Sunday, May 01, 2005

மாமனிதர் [தொடர்.. 2]

பஞ்சு தலையணை இல்லாத அரசர்.
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது (2) என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதை கதவாக பயன்படுத்திக் கொள்வார்கள் (1) என்றும் நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால்மாட்டில் தோல் பதனிடப் பயன்படுத்தப்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப்பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்கவிடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே என்று நான் கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? எனக் கேட்டார்கள் என உமர்(ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். (1)

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா எடுத்துக்காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)


அரண்மனை இல்லாத அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆன்மீக தலைவராகவும், அரசராகவும் இருந்தாலும் கூட தங்களுக்கென்று அரண்மனை கட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் வீட்டில் தொழுவதற்கு கூட இடம் பற்றாக்குறைதான் என்பதை பின்வரும் சம்பவம் விளக்குகிறது:

நான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் (தொழுகையின் போது தலையை கீழே வைக்கும்) இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யம்போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள் உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து முடித்ததும் மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது என முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள். (1)


தொடரும்..

ஆதார நூல்கள்:
(1) புகாரி
(2) முஸ்லிம்

2 comments:

தருமி said...

இது ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தெரியவில்லையே..சமண முனிவர்கள் கல் படுக்கையைத் தான் பயன் படுத்தினார்களாம்....

Abu Umar said...

சமண முனிவர்கள் அரசர்களா?