போர் மற்றும் கலவரம் என்ற பெயரில் மனித உயிர்கள் மாய்க்கப்பட்டுவரும் இவ்வேளையில் பல்லாயிரம் உயிர்களும் அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களும் சிறு நேரத்தில் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. போரை கூட நிறுத்திவிடலாம். ஆனால் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை?
26.12.2004 ஞாயிறு அன்று ஏற்பட்ட நிலநடுக்கமும் கடல்கொந்தளிப்பும் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியை விவரிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நாகை மாவட்டம் மிகுந்த உயிர்சேதமும் பொருட்சேதமும் அடைந்திருக்கிறது. இதைவிட இலங்கையில் ஏற்பட்ட உயிர்சேதம் சொல்லி மாளாது.
காரைக்கால் - ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், டாக்டரை சந்திக்க காத்திருக்கும் அந்த சிறு நேரத்தை கடலோரகாற்றை சுவாசிக்க செலவிடலாம் என்று சென்றவர்கள் டொயோட்டா குவாலிஸோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
தரங்கம்பாடிக்கு உதவிக்காக போய்வந்த எனது உறவினர், அதிகமாக உயிர்சேதம் பெண்களும் குழந்தைகளும் என்று தெரிவித்திருக்கிறார். இதுவல்லாமல் சென்னை உயிரிழப்புகளை சற்றுமுன்தான் வெக்டோன் டி.வியில் காணமுடிந்தது. உயிரற்ற இளந்தளிர்களும் தாய்மார்களும் பெருங்குழிகளில் ஒன்றாக புதைக்கப்படுவதை பார்த்து, அவர்களின் உறவினர்கள் கதறுவதை கண்டு நம் கண்ணில் நீர் துளிர்ப்பதை தவிர்க்க இயலவில்லை.
குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்களும் அவர்களின் உறவினர்களும் கதறி அழும் காட்சி வன்நெஞ்கங்களையும் கலங்கடித்துவிடும். இவர்களெல்லாம் யார்? நேற்று காலைவரை பிறரிடம் கையேந்தாமல் சொந்த தொழில்செய்து உழைத்து நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்தவர்கள். இயற்கையின் சீற்றத்தினால் நிலைகுழைந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், உணவளிப்பதும், அவர்கள் முன்புபோல் தொழில்செய்து தலைநிமிர்ந்திட அவர்களுக்கு தோளோடு தோள்கொடுப்பது நமது கடமை.
கண்ணீர் சொட்ட எழுதிவிட்டாலோ அல்லது இறங்கல் தெரிவித்து விட்டாலோ நம் பணிகள் முடிந்துவிடாது. அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அவர்களின் துயர்துடைத்திட வேண்டும்.
இதற்கெல்லாம் யாராவது உண்டியல் குலுக்கி உங்களிடம் வருவார்கள் என்று காத்திருக்காமல் நாமாகவே முன்வந்து நமக்கு நம்பகமான பொதுசேவை குழுக்கள் மூலம் நமது உதவிகளை செய்திட வேண்டும். நண்பர்களிடம் உள்ள நல்ல துணிகளை சேகரித்து அதனை கார்கோ மூலம் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் அனுப்பி அவர்களுக்கு உதவமுன்வாருங்கள். உங்கள் வீடுகளில் உபரியாக உள்ள சாமான்களை அவர்களுக்கு கொடுத்திடுமாறு அறிவுறுத்துங்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் முற்பகலில் இருந்த போது முளர் கூட்டத்தைச் சார்ந்த அனைவருமோ, அல்லது அவர்களில் பொம்பாலனவர்களோ வாட்களைத் தொங்க விட்டுக் கொண்டும், முரட்டுத்தனமான கம்பளியைப் போத்திக் கொண்டும் நிர்வாணமாக வந்தனர். அவர்களின் ஏழ்மை நிலையைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் மாறியது. நபி(ஸல்)அவர்கள் (வீட்டினுள்) நுழைந்து, பிறகு வந்து பாங்கு கூறும் படியும், இகாமத் கூறும் படியும் (தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி) பிலாலிடம் கூறினார்கள். (பிறகு) தொழவைத்தார்கள். பின்பு உரை நிகழ்த்தினார்கள்.
தன் உரையில் 4:1, 59:18-20 ஆகிய வசனங்களையும் ஓதிகாட்டிய பிறகு, "ஓருவர் தன் தங்க நாணயத்திலிருந்தோ, வெள்ளி நாணயத்திலிருந்தோ, தன் ஆடையிலோ, கோதுமையில் ஒரு ஸாஉ அளவோ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ அளவோ தர்மம் செய்யட்டும்" என்று கூறினார்கள்.பேரீத்தம் பழத்தின் பாதியையேனும் தர்மமாக வழங்கட்டும் என்று கூறும் அளவுக்கு அவர்கள் தர்மத்தைப் பற்றி கூறினார்கள்.அப்போது மதீனாவாசி ஒருவர் தன் உள்ளங்கை கொள்ளாத அளவுக்கு ஒரு பையை தூக்கி வந்தார். (அதனைப்பார்த்து) பின்பு மக்களும் கொண்டு வந்தனர். உணவுப் பொருள்களும், ஆடைகளும் இரு குவியல் போன்று குவிந்திருந்ததை நான் கண்டேன். நபி(ஸல்) அவர்களின் முகம் தங்கம் போன்று பிரகாசிக்கத்திருந்ததையும் நான் கண்டேன்.
அறிவிப்பவர்: ஜரிர்(ரலி) - நூற்கள்: முஸ்லீம், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ
நபியவர்கள் ஓதிக் காட்டிய 4:1, மற்றும் 59:18-20 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.(59:19)
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர். (59:20)
No comments:
Post a Comment