப்பதை முஸ்லிம்களிடமிருந்து கண்டுணரலாம். முஸ்லிம்களை பொறுத்த வரையில் சமூக நீதியோ, பொருளாதார நீதியோ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லி கொள்ள முடியாதென்றாலும் 'எங்களை மனிதர்களாக நினையுங்கள்' என்பது விருப்பமாக இருக்கிறது.

அந்நியப்படுத்தலில் இருந்தும், பிரதிநிதித்துவப் படுத்துதலில் இருந்தும் சக மனிதனாக பாவிக்கின்ற நிலையின்றும் பிரித்து இனம் காண வேண்டாம் என்பது தான் முக்கியமாக இருக்கிறது. சாதிய மனோநிலை கூட கடைநிலையாக்குகின்ற உபாயங்களையே செய்து வருகிறது. முஸ்லிம்கள் தீண்டாமை மனோநிலையில் வேறுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அன்மை காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்பு கார், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுகின்ற நகர்ப்புற முஸ்லிம்களின் நிலை மோசமாக ஆகியிருப்பது உதாரணம். நகர்ப்புறத்தில் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் சுயதொழில்களை அதிகம் செய்பவர்கள். இவர்களை அதிகம் தீண்டாமை கண்ணோட்டத்துடன் வெறுத்து ஒதுக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற மனோபாவம் மீண்டும் அவர்களை அந்நியப்படுத்துகின்ற விஷயத்துடன் தொடர்புடையதாகும். இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் ஜனாதிபதியாக முடியும். நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்காவது யாராவது பட்டாசு வெடித்தால் கூட எல்லோரும் ஒருமாதிரியாக பார்க்கும் பார்வையை மட்டும் மாற்றிவிட முடியாது என்பதே எதார்த்தமான முஸ்லிம்களின் உணர்வாக இருக்கிறது. இதற்கு பொறுப்பும் முஸ்லிம்களே ஏற்க வேண்டியிருக்கின்றது. சமூக நல கண்ணோட்டமின்றி வெறுமனே சமயம் குறித்து பேசியும், விவாதித்தும் சண்டையிட்டு கொண்டிருக்கின்ற சூழல்களே இந்தியாவில் அதிகம் இருக்கிறது. நடுத்தர சமூகம் உருவாகாத ஒரு சமூக அமைப்பாக இன்னுமும் இருந்து கொண்டு பத்து சத மேட்டிமை முஸ்லிம்களின் நலனுக்காக தொண்ணூறு சதவீத முஸ்லிம்கள் பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற அளவில் அதிக உரிமைகள் பெறுப்படுவதாக இந்து அமைப்புகள் கூறிக் கொண்டிருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இங்கே இல்லை. சிறுபான்மையினர் என்ற அளவில் ஏமாற்றப்ஷபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கண்கூடாகும். கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவையில் நாளுக்கு நாள் அருகிக் குறைந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இன்னும் அரசை சாராமல் பொது, தனியார் துறைகளைச் சாராமல் தனியே காலம் கடத்தி விட முடியாது. சுய தொழிலால் தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த போதும் அடிக்கடி நடக்கின்ற கலவரங்கள் முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை மையப்படுத்துகின்றன. கடைநிலை வியாபாரங்களை செய்கின்ற முஸ்லிம்கள் இன்றைய உலகமயமாதலில் சிக்கி தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறார்கள். வியாபரத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் இந்த சமூகம் இன்றைய நவ வியாபார உத்திகளை அறியாமலும், வியாபார நிலை மாற்றங்களிலும், அடுத்த கட்ட நுகர்வுகளை சந்திக்கும் ஆற்றல் இல்லாமையாலும் 'வியாபாரம்' நலிந்து போய் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் 'பிரதிநிதித்துவம்' மட்டுமே அதில் பயனளிக்க கூடியதாக இருக்கும். தனியார் துறைகளில், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முஸ்லிம்களது வாழ்வுரிமை பிரச்சனைகளை எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். வெறுமனே பொதுசிவில் சட்டஎதிர்ப்போ, பாபரி மஸ்ஜித் பிரச்சனையோ வாழ்க்கைக்கு தேவையானதை செய்துவிடாது என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

