Tuesday, January 17, 2006

பெங்களூர் தாக்குதல் - பொய்ப்பிரச்சாரங்கள்

தமிழக செய்தி ஊடகங்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம்!

மாலை மலர்: நம்பர் 1 மாலை நாளிதழ் அல்ல! நம்பர் 1 பொய் நாளிதழ்!!

காசுக்காக எதையும் செய்யும் துணிவு சிலருக்கு உண்டு. அந்த வரிசையில் சில பத்திரிகைகளும் சேர்ந்துள்ளது வேதனைக்குரியது. பெங்களூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் எப்படியெல்லாம் பொய்களை செய்தியாக்கி காசாக்கின என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக 'மாலை மலர்' நாளிதழ் விளங்கி வருகின்றது. இந்தியாவின் நம்பர் 1 தமிழ் மாலை நாளிதழ் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டுள்ளது மாலை மலர். இது உண்மையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் பொய் செய்திகளையும், முஸ்லிம் விரோத செய்திகளையும் வெளியிடும் நாளிதழ்களில் தினமலரை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது மாலை மலர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பஷீர் தான் பெங்களூரில் விஞ்ஞானியை சுட்டு கொன்றவர் என்று தலைப்பு செய்தியை வெளியிட்டது மாலை மலர் மட்டுமே. இதே போல் அது வெளியிட்ட பொய் செய்திகளில் மற்றொன்று 'தீவிரவாதிகள் சென்னை வழியாக தப்பி ஒட்டம்? விமான நிலையத்தில் கார்கள் சிக்கின' என்ற தலைப்பில் ஜனவரி 4ம் தேதி வெளியான முதல் பக்க செய்தியாகும். பெங்களூர் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், இந்த செய்தியை மாலை மலர் பிரசுரித்தது. பெங்களூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சென்னை வழியாகத் தப்பி விட்டார்கள் என்று தலைப்பை பார்த்தவுடன் எண்ணும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த கார்கள் தீவிரவாதிகள் பயன்படுத்திய கார்களா?

இந்த இரண்டு கார்களும் சென்னை விமான நிலையத்தின் பார்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பெங்களூர் சம்பவத்திற்கு முன்பு ஒரு காரும், அதற்கு பிறகு இன்னொரு காரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் இந்த கார்களின் நம்பர்களை வைத்து அதன் உரிமையாளர்களை உடனடியாக கண்டுபிடித்தனர். சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜீந்தர் சிங் சர்மா மற்றும் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி ஆகியோர்தான் இந்த கார்களின் உரிமையாளர்கள் என்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர். வெளியூர்களுக்குச் செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் அவர்கள் கார்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இந்த சாதாரண நிகழ்வை தீவிரவாதத்துடன் மாலை மலர் பத்திரிகை தொடர்புபடுத்தியது வெட்கக்கேடானது.

"சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி பஷீர்தான் விஞ்ஞானியைக் கொன்றான் - பரபரப்பு தகவல்கள்"

"சென்னைக்கு ஆபத்து. 24 மணி நேரமும் உஷார்"

"சென்னையில் கைதான தீவிர வாதியின் சதித்திட்டம் அம்பலம். பெங்களூர் கொண்டு செல்ல முடிவு"

"பிடிபட்ட தீவிரவாதியிடம் விடிய விடிய விசாரணை. சென்னையைத் தகர்க்க சதியா? பெங்களூர் தனிப் படை வந்தது"

"தீவிரவாதிகள் சென்னை வழியாக தப்பி ஓட்டம். விமான நிலையத்தில் கார்கள் சிக்கின"

"கர்நாடகாவில் இருந்து தப்பி வந்தான். சென்னையில் தீவிரவாதி கைது. அடைக்கலம் கொடுத்தவரிடம் விசாரணை"

"மதுரைக்கு அடுத்த குறி"

"விஞ்ஞானியைக் கொன்ற தீவிர வாதக் கும்பலின் முக்கியத் தலைவன் பிடிபட்டான். ஆந்திராவில் பெங்க ளூர் போலீஸ் வளைத்து பிடித்தது!!"

