Saturday, August 13, 2005

லண்டன் குண்டுவெடிப்பும் பர்தாவும்

லண்டன் மாநகரில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஹிஜாப் (பர்தா) அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், "ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார்.


குண்டு வெடிப்பு நடைபெற்ற பிறகு மூன்று நாட்களில் 1500 முஸ்லிம் பெண்கள் இனவெறித் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். லண்டன் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து 5 லட்சம் முஸ்லிம்கள் பிரிட்டனை விட்டு செல்ல முடிவெடுத்திருப்பதாக கார்டியன் நாளிதழ் நடத்திய ஆய்வில் வெளியான தகவலை தொடர்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"எனது முஸ்லிம் அடையாளத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக ஹிஜாப் அமைந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் குடிமகள் என்ற முறையில் ஹிஜாப் அணிய எனக்கு எல்லா உரிமையும் உண்டு. பிரிட்டனின் அரசியல் சாசனச் சட்டம் எனக்கு இந்த உரிமையை அளித்துள்ளது. ஹிஜாப் அணிவதால் என்னை யாராவது துன்புறுத்தினால் நான் உடனடியாக மாநகர காவல்துறையிடம் இனவெறியர்களிடமிருந்து எனக்கு பாதுகாப்பு தருமாறு கோருவேன்" என்று உறுதிபட ஒரு பேட்டியில் கூறியுள்ளார் யுஸ்ரா என்ற லண்டன் பல்கலைகழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவி. "எனது ஹிஜாபை நான் கழற்றி விட்டால், நான் தீவிரவாதிகளுக்கும், இனவெறியர்களுக்கும் பணிந்து விட்டதின் அடையாளமாகிவிடும். அவர்கள் அத்துடன் நிற்க போவதில்லை" என்று ஆவேசமாக இந்த பேட்டியில் பேசியுள்ளார் அந்த மாணவி.

"இச்சூழலில் ஹிஜாபை அணிவதா வேண்டாமா என்பதை அவரவர் தான் முடிவுச் செய்ய வேண்டும். அது அவர்களது உரிமை. அவரது கருத்தை ஆதாரமாக கொண்டு ஹிஜாபை கைவிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் இறைவனிடம் நற்கூலியை பெறுவதற்காக நான் ஹிஜாபை கைவிட மாட்டேன்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இன்னொரு மாணவியான அல்லா அல் சமராய்.

இவரது வகுப்பு தோழியான ஹிபா அல் ரமழானி இன்னும் தெளிவாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். "பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாபை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றதாகும். இப்படியே தொடர்ந்தால் நாம் முஸ்லிம்களுக்குரிய தனித் தன்மைகளை சிறிது சிறிதாக இழந்து விடுவோம். இது பிரிட்டனில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களைப் பெரிதும் பாதிக்கும்." என்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் ஹிபா அல் ரமழானி.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஹிஜாபை அகற்றிக் கொள்ளலாம் என்ற கருத்தை ஜக்கி பதாவி வழங்கியது தேவையற்றது என்று கூறியுள்ளார் லீட்ஸ் பல்கலைகழகத்தில் பயிலும் விசான் அல் திக்ரிட்டி என்ற மாணவி. "பிரிட்டனில் வாழும் முஸ்லிம் பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக பாடுபடும் ஜக்கி பதாவியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் ஹிஜாபை களையும் தேவை எழுந்துள்ளதாக நான் கருதவில்லை" என்று அந்த மாணவி மேலும் கூறியுள்ளார்.

குறிப்புகள்: "மக்கள் உரிமை" ஆகஸ்ட் 05 - 11, 2005

11 comments:

நல்லடியார் said...

//"எனது ஹிஜாபை நான் கழற்றி விட்டால், நான் தீவிரவாதிகளுக்கும், இனவெறியர்களுக்கும் பணிந்து விட்டதின் அடையாளமாகிவிடும். அவர்கள் அத்துடன் நிற்க போவதில்லை"//

//பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாபை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றதாகும்//

//இச்சூழலில் ஹிஜாபை அணிவதா வேண்டாமா என்பதை அவரவர் தான் முடிவுச் செய்ய வேண்டும்//

போலி பெண்ணுரிமை பேசுபவர்களுக்கும், இன வெறியர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் கொடுக்கப்பட்ட சரியான சவுக்கடி! இவர்கள் இன்றைய புரட்சிக் பெண்கள்!

~Nandalala~ said...

லண்டன் நகர குண்டு வெடிப்புக்கு பின்னர் பிரித்தனில் வாழும் ஆசிய இனத்தவர் மீது இனவெறி தாக்குதல் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.
சிலரின் தீவிரவாத-இனவாதத்திற்கு மொத்த இனத்தை-நாட்டையும் பொறுப்பாக்க முடியாது.

இத்தகைய இனவெறி பிரித்தனில் தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கையை அரசும், அங்குள்ள ஊடகத்துறையும், பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும். இது பெருமளவில் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தாக்குதல்களும் ஆங்காங்கே இன்னும் தொடர்வதாக வரும் தகவல்கள் கவலையளிப்பனவாகவே உள்ளது.

அப்பாவி பொது மக்களை கொல்லும் மத அடிப்படைவாதத்தை முற்றாக வேரறுத்து மனித நேயத்துடனான குமுக பங்களிப்புக்கு ஒவ்வொரு இனமும் தயராக வேண்டும். இது குறித்த தெளிவு பிரித்தானிய இஸ்லாமியர்களிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இஸ்லாமிய பெண்களின் பர்தா குறித்த எனது நிலை வேறாயினும் கூட, உயிர் வாழ வேண்டியும், வன்முறைக்கு பணிந்தும் அதை துறப்பது/துறக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதை ஏற்க இயலாது.

பி.கு: இனவெறி தாக்குதல் குறித்து எனது கருத்தே மேலே சொன்னது. பர்தா குறிதது விவாதிக்கும் நோக்கில் இதை எழுதவில்லை.

நன்றி,
நந்தலாலா.

Voice on Wings said...

ஹிஜாப் அணியும் வழக்கம் குறித்து வலுவானக் கருத்தெதுவும் கிடையாது. ஆனால் உயிருக்கு பயந்து தன் அடையாளங்களைத் துறக்க வேண்டிய கட்டாயமேற்படுவது அனுதாபத்திற்குரிய நிலை, மற்றும் தனிமனிதச் சுதந்திரத்திற்கு எதிரானது.

1984ஆம் வருடம் நடந்த சீக்கியர்களுக்கெதிரானக் கலவரங்களிலும் பல சீக்கியர்கள் தம் அடையாளமான 'பக்டி'யைத் துறந்து, தங்கள் நீண்ட முடியை வெட்டிக்கொள்ளும் கட்டாய நிலைக்குத் தள்ளப் பட்டனர். பல சீக்கியர்கள் இப்பதிவில் குறிப்பிட்ட பெண்களைப் போல் அபாய நிலையிலும் தம் நம்பிக்கைகளில் உறுதியாகயிருந்தனர். மேற்கூறிய இருசாராரின் மன உறுதியும் பாராட்டப்பட வேண்டியதே.

ஆனால் இந்த வருந்தத்தக்க சூழ்நிலையை ஆணாதிக்கப் பழமைவாதிகள் தமக்குச் சாதகமாகத் திரித்துக் கூறும் பட்சத்தில் (e.g. இப்பதிவுக்கு வந்த சிலப் பின்னூட்டங்கள்) அதுவும் கண்டிக்கப் படவேண்டியதே.

நல்லடியார் said...

//அப்பாவி பொது மக்களை கொல்லும் மத அடிப்படைவாதத்தை முற்றாக வேரறுத்து மனித நேயத்துடனான குமுக பங்களிப்புக்கு ஒவ்வொரு இனமும் தயராக வேண்டும். //

//உயிர் வாழ வேண்டியும், வன்முறைக்கு பணிந்தும் அதை துறப்பது/துறக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதை ஏற்க இயலாது.//

மதங்களின் பெயரால் அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் போதிக்கவில்லை. மதத்தை கையிலெடுக்கும் சில மனித(நேயமற்ற) ஜென்மங்களே இதற்கு பொறுப்பு. இத்தகையவர்களால்
ம(னி)தத்தை காக்க முடியாது. இவர்களின் நியாயம் எதுவாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல்தான். ஒருவருகொருவர் கொலை செய்து தங்கள் கொள்கைகளை யாரிடம் சொல்லப் போகிறார்களோ?

பிரித்தானிய மக்களிடம் ஏற்பட்டுள்ள தெளிவு, உலகலாவிய அவசியம்/அவசரம்.

சுட்டுவிரல் said...

தேவையான பதிவு!
நன்றி அபூ உமர்.

G.Ragavan said...

ஹிஜாப் அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம்.

இது போன்ற சூழ்நிலைகளில் ஹிஜாபை கழற்றிச் செல்ல வேண்டும் என்று சொல்வதெல்லாம் கொடுமை. அவரவருக்குப் பிடித்த உடையை அணிவது அவரவர் உரிமை. அப்படி ஹிஜாப் அணிந்த பெண்களைத் தாக்குவது கோழைத்தனம்.

இதுதான் சமயமென்று பெண்ணியவாதிகள் மீது குதிக்காதீர்கள். அது முறையாகாது.

ஆனால் இங்கு ஒரு கேள்வி. இத்தகைய சுதந்திரம் லண்டனில் மட்டும் இந்தியாவில் மட்டும் இருக்க வேண்டுமா? உலகம் முழுதும் இருக்க வேண்டுமா? முழுமையா இஸ்லாமிய நாடுகளில் அப்படிக் கிடையாது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்? இஸ்லாமியர் நிறைய இருந்தால் சுதந்திரம் போகும். குறைவாக இருந்தால் சுதந்திரமிருக்கும் என்ற வாதம் வலுப்பெறும்.

இன்றைக்கும் பாகிஸ்தானில் என்ன நிலை? பாகிஸ்தான் மதவாத நாடாக மாறிவிட்டதாலேயே எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம். இஸ்லாத் ஆட்சியில் சமதர்மம் போகுமென்ற வாதம் பெரிதாகும்.

ஏன் சொல்கிறேன் என்றால். கொஞ்ச நாளைக்கு முன்னால் பிரான்ஸில் இப்படித்தான் ஒரு சட்டம் வந்தது. தலையை மறைக்கக் கூடாது என்று. அதை சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் எதிர்த்த நினைவு.

சமதர்ம சமுதாயம் எங்கும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

நல்லடியார் said...

//இதுதான் சமயமென்று பெண்ணியவாதிகள் மீது குதிக்காதீர்கள். அது முறையாகாது.//

ராகவன் சார்,

முஸ்லிம்களெல்லாம் பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோரணையில் இருக்கிறது உங்கள் வாதம். முன்பு ஒரு பதிவில் நான் சொன்னதாக ஞாபகம். மீண்டும் சொல்கிறேன்.

முஸ்லிம்களுக்கும் பெண்கள், மகள்,தாய்,மணைவி,சகோதரி என்ற உறவில் உண்டு. அவர்களை சந்தோசமாகவும் கண்ணியமாகவும் வைத்திருப்பது நம் கடமை. ஒழுக்கம்,பண்பாடு என்ற வகையில்தான் பர்தாவைப் பற்றி சொல்லியுள்ளோம். சகோதரன் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என எந்த பெண்ணும் வீட்டிற்குள் இருந்தாலும் டூ பீஸில் வளம் வருவதில்லை. அந்தந்த சூழலுக்கு எந்த உடை பொருத்தமோ அதை தேர்வு செய்து கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

பர்தா பெண்ணடிமைச் சின்னம் என்பவர்கள் வசதியாக தாங்கள் எந்த அளவு பெண்ணுரிமை பேணுகிறோம் என்பதை கருத்தில் கொள்வதில்லை.

பாகிஸ்தானை இஸ்லாத்தின் முன்மாதிரியாக பார்ப்பது வியப்பாக இருக்கிறது. வளைகுடா நாட்டுச் சிறையிலிருப்பவர்களில் பெரும் பாலோர் பாகிஸ்தானியர்களே. இன்னும் சொல்லப் போனால் சவூதியில் மரண தண்டனை பெறும் குற்றவாளிகளில் 90% பாகிஸ்தானியர்களே. எல்லா நாட்டிலும், மதங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள்.

அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுபவர்களே அங்கு இருக்க வேண்டும். அமெரிக்காவில் கூட சில சாப்பிங் மால்களில் நம் பெண்கள் புடவையுடன் அனுமதிக்கப் படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

வாசகன் said...

'(இஸ்லாமிய) மார்க்கத்தில் நிர்ப்பந்தங்கள் கிடையாது' என்பது குர்-ஆனின் வாக்கு!

பர்தாவோ பிறவோ நிர்ப்பந்தங்களின்றி தம் மத பிடிப்புக் காரணமாகத்தான் பின்பற்றுகிறார்கள் என்பதை இலண்டன் வாழ் முஸ்லிம் பெண்கள் வாயிலாக இக்கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது!
மற்ற எந்த மதத்தை விடவும் இஸ்லாமில் தான் அதிகமான சதவீதத்தினர் 'ப்ராக்டிகலாக'பின்பற்றுகிறார்கள். இந்த உண்மையை சரிவர விளங்கிகொள்ள முடியாதபோது ' அடக்குமுறை' என்றும் 'ஆணாதிக்கம்' என்றும் குற்றச்சாட்டுக்களும் தவறான விளக்கங்களும் பிறரிடத்தில்.

அதே சமயம், தன் மதம் குறித்து அதீதமாக உணர்ச்சி வசப்படுபவர்களும் முஸ்லிம்கள் தான். 'அறிவு வசப்படாமல் வெறுமே உணர்ச்சி வசப்படுவதால் தன் சமூகமும் நெறிமுறையும் தான் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று அந்த சொற்ப பேர் உணர்கிறார்களில்லை.

மற்றபடி, எல்லா மதங்களையும் சமமாக ஆராய முற்படுபவர்களுக்கு 'விடைகள்'கிடைத்துக்கொண்டுத்தானிருக்கின்றன!

குறிப்பாக, இரண்டு விஷயங்களை சிந்திக்கும் போது:
1). மனித பிறப்பின் நோக்கம் தான் என்ன?
2) மரணத்திற்குப் பின் மனிதன் என்னாவான்?

G.Ragavan said...

நல்லடியார். நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகின்றது. அவரைப் பெண்ணுரிமையாளர்கள் மீது குதிக்க வேண்டாம் என்றுதானே சொன்னேன். வேறொன்றும் சொல்லவில்லையே. பர்தா அணிவதும் அணியாயதும் அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டேனே.

பாகிஸ்தானை மட்டும் முன்னுதாரனமாகச் சொல்லவில்லை. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளின் நிலை மதச்சுதந்திரமின்மை இல்லாமல்தானே இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் உள்ளதற்கும் ஒரு நாட்டில் எல்லா இடத்தில் இருப்பதற்கும் ஒப்புமை காட்டுவது முறையன்று.

மற்ற நாடுகள் எப்படி இஸ்லாமை மதித்து நடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ, அந்த அளவிற்கு இஸ்லாமிய நாடுகளும் மற்றவர்களை மதித்து நடக்க வேண்டும். இது என் கருத்து. இந்தக் கருத்து தவறில்லை என்று சொல்ல முடியாது.

அதே போல பாகிஸ்தானை ஏன் எடுத்துக்காட்டாகக் கொள்ளக் கூடாது? அதுவும் ஒரு இஸ்லாமிய நாடுதானே.

Abu Umar said...

//பாகிஸ்தானை ஏன் எடுத்துக்காட்டாகக் கொள்ளக் கூடாது? அதுவும் ஒரு இஸ்லாமிய நாடுதானே.//

அன்பின் ராகவன்,
இஸ்லாமிய நாடு - முஸ்லிம் நாடு வித்தியாசம் உண்டு ராகவன்.

இதற்கு பலமுறை பல இடங்களில் பதில் சொல்லப்பட்டுவிட்டது. எனது சுருக்கமான பதில்.

ஆட்சி செய்பவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காகவோ அல்லது முஸ்லிம்களால் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்காகவோ அல்லது அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதற்காகவோ இஸ்லாமிய நாடு என்று கூறப்படுவதில்லை.

நல்லடியார் said...

//பாகிஸ்தானை மட்டும் முன்னுதாரனமாகச் சொல்லவில்லை. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளின் நிலை மதச்சுதந்திரமின்மை இல்லாமல்தானே இருக்கிறது//

கோ.ராகவன்,

உங்களைக் குறை சொல்ல வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக் கொண்டு எந்த நாடும் இதர மதத்தவருக்குக் கட்டுப்பாடுகள் செய்யவில்லை. சவூதி, ஈரான் போன்ற நாடுகளில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம்.அதுவும் அவர்களின் நாட்டு சட்ட திட்டங்களுக்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிராக இருக்கும் வரை மட்டுமே. இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும்தானே?

சவூதியைக்கூட 100% இஸ்லாமிய நாடாக சொல்ல முடியாது. உதாரணம் மன்னர் ஆட்சி இஸ்லாத்திலுள்ளதல்ல. மேலும் துபாய்,குவைத், ஜோர்டான் போன்ற நாடுகளில் சர்ச்களும், கோவில்களும் உள்ளன. இதனை அவர்களின் (இஸ்லாமிய அடிப்படையிலான) சட்டங்கள் தடுக்கவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படுகிறது. ஆகவே இங்கு எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்படுவதில் வியப்பில்லை. இதுதான் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் உள்ள தனிச்சிறப்பு (இதனையும் கூட ஒரு சில மத அடிப்படைவாத அமைப்புகள் வெறுக்கின்றன என்பது வேறு விசயம்)

பாகிஸ்தானை முஸ்லிம் மெஜாரிட்டி நாடாக வேண்டுமானால் சொல்லலாம். மெஜாரிட்டியாக இருந்தால் மட்டும் இஸ்லாமிய நாடாகி விட முடியாது என்பது எனது கருத்து.

ஒரு சில சென்சிடிவ் விசயங்களில் மத அடிப்படைவாதிகளின் கை ஓங்கி இருக்கிறது. சமீபத்தில் கூட மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பஞ்சாபி இளைஞருக்கு, அவர் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மன்னித்து விட்டால், விடுதலை கிடைக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். இது இஸ்லாத்தில் உள்ள அருமையான வழிகாட்டல்.

குற்றம் செய்தவரை அக்குற்றத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவரே மண்ணிக்க வேண்டும். மாறாக அதில் எந்த பாதிப்பும் அடையாத ஜனாதிபதி மன்னிப்பது என்னால் ஏற்க முடியவில்லை.

அபூ உமர் சொல்லியிருப்பதையும் கவனிக்கவும்.