ஜெ. ராஜா முகமதுவின் கடிதம்: 'ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ'
ஆனந்த விகடன் 17.4.05 இதழில் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபலிக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்லிம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை. மாலிக்காபூரின் படையெடுப்பை சுஜாதா குறிப்பிடுகிறார் போலும். ஆனால் இது நடந்தது 1311இல். மாலிக் காபூரின் படையெடுப்பு குறித்து அமீர் குஸ்ருவின் குறிப்புகள் மட்டுமே சான்றாகக் காட்டப்படுகின்றன. வேறு சான்றுகள் எதுவும் இல்லை. மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்த ஊர்கள், கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களின் அளவு ஆகியன குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே வண்டி வண்டியாய்க் கருத்து வேற்றுமை உண்டு.
திருச்சிப் பகுதியில் 26.03.1311 முதல் 01.04.1311 வரை ஏழு நாட்கள் பிர்துல், காந்தூர், ஜல்கோட்டார், பிரமஸ்த்புரி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு சண்டை நடைபெற்றதாக குஸ்ருவின் குறிப்பு கூறுகிறது. இவை எந்த ஊராக இருக்கலாம் என அடையாளம் கண்டுபிடிக்க முற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போல் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கின்றனர். இதைப் பற்றி அதிகமாக எழுதி இருப்பவர் கிருஷ்ணசாமி ஐயங்கார் (புத்தகம்: South India and Her Mohammedan Invaders) மேற்சொன்ன ஊர்களில் பிரமஸ்த் புரி என்பரை ஏதாவது ஒரு பெரிய கோயில் நகரத்துடன் தொடர்புபடுத்திவிட தண்டப் பிரயத்தனப்பட்டிருக்கிறார் ஐயங்கார். இவ்வூர் சீர்காழி, சிதம்பரம் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என அனுமானிக்கிறார். ஸ்ரீரங்கம் என அறுதியிட்டுச் செல்ல அவரால் முடியவில்லை. சிதம்பரம்தான் என அடித்துக் கூறுகிறார் சத்தியநாத ஐயர். இல்லை, இல்லை காஞ்சீபுரம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ஸ்ரீரங்கமாக இருக்கலாம் என இன்னொருவர் கூறுகிறார். எத்தனை முரண்பாடு!
எனவே, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடைபெற்றதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சரி, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடந்ததாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திலிருந்து சுஜாதா எடுத்தார்?
பிராமணர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எப்போதும் நெருங்கிய நல்லுறவு உண்டு. முஸ்லீம் மன்னர்களின் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் பிராமணர்களே இருந்துள்ளனர். திப்புவின் அமைச்சர் பூரணய்யா ஒரு பிராமணர். திப்புவின் மறைவிற்குப் பிறகு திப்புவின் மகனிடம் நாடு ஒப்படைக்கப்பட வேண்டுமென ஆங்கிலேய அரசுடன் வாதாடியவர். இதுபோல் இன்னும் பல அரிய செய்திகள் உண்டு. ஒரு காதல் கதையைக் கேளுங்கள்!
திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்லி சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்லிணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?
இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாலிக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார். அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் வேண்டாம் இந்த விஷ(ம)ப் பிரச்சாரம்! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் சமுதாய நல்லிணக்கச் சிந்தனையுடன் எழுதுவது நல்லது. தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒன்-ஆக விளங்கும் ஆனந்த விகடனில் இப்படிப்பட்ட அரைகுறைச் செய்திகள் வருவது வருத்தத்தை அளிக்கிறது.
இப்படிக்கு
ஜெ. ராஜா முகமது
('தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறும், சமுதாய வாழ்க்கையும்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் ஜெ. ராஜா முகமது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு', பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்று மாணவர்களுக்குப் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)
நன்றி: காலச்சுவடு
2 comments:
For more information pls read here
http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911806
this talks only one side of the issue.
read http://neyvelivichu.blogspot.com/2005/09/blog-post_16.html
vichchu
Post a Comment