Sunday, February 19, 2006

இந்தியாவில் இஸ்லாம்-17

தொடர்-17: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள 'தரீசாப் பள்ளி' என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.

இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய 'ஈசோ சபீர்' என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

தென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.

தரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.

இந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட 'ஸ்தாணு ரவி வர்ம்மா' என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.

ஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.

கொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 06 - 12, 2006

No comments: