Wednesday, August 03, 2005

காவல் ஆய்வாளரின் கொலைவெறித் தாக்குதல்

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் போராடத் தெரியாது என்ற காலம் போய், போராட்டமும், சட்டமும் பேசுவது பாசிசவாதிகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. முஸ்லிம்களை ஒழிக்க காவி சிந்தனையாளர்கள் போட்ட திட்டத்தில் முக்கியமானது அனைத்து துறையிலும் பாசிச காவி சிந்தனையாளர்களை புகுத்துவது. ஆகவே ஆட்சி மாறினாலும் அடாவடித்தனம் மாறுவதில்லை. அப்படித்தான் பின்வரும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து தமுமுக தலைவர் எம். அப்துல் பஷீர். இவரைக் களங்கப்படுத்தும் விதமாக sms அனுப்பிய ஏ. முஹம்மது மீரான் மீது எம். அப்துல் பஷீர் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பெயரில் 21.07.2005 அன்று காலை 10 மணியளவில் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜீ.

முஹம்மது மீரான் தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டதும், இதுபோன்ற தவறான செயல்களை இனி செய்ய மாட்டேன் என்று எழுதித் தரும்படி உதவி ஆய்வாளர் கூறினார். அப்போது தாழையூத்து காவல் ஆய்வாளர் சங்கரலிங்கம், களக்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், சிறப்பு படையினர்கள் காவல் நிலையத்தில் நுழைந்தனர். தமுமுகவினரைப் பார்த்த காவல் ஆய்வாளர் சங்கரலிங்கம், "அந்த துலுக்க நாய்களை என் ரூமுக்கு வரச்சொல்லு" என்று கோபமாகக் கூறிச் சென்றார்.

ஆய்வாளர் அறைக்குச் சென்ற தமுமுகவினரை எவ்வித விசாரணையும் இன்றி "டேய்! உங்களையெல்லாம் பார்த்தா தீவிரவாதி மாதிரி தெரியுது" என்று கூறியுள்ளார். உதவி ஆய்வாளர் ராஜீ குறுக்கிட்டு, "தமுமுகவினர் மீது எந்தத் தவறும் இல்லை, இந்த மீரான்தான் தவறு செய்தவன்" என்று கூறியுள்ளார். இதைக் காதில் போட்டுக் கொள்ளாத சங்கரலிங்கம், மீண்டும் ஆவேசமாகப் பேசினார்.

மாவட்ட தொண்டரணிச் செயலாளர் பீர்மரைக்காயர் "நீங்கள் பேசுவது சரியில்லை" என்று கூறி அனைவரையும் காவல் நிலையத்தை விட்டு அழைத்து வந்து ஆட்டோவில் ஏற முற்பட்டார். அப்போது காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜீ, பஷீரிடம் வந்து, "சுமூகமாகப் பேசிக் கொள்ளலாம், காவல் நிலையத்திற்கு வாருங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே காவல் நிலையத்திலிருந்து ஆவேசமாக வெளியில் வந்த ஆய்வாளர் சங்கரலிங்கம், "இந்தத் துலுக்க நாய்களை அடிச்சு ஸ்டேஷனுக்கு கொண்டு வாங்க" என்று கூற, அங்கிருந்த சிறப்புப் படையினர் பஷீர் மற்றும் நிர்வாகிகளை காவல் நிலையத்திற்குள் இழுத்துச் சென்று கேட்டை பூட்டிவிட்டு அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