"தீவிரவாதிகளால் திருச்சிக்கு ஆபத்து. பரபரப்பான தகவல்கள்"

"லஷ்கர் தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் ஆட்கள் சேர்ப்பு. அப்துல் ரஹ்மான் கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள்"

"விஞ்ஞானிகள் மாநாட்டில் தாக்கிய 3 தீவிரவாதிகளுடன் தொடர்பு. சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்"

"பெங்களூர் தீவிரவாதிகள் வேலூரில் ஊடுருவலா? லாட்ஜ்லிபஸ் நிலையத்தில் அதிரடி சோதனை"

"தீவிரவாதியின் கூட்டாளியைப் பிடிக்க தஞ்சைக்கு போலீஸ் படை விரைந்தன"


- இவையெல்லாம் சென்ற வாரம் முழுவதும் வெளிவந்த செய்தித் தாள்களின் முக்கியத் தலைப்புச் செய்திகளாகும்.

இதே தலைப்புகளில் இந்த செய்தித் தாள்கள் வால்போஸ்டர்களும் வெளியிட்டன. தமிழ் தொலைக் காட்சிகளிலும் இதே தலைப்புடன் செய்திகள் ஒளிபரப்பாகின. மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பீதியையும், முஸ்லிம்களிடையே பதற்றத்தையும் சென்ற வாரச் செய்திகள் ஏற்படுத்தின. கடைசியில் அனைத்தும் புஸ்வானமாகின. ஆனால் பொய்களை பரபரப்பாக வெளியிட்ட நாளிதழ்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் உண்மையை மட்டும் பரபரப்பாக வெளியிடத் தவறியது வேதனைக்குரியதாகும்.

கடந்த டிசம்பர் 28-ம் அன்று பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ் என்றழைக்கப்படும் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஒரு சர்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இந்தியா முழுவதிலிருந்தும் விஞ்ஞானிகள் பங்கு கொண்டார்கள். வெளிநாடுகளிலிருந்தும் இந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பாதகன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர். பூரி கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைத் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவரைக் கைது செய்தனர். அப்துர் ரஹ்மான் லஷ்கரே தய்யிபா என்ற அமைப்பின் தென்னிந்திய தலைவர் என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். அப்துர் ரஹ்மானின் கூட்டாளி பஷீர் மைசூரி என்றும், அவர் சென்னைக்கு தப்பிச் சென்றுவிட்டதால் தமிழகக் காவல்துறையின் உதவியைப் பெற்று அவரை தாங்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தப் பின்னணியில்தான் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, தமிழகத்தில் பீதியைக்கிளப்பும் நோக்கத்தில் தமிழக பத்திரிகைகளும், தொலைக்காட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் அப்துர் ரஹ்மானுக்கும், லஷ்கரே தய்யிபா இயக்கத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கர்நாடக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேபோல் பெங்களுர் விஞ்ஞானியை சுட்டுக்கொன்றவர் சென்னையில் பிடிபட்ட பஷீர் என்று செய்தி வெளியிட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் அவருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதற்கான எவ்வித சான்றும் இல்லை என்று கூறி பஷீரை கர்நாடக காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் சமூகப் பொறுப்புடையவர்கள். அவர்கள் கையில் ஏந்தியிருக்கும் பேனா, பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு ஆயுதமாகும். ஆனால், தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகைகளில் பெரும்பான்மையினர் இந்தப் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை கடந்த வார நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதுவும், தமிழகக் காவல்துறையினர் "பெங்களூர் தாக்குதலுக்கும் சென்னையில் கைது செய்யப்பட்ட பஷீருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று மிகத்தெளிவாக தெரிவித்த போதிலும், அதைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் குற்றவாளியாக்குவதிலேயே ஊடகங்கள் கவனம் செலுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது. சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தை ஒரு குற்றப்பரம்பரையாக சித்தரிப்பது போல் இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த ஊடகங்கள் முஸ்லிம்களிடம் பஷீர் விஷயத்தில் பொதுமன்னிப்பு கேட்கும்வரை அவற்றை முற்றிலுமாக புறக்கணிப்பது நமது கடமையாகும்.


