Tuesday, December 28, 2004

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நல்லதொரு வாய்ப்பு

பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய தமிழ் சொந்தங்களுக்காக நாம் தரும் துணிகளை ஜித்தா "ST கார்கோ ஏஜென்ஸி" (அல்பைக் பின்புறம், பலத்) இலவசமாக தமிழ்நாட்டுக்கு ஏர்-கார்கோ மூலம் அனுப்பி வினியோகிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஜித்தா நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ST-யின் ரியாத், தமாம் கிளை இதுபோன்ற சேவை செய்கிறார்களா என்று தெரியவில்லை.

கடல்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜித்தா ST கார்கோ ஏஜென்ஸின் இச்சேவை குறித்து கேள்விப்பட்டு நானும் எனது நண்பர் முஹம்மதுஅலியும் துணிகளை சேகரித்து கொண்டுபோய் கொடுத்துவந்தோம். இன்று காலையில்தான் கீழ்வீடு ஆண்ட்டி மற்றும் அங்கில் ஷரஃபுதீனிடம் தொலைபேசியில் சொல்லியிருந்தேன். துரிதமாக இயங்கி அவர்கள் வீட்டிலிருந்து மட்டும் 5 காட்டன் துணிகளை தந்தார்கள். அவர்களே காட்டன் ஏற்பாடு செய்து Export Standard Packing-கும் செய்து தந்துவிட்டார்கள். உயர்ந்த உள்ளங்கள் - நன்றாக இருக்கட்டும்.

இலங்கைக்கு இதுபோன்ற இலவச சேவையை துவக்க ஏதாவதொரு கார்கோ ஏஜென்ஸியை அணுகக்கூடாதா என்று இலங்கை நண்பரிடம் கேட்டபோது, இலங்கைக்கு கடல்வழி கார்கோ சேவை மட்டுமே ஜித்தாவில் தற்போது இருப்பதாகவும் அப்படி அனுப்பினால் போய்சேர நாட்கள் ஆகும், ஆனால் இப்பொழுது அவசரமாக தேவைப்படுவது பணம்தான் என்றார்.

உண்மைதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது அவசரமாக தேவைப்படுவது உணவும், உடையும், தங்க இடமும்தான். உடை வகைகளை சில ஊர்களில் தன்னார்வ தொண்டர்கள் ஆட்டோவில் சென்று சேகரிக்கும் செய்தியும் வந்தது. உடைகளோடு நம் உதவிகள் முடிந்துவிட்டதென்று கருதாமல் உங்களால் ஆன பண உதவியையும் உடனே செய்திடுங்கள்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் என் பங்கு தொகையை கொடுத்துவிட்டுதான் உங்களிடம் சொல்கிறேன். நாளையும் துணிகளை சேகரித்துபோய் கொடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

அரசியல்வாதிகளின் விசிட்களால் புதிய தொந்தரவு. இறந்த உடல்களை தேடி சேகரிக்கும் தன்னார்வதொண்டர்களின் பணிகளை நிறுத்தச் சொல்கிறார்களாம். எத்தனையோ ஊர்களில் இன்னும் அரசு நிறுவனம் மீட்பு பணியை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: