Friday, July 29, 2005

சிறுபான்மையினருக்கு எதிராக

இந்தியாவில் செயல்படும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் 30,000 அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுகின்றன. இதில் 16,000 அமைப்புக்கள் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை பெறுகின்றன. இவை மத்திய அரசிற்கு வரவு_செலவைச் சமர்ப்பிக்கின்றன.

இன்னும் 14,000 நிறுவனங்களும் இன்னும் ஓர் ஐந்தாயிரம் கோடி அளவிற்கு நிதியுதவி பெறுகின்றன. ஆனால் எந்தக் கணக்கையும் கொடுப்பதில்லை. யானைக்கு அல்வா, பூனைக்கு பூந்தி வாங்கினோம் என்றுகூட எழுதிக் கொடுப்பதில்லை.

இத்தகைய நிறுவனங்களை வரைமுறைப்படுத்தப் போவதாக மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். பார்ப்போம்.

இந்துத்வாவின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ்.கூட தன்னார்வத்தொண்டு நிறுவனமாம். பிரிட்டனில் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் பல சங்பரிவார அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களாம். வேடம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

உலகையே உலுக்கிவிட்ட குஜராத் பூகம்பம்

கரைதாண்டி வந்த கடல் மாதா ஒரிசாவில் ஏற்படுத்திய பேரழிவு

இந்த இயற்கையின் சீற்றங்களால் இடிந்துபோன மக்களுக்கு பிரிட்டனில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு நிதி திரட்டியது. இந்தியாவில் எத்தனை சங்பரிவார அமைப்புகள் உண்டோ அத்தனைக்கும் அங்கே கிளைகள் உண்டு. நாமகரணம் மட்டும் சற்று வேறுபடும்.

இந்த அமைப்புகள் திரட்டிய நிவாரண நிதி, லட்சங்கள் அல்ல. பலப்பல கோடிகள். அத்தனை கோடிகளும் இந்தியா வர பிரிட்டன் அனுமதித்தது. அவ்வளவு பெரிய தொகை இங்கே எப்படிப் பயன்படுத்தப்பட்டது?

ரோஜாத் தோட்டம் போடுவதற்காக இத்தனை கோடி நிதியை சங்பரிவாரங்கள் பயன்படுத்தவில்லை. கள்ளிக்காடுகளை வளர்ப்பதற்குத்தான் பயன்படுத்தின.

இந்து தீவிரவாதம் வளருவதற்கு உரமாகப்பயன்படுத்தப்பட்டன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் பணியை ஒரு குழு கண்காணிக்கிறது. அதன் பெயர் அசாவ் (ASAW) என்பதாகும். அந்தக் குழுவினர் இந்தியா வந்தனர். பிரிட்டனில் திரட்டப்பட்ட நிதி இங்கே எப்படிச் செலவு செய்யப்பட்டது என்பதனை ஆராய்ந்தனர். அதிர்ச்சியடைந்தனர்.

'BRITISH CHARITY HINDU EXTREMISM' என்ற தலைப்பில் அந்த அமைப்பினர் 80 பக்க அறிக்கையை பிரிட்டிஷ் மேல்சபையில் சமர்ப்பித்தனர். ஆர்.எஸ்.எஸ்.ஸும் இதர சங்பரிவார அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல. இந்து தீவிரவாத அமைப்புக்கள். எனவே, அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று லண்டன் நாடாளுமன்றத்தில் குரலெழும்பியது.

தாங்கள் லட்சம் லட்சமாகத் தருகின்ற தொகை, கண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்காகச் செலவிடப்படவில்லை. மதவெறிப் பணிகளுக்குத்தான் பயன்படுகின்றன என்ற விவரம் அங்கே அள்ளிக் கொடுக்கும் மக்களுக்குத் தெரிவதில்லை. காவித்திரைகள் மறைத்து விடுகின்றன.

குஜராத் வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திரட்டப்பட்ட தொகையில் ஒரு சிறுதுளி கூட அவர்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. இதனை அந்த அசாவ் (ASAW) விழிப்புணர்வு அமைப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.