கர்நாடக காவல்துறை பிடித்துச் சென்ற பஷீர் யார்?

பெங்களூரில் விஞ்ஞானியை சுட்டுக் கொன்றவர் என்று மாலை மலர் பத்திரிகையினால் பட்டம் சூட்டப்பட்ட பஷீர், ஆலிம் பட்டம் பெற்ற ஒரு இஸ்லாமிய அழைப்பாளராவார். இவரது முழு பெயர் மௌலவி பஷீர் மைசூரி என்பதாகும். இவர் மைசூர் அருகே உள்ள எம்.ஓசூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி பட்கல்லைச் சேர்ந்தவர்.

மௌலவி பஷீர் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஈடுபாடுடையவர். பெங்களூரில் முஸ்லிம் அல்லாதவர் களிடையே திருக்குர்ஆனை அறிமுகப் படுத்துவதற்காகவும், இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள 'ஹவுஸ் ஆப் பீஸ்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து இஸ்லாமியப் பிரச்சாரத்தை மௌலவி பஷீர் மைசூரி செய்து வந்தார். அவாத் பார்ம் என்ற சித்த வைத்திய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மருந்துகளையும் அவர் விற்பனை செய்து வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் பஷீர்.

சென்னையில் நூல்களை அச்சடிப்பது பெங்களூரை விட மலிவானதாகவும், நேர்த்தியானதாகவும் இருப்பதால் அவர் உருது மற்றும் கன்னட மொழி நூல்களை அச்சடிப்பதற்காக சென்னைக்கு வருவார். இந்த வருடமும் சென்னைக்கு நூல்களை அச்சடிக்க வந்துள்ளார். கடந்த டிசம்பர் 22-ம் தேதி சென்னைக்கு வந்த அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பட்டேல் கிராபிக்ஸ் என்ற அச்சகத்தில் 'யாஸீன் சூரா'வின் கன்னட மொழிபெயர்ப்பு, இஸ்லாமியக் கொள்கை விளக்கம் மற்றும் தொழுகை முறை ஆகிய கன்னட மற்றும் உருது நூல்களை அச்சடிக்க கொடுத்துள்ளார். டிசம்பர் 22-ம் தேதி முதல் சென்னை காவல்துறையினர் அவரை விசாரணைக்காக பிடித்துச் சென்ற ஜன.3-ம் தேதி இரவு வரை அவர் சென்னையிலே தான் தங்கி இருந்துள்ளார்.

முழுக்க முழுக்க இஸ்லாமியப் பிரச்சாரமும், இஸ்லாமிய நூல்கள் மற்றும் சித்த வைத்திய மருந்துகளை விற்பதையும் தான் முழுநேரப் பணியாக செய்துவந்த பஷீரைத்தான் லஷ்கரே தய்யிபாவின் தென்னிந்திய தளபதியின் கூட்டாளி எனக் கூறி அவரைப் பிடித்து தருமாறு தமிழக காவல்துறைக்கு கர்நாடகா காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த தகவலைப் பெற்றுக் கொண்ட சென்னை மாநகர காவல்துறையினர், உடனடியாக விசாரணைகளை மேற் கொண்டனர். இதன் விளைவாக மௌலவி பஷீரின் நண்பர்களை முதலில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களின் துணை கொண்டு அச்சகப் பணிகள் முடிவடைந்து பெங்களூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் அருகே உள்ள தனியார் பேருந்து அலுவலகத்திற்குள் சென்று கொண்டிருந்த மௌலவி பஷீரையும் போலீஸார் பிடித்து சென்றனர்.

