Wednesday, September 14, 2005

விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்

கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: "விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்"

ஆனந்த விகடனின் வாசகனாகிய நான், கடந்த 17.04.05 தேதியிட்ட இதழில் திரு. சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' பகுதியைப் படித்து அதிர்ந்துபோனேன். ஸ்ரீரங்கத்தில் தேர் இழுக்கும் கோவிந்தா கூட்டத்தினரின் நாட்டுப்புறப் பாடலை ஆராய்ந்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்று 'கோயில் ஒழுகு' கூறுவதாக ஒரு பெரும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இச்செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தாலும், நம்மை ஆண்ட ஜரோப்பியக் காலனிய ஆதிக்கவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியோடும் மத ரீதியாகப் போரிட்ட (Crusade) தங்களுடைய வரலாற்றின் பிரதிபலிப்பாக இந்திய வரலாற்றை எழுதும்போது தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளுடன், பாரபட்சமாகவே எழுதியுள்ளனர் என்பதை நன்கறிந்தவன் நான். அத்தகைய வரலாற்றைக் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மவர்கள் சிலர் அறியாமையிலும் பலர் அரசியல் சுயநோக்குடனும் பின்பற்றிவருகின்றனர். இத்தகைய தவறான வரலாற்றுத் தகவல்களால் நாம் இந்தியப் பிரிவினை, மதக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு என்று அதன் பலனை இன்னமும் அனுபவித்துவருகின்றோம்.

'முகம்மதியர்கள் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது, மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் படையெடுப்பு என்ற வார்த்தை கொலை, கொள்ளை போன்றவற்றையே நமக்கு நினைவுபடுத்தக்கூடியது. அது மட்டுமன்றி முகம்மதியர்கள் படையெடுப்பின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர் என்ற தவறான கருத்தையும் இது சித்தரிக்கின்றது.

எனது பள்ளிப் பிராயத்தில் விளையாட்டு, சண்டை சச்சரவில் முடிவுறும்போது பாகிஸ்தானுக்குப் போக வேண்டியதுதானே துலுக்கா என்று அவமதிக்கப்பட்டிருக்கின்றேன். என்னுடைய இந்த வலி பள்ளிப் பருவத்தில் பல முஸ்லிம் சிறுவர்கள் இன்று அனுபவித்து வருவதுதான்.

அச்சிறு பிராயத்திலேயே என் வீட்டில் நிலவிய தீவிர தமிழ்ப் பற்றும், தமிழர் என்பதில் என் உற்றார் உறவினர் கொண்டிருந்த பெருமையும் என்னை சக மாணவர்கள் சிலரின் அவமதிப்பை அலட்சியப்படுத்த உதவியது. இன்று நான் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்பொழுது 2000 வருடத்திற்கு மேலான தமிழக அரேபியக் கடல் வணிகத் தொடர்பினாலும் அந்த வணிக மற்றும் கலாச்சார உறவுகளினால் அரேபியாவில் இஸ்லாம் மலர்ந்த சிறிது காலகட்டத்திலேயே தமிழகத்திலும் அமைதியாக இஸ்லாம் காலடி பதித்தது என்பதை உணர்கின்றேன்.

இதற்கான ஆதாரம், இன்றும் திரு. சுஜாதாவின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு அருகில் திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட 'கல்லுப்பள்ளி' என்றழைக்கப்படும் பள்ளிவாசலில் காணலாம். திருச்சி அன்று சோழர்களின் வசம் இருந்திருக்கலாம். தமிழக மன்னர்கள் இஸ்லாமியரின் தொழுகைக்காகப் பள்ளிவாசல்கள் கட்டிக்கொள்ள நிலத்தை தானம் செய்ததற்கும் வரி விலக்கம் அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன. இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் உள்ள திருப்புல்லாணியில் உள்ளது வைணவக் கோயிலான ஜெகநாதர் சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் 'கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்து கீழ்பால் சோனகச் சாமந்த பள்ளிக்கு இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுத்த நிலங்கள்' பற்றிய மாறவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239-1251) கல்வெட்டினைக் காணலாம். சோனகர் என்பது தமிழக முஸ்லிம்களை அக்காலத்தில் குறிக்கும் சொல்.

இப்பகுதியைச் சார்ந்த தகியுத்தீன் கி.பி. 1286 காலகட்டத்தில் பாண்டிய மன்னரின் அமைச்சராகவும், தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆக தமிழகத்திலேயே வாழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழக அரசர்களின் படைகளில்கூடத் தமிழக முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தபோது 'முகம்மதியப் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகத் தவறானதாகவே படுகின்றது.

