Tuesday, March 08, 2005

த்சு..த்சு.. பாவம் மோனிகா!

"காதல் பரிசாக கிளின்டன் கொடுத்த 20 மில்லியன் டாலரை ஹிலாரி கிளின்டன் அபகரிக்க பார்க்கிறார். எனவே சிறிது நாட்களுக்கு உங்களிடம் அதனை அனுப்பி பாதுகாக்கலாம் என்றிருக்கிறேன். பாதுகாத்து தந்ததற்காக பாதி தொகை உங்களுக்கு தரப்படும்" என்று யாராவது மோனிகா லெவின்ஸ்கியின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பினால் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். காரணம், மின்னஞ்லை திறந்தால் இதுபோன்ற செய்திகளும், வைரஸ் அட்டாச்மென்ட்டுகளும், வயாகரா அழைப்புகளும்தானே வருகிறது.
இதுபோல் மின்னஞ்சல்களை அடிக்கடி பெற்றுக்கொள்கிறவர்களுக்கு ஆயிரத்துடன் ஒன்று +. ஆனால் இந்த காலத்திலும் இதை நம்பி ஏமாந்த படித்தவர்கள் உண்டு.

நண்பரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர், இத்தகைய நைஜீரிய மின்னஞ்சலை நம்பி, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திய பிறகு, அவர்களின் ஏமாற்று வேலைகளை பிறர் நம்புவதற்காக கேட்ட அஃபிடவிட்களும் தயார் செய்து அனுப்பி இருக்கிறார். நம்மை இன்னார் என்று நிச்சயப்படுத்தத்தான் இந்த அஃபிடவிட்டாம். (அடப்பாவிகளா!)

பணத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஒரு தொகையையும் கேட்டிருக்கிறார்கள். சின்ன மீனை விட்டு பெரிய மீனை பிடிக்க இவரும் ஆசைப்பட்டிருக்கிறார்.

பிறகு அவர்களிடமிருந்து எந்த மின்னஞ்சலோ, அவர்கள் சொன்ன 20 மில்லியன் டாலரோ வராததால் நைஜீரியா துணைத்தூதரகத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். முதலில் சரியான பதில் எதுவும் வரவில்லை. மீண்டும் கேட்டபிறகு அனாமதேய மின்னஞ்சல்களை நம்பி நீங்கள் ஏமாந்ததற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று சொல்லியனுப்பி விட்டார்கள்.

இவ்வளவு விஷயம் நடந்திருந்தும் மனுஷன் நண்பர்களிடம் கலந்தாலோசிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகே எனது நண்பரிடம் சிறிது சிறிதாக விஷயத்தை சொல்லி கலங்கியிருக்கிறார்.

20 மில்லியன் டாலர், முடங்கி கிடக்கும் வங்கி கணக்கிலிருந்து தருவதாகவும் அதற்கு கமிஷன் தரவேண்டும் என்றும் எனது நண்பருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அதற்கவர், "உனது கமிஷசனை கழித்துக்கொண்டு பாக்கியை அனுப்பிவை" என்று கிண்டலாக பதில் போட்டிருக்கிறார். இல்லாத 20 மில்லியனுக்கு கமிஷன் கேட்பவர்கள் பாக்கியை எங்கிருந்து அனுப்புவார்கள்?

இவர்களிடம் சிலர் ஏமாற காரணம், புதிய செய்தியை வைத்து பழைய சரக்கை அவிழ்த்துவிடுவதுதான். உதாரணமாக சலாஹுத்தீன் நகைச்சுவையாக எழுதிய விஷயம்.

இனி "த்சு.. த்சு.. பாவம் மோனிகா" என்றும் சொல்லவைக்கலாம்.

ஏமாறுபவன் இருக்கும்வரை, ஏமாற்றுபவன் பிழைக்க முடியுமல்லவா!.

1 comment:

Salahuddin said...

நீங்களே புதுப்புது ஐடியாவெல்லாம் கொடுப்பீர்கள் போலிருக்கிறதே?!