தமிழக உளவுத்துறையின் உயர் அதிகாரிகளும், சென்னை மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளும் மௌலவி பஷீரையும், அவருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நண்பர்களையும் விசாரித்தனர். சென்னைக்கு தான் வந்த நோக்கத்தை பஷீர் தெளிவாக சொல்ல, பட்டேல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஒய்.கே.பி.பஷீர், விசுவநாதன் உள்ளிட்டோரையும் காவல்துறையினர் அழைத்து வந்து விசாரித்தனர்.

பெங்களூரில் விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டிசம்பர் 28 அன்று நடைபெற்றது. அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் பஷீர் தொடர்ச்சியாக சென்னையில் இருந்துவந்தது தெளிவாக தமிழக காவல்துறையினருக்கு தெரிந்தது. அவர், தான் செய்யும் பணியைப் பற்றியும் தெரிவித்த தகவல்களும் உண்மையானது என தமிழக காவல்துறையினருக்கு புலப்பட்டது. மௌலவி பஷீர் தொடர்பாக விசாரணைக்கென அழைக்கப்பட்ட அவரது நண்பர்களும் அப்பாவிகள் என்பதை தமிழக காவல்துறையினர் தெளிவாக அறிந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுவித்தனர்.

30 மணி நேரத்திற்கும் மேலாக கர்நாடக காவல்துறையினர் தமிழக காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடத்திய விசாரணையில், மௌலவி பஷீருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

பெங்களூர் தாக்குதலில் பஷீருக்கு தொடர்பு உண்டு என்பதற்கான எவ்வித ஆதாரமும், தடயமும் இல்லை என்பதும் நிரூபணமானது. மௌலவி பஷீரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக காவல்துறையின் விருப்பமாக இருந்தது. ஆனால் கர்நாடக காவல்துறையினர் பஷீரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தாங்கள் பெங்களூர் கொண்டு சென்று 'உண்மை அறியும் கருவி' மூலம் உண்மை களை வரவழைப்போம் என்றும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து 'தீவிரவாத சம்பவத்தில் பஷீர் ஈடுபடவில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது' என்று கர்நாடக காவல்துறையினரிடம் எழுதி வாங்கிய பிறகே அவரை தமிழக காவல்துறையினர் ஒப்படைத்தனர். லஷ்கரே தய்யிபா இயக்கத்தின் தலைவன் சென்னையில் கைது என்று கதை விட்டுவிடக் கூடாது என்பதற் காகவே இவ்வாறு தமிழக காவல்துறையினர் எழுதி வாங்கியுள்ளார்கள் என்று தெரிகிறது.

மௌலவி பஷீரை கர்நாடகத்திற்கு அழைத்துச் சென்ற அம்மாநில காவல்துறையினர் அவரிடம் மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டிலும் சோதனை செய்தனர். மௌலவி பஷீருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது. இச்சூழலில் மௌலவி பஷீருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறி கடந்த ஜன.7-ம் தேதி இரவு அவரை கர்நாடக காவல்துறையினர் விடுவித்தனர். ஒரு அப்பாவியை தீவிரவாதி என சித்தரித்த கர்நாடக காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பெரும்பாவிகளாக உள்ளனர். இவர்கள் மீது மௌலவி பஷீர் வழக்கு தொடுப்பார் என்று தெரிகிறது.