தவிரவும் இந்திய வரலாற்றில் 'முகம்மதியர் படையெடுப்பு' என்றால் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு என்ற மாயை உள்ளது. வரலாற்றைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் சேர, சோழர், பாண்டியர், சாளுக்கியர், ஹொய் சாலர்களின் படையெடுப்புகளிலும் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு மற்றும் சிலைகளை அபகரித்தல் போன்றவை நடந்தேயுள்ளன.

11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பு குறித்து அங்கலாய்க்கும் மேற்கு சாளுக்கியக் கல்வெட்டுக்களைப் படித்துப் பாருங்கள். அதேபோல் 15ஆம் நூற்றாண்டில் கýங்க மன்னன் கபிலேஸ்வர கஜபதியாவானின் தமிழகப் படையெடுப்பில் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டு அங்குள்ள ஆபரணங்களும், சிலைகளும் அபகரிக்கப்பட்டன. இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களுடன் கூடிய வரலாற்று நிகழ்வுகளை எம்மால் எடுத்து வைக்க இயலும். ஆனால் இது அன்றைய கால கட்டத்தின் இயல்பு என்பதாலும், ஆறிப்போன இரணங்களை மீண்டும் கிளறுவதாக அமையும் என்ற பொறுப்புணர்வினாலும் தவிர்க்கிறோம்.

இத்தகைய சிந்தனையுடனே திரு. சுஜாதா மேற்கோள் காட்டியுள்ள 'கோயில் ஒழுகு' நூலை பெறப்பெற்று வாசித்தோம். முதலில் கண்ணில்பட்டது எண்ணிக்கைப் பிழை. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள், 13,000 ஆக சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் உயர்ந்திருக்கிறார்கள். இதனை அச்சுப் பிழை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் நூலை வாசிக்கும்போது நூலாசிரியரே பல இடங்களில், இப்படையெடுப்புகள் குறித்து சரியான ஆதாரங்கள் இல்லை, ஒருமுறை நிகழ்ந்ததா அல்லது இருமுறை நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை என்று குழப்பத்துடனே எழுதியுள்ளார்.

நூலைப் புரட்டுகையில் இன்னொரு குறிப்பும் நமது கண்ணில்பட்டது. பக்கம் 468இல் 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்' என்பது 'பன்னீராயிரம் குடிமக்களுடைய தலையைத் துண்டிக்கப்பட்ட நிகழ்ச்சி என்று பொருள்படும்' என்று விளக்கம் காணப்படுகிறது. ஆக 12,000 குடிமக்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக அவதாரம் எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை.

இவ்வாறாகப் பல கேள்விக்குரிய முரண்பாடுகளுடன், சங்கப் பரிவாரத்தின் பத்திரிகையான 'பாஞ்சஜன்ய'த்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்த 'கோயிலொழுகு' நூல் ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சார்யராலேயே குழப்பமான, முரண்பாடான தகவல் என்று வர்ணிக்கப்பட்ட சம்பவத்தை திரு. சுஜாதா அவர்கள் பல இலட்சம் தமிழ் மக்கள் படிக்கும் ஆனந்த விகடனில் வெளியிட்டிருப்பது வேதனையானது, வருந்தத்தக்கது. இத்தகைய தகவல் வரலாற்று பிரக்ஞையற்ற முஸ்லிம்களிடையே தேவையற்ற குற்ற உணர்ச்சியையும் தூண்டும். இந்துக்களும் இஸ்லாமியரும் தமிழர்கள் என்ற அடிப்படையில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்துவரும் தமிழகத்தில் இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது விஷவித்துகளை விதைப்பது போலாகும்.

எழுத்தாளர்களுக்கு, அதுவும் முன்னிலைப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டும். இனியாவது திரு. சுஜாதா இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை முன்னிலைப்படுத்தாமல் இருப்பது நல்லது.

இப்படிக்கு
கோம்பை எஸ். அன்வர்

(செய்தியாளர், இதழியல் புகைப்படக்காரர் மற்றும் குறும்பட இயக்குநர் என்று பல தளங்களில் இயங்கும் எஸ். அன்வர், தற்சமையம் வேலூரின் வரலாறு குறித்து ஒரு குறும்படத்தை இயக்கிவருகிறார்.)

நன்றி: காலச்சுவடு

4 comments:

Balaji-Paari said...

Migavum mukkiyamaana pathivu. Nandrigal!!

Abu Umar said...

Dear Asalamone,
Pls read here:

http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911806

neyvelivichu.blogspot.com said...

please read http://neyvelivichu.blogspot.com/2005/09/blog-post_16.html

get a explanation on what this means

vichchu

வாசகன் said...

Mr.Malik,

Please Don't show any urgency in adding people like 'Sujatha' in any list.

To Err is human.