Thursday, September 23, 2004

கற்றுக்கொள்ள ஆறு நிபந்தனைகள்

17.09.2004 அன்று ஜித்தாவில் நடைபெற்ற ""மொழியறிவும் சமூக முன்னேற்றமும்"" என்ற கருத்தருங்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கலாச்சார மையத்துடன் இணைந்து இப்படிபட்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை சிலர் செயல்வடிவம் கொடுத்திருந்தார்கள்.

நான்கு தலைப்புகளில் புதிய கோணத்தில் செய்திகள் பரிமாறப்பட்டன:

1. இஸ்லாமும் மொழியறிவும்
2. ஆங்கில மொழியின் எளிய இலக்கணம்
3. உங்கள் திறமைகளை அறிந்துக் கொண்டீர்களா?
4. அரபி மொழி கற்பதெப்படி?

வழக்கம்போல பொதுவேலைகள் வந்துவிட்டதால் முழு கருத்தரங்கையும் கேட்க முடியவில்லை. கேட்டவற்றை மட்டும் எனது விளக்கத்துடன் தொகுத்து கொடுத்துள்ளேன்.

சிறுவர்கள் கூட ஆங்கிலத்தை அழகாக பேசுகிறார்கள் எனும்போது நம்மால் ஏன் அரபியை, ஆங்கிலத்தை அல்லது எந்த ஒரு துறையையும் தரமாக கற்றுக்கொள்ள இயலவில்லை என்பதற்கு பல மேற்கோள்கள் காட்டப்பட்டன.

எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அல்லது துறையாக இருந்தாலும் அதனைக் கற்றுக்கொள்ள ஆறு நிபந்தனைகள் அவசியம்:

1) புரிந்துக்கொள்ளுதல்
இதன் அளவு மனிதனுக்கு மனிதன் மாறுபடும். உதாரணமாக வகுப்பறையில் உள்ள மாணவர்களில் சிலர் ஆசிரியர் சொன்னவுடன் புரிந்துக் கொள்கிறார்கள். சிலருக்கு சிறப்பு வகுப்பு வைத்து மீண்டும் விளக்கினால்தான் புரியும். இரண்டாவது தரத்தை உடையவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

2) ஆர்வம்
எதில் மனிதர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதை எளிதில் புரிந்துக் கொள்கிறார்கள். இது நல்லவற்றிற்கு மட்டும் அல்ல. கெட்டவற்றிற்கும் பொருந்தும்.

3) பொறுமை
கல்வி பயிலும் காலங்களில் சூழ்நிலையை அனுசரித்து பொறுமை மற்றும் மனக்கட்டுப்பாடு பேணவேண்டும்.

4) தன்னிறைவு
உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளில் தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பசி, தூக்கமின்மை போன்றவை பாடத்தில் கவனம் செலுத்த விடாது.

5) வழிகாட்டல்
அ) ஆசிரியரின் வழிகாட்டல்
ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதே மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். உதாரணமாக: ஆங்கிலம் கற்க ஆங்கிலத்தின் வழியே முயற்சி செய்தால் அதிக பலன் கிடைக்கும். ஏனென்றால் ஒவ்வொரு மொழியும் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உச்சரிப்பில் வித்தியாசமானதாக இருக்கும்.
ஆ) பெற்றோர்களின் வழிகாட்டல்
எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எங்கு படிக்க வைப்பது, தூரமாக உள்ள கல்லூரிக்கு தினமும் போய் வந்தால் படிக்க நேரம் கிடைக்குமா? போன்ற விஷயங்களில் பெற்றோர்களின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

6) காலங்கள்
தேவையான காலம் ஒதுக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் பிற மொழி கற்பது என்பது அம்மொழியில் உள்ள சில அர்த்தங்களை கற்றுக்கொள்ள இருக்கலாம் தவிர அம்மொழியை அல்ல.

மேற்கண்டவைகளை நமது பள்ளிக்கூட நாட்களுடன் ஒத்துப்பாருங்கள். அதற்கென நேரம் ஒதுக்கி படித்தோம். ஆனால் இன்று, பிற நல்ல விஷயங்களைக் கற்பதற்கு நேரம் ஒதுக்குகின்றோமா? அப்படியே ஒதுக்கினாலும் மற்ற அம்சங்களும் பேணப்படுகின்றதா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பள்ளிக்கூட நாட்களில் யாரெல்லாம் இந்த ஆறு விஷயங்களில் குறை செய்தார்களோ, அவர்கள் இன்று மனவருத்தம் அடைகின்றார்கள் (நானும் தான்).

நல்ல செய்திகளை பிறருக்கு எடுத்துச்சொல்ல மொழியறிவு மிக அவசியமானதாகும். உங்கள் பகுதியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முன்வருவீர்களா?

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி மற்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த மொழியை அழகாக பேசுகிறார்கள். ஆனால் அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் மட்டும் அரபியை தரமாக பேசமுடியவில்லையே, காரணம் தெரியுமா?

சொல்லிக்கொடுப்பவர்கள் சரியாகச் சொல்லிக் கொடுத்தால் ஏன் இந்தப் பிரச்சினை. விருந்து உபசரிப்பில் பெயர் போன அரபிகள், மற்ற மொழியினரிடம் பேசும்போது "அன கலாம்", "அன்த்த கலாம்", "ஆகிர் கலாம்", "கிர்கிர் மாஃபி" என உடைந்த அரபியில் புதியவர்களுக்கு தகுந்தார்போல் பேசுவதால், தரமான அரபி மொழியை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள இயலவில்லை.முதலில் சொல்லப்பட்ட ஆறு நிபந்தனைகளும் ஒரு அரபி மொழி கவிஞர் சொன்னவைகள்தான். எனவே, கவிஞர்கள்தான் அரபி மொழி பேசும் மக்களை திருத்த வேண்டும்.

2 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாங்கத்தா அபூ உமரு,

எல்லாஞ்சரிதான், ஆனா, தன்னிறைவு மட்டும் தப்புத்தா. சோத்துக்கு வழியில்லேன்னாலும்
படிச்சு மேல வந்தவங்க இருக்கியாங்கத்தா.

சிங்கைல மட்டும் என்ன வாழுது, நம்மளவனுக்கு மலாய் தெரியாது, சீனாக்காரனோட சண்டை போட அவம் பாச தெரியாது, நம்மவிங்க அப்படித்தாந்தா.

வஸ்ஸலாம்

அசன் லெப்பை
சிங்கை

Anonymous said...

மதிய உணவு, சத்துணவு இதெல்லாம் எதற்காக வந்துச்சுன்னு லெப்பசாக்கள் ஏனோ புரிஞ்சிக்க மாற்றாய்ங்க. அல்லது புரிஞ்சுக்காத மாதிரி நடிக்கிறாய்ங்களான்னு தெர்யல.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு சும்மாவா சொன்னாய்ங்க.

இப்படிக்கு
அத்தாவுல்லா ராவுத்தர்
புருணை