அப்துல் ரஹ்மானுக்கும் லஷ்கருக்கும் தொடர்பு இல்லை...
கர்நாடக காவல்துறை அந்தர்பல்டி


"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பழமொழியில் வரும் 'அரண்டவன்' என்ற பதம் இன்று கர்நாடக காவல்துறைக்குத் தான் பொருத்தமானதாக அமைந்துள்ளது. பெங்களூர் மாநாட்டில் விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறையினர் நடத்திவரும் விசாரணைகளும், வெளியிடும் அறிக்கை களும் பெரும் குழப்பத்தில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெங்களூர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறி ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த முஹம்மது ரஜியுர் ரஹ்மான் என்ற அப்துர் ரஹ்மானை (வயது 34) கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர் லஷ்கரே தய்யிபாவின் தென்னிந்திய தளபதி என்றும், தென்னிந்தியாவில் லஷ்கருக்கு ஆள் பிடிக்கும் வேலையை இவர் செய்கிறார் என்றும், இவர்தான் பெங்களூர் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி முடித்தவர் என்றும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்துர் ரஹ்மானை ஆந்திர போலீஸார் கைது செய்ததை கர்நாடக முதலமைச்சரும் பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடக காவல்துறையின் இந்தக் கூற்றை ஆந்திர மாநில காவல்துறை யினர் மறுக்கின்றனர். அப்துர் ரஹ்மான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதி அரேபியாவில் வாழ்ந்து வந்தவர். கர்நாடக காவல்துறை யினர் அப்துர் ரஹ்மானிடம் இருந்து கைத்துப்பாக்கியையும், 25 லட்ச ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதாக கூறினார்கள். ஆனால் அவரது மனைவி இதனை மறுத்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் வந்த தனழ கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும், அவரிடமிருந்து சிம் கார்டு மற்றும் பாஸ்போர்ட் மட்டுமே கைப்பற்றப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்கொண்டாவில் பி.எஸ்.டி. காலனியில் உள்ள அப்துர் ரஹ்மான் வீட்டிலிருந்து சிம் கார்டு, பாஸ்போர்ட், செல்போன், இரண்டு ஏ.டி.எம். கார்டுகள், இன்சூரன்ஸ் பாலிசிக்கான பத்திரம் ஆகியவை மட்டுமே கைப்பற்றப்பட்டதாக அந்த நகரத்தில் இருந்து வரும் பத்திரிகைகள் தெரிவித்தன.

அப்துர் ரஹ்மானின் சகோதரர் ஹபீப், "காவல்துறையினர் எனது சகோதரனின் வீட்டில் சோதனையிட்டார்கள். 6 மணி நேரத்திற்கும் மேலாக எங்களிடமும் விசாரணை செய்தார்கள். பிறகு நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று எங்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் மறுநாள் எனது சகோதரரை கைது செய்துவிட்டு அவரை லஷ்கரின் தளபதியாக்கி விட்டார்கள்" என்று வேதனைப்பட்டுள்ளார்.

அப்துர் ரஹ்மானின் தந்தை, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மூத்த உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்துர் ரஹ்மான் மார்க்கப் பற்று மிக்கவர் என்றும், மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 ஆண்டுகள் சவூதியில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவரை உடனடியாக தங்கள் தளபதியாக லஷ்கர் நியமித்துள்ளது என்று கூறப்படுவதை ஆந்திர காவல்துறையினரும் மறுத்துள்ளார்கள். இந்த சூழலில் அப்துர்ரஹ்மானைப் பற்றி பரபரப்பான தகவல்களை செய்தி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு வெளியிட்டன. தமிழகத்தில் தீவிரவாத இயக்கத்திற்கு இவர் ஆள் சேர்த்தார் என்றும் செய்திகள் வெளியாயின. இவை அனைத்தும் புஸ்வானமாகக் கூடிய வகையில் கர்நாடக காவல்துறையினர் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளனர்.

தொடர்ச்சியாக அப்துர் ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில் இருந்து, அப்துர் ரஹ்மானுக்கும் லஷ்கரே தய்யிபாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு வேறு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் கர்நாடக காவல்துறையினர் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளதாக பெங்களூரில் இருந்து வெளிவரும் டெக்கான் ஹெரால்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திர மற்றும் தமிழக காவல்துறை யினர் முதலில் சொன்ன தகவல்களை பிறகு சொல்லி தனது கையாலாகாத் தன்மையை கர்நாடக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் கர்நாடக காவல்துறையினர் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. பெங்களூரில் தாக்குதல் நடத்தியவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒளிந்திருப்பதாகவும், அவர்களை பிடித்துத் தருமாறும் கேட்டுக் கொண்டது. அங்கு தமிழக காவல்துறை சோதனை நடத்தியதில் கர்நாடக காவல்துறையின் தகவல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. இதேபோல், தனியாக தஞ்சாவூரிலும், சென்னைக்கு அருகே உள்ள மாங்காட்டிலும் கர்நாடக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களது புலனாய்வு 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழிக்கு ஏற்பவே அமைந்துள்ளது.