பண்பாட்டு ஆதிக்கத்தையும் மௌன பண்பாட்டையும் வரித்துக் கொண்டிருக்கிற பாசிசம் ஒரு புறம் உரையாடல்களை துடைத்தெறிந்து கொண்டு மறுபுறம் வன்முறையில் ஈடுபடுகிறது. வன்முறையாளர்கள் தேசியவாதிகளாக இருக்க கூடிய சித்திரமும் வன்முறையில் பலிகடா ஆகுபவர்கள் தேசவிரோதிகளாக (உருவாக்குகிறது - ஊடகத்தினாலும்) மனச்சித்திரங்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக இழிவுகளுக்கு சமமான அல்லது இதற்கு மேலான தீண்டாமை / முஸ்லிம் விரோத உணர்வை பிரச்சனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கான வாழ்வாதார உரிமைகளை - எதிர் மனோபாவங்களை பெற்றிடவும் மாற்றிடவும் ஆன போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அல்லது ஏனைய நிலையில் உள்ளவர்களுடனான ஒத்திசைவுகளும், கூட்டு செயல்களும் உண்மையில் முஸ்லிம்களை தீண்டாதவர்களாகவே மாற்றியிருக்கிறது. சமூகத்தின் அத்தனை இடைநிலை உழைப்பு செயல்களை செய்கின்ற முஸ்லிம்களை அன்னியர்களாக அணுகும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான குறைந்தபட்ச செயல்களை உருவாக்க வேண்டும். அரசும், அதிகாரமும் கற்பித மனோபாவமும் தான் முஸ்லிம்களின் உளவியல் நெருக்கடிகள் அதிகமாக காரணமாக இருக்கின்றன. ஒரு தலித் தனது சாதியின் பெயரால் அழைக்கப்படும் போது படும் மனநெருக்கடிகளுக்கு மேலாக முஸ்லிமை தீவிரவாதி என்றழைக்கப்படும் போது அனுபவிக்கிறான்.

வெகுகாலம் வரை பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் தான் மாபெரும் இஸ்லாமிய விரோதிகள் என்று கற்பிக்கப்பட்டதை தாண்டி பிரக்ஞை பூர்வமான இன்றைய எதார்த்த நிலையை உணர வேண்டியதன் தருணத்தை அலச வேண்டியிருக்கிறது திராவிட அமைப்பினரும் தலித் அமைப்பினரும் 'பதவி ஆசையில்' பார்ப்பனர்களுடன் இணைந்து செயல்பட்டதும் வன்முறை கலவரங்களில் தலித்துகளே முன்னணி படையினராக திகழ்ந்து படுகொலை நடத்தியதையும் அலச வேண்டியதிருக்கிறது. தேசம், தேசியம், அடையாள பண்பாடுகள், அறம், ஒழுக்கம் போன்ற ஆதிக்க கருத்தியல்களை மறுதலித்துக் கொண்டு வாழ்வதற்கான நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.

எங்களுக்கான பங்கு என்ன? பிரதிநிதித்துவம் என்ன என்பதை பற்றி தான் உரையாடல் நடத்த வேண்டிய சூழலில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வித ஒடுக்குதல்களையும் எதிர்கொள்ள பெருங் கதையாடல்களையும், புனைவுகளையும், கற்பிதங்களையும் கட்டுடைக்க வேண்டியதும் அடக்கு முறைகளுக்கு எதிரான பிரக்ஞைகளை வளர்த்தெடுப்பதுமே இப்போதைய தேவையாக இருக்கிறது.

4 comments:

Unknown said...

Saadaaranamaga purikira maadiriyaana tamilil eludiyirundaal nanraga irukkum

Sivabalan said...

நல்ல பதிவு!!!

சீனு said...

முதலில் மதரசாக்கள் படிப்புடன், அறிவியலையும் எற்றுக் கொள்ளுங்கள்.

Unknown said...

உங்கள் கருத்துக்கள் இன்றைக்கு மிக அவசியமாக முஸ்லீம்களுக்கு தேவைப்படுவது. முஸ்லீம்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய எழுச்சியை அதிகப்படுத்தி - தலைவர்கள் தங்களைத் தாங்களே விற்று விடுகின்ற மனோபாவம் மற்றும் போட்டி மனப்பான்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு - முஸ்லீம் அல்லது இஸ்லாமிய தீவிரவாதி என்ற சொற்பிரயோகமே நீக்கப் படுவதற்காக முதலில் உழைக்க வேண்டியிருக்கிறது.
தலித் என்று தனிமைப்படுத்தி பின் சில சலுகைகளைத் தருவது - என்னைப் பொருத்த வரை - செருப்பால் அடித்து விட்டு சில சில்லரைக் காசுகளைத் தருவதற்கு ஒப்பானதாகும்.

"முதலில் மதரசாக்கள் படிப்புடன், அறிவியலையும் எற்றுக் கொள்ளுங்கள்"

சகோதரர் சீனு சொல்வதும் அவசியம்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.