"துலுக்க நாய்களா... சட்டமாடா பேசுறீங்க... உங்களைக் கொல்லாம விடமாட்டேன்" என சங்கரலிங்கம் ஆவேசமாகப் பேசி அடிக்க, களக்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் வெறிகொண்டு "துலக்க நாய்களா... தீவிரவாதிதாண்டா தாடி வைச்சுருப்பான்..." என்று சொல்லி பீர்மரைக்காயர் தாடியை பிய்க்க, வலிதாங்க முடியாமல் பீர்மரைக்காயர் காவல் நிலையத்தில் கதறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், தாழையூத்து காவல் நிலையத்திற்கு போன் செய்து விசாரித்தபோது, "ஒன்றும் இல்லை சார்" என்று கூறியுள்ளார் சங்கரலிங்கம். காவல் நிலையத்திற்கு டி.எஸ்.பி. வருவதாக கண்காணிப்பாளர் கூற செய்வதறியாது திகைத்தார் அந்த காக்கிச்சட்டை ரவுடி. உடன் பஷீர் உள்ளிட்ட அனைவரையும் முகம் கழுவி வரும்படியும், இதுபற்றி டி.எஸ்.பி.யிடம் கூறினால் உங்கள் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இது பற்றிய தகவல் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலிக்கு வந்த போது அவர் நெல்லை டி,ஐ,ஜி.யிடம் இது பற்றி புகார் தெரிவித்தார். அப்போது டி,ஐ,ஜி., இரண்டு தரப்பினர் காவல் நிலையத்திற்குள் தகராறுச் செய்து கொண்டதாக கூறினார். பொதுச்செய லளார் நடந்த சம்பவங்களை விவரித்த துடள் ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதையில் இருக்கிறார் என்று கூறியுள்ளார். டி.ஐ.ஜி. கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்குள்ளேயே போதையில் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பொதுச் செயலாளர் அவர் போதையில் இல்லாவிட்டால் நான் என் பொது வாழ்க்கையை விட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் பிறகு டி,ஐ.ஜி. துணைக் கண்காணிப்பாளரை நிலையத்திற்கு அனுப்பி உண்மையை தெரிந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் நுழைந்த டி.எஸ்.பி, பஷீரின் முகத்தில் இருந்த இரத்த காயத்தைப் பார்த்துவிட்டு சங்கரலிங்கத்திடம் காரணம் கேட்க செய்வதறியாது திகைத்துள்ளார். இதற்கிடையே மாவட்ட தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து பஷீர், பீர்மரைக்காயர், ராஜாமுஹம்மது ஆகியோரை காவல் நிலையத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்பு மாநிலச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி தலைமையில் கூடிய தமுமுகவினர் மற்றும் ஜமாஅத்தார்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து புகார் செய்ய முடிவு செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்தபோது, ஒருவரை இடமாற்றம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லையில் வாழும் அனைத்து மக்களின் எண்ணமும் ஆகும்.


http://www.tmmkonline.org/tamil/tmmk_news/068thalai.HTM

2 comments:

dondu(#11168674346665545885) said...

அடாவடி செய்த ஆய்வாளருக்கு இடமாற்ற தண்டனை போதாது. அதிலும் இரு ஆய்வாளர்கள் அல்லவா குறிப்பிடப் பட்டுள்ளனர் அல்லவா? இருவருக்குமே தண்டனை தர வேண்டும், அதுவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.

வெறும் இடமாற்றம் தண்டனை ஆகாது. கொடுமைக்கு உள்ளான இசுலாமிய சகோதரர்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்கப் பட்டு அதற்கான பணம் குற்றம் செய்த ஆய்வாளர் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நண்பன் said...

தவறு செய்வதற்கு முழு முதற் காரணம் - அதிகார போதை. எதிர்த்துக் குரல் எழுப்ப மாட்டார்கள் என்ற தைரியம் தான். ஒரு முறை எதிர்த்து முறைத்து விட்டாலே போதும் - பின் வாங்கி விடுவார்கள்.

இன்று சோளகர் பெட்டி என்ற நாவல் வாசித்து முடிந்ததும் மனமெல்லாம் பதறி விட்டது - இத்தனை கொடுமைகளை மனிதர்களால் இன்னொரு மனிதனுக்குச் செய்ய முடியுமா என்று - அதிலும் காவல் துறையால்...

காவலர்கள் தங்களை மனிதர்களாக மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவிலேயே மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து விடுவார்கள்.