நன்றி: www.tmmkonline.org

7 comments:

அபூ ஸாலிஹா said...

//பொய்களை பரபரப்பாக வெளியிட்ட நாளிதழ்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் உண்மையை மட்டும் பரபரப்பாக வெளியிடத் தவறியது வேதனைக்குரியதாகும்.//

மீடியாக்கள் மூலம் இன்னும் எத்தனை காலத்திற்குதான் தமிழக முஸ்லிம்கள் இவ்வேதனையை அனுபவிக்கவேண்டும் என்று தெரியவில்லை.

ஒரு வலைப்பதிவர் சுட்டிக்காட்டியிருந்தபடி திரைவிமர்சனத்தில் டப்பா,காலி,புஸ்வானம்,பேஜார் என்று ரிலீஸாகும் ஒரு தமிழ் திரைப்படத்தை விமரிசிப்பதும், அதே திரைப்படம் சில மாதங்களில் அவர்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகையில் "சூப்பர்ஹிட்" என்று நிறம் மாறி நேயர்கள் தலையில் மசாலா அரைப்பதும் சகஜமே.

சினிமா எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை. ஆனால் கேவலம், பரபரப்பான செய்திக்காக ஒரு சமுதாயத்திற்கு இழிவை ஏற்படுத்த நினைக்காதீர்கள் என்பது தான் முஸ்லிம் மக்களின் வேண்டுகோள்!

நண்பன் said...

ஒரு மாநில போலிஸுக்கும், மற்ற மாநில போலிஸுக்கும் இத்தனை பிணக்குகளா?

வீரப்பன் வேட்டையிலே கர்நாடக போலிஸின் மெத்தனம் வெளிப்பட்டுவிட்டது. தமிழக போலிஸுடன் மோதுவதை மட்டுமே அவர்கள் தொழிலாக வைத்திருந்தனர்.

காட்டுக்குள் நடந்து கொண்ட மாதிரியே இப்பொழுது நாட்டிற்குள்ளும் தங்கள் மோதல் போக்கை ஆரம்பித்து விட்டார்கள்.

இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் - கர்நாடக எல்லைக்குள் எந்த ஒரு தீவிரவாதியும் இல்லை. எல்லோரும் வெளியிலிருந்து தான் வருகிறார்கள். சென்னை அல்லது ஹைதரபாத் தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. எங்கள் எல்லைக்குள் எந்த தீவிரவாதியும் இல்லை என்று நிறுவ துடிப்பது போல் இருக்கிறது. இது தான் நோக்கமென்றால், இவர்களெல்லாம் எப்பொழுது தீவிர வாதியைப் பிடித்து எப்பொழுது நீதி வழங்கப் போகிறார்கள்.

தீவிரவாதிகளைக் கையாள, பொறுப்பு நிறைந்த தேசம் தழுவிய தனிப்படை அமைத்து, இந்த உள்ளூர் போலிஸை விடுவித்து விட்டால் நலம் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால், தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, அப்பாவிகளைக் கைது செய்து, பரபரப்பூட்டுவதும், பத்திரிககைகள் மூலம், பொய்செய்திகளைப் பரப்பி திசை திருப்ப முனைவதும் தான் இவர்களால் செய்ய இயன்ற பணியாகும். பாவம், அவர்களும் தங்கள் பங்கு நியாயமாக ஏதாவது செய்தி தந்து கொண்டே இருக்க வேண்டுமல்லவா?