குஜராத்தில் மூட்டிவிடப்பட்ட வகுப்புக் கலவரங்களில் இரண்டாயிரம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு அபலைகளாக முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர்.

இந்தக் கொடூரமான பரிதாப நிலையை ஏற்படுத்தியவர்கள் விஸ்வ ஹிந்து பரிஷத்தினர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் வனவாசி கல்யாண் சமிதியினர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. திரட்டப்பட்ட நிதியெல்லாம் வகுப்பு வெறியைத் தூண்டும் இந்த அமைப்புக்களுக்குத்தான் சமர்ப்பிக்கப்பட்டது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஆமாம். சமுதாய தர்மங்களைச் சாகடித்தவர்களுக்கு பணமுடிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வசூலித்த கோடிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளுக்குச் சென்றது.

குஜராத், ஒரிசா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் மலைப் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். திறந்திருக்கிறது. ஏசுவின் போதனைகளை இப்படித்தான் அந்தக் காலத்தில் பரப்பினார்களாம். அதேபோல ஆர்.எஸ்.எஸ்.ஸும் 'ராம்ராம்' பள்ளிகளைத் திறந்திருக்கிறது.

குஜராத் கலவரத்தின்போது இஸ்லாமிய மக்களைத் தாக்க 'வனவாசி கல்யாண் சமிதி' என்ற மலைவாழ் அமைப்பினரைத்தான் சங்பரிவாரங்கள் பயன்படுத்திக் கொண்டன. அந்தக் கல்யாண் சமிதிகளுக்கு இன்னொரு மூன்றில் ஒரு பகுதிப் பணம் சென்றது.

லோக்கல்யாண் சமிதி, எல்லைப்பகுதி கல்யாண் சமிதி, சேவா பாரதி, உத்கல் (ஒரிசா) பிப்பன்ன சஹாய சமிதி போன்ற அமைப்புகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவையெல்லாம் சங்பரிவாரங்களின் தொண்டு நிறுவனங்களாம். இவற்றுக்கு மற்றொரு மூன்றில் ஒரு பகுதித் தொகை பரிமாறப்பட்டிருக்கிறது.

சங்பரிவாரங்களின் வன்முறைப் படைக்குப் பெயர்தான் சேவாபாரதி. இதற்கு மட்டும் ஏறத்தாழ ஐம்பது கோடி ரூபாய் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் புகழ்பரப்புவது, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வது, இந்துக் கோயில்கள் கட்டுவது. சமுதாயத்தின் மேல்தட்டினருக்கு சமூகக்கூடங்கள் கட்டுவது, கிறிஸ்துவ எதிர்ப்புப் பிரசாரம் போன்ற இந்துத்வாப் பணிகளுக்கே நிவாரண நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இவர்கள் ஊர் ஊருக்குப் பிள்ளையார் கோயிலிலிருந்து பெருமாள் கோயில் வரை கட்டுவார்கள். உபந்யாசங்கள் நிகழ்த்துவர். விழா நடத்துவர். இத்தகைய இந்து மதப் பிரசாரத்தை அந்த நாட்டு மக்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் இங்கே இவர்கள் எந்த மதப்பிரசாரத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். மாற்று மதத்தினரை துரோகிகள் என்று வசைபாடுவார்கள்.

சங்பரிவாரங்களின் இருட்டறைக் கணக்குகள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விழிப்புணர்வுக்குழு தெரிவிக்கிறது. நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு இதனை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்? அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தாழ்வாரங்களில் குவிந்து கிடக்கின்றன.

அண்மைக்காலமாக குஜராத்திலும் ஒரிசாவிலும்தான் சங்பரிவாரங்களின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்தன. நிவாரணநிதி என்று பிரிட்டனில் திரட்டப்பட்ட நிதி, அத்தகைய அநாகரிகக் காரியங்களுக்குப் பயன்பட்டிருக்கின்றன.