அட்றா சக்கை said...

பொய்களை நாளிதழ்களும் டிவிக்களும் மட்டுமா வெளியிடுகின்றன? இங்கே வலைப்பதிவுலகத்தில் எத்தனை பேர் காசுக்காக பொய்யைக் கடைவிரித்து உள்ளார்கள்? பற்பல பொய்களைக் கற்பனைக் குதிரைகளுடன் கலந்து கடைவிரித்தும் கொள்வாரில்லை கதையாக இஸ்லாத்தைத் தாக்குவது மட்டுமே ஒற்றைக் கொள்கையாய்க் கொண்டு எதிக்ஸ், நேர்மை எதுவும் இல்லாமல் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வேறு வேறு விஷயங்களுக்கும் வேஷங்களுக்கும் தாவி, வலைப் பதிவு வாசகர்களின் மறதியை நம்பிப் பொய்யைத் திரும்பத் திரும்ப அரங்கேற்ற முயல்கிறார்கள்.

அவர்களின் பொய்யை அம்பலப் படுத்தும் உங்கள் போன்ற பதிவர்களுக்கு நன்றி.

Amar said...

Here is a fact to gauge the competence of the Karnataka Police :

"There is no Counter-intel dept in the Karnataka Police."

*அனாலும்*

//கர்நாடக எல்லைக்குள் எந்த ஒரு தீவிரவாதியும் இல்லை. எல்லோரும் வெளியிலிருந்து தான் வருகிறார்கள்//

நன்பரே,

Bhatkal(கர்நாடகம்) ஏணும் ஊரில் அதிகம் ஐ.எஸ்.ஐ வேலை செய்வதாக தகவல் உண்டு.

அதே ஊரில் நடந்த மத கலவரத்தில் 17 பேர் பலியான போது நடந்த விசாரனையில் ஐ.எஸ்.ஐயின் Bhatkal கதைகள் அம்பலமாயின.

Ref: The judicial commission, headed by a former High Court judge Kedambadi Jagannath Shetty, inquired into the communal carnage at Bhatkal town in Uttara Kannada district in which 17 people were killed

பஷீரின் மனைவியும்(பஷீரும்?) அதே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சந்தேகபட்டு இருக்கலாம்.

அதைவிட்டு அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது எதோ பகை உள்ளது பொல சித்தரிப்பது நியாயம் அல்ல.

லட்ச கனக்கில் இந்துகளும் இப்படி தான் தவறாக கைதி செய்யபட்டு, மீடியாவில் அவமானபடுத்த பட்டு...எல்லாம் நடக்கிறது.

Amar said...

//I heard (may be true) American Embassy in their region are granting monthly/annually gift to these media people. Is it true??
That is why they are very support to American Policy and peeping american annan news always. //

Overcome your fears.

அழகப்பன் said...

தகவலுக்கு நன்றி. அப்படியே கீழே உள்ள சுட்டியையும் போய் பாருங்கள். தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கடத்திச் சென்ற மனிதனுக்கு (!?) 9000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரின் பெயர் இஸ்லாமியப் பெயராக இருந்திருந்தால், அகில உலகமும் அந்த மனிதனைப் (!) பற்றி செய்தி வெளியிட்டிருக்கும்.
http://www.heraldsun.news.com.au/common/story_page/0,5478,17861946%255E1702,00.html

பாபு said...

//அதைவிட்டு அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது எதோ பகை உள்ளது பொல சித்தரிப்பது நியாயம் அல்ல.//

அது சரி,

காவல் துறையிலும், துணை நிலை ராணுவத்திலும் மதச் சார்புடையவர்கள் சேர்க்கப்படவேயில்லை என்பதை; பணி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் (அதிகார வர்க்கம்) மதச் சார்பு அமைப்புகளில் பங்கேற்பதுமில்லை என்று மனசாட்சியுடன் சொல்ல முடியுமா?