லண்டனில் அறநிலைய ஆணையம் என்ற ஓர் அமைப்பு செயல்படுகிறது. குஜராத் நிவாரணநிதி என்று பிரிட்டனில் வசூலிக்கப்பட்ட கோடிகள் எப்படிச் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று நேரில் பார்க்க விரும்பியது. ஆனால் வாஜ்பாய் அரசு அவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.

என்றைக்கு வாஜ்பாய் அரசு அமைந்ததோ அன்றிலிருந்து இந்துத்வா தொண்டு நிறுவனங்களுக்கு வந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. தூய்மையான காந்தீய நிறுவனங்களுக்கு வந்த உதவிகளும் நிறுத்தப்பட்டன. ஆனால் சங்பரிவாரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் அட்டியின்றிக் கோடிகோடியாகக் குவிய வாசல் கதவுகள் அகற்றப்பட்டன.

ராஜஸ்தான் பி.ஜே.பி. அரசு சுனாமி நிதி திரட்டியது. பதினெட்டு கோடி ரூபாய் சேர்ந்தது. அதில் தமிழகத்திற்குப் பங்குதர விரும்பியது. ஆனால் அதனை ஆர்.எஸ்.எஸ். மூலம்தான் செலவிடுவோம் என்றது. அதனைத் தமிழக அரசு ஏற்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். மூலம் செலவு செய்வதென்றால் தங்களுக்கும் நிதி தேவையில்லை என்று அந்தமான் நிர்வாகமும் அறிவித்துவிட்டது.

சுனாமி நிதியைக்கூட ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் தரவேண்டுமாம். கணக்குக் கேட்க முடியுமா? எப்படிச் செலவு செய்யப்படும் என்று குஜராத்தில் பார்த்து விட்டோம்.

எனவே, வெளிநாடுகளிலிருந்து சங்பரிவாரங்களுக்கு வரும் நிதிக்கு, நிதி அமைச்சர் சிதம்பரம் எப்படிக் கணக்கு கேட்கப் போகிறார்? எப்படி வரைமுறைப்படுத்தப் போகிறார்?

அந்தப் பரிவாரங்களுக்காகத் திரட்டப்படும் நிதி என்னென்ன காரியங்களுக்காக எந்தெந்த அமைப்புக்கள் மூலம் செலவு செய்யப்படுகின்றன என்பதனைப் பார்த்துவிட்டோம். எனவே இந்தியாவைக் கலவரபூமியாக்க வரும் நிதியை அனுமதிக்க வேண்டுமா?

காலத்தோடு செய்ய வேண்டிய காரியம். நிதியமைச்சர் சிதம்பரம் என்ன செய்யப்போகிறார்?

- சோலை
10.07.2005
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

2 comments:

அப்பாவி said...

//நாமகரணம் மட்டும் சற்று வேறுபடும்.//

ஆனால் மக்களுக்கு நாமம் போடுவதில் எந்த வேறுபாடும் இருக்காது!!

சுட்டுவிரல் said...

கருத்தியல் வன்முறையைப் பரப்பும் பரிவாரங்கள் 'வெளிநாட்டுப் பணம்' என்று புலம்புவது 'திருடன் திருடன்' என்று கத்திக்கொண்டு ஓடும் திருடனுக்கு ஒப்பானது என்பதை விளக்குகிறது உங்களின் இக்கட்டுரை.

தாழ்த்தப்பட்டோருக்கும் முஸ்லிம்களுக்கும் நஞ்சு கலந்த மருந்துகளையே தரும்படி தன் அமைப்பு மருத்துவர்களைக் கோரும் 'பரிவார சுற்றறிக்கை' (நன்றி: வி.டீ. ராஜசேகர்- தலித் வாய்ஸ் ஆசிரியர்) குறித்து சமீபத்தில் அறிந்து அதிர்ந்துப் போனேன்.
மனித நேயத்தின் முதல் விரோதிகள் இவர்கள்.

மத நல்லிணக்கத்தை விரும்பும் மத சார்பற்ற அரசு இத்தகைய இயக்கங்களைத் தடை செய்ய வேண்டாமோ?